அகன்ற இஸ்ரவேலுக்குள் அடக்கப்படும் பலஸ்தீனம்

0 533

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

பழைய பல்­லவி
‘தனது எல்­லை­களைப் பாது­காக்க இஸ்­ர­வே­லுக்கு உரி­மை­யுண்­டு’ என்ற பல்­ல­வியை ஒவ்­வொரு பலஸ்­தீனப் போர் தொடங்­கும்­போதும் அமெ­ரிக்கா தொடக்கம் அனைத்து மேற்கு நாடு­களின் தலைவர்களும் பாடு­வ­துண்டு. இம்­மு­றையும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பைடன் அதைத்தான் பாடினார். ஆனால் அவர்களுள் எவ­ரா­வது எப்­போ­தா­வது எங்­கே­யா­வது அந்த எல்­லைகள் எவை என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்­களா? இல்­லவே இல்லை. ஏனெனில் இஸ்­ர­வேலின் எல்லை இன்னும் விரி­வ­டைந்­து­கொண்டே செல்­கி­றது. ஒவ்­வொரு போருக்குப் பின்னும் இஸ்­ரவேல் புதி­தாக அரபு நிலங்­களைக் கைப்­பற்றி அங்கே யூதர்களைக் குடி­யேற்றி அதன் எல்­லை­களை விஸ்­த­ரித்­துக்­கொண்டே செல்­கி­றது. மேற்கு நாடுகள் அதனை ஆத­ரித்­துக்­கொண்டே இருக்­கின்­றன. சுருங்கக் கூறினால், உது­மா­னியப் பேர­ரசை முத­லா­வது உலகப் போருடன் சின்­னா­பின்­ன­மாக்கிக் கூறு­போட எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் இன்னும் முற்றுப் பெற­வில்லை. இஸ்­ர­வே­லூ­டாக அந்த முயற்­சிகள் தொடர்கின்­றன. கடந்­த­கால ஐரோப்­பிய வர­லாற்றை அறிந்­தி­ரா­தவர்களுக்கு இதனை விளங்கிக் கொள்­வது கஷ்­ட­மாக இருக்­கலாம். அதனை இங்கே சுருக்­க­மாக விளக்­குவோம்.

மேற்கின் இரு ஆறாப் புண்கள்
பதி­னாறாம் நூற்­றாண்டில் ஐரோப்பா விழித்­தெ­ழுந்து முஸ்­லிம்­களின் உலக ஆதிக்­கத்தை முறி­ய­டிக்க முற்­படும் வரை­யிலும் ஏறத்­தாழ எட்டு நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்கள் ஓர் இஸ்­லா­மிய சாம்­ராஜ்­யத்­தையே உரு­வாக்கி உலக நாக­ரி­கத்தின் முன்­னோ­டி­க­ளாகத் திகழ்ந்­தனர். அதன் பின்­ன­ரும்­கூட இரு­பதாம் நூற்­றாண்டில் முத­லா­வது உல­கப்போர் முடியும் வரை­யிலும் உது­மா­னியப் பேர­ரசு ஐரோப்­பாவின் எழுச்­சிக்கும் உலக ஆக்­கி­ர­மிப்­புக்கம் ஒரு சவா­லாக விளங்­கி­யது. முஸ்­லிம்­களின் நாக­ரிகம் வளர்ந்திரா­விட்டால் ஐரோப்­பாவே பதி­னாறாம் நூற்­றாண்டில் விழிப்­புற்­றி­ருக்­குமா என்­பது வேறு விடயம். ஆனாலும், அந்த மகோன்­னத வர­லாற்றை எப்­ப­டி­யா­வது மூடி­ம­றைத்து முஸ்­லிம்­களின் நாக­ரி­கத்தை உல­கத்தின் ஓர் அழி­வுப்­பா­தை­யாகச் சித்­த­ரிப்­ப­தற்­காக வர­லாற்று ஆய்­வுகள் என்ற போர்­வையில் பல வெளி­யீ­டுகள் இப்­போது வெளி­வ­ரு­கின்­றன. எனினும் உண்­மைகள் மிதப்புக் கட்டை போன்­றவை. எப்­ப­டித்தான் அவற்றை நீருக்குள் அழுத்த முயன்­றாலும் இறு­தியில் அவை மேலெ­ழுந்து மிதந்தே தீரும்.

