மாயையில் மயங்கும் மக்கள்

0 207

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

“உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றதின்று காண்;, எழுந்திராய்! எழுந்திராய்!!” (கம்பராமாயணம்)
முஸ்­லிம்­க­ளுக்கு இது ஒரு புனி­த­மான மாதம். ஒவ்­வொரு வரு­டமும் இந்த மாதம் எப்­போது வரு­மென்று காத்­தி­ருக்கும் மாதம். பகல்­தோறும் பசித்­தி­ருந்து இரவு நேரத்தை இறை வணக்­கத்­திலும் பாவ­மன்­னிப்புக் கேட்­ப­தி­லு­மாகக் கழிக்கும் அருட்­கொடை மாதம். அத­னா­லேதான் நாட்டு நடப்பு பற்­றியும் அர­சியல், பொரு­ளா­தார விட­யங்­க­ளைப்­பற்­றியும் என் கட்­டு­ரை­களில் அலசி அவர்­களின் சிந்­த­னையை வேறுதிசையில் திருப்பக் கூடா­தென நினைத்து அமை­தி­யாக இருந்தேன். ஆனால் ஒளி­ம­ய­மான எதிர்­கா­ல­மொன்று வர­வி­ருக்­கி­றது என்ற ஒரு மாயையை சிருஷ்­டித்து அதனை தடுப்­ப­தற்கு முனையும் சகல எதிர்ப்­பு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயல் எனக் கருதும் ஒரு சட்­டத்­தையும் இயற்ற எத்­த­னிக்­கி­றது அரசு. அந்தப் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் எவ்­வ­ளவு ஆபத்­தா­னது என்­ப­தையும் அதனால் சிறு­பான்மை இனங்கள் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டுவர் என்­ப­தையும் உணர்ந்து அத­னைப்­பற்றி இக்­கட்­டு­ரையை எழுதத் துணிந்தேன். இரா­மா­ய­ணத்தின் மேற்­கூ­றிய இரு வரிகள் இக்­கட்­டு­ரையின் உள் நோக்கத்தை தெளி­வாக்­கு­மெ­னவும் நினைக்­கிறேன். இவ்­வி­ட­யத்தைப் பற்­றிய ஓர் ஆங்­கி­லக்­கட்­டுரை ஏற்­க­னவே கொழும்பு தெலி­கி­றா­பிலும் பைனான்சல் ரைம்­ஸிலும் வெளி­யா­கி­யுள்­ளது.

ஒளி­ம­ய­மான மாயை
கடந்த வருடம் காலி­முகத் திட­லிலே குழு­மிய இளை­ ஞர்­களின் எழுச்சிப் படை சிங்­கள பௌத்த இன­வாதச் சிந்­த­னையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட அர­சியல் சமூக பொரு­ள­ாதார அமைப்­பையே மாற்று என்ற மகத்­தான ஒரு கோரிக்­கையை முன்­வைத்து அமை­தி­யுடன் தனது பேராட்­டத்தை ஆரம்­பித்­தது. அந்த மாற்றம் இல்­லாமல் ஒளி­ம­ய­மான எதிர்­கா­ல­மொன்றை இலங்­கையில் உரு­வாக்க முடி­யாது என்­பதை அவர்கள் உணர்ந்­தனர். ஆனால் அந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இன்­றுள்ள அர­சியல் தலை­மைத்­துவம் பொருத்­த­மற்­றது என்­ப­தையும் அவ்­வி­ளை­ஞர்கள் உணர்ந்­த­தனால் “225 வேண்டாம்” என்ற இன்­னொரு கோரிக்­கை­யையும் முன்­வைத்துக் கிளர்ச்சி செய்­தனர். எல்லா இனத்­த­வ­ரையும் மொழி­யி­ன­ரையும் உள்­ள­டக்கி ஆண் பெண் பாகு­பா­டற்று அர­சியல் சாய­மின்றி நான்கு மாதங்­க­ளாக அமை­தி­யுடன் நடை­பெற்ற அக்­கி­ளர்ச்சி உல­கத்தின் கவ­னத்­தையே தம்­பக்கம் ஈர்த்­ததில் ஆச்­ச­ரியம் இல்லை. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் அது ஒரு திருப்­பு­முனை என்று பல­ரா­லும் பாராட்­டப்­பட்­டது.

ஆனால், அக்­கி­ளர்ச்­சியைக் கண்டு நடுங்­கிய பழைய அமைப்­பிலே ஊறித்­தி­ழைத்து அதன்­மூலம் அமோக பய­ன­டைந்த அர­சியல் தலை­வர்கள் என்ன செய்­வ­தென்று அறி­யாது திகைத்­தனர். ஈற்றில் அந்தப் போராட்­டத்தை எவ்­வ­ழி­யி­லேனும் முறி­ய­டிக்கத் திட்­ட­மிட்டு ஒரு கூலிப்­ப­டை­யி­னரை ஏவி வன்­மு­றையை அவிழ்த்­து­விட்­டனர். தன்­வினை தன்னைச் சுடும் என்­ப­து­போல அந்த வன்­செயல் பிர­தமர் மஹிந்­தவை பதவி துறக்கச் செய்து, ஜனா­தி­பதி கோத்­தா­வையும் நாட்­டையே விட்­டோடச் செய்து, ஈற்றில் 2019 பொதுத் தேர்­தலில் படு தோல்­வியைக் கண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­ப­தி­யாக அமர்த்திவிட்­டது. மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டாமல் அர­சியல் யாப்பின் பிர­காரம் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டவர் அவர்.

புதிய ஜனா­தி­ப­தியின் எண்ணக் கருவில் ஒளி­ம­ய­மான எதிர்­காலம் அமை­வ­தற்கு கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் அமைப்பு மாற்றம் அவ­சியம் இல்லை, பொரு­ளா­தார மீட்­சியே தேவை என்ற கருத்து ஏற்­க­னவே குடி­கொண்­டி­ருந்­தது. எனவே அவர் முத­லா­வ­தாகச் சாதித்­தது இளை­ஞர்­களின் கிளர்ச்­சியை காவல் துறை­யி­ன­ரைக்­கொண்டு முறி­ய­டித்­த­மை­யாகும். அவர்­களின் தலை­வர்­களை சிறைக்குள் தள்ளி ஏனையோரை அவர்­களின் வீடு­க­ளுக்குத் திருப்பி அனுப்பி வெற்­றி­வாகை சூடினார். அந்தச் சாத­னையால் ராஜ­பக்ச அர­சுக்கும் அதன் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் புதிய ஜனா­தி­பதி பழைய அமைப்பின் பாது­கா­வலன் என்­பதை உறு­திப்­ப­டுத்­திற்று. ஆனால் ஜனா­தி­ப­தியோ தன் செல்­வாக்கை நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே பொது மக்­க­ளிடம் பெருக்க வேண்­டு­மானால் அந்த வெற்றி மட்டும் போதாது என்­பதை நன்­கு­ணர்ந்து தனது கவ­னத்தை வங்­கு­ரோத்­தான பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் திருப்­ப­லானார்.

திக்­கற்­ற­வ­னுக்குத் தெய்­வமே துணை என்பர். அதே­போன்று பொரு­ளா­தா­ரத்­திலும் தாராண்மை கொள்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்கும் இலங்கை போன்ற திறந்த பொரு­ளா­தா­ரங்கள் வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்டுத் திக்­கற்று நின்றால் அதற்குத் துணை­யாக சர்­வ­தேச நாணய நிதிதான் உண்டு. எனவே ஜனா­தி­பதி ரணிலும் அந்த நிதியின் கால­டியில் சர­ண­டைந்­ததில் எந்த வியப்பும் இல்லை.

அந்த நிதியோ தனது விதி­க­ளுக்கு அடி­ப­ணிய விரும்­பினால் 2.9 பில்­லியன் டொலர்­களை எட்டுத் தவ­ணை­களில் கொடுத்து உத­வு­வ­தற்கு முன்­வந்­தது. அந்த விதி­க­ளுக்கு அமை­யவே ஜனா­தி­ப­தியும் நிதி அமைச்சர் என்ற முறையில் 2023ஆம் வரு­டத்­துக்­கான வர­வு­செ­லவு அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அதற்கு அங்­கீ­காரம் பெற்றார். அந்த அறிக்கை அமு­லாக்­கிய வரிப்­ப­ளுவும் கட்­ட­ணங்­களும் பொது­மக்­க­ளி­டையே எவ்­வா­றான கசப்பை உரு­வாக்­கிற்று என்­பதை மக்­களின் எதிர்ப்புப் போராட்­டங்கள் எடுத்­துக்­காட்­டின.

இருந்தும் நாணய நிதியின் பண உதவி கிட்­டி­ய­தாலும் நாட்டின் கடன்­பழுப் பிரச்­சினை சற்றுத் தள்­ளிப்­போ­டப்­பட்­ட­தாலும் சில அத்­தி­யா­வ­சிய நுகர்வுப் பொருட்கள் இறக்­கு­மதி செய்யப்­பட்டு வினி­யோ­கிக்­கப்­பட்­டதால் அப்­பொ­ருள்­களின் விலைகள் குறையத் தொடங்கி அவற்­றுக்­கா­ன நுகர்வோர் கியூ வரி­சை­களும் மறையத் தொடங்­கின. இந்த மாற்­றங்­களே பொரு­ளா­தாரப் பொற்­காலம் பிறந்­து­விட்­ட­தென்ற ஒரு மாயையை இப்­போது தோற்­று­வித்­துள்­ளது. இந்த மாயை­யையின் பின்­ன­ணி­யி­லேதான் அறி­மு­க­மாக இருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை ஆராய வேண்டும்.

ஒரு வாரிசு
அறி­மு­க­மாக இருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் ஜெய­வர்த்­தன ஆட்­சியில் 1979ல் அமு­லாக்­கப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடுப்­புச்­சட்­டத்தின் வாரிசு. இந்த வாரிசின் தாய்ச் சட்டம் புலி­களின் வன்­செ­யல்­களின் பின்­ன­ணி­யிலும் தமி­ழரின் உரிமைப் போராட்­டத்தின் பின்­ன­ணி­யிலும் உரு­வாக்­கப்­பட்­டதால் பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­தி­களும் சிங்­க­ளச்­ச­மூ­கமும் அதனை பூர­ண­மாக ஆத­ரித்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஏன், முஸ்­லிம்­க­ளும்­தானே அதனை ஆத­ரித்­தார்கள். ஆனால் 2009ல் புலி­களின் படை­களைப் பூண்­டோடு அழித்த பின்­னரும் அச்­சட்டம் எவ்­வாறு சர்வ அதி­கா­ரங்­க­ளையும் கொண்ட ஒரு ஜனா­தி­ப­தியின் கைகளில் ஜன­நா­யகத்­தையே ஒழித்­துக்­கட்டி மனித உரி­மை­க­ளையும் பறிக்கும் ஓர் ஆயு­த­மாக மாறலாம் என்­பதை கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஆட்சி மிகவும் துல்­லி­ய­மாக விளக்­கி­யது. அந்தச் சட்­டத்­தி­னா­லேதான் மனித உரிமைச் சட்­டத்­த­ர­ணியும் நிர­ப­ரா­தி­யு­மான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா சிறையில் அடைக்­கப்­பட்­டதை முஸ்­லிம்கள் மறந்­தி­ருக்­கமாட்;டார்கள். அதே­போன்று 2019 ஈஸ்டர் குண்­டு­வெ­டிப்புத் தாக்­கு­த­லின்­பின்பு எத்­தனை முஸ்­லிம்கள் அச்­சட்­டத்­தினால் இன்றும் சிறையி;ல் அடை­பட்டுக் கிடக்­கின்­றார்கள் என்­ப­தையும் மறப்­ப­தற்­கில்லை

பயங்­க­ர­வாதத் தடுப்­புச்­சட்­டத்­திற்­கெ­தி­ரான போராட்டம் கோத்­தா­பய ஆட்­சி­ய­லேதான் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யது. சிவில் சமூக இயக்­கங்கள், மனித உரிமைத் தாப­னங்கள், புலம்­பெயர் இலங்­கையர் அமைப்­புகள், தொழிற் சங்­கங்கள் என்­ற­வாறு பல கோணங்­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்­புகள் ஆரம்­ப­மாகி அது உலக அரங்­கிலே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிறு­வ­னத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தது. இலங்­கையின் ஜன­நா­யக மர­புகள் படிப்­ப­டி­யாக அச்­சட்­டத்தின் பிடிக்குள் சிக்கி சிதையத் தொடங்­கி­யதை உணர்ந்த உலக அரங்கு அச்சட்;டத்தை நீக்­கு­மாறு வற்­பு­றுத்­தி­யது. பொரு­ளா­தார வங்­கு­ரோத்­துக்குள் சிக்­கித்­த­வித்த இலங்கை அர­சுக்கு வெளி­நா­டு­களின் உத­வி­க­ளையும் அதிலும் குறிப்­பாக மேற்­கு­லகின் பொரு­ளா­தார உத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற­வேண்­டு­மானால் அச்­சட்­டத்தை நீக்­கு­வ­தன்றி வேறு­வழி தெரி­ய­வில்லை.

