ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இஷாலினியின் மரணம் கொலையா? விபத்தா? தற்கொலையா?

தொடரும் பல்கோண சிறப்பு விசாரணைகளும் வெளிப்படுத்தப்பட்டு வரும் விடயங்களும்

0 355

எம்.எப்.எம்.பஸீர்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் கொழும்பு பௌத்­தா­லோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலை­க­ளுக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்த ஜூட் குமார் இஷா­லி­னியின் மரணம் இன்று நாட்டில் பெரும் பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. இஷா­லினி வேலைக்கு அமர்த்­தப்­படும் போது அவ­ரது வயது தொடர்­பி­லான கேள்­விகள், பிரேத பரி­சோ­த­னை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள், சமூக மற்றும் அர­சியல் விட­யங்­க­ளுடன் கலந்து அவ்­வா­றான நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது எனலாம்.

இஷா­லி­னியின் மரணம்:
இஷா­லினி இலக்கம் 410/16, பௌத்­தா­லோக்க மாவத்தை, கொழும்பு 7 எனும் முக­வ­ரியில் அமைந்­துள்ள ரிஷாத் பதி­யு­தீனின் வீட்­டி­லேயே வேலைக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்தார்.

கடந்த ஜூலை 3 ஆம் திகதி வெள்­ளி­யன்று காலை 6. 45 மணிக்கும் 7.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், இஷா­லி­னியின் உடலில் தீ பர­வி­யுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய அறிய முடி­கி­றது. உடலில் தீ பர­வி­யமை கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன், வைத்­தி­ய­சாலை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி இது தொடர்பில் பொரளை பொலி­சா­ருக்கு அறி­வித்து முறை­யிட்ட நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ரிஷாத்தின் மாம­னாரின் முதல் பொலிஸ் வாக்கு மூலம்:
கடந்த 3 ஆம் திகதி, காலை 6.50 மணி­ய­ளவில், கீழ் மாடியில் இஷா­லி­னியின் சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, உடலில் தீ பர­விய நிலையில் அல­று­வதை அவ­தா­னித்­த­தா­கவும், பின்னர் கால் துடைப்பான் ஒன்றின் துணை­யுடன் தீயை அனைத்து சிறு­மியை அருகில் இருந்த நீர் தொட்­டியில் இறக்­கி­ய­தா­கவும், ரிஷாத் பதி­யு­தீனின் மாமனார் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலம் அளித்து தெரி­வித்­துள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு பீ/52944/2/21 எனும் பீ அறிக்கை ஊடாக அறி­வித்­துள்­ளனர்.

அதன் பின்னர் இஷா­லி­னியை 1990 அம்­பி­யூலன்ஸ் வண்டி ஊடாக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து சென்­ற­தா­கவும் அவர் தனது வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

தேசிய வைத்­தி­ய­சாலை சிகிச்­சையும் பொலிஸ் விசா­ர­ணை­களும்:
இந் நிலையில் பலத்த தீ காயங்­க­ளுக்கு உள்­ளான இஷா­லினி கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயி­ரி­ழந்தார்.

எனினும் இஷா­லினி தீ காயங்­க­ளுக்கு உள்­ளான 3 ஆம் திக­தியே பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்கப்பட்­டி­ருந்­தன. அன்­றைய தினமே, இஷா­லினி தீ பர­வ­லுக்கு உள்­ளான ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டில் பொலிஸ் ஸ்தல தடயப் பிரி­வினர், கைவிரல் ரேகை நிபு­ணர்கள், அரச இர­சா­யன பகுப்­பாய்வு அதி­கா­ரிகள் என விஷேட சாட்­சி­யங்­களை சேக­ரிக்க முடி­யு­மான அனைத்து தரப்­பி­னரும் பொலி­ஸாரால் அழைக்­கப்­பட்டு சான்­றுகள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரும் ஸ்தலத்தை பார்­வை­யிட்டு விசா­ர­ணை­க­ளுக்கு தேவை­யான ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஒரு தீ பரவல், அல்­லது குற்றச் செயல் ஒன்றின் போது முன்­னெ­டுக்­கப்­பட முடி­யு­மான உச்ச கட்ட ஆரம்ப நிலை விசா­ர­ணை­களை பொரளை பொலிஸார் ஜூலை 3 ஆம் திகதி சம்­பவம் இடம்­பெற்ற சில மணி நேரங்­க­ளி­லேயே முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் லோச்­சனீ அபே­விக்­ரம முன்­னி­லையில் பொரளை பொலி­ஸாரால் விட­யங்கள் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு, இர­சா­யன பகுப்­பாய்­வுக்­கான உத்­த­ர­வுகள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இத­னூ­டாக இஷா­லினி தங்­கி­யி­ருந்த அறை­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மண்­ணெண்ணெய் போத்தல், லைட்டர் போன்ற சான்றுப் பொருட்கள் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டது.

மர­ணமும் மேல­திக விசா­ர­ணையும் :
இவ்­வாறு பொரளை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே, தீ காயங்­க­ளுக்கு உள்­ளான இஷா­லினி கடந்த 15 ஆம் திகதி சிகிச்சை பல­னின்றி தேசிய வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்தார். இத­னை­ய­டுத்தே இச்­சம்­பவம் பலரின் அவ­தா­னத்­துக்கு உட்­பட்­டது.

மரணம் பதி­வான அன்­றைய தினமே கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய, சட­லத்தை பார்­வை­யிட்டு, பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­கான உத்­த­ர­வு­களை பிறப்­பித்தார். இந் நிலை­யி­லேயே மேல­திக விசா­ர­ணைகள் பொரளை பொலி­ஸாரால் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டது.

மர­ணத்­துக்­கான காரணம்:
கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்குச் சென்ற, கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய, வழக்­கி­லக்கம் பீ/52944/2/21 இற்கு அமைய, உயி­ரி­ழந்த இஷா­லினி தொடர்பில் பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

அதன்­படி இஷா­லி­னியின் பிரேதம் மீதான பரி­சோ­த­னைகள் கொழும்பு சட்ட மருத்­துவ நச்சு ஆய்­வியல் நிலையம் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

கொழும்பு விஷேட சட்ட வைத்­திய நிபுணர் எம்.என். ரூஹ{ல் ஹக் இந்த பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்த நிலையில், வெளிப்­புற தீக்­கா­யங்கள் , கிருமி தொற்­றினால் ஏற்­பட்ட அதிர்ச்சி என்­பன மர­ணத்­துக்­கான கார­ண­மாக அதில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பிரேத பரி­சோ­தனை வெளிப்­ப­டுத்­திய மேல­திக விட­யங்கள்:
விஷே­ட­மாக குறித்த பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் படி, விஷேட சட்ட வைத்­திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்­புக்­களை இட்­டுள்­ள­துடன், அதில் இஷா­லி­னியின் உடலில் 72 வீத­மான பகுதி தீயினால் முற்­றாக எரிந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் இஷா­லினி உடலில், குற்­ற­வியல் நட­வ­டிக்கை ஒன்று தொடர்பில் சந்­தே­கிக்­கும்­ப­டி­யான உட்­புற, வெளிப்­புற காயங்­க­ளுக்­கான சான்­றுகள் இல்லை என குறிப்­பிட்­டுள்ள சட்ட வைத்­திய அதி­காரி, நாற்­பட்ட பாலியல் ஊடு­ருவல் (chr­onic va­gi­nal pene­t­r­a­tion) தொடர்­பி­லான சான்­றுகள் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேல­திக விசா­ரணைக் குழு:
இந்த பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை அடுத்து பொரளை பொலிஸார் முன்­னெ­டுத்து வந்த விசா­ர­ணைகள் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன. பொரளை பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு அதி­கா­ரி­களும் இந்த விவ­கார விசா­ர­ணை­களில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் குற்­ற­வியல் மற்றும் போக்­கு­வ­ரத்து விவ­கா­ரங்­களின் பிர­தா­னி­யு­மான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

கொலையா? தற்­கொ­லையா? விபத்தா?:
இந் நிலையில் பொலி­ஸாரின் விசா­ரணை அறிக்கை, விஷேட நிபு­ணர்­களின் அறிக்கை, அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை, பிரேத பரி­சோ­தனை அறிக்கை உள்­ளிட்ட விஷேட சாட்­சிகள், ஏனைய சாட்­சி­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இஷா­லி­னியின் மரணம் கொலையா, தற்­கொ­லையா, விபத்தா என்­பதை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்கும். எதிர்­வரும் 28 ஆம் திகதி இஷா­லினி தொடர்­பி­லான மரண விசா­ர­ணைகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்ள நிலையில், சாட்­சி­யங்­களை ஆராய்ந்து நீதி­மன்றம் அது தொடர்பில் தீர்­மா­னிக்கும்.

இந் நிலையில் பொலிஸ், நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்கு ரிஷாத் பதி­யுதீன் தரப்­பினர் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கி­வ­ரு­வ­தாக, ரிஷாத் பதி­யு­தீனின் சட்­டத்­த­ரணி, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறிப்­பிட்டார்.

வயதின் அடிப்­ப­டை­யி­லான சர்ச்சை:
இலங்­கையின் சட்ட திட்­டங்­களின் பிர­காரம், 16 வய­துக்கு குறைந்­த­வர்­களே சிறு­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றனர். 16 வய­துக்கும் 18 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் இளம் பரா­யத்­தி­ன­ராக கரு­தப்­ப­டு­கின்­றனர்.

இந் நிலையில் தற்­போ­தைய சூழலில், பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள சட்ட திட்­டங்கள் பிர­காரம், தொழில் அல்­லது வேலை ஒன்றில் அமர்த்த ஆகக் குறைந்த வய­தெல்­லை­யாக 16 வயது கணிக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் 16 வய­துக்கும் 18 வய­துக்­கு­மி­டைப்­பட்டோர் அமர்த்­தப்­படக் கூடாத வேலைகள் தொடர்­பிலும் ஏற்­பா­டுகள் உள்­ளன. எனினும் வீட்டுப் பணிப் பெண் வேலை அவ்­வேற்­பா­டு­களின் கீழ் இல்லை.

இஷா­லி­னிக்கு எத்­தனை வயது?
இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே இஷா­லி­னியின் வயது இந்த விவ­கா­ரத்தில் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இஷா­லினி, கடந்த 2020 ஒக்­டோபர் மாதம் வேலைக்­காக கொழும்பு சென்­ற­தாக இஷா­லி­னியின் பெற்றோர் வாக்­கு­மூலம் அளித்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே இஷா­லினி சட்­டப்­படி சிறு­மி­யாக இருக்கும் போது, அதா­வது 15 வயது 11 மாதங்­களில் வீட்டு வேலை­க­ளுக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், பொலி­சா­ருக்கு ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டார் தரப்­பி­ட­மி­ருந்து வழங்­கப்­பட்­டுள்ள வாக்கு மூலங்கள் பிர­கா­ரமும், ரிஷாத்தின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்த கருத்­துக்கள் பிர­கா­ரமும், இஷா­லினி ரிஷாத் வீட்­டுக்கு கடந்த 2020 நவம்பர் மாதம் 18 ஆம் திக­தியே வேலைக்கு வந்­த­தா­கவும் அது முதலே அவர் அங்கு பணி­யாற்­று­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டார் தரப்பு வாக்கு மூலங்கள் பிர­காரம் இஷா­லினி 16 வயதை பூர்த்தி செய்த பின்­ன­ரேயே வேலைக்­காக ரிஷாத் பதி­யு­தீனின் வீட்­டுக்கு வந்­துள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது. இதற்­காக ரிஷாத் பதி­யுதீன் தரப்­பினர், சார்பில் ரிஷாத்தின் மாமனார் புதிய பணிப் பெண்ணின் சேர்ப்பு தொடர்பில் இட்­டுள்ள குறிப்பு, பணிப் பெண் வேலைக்கு சேர்ந்த பின்னர் செலுத்­தப்­பட்ட சம்­ப­ளங்­களின் வைப்பு தொடர்­பி­லான வங்கிப் பதி­வு­களை ஆதாரம் காட்­டு­கின்­றனர்.

ரிஷாத் வீட்­டுக்கு இஷா­லினி வந்­தது எப்­படி?
பொலிஸ் விசா­ர­ணைகள் பிர­காரம், இஷா­லினி ரிஷாத் பதி­யுதீன் வீட்­டுக்கு எப்­படி வேலைக்கு வந்தார் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
ரிஷாத் பதி­யுதீன் தரப்­பி­ன­ருக்கு கடந்த பத்து பதி­னைந்து வரு­டங்கள் பழக்­க­மான தரகர் ஒருவர் ஊடா­கவே இஷா­லினி ரிஷாத் பதி­யுதீன் வீட்­டுக்கு வேலைக்கு வந்­துள்ளார்.