இந்த நீண்ட வர­லாற்­றுக்குள் ஒழிந்­தி­ருக்கும் இரண்டு உண்­மை­களை இங்கே நினை­வு­கூரல் வேண்டும். ஒன்று, பலஸ்­தீனம் நபி இப்­றா­கிமின் வழி­வந்த யூதம், கிறித்­துவம், இஸ்லாம் ஆகிய மூன்று சம­யங்­க­ளி­னதும் கேந்­தி­ரத்­தலம். முஸ்­லிம்­களின் இரண்­டா­வது கலிபா உமர் இப்னு கத்தாப் 637இல் பைசாந்­தி­ய­ரி­ட­மி­ருந்து பலஸ்­தீ­னத்தைக் கைப்­பற்­றி­யது தொடக்கம் 1099இல் அதா­வது முத­லா­வது சிலுவை யுத்­தத்தில் ஐரோப்­பி­யரின் கைக­ளுக்குள் அது கைமாறி அதன் பின்னர் 1187இல் சலா­குதீன் ஐயூ­பினால் மீட்­கப்­பட்டு இன்­று­வரை பலஸ்­தீனம் முஸ்­லிம்­களின் கைளி­லேயே இருப்­பது மேற்கு நாடு­களின் கண்­க­ளுக்குள் முள்ளாய் குத்­து­கி­றது. 1948இல் ஐ. நா. சபையில் பலஸ்­தீ­னத்தை இரண்­டாகப் பிரிப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­களும் பல­ன­ளிக்­கவில்லை. ஆனால் கிறித்­தவர்களின் பிபி­லிய வாக்­கி­யங்­களின் பிர­காரம் இஸ்­ரவேல் ஜெரு­ச­லத்தைக் கைப்­பற்­றி­ய­பின்னர்தான் ஈசா மீண்டும் பிறப்பார் என்ற ஒரு நம்­பிக்கை உண்டு. ஆகவே பலஸ்­தீ­னத்தை இஸ்­ரவேல் கைப்­பற்ற எடுக்கும் முயற்­சி­களை மேற்­கு­லகு என்­றுமே கண்­டிக்கப் போவ­தில்லை. மறை­மு­க­மா­க­வா­வது அதற்கு ஆத­ரவு வழங்கும்.

இரண்­டா­வது உண்­மையும் முத­லா­வதைப் போன்று கிறித்­துவம் சம்­பந்­தப்­பட்­டதே. எவ்­வாறு பலஸ்­தீனம் முஸ்­லிம்­களின் கைக­ளுக்குள் வீழ்ந்­ததோ அதே போன்று கிழக்கு உரோம சாம்­ராஜ்­யத்தின் தலை­ந­க­ரான கொன்ஸ்­தாந்­தி­நோப்­பிலும் 1453இல் உது­மா­னிய கலிபா முகம்­மதின் படை­களால் கைப்­பற்­றப்­பட்டு இன்று துருக்­கியின் இஸ்­தாம்­பு­லாக இருப்­பது மேற்­கு­ல­குக்கு ஓர் ஆறாப்புண். அத்­துடன் அங்கே உரோம சக்­க­ரவர்த்தி முத­லா­வது ஜஸ்­ரி­னியன் நிர்­மா­ணித்த ஹெகியா சோபியா என்ற தேவா­ல­யத்தை துருக்கி அண்­மையில் ஒரு பள்­ளி­வா­ச­லாக மாற்­றி­யமை இப்­புண்ணை இன்னும் ஆழ­மாக்­கி­யுள்­ளது.

இவை இரண்­டை­யும்­விட இன்னும் எத்­த­னையோ சம்­ப­வங்கள் முஸ்லிம் உல­குக்கும் மேற்­கு­ல­குக்கும் இடையே வளர்ந்த சிக்­க­லான வர­லாற்­று­றவை விளங்­கிக்­கொள்ள உதவும். அவற்­றை­யெல்லாம் பட்­டி­ய­லி­டு­வ­தானால் ஒரு நூலையே எழுதி விடலாம். ஆனால் இந்த இரண்டு உண்­மை­க­ளையும் பின்­ன­ணி­யாகக் கொண்டு அவற்­றி­லி­ருந்து மேற்­கு­லகு கற்ற பாடம் என்ன என்­பதை அறி­ய­வேண்டும். ஏனெனில், அந்தப் பாடம்தான் இன்­று­வரை இவ்­விரு உல­கு­க­ளுக்­கு­மி­டையே உள்ள உற­வி­னுக்கு அத்­தி­வா­ர­மாக அமை­கின்­றது. அந்த அத்­தி­வா­ரத்தில் கட்­டப்­பட்­டதே மத்­தி­ய­கி­ழக்கு அர­சியல் ஒழுங்கும் அதில் இஸ்­ர­வேலின் செயற்­பா­டு­களும்.

இஸ்­லா­மிய அச்­சமும் அத­னைப்
­போக்க உபா­யமும்
முஸ்­லிம்­களை, அதிலும் முஸ்லிம் மத்­திய கிழக்கை, ஒன்­றாக இணை­ய­விட்டு அன்று இஸ்லாம் தோற்­று­வித்த அறிவுத் தாகத்­தையும் விழிப்­புணர்வையும் அவர்களிடம் மீண்டும் மிளிர இட­ம­ளித்தால் ஒரு பலம்­பொ­ருந்­திய வல்­ல­ரசே அங்கு உரு­வா­கலாம் என்ற அச்சம் மேற்­கினை உறுத்­திக்­கொண்டே இருக்­கி­றது. அவ்­வாறு நடந்தால் அது மேற்கின் உலக ஆதிக்­கத்தை நிச்­சயம் பாதிக்கும் அல்­லவா? அந்தப் பாடத்­தைத்தான் அன்­றைய வர­லாறு அவர்களுக்குப் புகட்­டி­யது. உமை­யாக்­களின் ஆட்சி பிரான்சின் எல்­லை­வரை பட­ர­வில்­லையா? அதைத்­த­டுத்து நிறுத்­தத்­தானே 833இல் பொய்ற்­றியோஸ் யுத்தம் உமை­யாக்­களின் தள­பதி அப்துல் ரகு­மானின் படைக்­கெ­தி­ராக நடை­பெற்று அப்­படை தோற்­க­டிக்­கப்­பட்­டது? உமை­யாக்­களின் வாரி­சான இன்­னு­மொரு அப்துல் ரகு­மான்­தானே அந்தலூஸையும் (ஸ்பானியா) கைப்­பற்றி அதனை உலகின் ஜொலிக்கும் ஓர் ஆப­ரணம் என வரு­ணிக்கும் அள­வுக்கு ஓர் ஒப்­பற்ற கலா­சாரச் சோலை­யாக மாற்­றினார்? அப்­பா­சியர்களோ ஐரோப்­பாவை ஓர் இருண்ட கண்­ட­மாகக் கருதி ஐரோப்­பி­யரை மட­மையின் உறை­வி­ட­மென ஒதுக்­க­வில்­லையா? உது­மா­னியப் படைகள் ஐரோப்­பா­வுக்குள் ஊடு­ருவி பல பிர­தே­சங்­களை தமது ஆட்­சி­யின்கீழ் கொண்­டு­வ­ர­வில்­லையா? இவற்­றை­யெல்லாம் நினைத்துப் பார்த்­துத்தான் பதி­னாறாம் நூற்­றாண்டில் விழிப்­ப­டைந்த ஐரோப்பா முஸ்­லிம்­களின் ஆதிக்­கத்தை முறி­ய­டிக்கும் முயற்­சி­களை துரி­த­மாக மேற்­கொண்­டது.

அந்த முயற்­சி­களின் ஓர் அத்­தி­யா­யம்தான் நாடு கண்­டு­பி­டித்தல் என்ற இயக்­கமும். உதா­ர­ண­மாக, கொலம்பஸ் அமெ­ரிக்­காவை இந்­தி­யா­வென்று நினைத்துச் சென்­றது உண்­மை­யி­லேயே நாடு கண்­டு­பி­டிக்க அல்ல, அங்கே முஸ்­லிம்கள் வாழ்­கி­றார்­க­ளெனக் கேள்­வி­யுற்று அவர்களைக் கொன்று குவித்துக் கிறித்­து­வத்தைப் பரப்­பு­வ­தற்­கா­கவே, என்று அண்­மையில் வெளி­வந்த ஓர் ஆய்வு நிறு­வி­யுள்­ளது. அதே­போன்று வஸ்­கொ­ட­கா­மாவின் இந்­தியக் கண்­டு­பி­டிப்பும் முஸ்­லிம்­களின் கடல் ஆதிக்­கத்தை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே ஏற்­பட்­டது. இவ்­வா­றான ஒரு முஸ்லிம் எதிர்ப்புப் போராட்­டத்தின் உச்ச முயற்­சியே அன்­றைய உது­மா­னியப் பேர­ரசை பிரித்­தா­னி­யாவும் பிரான்சும் ருஷ்­யாவும் சேர்ந்து கூறு­போட்டு, தேசியம் என்ற போர்­வையில் சில புதிய நாடு­களை அதற்குள் உரு­வாக்கி அப்­பே­ர­ரசைச் சின்­னா­பின்­ன­மாக்­கிய வர­லாறு. அதனைத் தொடர்ந்து அப்­பு­திய நாடு­க­ளெல்லாம் (சவூதி அரே­பி­யா­வைத்­த­விர) மேற்கின் குடி­யேற்ற நாடு­க­ளா­கின. இருந்தும் பலஸ்­தீ­னத்­தையும் இஸ்­தாம்­பு­லையும் அவர்களால் கைப்­பற்ற முடி­ய­வில்லை.