ஆனால் அந்தச் சட்­டத்தை நீக்­கு­வ­தாகக் கூறிக்­கொண்டு இப்­போது அறி­மு­கப்­ப­டுத்த இருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் முன்­பி­ருந்த சட்­டத்தின் நகல்­போன்று இருப்­ப­தாக அத­னைப்­ப­டித்த சட்ட வல்­லு­னர்கள் கரு­து­கி­றார்கள். உதா­ர­ண­மாக, அர­சாங்­கத்தின் வரி­க­ளுக்­கெ­தி­ரான ஒரு போராட்­டத்தை ஆரம்­பிக்கத் திட்­ட­மிட்டால் அவ்­வாறு திட்­ட­மிட்­டோரை பயங்­க­ர­வா­தி­க­ளெனக் கருதி இந்தச் சட்­டத்­தின்கீழ் தடை­செய்ய முடியும். அதே­போன்று சிறு­பான்மை இனங்கள் தமது உரி­மை­க­ளுக்­காகப் போராடத் தொடங்­கினால் அதையும் பயங்­க­ர­வா­த­மெனக் கருத இச்­சட்­டத்தில் இட­முண்டு. இவ்­வாறு நினைத்­த­வா­றெல்லம் ஓர் அரசு தனது எதி­ரா­ளி­க­ளின்­மீது குற்றம் சுமத்­தக்­கூ­டிய வாய்ப்­பினை ஏற்­ப­டுத்தும் சட்­டங்கள் உரு­வா­கு­வ­தற்கு அடிப்­படைக் காரணம் பயங்­க­ர­வாதம் என்றால் என்ன என்­ப­தற்கு சட்­ட­வியல் ரீதி­யான ஒரு வரை­வி­லக்­கணம் இது­வரை இயற்­றப்­ப­ட­வில்லை. அவ்­வாறு ஒரு வரை­வி­லக்­க­ணத்தை இயற்­று­வதை உலக வல்­ல­ர­சு­களும் விரும்­ப­வில்லை. அத­னா­லேதான் அர­சுகள் தமக்குப் பிடிக்­காத எதிர்ப்­பு­களை எல்லாம் பயங்­க­ர­வாதம் என்ற கூட்­டுக்குள் கால­வ­ரை­யின்றித் தள்­ளி­வி­டலாம். அதைத்தான் ரணிலின் ஆட்­சியும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­தின்­மூலம் செய்ய முனை­கி­றது.

ஏன் இந்தச் சட்டம்?
இக்­கட்­டு­ரையின் ஒரு முக்­கிய கேள்வி இந்தச் சட்டம் இப்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் அந்­த­ரங்கம் என்ன என்­ப­துதான். அதன் பின்­னணி என்ன?

அமைப்­பையே மாற்று, அந்த மாற்­றத்தைக் கொண்­டு­வர ஒரு புதிய தலை­மைத்­துவம் வேண்டும் என்று போரா­டிய இளை­ஞர்­களைத் துரத்­தி­ய­டித்­து­விட்டு, சில பொரு­ளா­தார மாற்­றங்­க­ளையும் நாணய நிதியின் உத­வி­யுடன் கொண்­டு­வந்து, இன்னும் 25 ஆண்­டு­களில் இலங்கை ஒரு பொற்­கா­லத்தில் மிதக்கும் என்ற ஒரு மாயையை ஜனா­தி­பதி சிருஷ்­டித்­துள்ளார் என்­பதை ஏற்­க­னவே கண்டோம். ஆனால் அது முடி­யா­தென்­ப­தையும் அவர் உணர்வார். மீண்டும் பொரு­ளா­தாரக் கார்­மே­கங்கள் உலகப் பொரு­ளா­தா­ரத்தைச் சூழும் என்­பதை சர்­வ­தேச நாணய நிதியே அறி­வித்­துள்­ளது. அதற்­கு­ரிய கார­ணங்­களை இங்கே விளக்­கப்­போனால் இக்­கட்­டுரை மிகவும் நீண்­டு­விடும் என்­பதால் அதனை வேறெரரு கட்டு­ரையில் விளக்­குவேன். எனினும் உலகப் பொரு­ளா­தா­ரமே சரி­யும்­போது உலக சந்­தையை நம்பி இயங்கும் இலங்­கையின் பொரு­ளா­தாரம் மட்டும் துரித வளர்ச்சி காண முடி­யுமா?