அட்டன் பகு­தியைச் சேர்ந்த குறித்த தர­கரின் மகள், கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்­ணாக சேவை­யாற்­றி­ய­தாக கூறப்­படும் நிலையில், திரு­ம­ணத்தின் பின்னர் வேலையை தொடர விரும்­பா­மையால் கடந்த 2020 நவம்பர் 18 ஆம் திகதி அவர் வேலை­யி­லி­ருந்து வில­கி­யுள்ளார். தனது மகளை அழைத்துச் செல்லும் கையோடு, இஷா­லி­னியை குறித்த தரகர் ரிஷாத்தின் வீட்டில் புதிய பணிப் பெண்­ணாக இணைத்­த­தாக அறிய முடி­கி­றது.

அவரை பணிப் பெண்­ணாக இணைக்கும் போது தரகர், இஷா­லி­னிக்கு 18 வயது என குறிப்­பிட்­ட­தா­கவும், அடை­யாள அட்­டையை கோரிய போது, அதனை மறந்து தவ­ற­விட்டு வந்­துள்­ள­தா­கவும் பின்னர் அதனை சமர்ப்­பிப்­ப­தாக கூறிய போதும், கொரோனா நிலைமை கார­ண­மாக அடை­யாள அட்டை பிர­தியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தொடர்ந்து தாம­த­மா­ன­தாக அறிய முடி­கி­றது. எவ்­வா­றா­யினும் இஷா­லி­னியின் தோற்­றத்­துடன் ஒப்­பீடு செய்யும் போது அவ­ரது வயது தொடர்பில் அப்­போது எந்த நியா­ய­மான சந்­தே­கங்­களும் ஏற்­ப­ட­வில்லை என ரிஷாத் பதி­யுதீன் தரப்­பினர் கூறு­கின்­றனர்.

வேலையில் இணைக்­கப்­பட்ட இஷா­லி­னிக்கு மாதச் சம்­ப­ள­மாக பேசப்­பட்ட தொகை 20 ஆயிரம் ரூபா­வாகும். இஷா­லி­னியின் சம்­பளம், அவரை வேலைக்கு சேர்த்த தர­கரின் வங்கிக் கணக்கு ஊடா­கவே செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக ரிஷாத் பதி­யுதீன் தரப்­பினர் கூறு­கின்­றனர்.

இத­னை­விட, இஷா­லி­னியின் குடும்­பத்தார் வசித்த வீட்டின் கூரையை திருத்­து­வ­தற்கு எனக் கூறியும், சகோ­தரர் ஒரு­வரின் மருத்­துவ செல­வுக்கு எனக் கூறியும் மேல­திக பணம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அந்த தரப்­பி­னரால் கூறப்­ப­டு­கி­றது.

இவற்­றை­யெல்லாம் உறுதிப் படுத்திக் கொள்ள தற்­போதும் பொலிஸார் நீதி­மன்றம் ஊடாக உரிய வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விப­ரங்­களைப் பெற்று பகுப்­பாய்வு செய்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

மர­ணத்தில் சந்­தேகம் எனக் கூறும் பெற்றோர்:
இந் நிலையில் இஷா­லி­னியின் பெற்­றோ­ரான ஜெயராஜ் ஜூட் குமார், ஆர். ரஞ்­சனி தம்­ப­தி­யினர், தமது மகளின் மர­ணத்தில் சந்­தேகம் உள்­ள­தாக கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

அத்­துடன் இஷா­லி­னியின் சகோ­தரர் ஒரு­வரும் அட்­டனில் நடந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்கும் போது தனது சகோ­த­ரியின் மர­ணத்தில் சந்­தேகம் நில­வு­வ­தாக கூறி­யி­ருந்தார்.

இஷா­லி­னியை தாங்கள் கட்­டா­யப்­ப­டுத்தி வேலைக்கு அனுப்­ப­வில்லை என குறிப்­பிட்­டுள்ள அவ­ரது தந்தை, மகள் விரும்­பியே வேலைக்கு சென்­ற­தா­கவும், அவள் தீக்கு பயந்­தவள் எனவும், அவள் தனக்குத் தானே தீ வைத்து தற்­கொலை செய்­து­கொண்­ட­மையை நம்­ப­மு­டி­ய­வில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

வைத்­தி­ய­சாலை கட்டில் அட்டை தகவல்:
எவ்­வா­றா­யினும் இஷா­லினி தனக்குத் தானே தீ மூட்­டிக்­கொண்­டரா எனும் விடயம் இன்னும் விசா­ரணை நிலை­யி­லேயே உள்ள விட­ய­மாகும். இஷா­லினி சுமார் 12 நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வைத்­தியர் ஒரு­வ­ரிடம் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்­ட­தாக தெரி­வித்­த­தாக விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இதனை அவ்­வைத்­தியர், நோயா­ளியின் கட்டில் சிகிச்சை அட்­டையில் குறிப்­பிட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், தற்­போது நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய பி.எச்.டி. அட்டை எனப்­படும் குறித்த அட்டை பொலி­ஸாரால் விசா­ர­ணை­க­ளுக்­காக பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

தாயார் வெளிப்­ப­டுத்தும் விட­யங்கள்:
ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த இஷா­லி­னியின் தாயா­ரான ஆர். ரஞ்­சனி, ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் மற்­றொ­ரு­வரால் தான் தாக்­கப்­பட்­ட­தாக இஷா­லினி தன்­னிடம் தொலை­பே­சியில் கூறி­ய­தாக தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த விவ­காரம் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் மிக முக்­கிய அவ­தா­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

அத்­துடன் இஷா­லினி வீட்­டாரை தொடர்­பு­கொள்­ளவும் முட்டுக் கட்­டைகள் இருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் கைய­டக்கத் தொலை­பேசி ஒன்­றினை இஷா­லினி, ரிஷாத்தின் வீட்டில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை எனவும், சேவ­கனின் கைய­டக்கத் தொலை­பே­சியில் அவர் வீட்­டாரை தொடர்­பு­கொண்­டுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் ரிஷாத்தின் வீட்­டாரின் உத­வி­யு­டனும் அவர் வீட்­டாரை தொடர்­பு­கொண்­டுள்ளார்.

இந் நிலையில் குறித்த தொலை­பேசி பதி­வுகள் அனைத்தும் தற்­போது விசா­ர­ணை­க­ளுக்­காக பகுப்­பாய்வு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சேவ­க­னிடம் விசா­ரணை:
பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில், தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான சந்­தே­கத்­துக்கு இட­மான சான்­றுகள் இல்லை என கூறப்­பட்­டாலும், இது­வரை இஷா­லி­னியை தாக்­கி­ய­தாக கூறப்­பட்ட ரிஷாத் பதி­யு­தீனின் வீட்டில் வேலை செய்யும் சேவ­க­னிடம் தீவிர விசா­ர­ணை­களை பொலிசார் முன்­னெ­டுத்­துள்­ளனர். அவ­ரிடம் ரிஷாத்தின் வீட்டில் வைத்து மூன்று நான்கு தட­வை­களும், பொரளை பொலிஸ்; நிலை­யத்­துக்கு அழைத்து நான்கு தட­வை­களும் விசா­ரணை நடாத்­தப்­பட்டு வாக்கு மூலம் பெறப்­பட்­டுள்­ளது.

அவ­ரது தொலை­பே­சியும், இந்த விவ­கார விசா­ர­ணையின் முதல் நாளான அதா­வது ஜூலை 3 ஆம் திக­தியே பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பணி­யா­ளர்­க­ளி­டையே பதி­வா­கி­யுள்ள முரண்­பாடு:
எவ்­வா­றா­யினும் தாக்­குதல் நடாத்­தி­ய­தாக கூறப்­ப­டு­வதை குறித்த சேவகர் தொடர்ந்து மறுத்து வரு­கின்றார்.

எனினும் இஷா­லி­னிக்கும், குறித்த சேவ­க­னுக்கும் இடையே பதி­வான முரண்­பாடு ஒன்று குறித்த தக­வல்­களும் பதி­வா­கி­யுள்­ளன.
அதா­வது, இஷா­லினி ஒரு தடவை அவ­ரது அறையை சுத்­தப்­ப­டுத்தும் போது, வெளியே வைத்­தி­ருந்த ஒரு பெட்­டியில் 5 ஆயிரம் ரூபாவை பார்த்­து­விட்டு குறித்த சேவகன் அப்­பணம் எவ்­வாறு வந்­தது என விசா­ரித்­ததால் அம்­மு­ரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

எனினும் ரிஷாத்தின் மகள் ஒருவர் மலே­ஷியா செல்ல முன்னர் இஷா­லி­னிக்கு அப்­ப­ணத்தை கொடுத்­து­விட்டு சென்­றி­ருந்­த­தாக பின்னர் தெரி­ய­வ­ரவே அம்­மு­ரண்­பாடு தீர்ந்­த­தாக அறிய முடிந்­தது.

எவ்­வா­றா­யினும் குறித்த சேவகன் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்ந்து இடம்­பெறும் நிலையில், அவரை டி.என்.ஏ. பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் பொலி­ஸாரின் அவ­தானம் திரும்­பி­யுள்­ளது.

பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை மையப்­ப­டுத்­திய பொலிஸ் விசா­ரணை:
பிரேத பரி­சோ­த­னை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட நாற்­பட்ட பாலியல் ஊடு­ருவல் தொடர்­பி­லான விட­யங்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் பிரத்­தி­யே­க­மாக இடம்­பெ­று­கின்­றன. குறிப்­பாக இஷா­லினி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு எப்­போ­தா­வது உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளாரா, அப்­ப­டி­யானால் அது எங்கு எப்­படி யாரால் நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

இஷா­லினி தரம் 7 வரையே கல்வி பயின்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­டுள்ள நிலையில், அவ­ரது 12 ஆவது வயதில் பதி­வான சில சம்­ப­வங்கள் மற்றும் டய­கம பகு­தியில் இஷா­லி­னியின் வாழ்வில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் கடந்த கால விட­யங்கள் தொடர்பில் விசா­ரணை செய்ய விஷேட பொலிஸ் குழு­வொன்று டய­கம நோக்கி சென்று விசா­ரணை நடாத்தி வரு­கின்­றது.

இது தொடர்பில் இஷா­லினி கல்வி பயின்ற பாட­சாலை அதிபர், அவ­ரது பெற்றோர் உள்­ளிட்ட பல­ரிடம் விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.

இஷா­லினி விவ­கா­ரமும் ரிஷாத் பதி­யு­தீனும்:
இஷா­லி­னியின் மரணம் தொடர்­பி­லான விவ­காரம் தற் சமயம் சமூக அர­சியல் ரீதியில் பேசப்­படும் நிலையில், ரிஷாத் பதி­யு­தீனின் பெயரை குறித்த சம்­ப­வத்­துடன் இணைத்து ஊட­கங்­களில் பேசப்­ப­டு­கின்­றன. இதன் உண்­மைத்­தன்மை குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

நடந்து முடிந்த 2019 ஜனா­தி­பதித் தேர்­தலின் போது, புத்­த­ளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்­களில் 12 ஆயிரம் இடம்­பெ­யர்ந்த வாக்­கா­ளர்­க­ளுக்கு சிலா­வத்­துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ரிஷாத் பதியுதீன் கடந்த 2020 ஒக்டோபர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவ்விவகாரத்தின் 2020 டிசம்பர் 11 ஆம் திகதியே பிணை கிடைத்திருந்தது.

ரிஷாத் தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு அமைய இஷாலினி நவம்பர் 18 ஆம் திகதி வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பின், ரிஷாத் பதியுதீன் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியிலேயே அது நடந்திருக்க வேண்டும்.

அதே போல இஷாலினியின் மரணத்துடன் தொடர்புடைய ஜூலை 3ஆம் திகதி தீ சம்பவத்தின் போதும் ரிஷாத் பதியுதீன் சி.ஐ.டி.யினரின் தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் அரசியல் ரீதியாக ரிஷாத் தொடர்பில் இஷாலினி விடயத்தில் முன் வைக்கப்படும் சில விடயங்கள் முரண்பட்டவையாகும்.
எவ்வாறாயினும் ரிஷாத்தின் வீட்டில் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அவரிடமும் வாக்கு மூலம் பெறுவது தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது.

இஷாலினி விவகாரத்தில் நீதி:
இவ்­வா­றான பின்­ன­ணியில் இஷா­லினி விவ­கா­ரத்தில் நீதி நிலை நாட்­டப்­பட வேண்டும் என்­பதே அனைத்து தரப்­பி­ன­ரி­னதும் அவா­வாகும். இஷா­லினி விட­யத்தில் சட்ட திட்­டங்கள் மீறப்­பட்டு கொடு­மைகள் இடம்­பெற்­றி­ருப்பின் அதற்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதில் எந்த மாற்­றுக்­க­ருத்­துக்­களும் இருக்க முடி­யாது.

அதே போல இச்­சம்­ப­வத்தை வைத்து அர­சியல் தேவை­க­ளுக்­காக குளிர் காயும் நட­வ­டிக்­கை­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
மரண விசா­ர­ணைகள் கூட இன்னும் நிறை­வு­பெ­றாத, இந்த விவ­கா­ரத்தில் நீதி­யான நியா­ய­மான விசா­ர­ணை­களின் பின்னர் உண்மை வெளிப்படுத்தப்படும் வரை நாம் பொறுமை காப்பதே சிறந்தது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.