முஸ்லிம் பேர­ரசைச் சீர­ழித்து சுதந்­திர நாடு­களை அங்கே உரு­வாக்கி அவற்றை மேற்கின் ஆத­ர­வாளர்களாக வளர்த்துவிட்ட போதிலும் அவை மீண்டும் ஒரு நாள் இஸ்லாம் என்ற குடை­யின்கீழ் ஒன்று திர­ளா­தென்­ப­தற்கு என்ன ஆதாரம்? எனவே அவர்களுக்கு மத்­தியில் முஸ்லிம் அல்­லாத, அதே­ச­மயம் மிக்க பல­முள்ள, ஒரு நாட்டை அங்கே உரு­வாக்­கி­வி­டுதல் நல்­ல­தல்­லவா? இந்தச் சதியின் விளைவால் உரு­வாக்­கப்­பட்­டதே இன்­றைய இஸ்­ரவேல். அந்தச் சதியின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிதான் பிரித்­தாள்­வ­திலே சரித்­தி­ரப்­பு­கழ்­பெற்ற பிரித்­தா­னியா.

அத்­துடன், இஸ்­ர­வேலை அரபு மக்­களின் நடுவே நுழைத்­து­விட்­டதால் மேற்கு நாடுகள் அது­வரை சுமந்த ஒரு குற்ற உணர்வையும் மறப்­ப­தற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்­தது. அதா­வது, பல நூற்­றாண்­டு­க­ளாக யூதர்களை ஏசு­நா­தரின் கொலை­காரர்கள் என்றும் பொரு­ளா­தாரச் சுரண்டர்கள் என்றும் பழி சுமத்தி அவர்களைப் பல­வ­ழி­க­ளிலும் துன்­பு­றுத்தி நாடோ­டி­கள்போல் உல­கெலாம் அலை­ய­விட்டு இறு­தி­யாக ஹிட்லர் நச்­சுப்­பு­கை­யாலும் பட்­டி­னி­யாலும் அவர்களைக் கொன்று குவித்­த­போதும் மௌனி­களாய் இருந்­தமை மேற்கு நாட்­டவர்களுக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. அந்த உணர்வை மறப்­ப­தற்கு நாடற்ற ஓர் இனத்­துக்கு நாடொன்றை உரு­வாக்கிக் கொடுப்­பது சிறந்­த­தெனக் கருதி இஸ்­ர­வேலை பலஸ்­தீன மக்கள் மத்­தியில் புகுத்­தினர். ஆனாலும் ஐரோப்­பியர் யூதர்களுக்கு இழைத்த துன்­பங்­க­ளுக்கு மத்­தி­யி­லெல்லாம் நேசக்­கரம் நீட்டி யூதர்களை தம்­முடன் வாழச்­செய்­தவர்கள் முஸ்­லிம்கள். அந்த முஸ்­லிம்­களில் ஒரு பகு­தி­யினர்தான் பலஸ்­தீனர்கள். அவர்களைத்தான் நன்­றி­ம­றந்த இஸ்­ரவேல் இன்று கொன்று குவிக்­கி­றது.

போராட்­டமே ஒரே வழி
பலஸ்­தீன மக்கள் தங்­க­ளுக்கு இருக்­கின்ற சொற்ப நிலத்­தை­யா­வது பாது­காக்கும் முக­மாகத் தொடர்ந்து போரா­டு­கி­றார்கள். அதை­விட அவர்களுக்கு வேறு வழி இல்லை. அந்தப் போராட்­டத்தின் அவ­லத்­தைத்தான் கடந்த சில நாட்­க­ளாக உலகம், அதிலும் குறிப்­பாக மேற்கு நாடுகள், பார்த்து ரசித்துக் கொண்­டி­ருந்­தன. வழ­மைபோல் அவர்கள் பார்­வையில் குற்றம் இஸ்­ர­வேல்மேல் அல்ல, ஹமாஸ் என்னும் தீவி­ர­வா­தி­கள்மேல் என்று கூறப்­ப­டு­கின்­றது. ஹமாஸின் நூற்­றுக்­க­ணக்­கான ஏவு கணைகள் இஸ்­ர­வேலின் பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விப்­பதால் இஸ்­ரவேல் தன்னைப் பாது­காக்க காசா­வினைக் குண்­டு­போட்டுத் தகர்க்கிறதாம். எத்­தனை முறைதான் இந்தப் பாடலைக் கேட்­பதோ? முதலில் சில வர­லாற்று உண்­மை­களைப் புரிந்து கொள்­வது அவ­சியம்.

ஹமாஸ் தீவி­ர­வாத இயக்­கமா?
பலஸ்­தீனர்களின் உரி­மை­க­ளைப்­பற்­றியும் அவர்களின் சுதந்­தி­ரத்­தைப்­பற்­றியும் அரபு நாடு­களும் ஐக்­கிய நாடுகள் சபையும் பாரா­மு­க­மாக இருந்­த­தைக்­கண்ட பலஸ்­தீன புத்­தி­ஜீ­விகள் தாமா­கவே தமது உரி­மை­க­ளுக்­கா­கவும் விடு­த­லைக்­கா­கவும் போராடத் தொடங்­கினர். அதற்­காகப் பல இயக்­கங்கள் அவர்களி­டையே தோன்­ற­லா­யின. அவற்றுள் ஜோர்ஜ் ஹபாஷ் தலை­மையில் உரு­வா­கிய பலஸ்­தீன விடு­தலை மக்கள் முன்­ன­ணியும் யசீர் அரபாத் தலை­மையில் உரு­வான அல்-­பத்தா என்ற பலஸ்­தீன விடு­தலை இயக்­கமும் முக்­கி­ய­மா­னவை. இவ்­விரு இயக்­கங்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்ட சித்­தாந்த ரீதி­யி­லா­ன வேறு­பா­டு­களால் அவற்றின் போராட்ட உத்­தி­களும் வேறு­ப­ட­லா­யின. ஈற்றில் அல்-­பத்தா இயக்­கமே பலஸ்­தீன மக்­களின் தலை­யாய போராட்ட இயக்­க­மாக உல­கெங்கும் கரு­தப்­பட்­டது. இதனால் அல்-­பத்­தாவை அழிப்­பதே இஸ்­ர­வேலின் பிர­தான நோக்­க­மாக மாறி­யது. அந்த இயக்­கத்­தைத்தான் ஒரு தீவி­ர­வாத இயக்­க­மென இஸ்­ர­வேலும் அதற்கு ஆத­ர­வான மேற்கு நாடு­களும் படம்­பி­டித்துக் காட்­டின.

அது மட்­டு­மல்ல அரபு நாடு­க­ளும்­கூட அல்-­பத்­தா­வுக்குப் பயந்­தன. ஏனெனில் ஒரு முறை அரபாத் தொலைக்­காட்சி ஒன்­றிற்கு அளித்த பேட்­டியில் அல்-­பத்­தாவின் பலஸ்­தீன விடு­தலைப் போராட்டம் அரபு நாடு­க­ளுக்கு ஊடா­கவே தொடரும் என்று கூறி­யமை அர­பு­நா­டு­களின் தலைவர்களை கதி­க­லங்க வைத்­தது. எனவே, பலஸ்­தீன மக்­க­ளி­டையே அல்-­பத்­தா­வுக்­கி­ருந்த செல்­வாக்கை குறைப்­ப­தற்­காக அதற்­கெ­தி­ராக இன்­னுமோர் இயக்­கத்தை இஸ்­ரவேல் உரு­வாக்க முனைந்­தது. அந்த முனைப்பின் விளைவே ஹமாஸ்.

கால் ஊன­முற்று பார்­வையும் குறை­வான பலஸ்­தீ­னிய ஷேக் அஹ்மத் யாசின் (1936–-2004) ஓர் இமாமும் அர­சி­யல்­வா­தி­யு­மாவார். செய்யத் குது­புவின் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் பலஸ்­தீனக் கிளை­யினை 1973இல் ஆரம்­பித்­த­வரும் அவரே. அவர் உரு­வாக்­கிய முஜாமா அல்-­இஸ்­லா­மிய என்ற தர்ம ஸ்தாபனம் பல நன்­கொ­டை­களை அரபு நாடு­க­ளி­லி­ருந்து பெற்று பலஸ்­தீன மக்­களின் தேவை­களைக் கவ­னித்­து­வந்­ததால் அது அம்­மக்­க­ளி­டையே செல்­வாக்கு நிறைந்த ஓர் இயக்­க­மாக வள­ர­லா­யிற்று. அந்த இயக்­கத்­தி­லி­ருந்­துதான் 1987இல் வெடித்த முத­லா­வது பலஸ்­தீன இந்­தி­பாதா அல்­லது கிளர்ச்சியுடன் உரு­வா­கி­யது ஹமாஸ். ஆகவே அல்-­பத்­தா­வுக்கு எதி­ராக ஹமாஸ் உரு­வா­கு­வ­தற்கு முதலில் ஆத­ரவு வழங்­கி­யது இஸ்­ரவேல் என்­பதை மறுக்க முடி­யாது.

அல்-­பத்தா இயக்கம் கால­வோட்­டத்தில் அதன் விடு­தலைப் போராட்ட உணர்வுகளை பத­விக்­கா­கவும் புக­ழுக்­கா­கவும் பணத்­துக்­கா­கவும் ஈடு­வைத்து அமெ­ரிக்­காவின் அழுத்­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, அரபு நாடு­களின் இஸ்­ர­வே­லு­ட­னான உற­வுக்கும் தலை­யாட்டத் தொடங்­கி­யதால் பலஸ்­தீன மக்கள் அவ்­வி­யக்­கத்­தின்மேல் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை படிப்­ப­டி­யாக இழக்­க­லா­யினர். இதனால் 2009இல் நடந்த பலஸ்­தீனப் பாரா­ளு­மன்றத் தேர்தலில் மொத்தம் 132 ஆச­னங்­களில் 76 ஆச­னங்­களை ஹமாஸ் இயக்கம் வென்று அமெ­ரிக்­கா­வையும் இஸ்­ர­வே­லையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. உடனே எழுந்­தது ஹமா­ஸூக்­கெ­தி­ரான தீவி­ர­வாத இயக்­க­மென்ற அமெ­ரிக்­க-­இஸ்­ரவேல் கூட்டுப் பிரச்­சாராம். எப்­ப­டி­யா­வது பலஸ்­தீ­னத்தில் ஹமாஸ் அர­சாங்கம் அமைப்­பதைத் தடுப்­பதே இந்­தப்­பி­ரச்­சா­ரத்தின் நோக்கம். அதன் விளை­வுதான் மேற்குக் கரையில் அல்-­பத்­தாவும் காசாவில் ஹமாஸூம் தனித்­த­னியே ஆள­வேண்டி வந்த வர­லாறு. இப்­போது கூறுங்கள் வாசகர்களே, பலஸ்­தீ­னத்தில் ஜன­நா­யகம் வள­ர­வி­டாமல் தடுத்­தது ஹமாஸா அமெ­ரிக்­காவா? ஹமாஸ் தீவி­ர­வாத இயக்­க­மென்றால் அதனை தீவி­ர­வா­தி­யாக்­கி­யது யார்? பலஸ்­தீனர்களா அல்­லது இஸ்­ர­வேலும் அமெ­ரிக்­காவும் அவற்றின் நேச­ நா­டு­க­ளுமா?

இந்த நாட­கத்தை விளங்கிக் கொண்டால் பலஸ்­தீனம் முற்­றாக ஒரு நாள் அகன்ற இஸ்­ர­வே­லுக்குள் அடக்­கப்­ப­டும்­வரை அமெ­ரிக்­காவும் அதன் நேச நாடு­களும் இஸ்­ர­வேலின் ஆக்­கி­ர­மிப்­புக்கு ஆத­ரவு வழங்­கிக்­கொண்டே இருக்கும் என்­பதை மறுக்க முடி­யாது. அவ்­வாறு அடக்­கப்­பட்­டபின் பலஸ்­தீன மக்­களின் நிலை அவுஸ்­தி­ரே­லியா ஆதி­வா­சி­களின் நில­மைக்கும் கீழே தள்­ளப்­ப­டு­வது நிச்­சயம். இந்த நிலையில் உலக முஸ்­லிம்கள் உண­ர­வேண்­டிய இன்­னுமோர் கசப்­பான உண்­மையும் உண்டு.

ஐயோ! அரபு நாடு­களே
இஸ்­ரவேல் போரா­யுத பல­முள்ள ஒரு நாடு. அது மட்­டு­மல்ல, அதற்குத் தேவை­யான ஆயு­தங்­களை அந்த நாடே உற்­பத்தி செய்­யக்­கூ­டிய வல்­ல­மையும் அதற்­குண்டு. அதற்குத் தேவை­யான விஞ்­ஞா­னி­க­ளையும் வல்­லுனர்களையும் விஞ்­ஞான ஆய்வு கூடங்­க­ளையும் அந்த நாடு உற்­பத்தி செய்­துள்­ளது. அதற்­கேற்­ற­வாறு அந்த நாட்டின் கல்வி அமைப்பும் அமைந்­துள்­ளது. எனவே அந்த நாட்டை எதி­ர்த்துப் போரா­ட­வேண்­டு­மானால் அதே வளங்­க­ளைக்­கொண்ட நாடு­க­ளா­லேதான் முடியும்.

1948 இலி­ருந்து மூன்று தட­வை­க­ளி­லா­வது அரபு நாடுகள் இஸ்­ர­வே­லுடன் மோதித் தோல்­வியைத் தழு­வின. ஆனால் அதன் பின்­ன­ரா­வது விஞ்­ஞான ரீதி­யாகத் தமது நாடு­களை முன்­னேற்றம் அடை­யச்­செய்து இஸ்­ர­வே­லுக்­கீ­டாகத் தம்மைத் தயார் படுத்­திக்­கொள்ள வேண்­டு­மென்ற எண்ணம் எந்த ஒரு அரபு நாட்­டுக்­கா­வது எழுந்­த­துண்டா? அந்நிய நாடு­க­ளி­ட­மி­ருந்து போர்க்­க­ரு­வி­களை விலைக்கு வாங்­கி­னாலும் அவற்றை இயக்கும் திற­மை­யா­வது இந்த நாடு­க­ளிடம் இருக்­கின்­றதா? இந்த நிலையில் இஸ்­ர­வேலை எதிர்த்துப் போரா­டு­வது எப்­படி?

உலக இஸ்­லா­மியக் கூட்­ட­மைப்பில் 57 நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. உலக சனத்­தொ­கையில் முஸ்­லிம்கள் இரு­பது சத­வீ­தத்­தினர் என்று பெரு­மை­யோடு கூறப்­ப­டு­கி­றது. ஆனால் எந்த ஒரு நாட்­டுக்­கா­வது ஐக்­கிய நாடு­களின் பாது­காப்புச் சபையில் ரத்து அதி­கா­ரத்­துடன் அங்­கத்­துவம் உண்டா? ஏன் இந்தப் பல­ஹீனம்? வறு­மையே இதற்குக் காரணம் என்று நீண்­ட­கா­ல­மாகக் கூறி­வந்­தனர். ஆனால் 1980 களி­லி­ருந்து இறை­வனே அந்த வறு­மையை விரட்ட வழி­வ­குத்­த­து­போன்று எண்ணிக் கணக்­கெ­டுக்க முடி­யாத அள­வுக்கு எண்ணெய் வளத்­தினால் மலை­போன்று பணம் வந்து குவிந்­தது. அந்தப் பணத்­தை­வைத்து என்ன செய்­தார்கள்? எத்­தனை விஞ்­ஞான ஆய்­வு­கூ­டங்­களை அமைத்து எத்­தனை விஞ்­ஞா­னி­க­ளையும் அறி­வா­ளி­க­ளையும் உரு­வாக்­கினர்? உல்­லா­ச­பு­ரி­க­ளையும் மாட­மா­ளி­கை­க­ளையும் ஆடம்­பர விடு­தி­க­ளையும் உரு­வாக்­கிய அள­வுக்கு ஏன் விஞ்­ஞான கூடங்­க­ளையும் நூல்­நி­லை­யங்­க­ளையும் ஆய்வு நிலை­யங்­க­ளையும் அமைக்­க­வில்லை? அமைக்­கப்­பட்ட கல்விக் கூடங்­க­ளிலும் என்ன வகை­யான கல்­வியைப் புகட்­டினர்? சிந்­த­னையை மட்­டந்­தட்டி, சிந்­த­னை­யாளர்களையும் சிறை­யி­ல­டைத்து, மர­புக்­கல்­வி­யையும் மர­பு­வா­தி­க­ளையும் வளர்த்துவிட்­ட­தனால் எத்­த­னையோ முஸ்லிம் அறிஞர்களும் ஆய்­வாளர்களும் மேற்கு நாடு­க­ளுக்குப் படை­யெ­டுத்­த­துதான் மிச்சம்.

