வீட்டுக்குச் செல்வதே தீர்வு!

0 331

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், நாடெங்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த அரசாங்கம் இத்தாக்குதலைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்ததாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது பெரும்பான்மை மக்களும் இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வாரம் அரசாங்கம் ஊடக மாநாடு ஒன்றை நடாத்தி, பழைய பல்லவியையே பாடியது. இத் தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம், உச்சபட்ச தண்டனை வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அது தொடர்பில் எந்தவித ஆரோக்கியமான நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை. மாறாக உண்மையான கத்திரதாரிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில்தான், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துள்ள மக்கள் இந்த அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து தெளிவடைய ஆரம்பித்துள்ளனர். ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ராஜபக்ச ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது அதிகாரத்தைப் பிரயோகித்திருப்பார்கள் என்பதை பெரும்பான்மை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
ரம்புக்கணையில் மக்கள் அமைதியாகவே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில், அங்கு வந்த பொலிசாரே முச்சகர வண்டிகளுக்கு தீயை வைத்து வன்முறையைத் தோற்றுவித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் நீதிவான் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். மிரிஹானையிலும் பஸ் வண்டிக்கு தீ வைத்தது பொலிசார் பக்கம் இருந்து வந்தவர்கள் என்றே அச் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் கூறுகின்றனர்.

ஆட்சியாளர்களின் தேவைகளுக்காக பொலிசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைக் கூட தடுத்து நிறுத்துவதற்குப் போதுமான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் பொலிஸ் உயரதிகாரிகள் அசமந்தமாக இருந்தமையே இவ்வாறானதொரு பாரிய அனர்த்தம் இடம்பெறக் காரணம் என்பதையும் தற்போது வெளிவரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது ஆட்சியிலுள்ளவர்களின் தேவைக்காகவா இத் தாக்குதலை தடுத்து நிறுத்தாது பொலிசார் வேடிக்கை பார்த்தனர் என்ற கேள்வி விடை காணப்பட வேண்டியதாகும்.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் இன்று வீதிக்கு இறங்கிப் போராடுவதற்கு காரணம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினைகள் மாத்திரமல்ல. மாறாக இந்த ஆட்சியாளர்கள் தமது கடந்த கால செயற்பாடுகள் மூலமாக மக்களிடமிருந்து சம்பாதித்த சாபமுமேயாகும்.

யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் தொடர்பில் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன. யுத்தம் முடிந்த பிற்பாடு தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நடாத்திய அட்டூழியங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் கிறிஸ்தவ சமூகமும் முஸ்லிம் சமூகமும் சந்தித்த இன்னல்கள் கணக்கிலடங்காதவை. தற்போது அதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தை அடக்கியொடுக்க முற்படுகின்றனர். இதனை இன்று எல்லா மக்களும் உணரத் தொடங்கியுள்ளனர்.

இப்போது மக்கள் விழித்துவிட்டனர். இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பாது ஓயப்போவதில்லை என அவர்கள் கங்கணம் கட்டியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் வாயிலில் இருந்து கொண்டு 24 மணிநேரமும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் துணிந்துவிட்டனர். இன,மத,மொழி, வயது வேறுபாடின்றி மக்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இருபது வருடங்களுக்குக் கூட எமது ஆட்சியை அசைக்க முடியாது எனக் கூறிய ஆட்சியாளர்கள் இன்னும் 20 நாட்களுக்கேனும் தாக்குப்பிடிப்பார்களா என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

அது மாத்திரமன்றி இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்த ஆரோக்கியமான விழிப்புணர்வு தோன்றியுள்ளதை அவதானிக் முடிகிறது. இனவாதப் பிரசாரங்கள் தொடர்பில் பாரிய தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆரோக்கியமான மாற்றங்கள் நிலைத்திருக்க வேண்டுமானால் தற்போதைய ஆட்சியாளர்கள் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் மாற்றம் ஒன்றை இந்த நாட்டில் தோற்றுவிக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனும் மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டு மூன்று வருடங்களாகின்ற நிலையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஒன்றுவிரைவில் கிடைக்க வேண்டும் என்றும் இத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்போமாக. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.