உலகப் பொரு­ளா­தார நிலைமை ஒரு புற­மி­ருக்க, இலங்­கையின் கடன் இறுப்புச் சீர­மைப்பைப் பற்­றிய பேச்­சு­வர்த்­த­தைகள் இன்னும் ஆரம்­ப­மா­க­வில்லை. அதன் விளை­வுகள் பொரு­ளா­தாரக் கஷ்­டங்­களை மேலும் வலு­வ­டையச் செய்யும் என்­பதில் சந்­தேகம் இல்லை. மீண்டும் விலை­வா­சிகள் ஏறு­வ­தையும் பண­வீக்கம் உயர்­வ­தையும் வட்­டி­வீதம் அதி­க­ரிப்­ப­தையும் தடுக்க முடி­யாது. அவற்றைத் தடுக்க இன்­றைய மத்­திய வங்­கிகள் செய­லி­ழந்து நிற்­கின்­றன என்­பதை பொரு­ளியல் வல்­லு­னர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இந்த நிலையில் அரசு கடும் எதிர்ப்­பினை மக்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கலாம்.

அர­சியல் காரணம்
ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­த­லிலே போட்­டி­யிடப் போவது நிச்­சயம். ஆனால் அதற்­காக மக்­களின் ஆத­ரவைப் பெற­வேண்­டு­மானால் அந்த மக்­களை தான் சிருஷ்­டித்­துள்ள மாயையில் தொடர்ந்து மயங்­க­வைக்க வேண்டும். அதே வேளை அந்த மாயையின் வெற்று வடி­வத்தை மக்­க­ளுக்கு உணர்த்தி நாட்டின் அர­சியல் சமூக பொரு­ளா­தார அமைப்­பையே மாற்­ற­வேண்டும் என்ற போராட்டம் மீண்டும் வெடிக்­கலாம் என்­பதும் அவ­ருக்குத் தெரியும். அந்த முயற்­சியில் தேசிய மக்கள் சக்தி இப்­போது முன்­னி­லையில் நிற்­கி­றது. அதன் அணியில் இளைஞர் சமூ­கமும் திரள்கிறதும் அவருக்குத் தெரியும். இளைஞர்களை தனது வலைக்குள் சிக்கவைக்க அவர் கையாண்ட யுக்திகளெல்லாம் பலனளிக்கவில்லை. எனவேதான் வருமுன் காப்போனாக அவர் எடுக்கும் முயற்சியின் வடிவமாக அமைகின்றது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.

முஸ்லிம்களே! விழிப்புறுங்கள்
அமைப்பை மாற்­றாமல் தனது மாயைக்குள் சிறு­பான்மை இனங்­க­ளையும் இழுப்­ப­தற்­காக இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­போ­வ­தா­கவும் அவர் கூறு­கிறார். ஏற்­க­னவே இரு மாதங்­களின் முன்னர் 13ஆம் திருத்­தத்தை அமு­லாக்க அவர் எடுத்த முயற்சி காவிப்­ப­டையை வீதிக்குக் கொண்­டு­வந்­ததை யாவரும் அறிவர். ஒன்­று­மட்டும் உண்மை. பௌத்த சிங்­கள பேரின ஆட்­சியின் அடித்­த­ளத்­தையே நீக்­காமல் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண முடி­யாது. அந்த அடித்­த­ளத்­தினை உடைத்­த­தெ­றியும் துணிவு அவ­ருக்­கில்லை. எனினும் சில சிறு­பான்மை அங்­கத்­த­வர்­களை விலை­பேசி வாங்கி மந்­திரி சபைக்குள் நுழைத்து அவர்­க­ளைக்­கொண்டு அவ்­வி­னங்­களின் ஆத­ர­வைத்­தி­ரட்ட முயல்­கிறார். அவ்­வாறு வாங்­கக்­கூ­டிய முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு என்ன பஞ்சம்? அத­னா­லேதான் வரப்­போகும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­தைப்­பற்றி அவர்கள் மௌனி­க­ளாக இருக்­கின்­றனர். முஸ்­லிம்­களே! மாயையை விட்­டெ­ழுந்து விழிப்­புடன்; செயற்படுங்கள். கம்பன் சொன்னது போன்று “உங்கள் மாயவாழ்வெலாம் இறங்குகின்றது இன்று காண்”.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.