அரபு நாடு­க­ளுக்குப் பணம் குவி­யத்­தொ­டங்­கிய காலத்­தி­லேதான் சீனாவும் இந்­தி­யாவும் பொரு­ளா­தார, கல்விச் சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்டு தமது நாடு­களை முன்­னேற்றத் தொடங்­கின. இன்­றைக்கு அந்த நாடு­க­ளுக்கு நிக­ராக எந்த ஒரு முஸ்லிம் நாடா­வது வளர்ச்சி பெற்­றி­ருக்­கின்­றதா? சீனர்களுக்கும் இந்­தியர்களுக்­கு­முள்ள சிந்­த­னா­சக்தி முஸ்­லிம்­க­ளுக்குக் கிடை­யாதா? முஸ்­லிம்­களின் அன்­றைய அறிவு வளர்ச்சிக்கு என்ன நடந்­தது? யார் அந்த வளர்ச்சிக்குத் தடைக்கல் போட்­டனர்?

விஞ்­ஞான, தொழில் நுட்ப அறிவை வளர்த்து ஆயு­த­ப­லத்­துடன் உலக அரங்கின் முன்­வ­ரி­சையில் நின்­று­கொண்டு இஸ்­ர­வே­லுக்கும் அதன் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பதி­லடி கொடுக்கக் கிடைத்த ஒரு அரிய சந்­தர்ப்­பத்தை 1980களில் நழு­வ­விட்­டபின் இப்­போது அர்த்­த­மற்ற ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வ­தனால் பலஸ்­தீனம் காப்­பாற்­றப்­படப் போவ­தில்லை. எண்ணெய் வளத்­தாலும் வறிய நாட்டு மக்­களின் வியர்­வை­யி­னாலும் அன்­றைய ஆயி­ரத்தோர் இரவுக் கன­வு­களை நன­வாக்கி ஜொலிக்கும் இன்­றைய அரபு நாடுகள் இப்­போது இஸ்­ர­வே­லுடன் நட்­பு­றவு கொண்­டாடத் துடிப்­பதை எவ்­வாறு சரி காண்­பதோ? எனவே ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட வேண்­டி­யது இஸ்ரவேலுக்கு எதிராக அல்ல இந்த அரபு நாடுகளுக்கு எதிராகவே.

பலஸ்தீனத் துயர்
பலஸ்­தீன மக்­களே! உங்­களின் தியா­கங்­களும் இழப்­பு­களும் வர­லாற்றில் எங்­குமே மறக்க முடி­யாத பெரு­மையும் சோகமும் கலந்த காப்­பிய நிகழ்­வுகள். ஒவ்­வொரு முறையும் நீங்கள் நசுக்­கப்­பட்டு அழிக்­கப்­படும் போதெல்லாம் உங்­க­ளோடு சேர்ந்து போராட வேண்­டி­ய­வர்கள் வெறும் வார்த்­தை­களால் மட்டும் ஆறுதல் கூறிக்­கொண்டு விலகி நிற்­கின்­றனர். சமா­தானம் என்ற பெயரில் எதி­ரிக்கு வக்­கா­லத்து வாங்­கு­ப­வர்­க­ளாக அவர்கள் மாறி­யுள்­ளதை நினைக்கும் போதெல்லாம் எத்­த­னையோ ஏழை நெஞ்­சங்கள் உங்­க­ளுடன் சேர்ந்து குமு­று­கின்­றன. இது அவர்கள் உங்­க­ளுக்குச் செய்யும் துரோகம். ஆனால் ஒன்­று­மட்டும் உண்மை. உங்­களின் எதி­ரிகள் உங்­களை நசுக்­கு­வ­தோடு மட்டும் ஆறு­தல் அடையப் போவ­தில்லை. அவர்­களின் எதிர்­கால ஆக்­கி­ர­மிப்பு ஜோர்­டா­னையும் எகிப்­தை­யும் சிரி­யா­வையும் இராக்­கை­யும்­கூட குறி­வைத்­துள்­ளது. இத­னா­லேதான் அந்த நாடு­க­ளையும் எழும்­ப­வி­டாமல் மேற்­கு­லகு சீர­ழித்துக் கொண்­டி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் உது­மா­னியப் பேர­ரசைச் சின்­னா­பின்­ன­மாக்­க­வென்று ஐரோப்­பிய நாடுகள் முத­லா­வது உலகப் போருடன் ஆரம்­பித்த சதி இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. பலஸ்தீனப் போராட்டம் அதன் இன்றைய அத்தியாயம். Vidivelli

Leave A Reply

Your email address will not be published.