மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேசத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விகாரைகளின் தலைமை அதிபதிகளுக்கு பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவனெல்ல ஹிங்குல் போதி மனு விகாரை, ஹிங்குல ரஜ மகாவிகாரை, அஸ் வாரம ஸ்ரீ மகாபோதி விகாரை, சியம்பலாபிட்டிய ஸ்ரீ சுமங்ல பிரிவெனா, தெஹிமடுவ பழைய விகாரை, கோன்கிவெல ஸ்ரீ சாகிய செனவிரத்ன ராமய, மாவெல மல்வத்து விகாரை ஆகிய விகாரைகளுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு குறிப்பிட்ட சம்பவங்களினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சமாதான ஏற்பாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
சேதத்துக்குள்ளாக்கப்பட்ட அனைத்து புத்தர் சிலைகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் உறுதியளித்தார்.
‘அமைச்சர் கபீர் ஹாஷிமை அரசியலில் பிரச்சினைகளுக்குள்ளாக்கி அரசாங்கத்தையும், அமைச்சரையும் அசௌகரியங்களுக்குட்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது’ என விகாரைகளின் தலைமை அதிபதிகள் குழுவினரிடம் தெரிவித்தனர்.
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் அநுர சந்தன உட்பட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli