மோப்பம் பிடிக்கும் முஸ்லிம் அரசியற் கட்சிகள்

0 251

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஆசிய நாடு­களின் வர­லாற்­றிலே இலங்கை முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தோற்­றமும் வர­லாறும் தனித்­து­வ­மா­னது. நான் அறிந்­த­வரை இந்தத் தனித்­து­வத்தை உல­க­வ­ர­லாற்­றிலும் காண்­பது கடினம். அதா­வது ஒரு முஸ்லிம் சிறு­பான்மை இனம் இன்­னொரு பௌத்த பெரும்­பான்மை இன­மொன்றின் அன்­பையும் அர­வ­ணைப்­பையும் ஆத­ர­வையும் இலங்­கையில் அனு­ப­வித்த அள­வுக்கு வெறெந்த நாட்­டிலும் அதன் பெரு­ம்பான்மைச் சமூ­கத்­தி­ட­மி­ருந்து அனு­ப­விக்­க­வில்லை. இலங்­கையின் பௌத்த மன்­னர்கள் தொடங்கி பௌத்த துற­விகள் ஊடாக குடி­மக்­கள்­வரை இந்தச் சினேக உறவை வளர்த்­ததன் காரணம் என்ன? இந்தக் கேள்­விக்­கு­ரிய கார­ணத்தை இது­வரை வர­லாற்­றா­சி­ரி­யர்கள் விளக்­க­வில்லை. அத­னா­லேதான் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு இலங்­கையின் வர­லாற்றில் ஓர் எழு­தப்­ப­டாத அத்­தி­யா­ய­மாக இன்­று­வரை தொடர்கிறது. அதற்கு முக்­கிய காரணம் மத்­தி­ய­ கி­ழக்கின் அரபு மொழிச் சுவ­டி­களை அணு­காமல் எந்த நிபு­ண­னாலும் இவ்­வத்­தி­யா­யத்தைப் பூர­ண­மாக எழு­து­வது கடினம் என்­பதே.

ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலான இந்த அதி­சய உறவு 1915 பௌத்த சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தின் பின்­னரும் நீடித்­தது. முஸ்­லிம்கள் அன்­னி­யர்கள், அவர்­களை அர­பு­நாட்­டுக்குத் திருப்பி அனுப்ப வேண்­டு­மென ஒரு சில இன­வாதத் தலை­வர்கள் அக்­கா­லத்தில் கோஷ­மிட்­ட­போதும் கல­வரம் முடிந்­த­தன்­பின்னர் எந்த ஒரு முஸ்­லிமும் இலங்­கையை விட்டு வெளி­யே­றவும் இல்லை, வெளி­யேற்­றப்­ப­டவும் இல்லை. மாறாக மேலும் அவர்கள் இந்தத் தீவின் மண்­ணி­லேயே ஆழ­மாகக் காலூன்றி வாழத் தொடங்­கினர்.

நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தில்
முஸ்­லிம்கள்
சுமார் நாலரை நூற்­றாண்­டு­க­ளாக மூன்று ஐரோப்­பிய நாடு­களின் குடி­யேற்ற ஆட்­சிக்குள் அடை­பட்­டி­ருந்த பின்னர் 1948 இல் விடு­த­லை­யாகிச் சுதந்­தி­ரம்­பெற்று ஒரு நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­க­மாக இலங்கை மாறி­யது. அத்­தோடு கட்சி அர­சி­யலும் ஆரம்­ப­மா­கிற்று. ஆனால் அப்­போ­தி­ருந்த முஸ்லிம் தலை­வர்கள் தமது இனத்­துக்கும் ஒரு கட்­சி­வேண்­டு­மென என்­றுமே நினைத்­த­தில்லை. அதற்கு மூன்று முக்­கிய கார­ணங்கள் உண்டு. முத­லா­வது, முஸ்­லிம்­களின் வியா­பார நோக்கில் வளர்ந்த ஒரு மனப்­பான்மை. அதா­வது, வியா­பா­ரத்­தையே பிர­தான தொழி­லா­கக்­கொண்டு வாழும் ஒரு சமூ­கத்தின் முக்­கிய நோக்கு தமது வாடிக்­கை­யா­ளர்­களின் சினே­கி­தத்­தையும் நம்­பிக்­கை­யையும் சம்­பா­திப்­பதே. அது இல்­லாமல் வியா­பாரம் செழிக்க முடி­யாது. இரண்­டா­வது, முஸ்­லிம்­களின் நாட­ளா­விய குடி­சனப் பரவல். மூன்­றா­வது இவ்­வு­லக வாழ்­வைப்­பற்­றிய வைதீகக் கொள்கை. அதா­வது இந்த வாழ்வு நிச்­ச­ய­மற்­றது. பர­லோக வாழ்வே நிச்­ச­ய­மா­னது. ஆதலால் அந்த வாழ்­வுக்குத் தேவை­யான நல்ல அமல்­களைச் செய்­து­கொண்டு இந்த உலகில் ஒரு பய­ணிபோல் வாழ்ந்து தாமும் தமது குடும்­பமும் பள்­ளி­வா­சலும் என்ற மூன்று சுவர்­க­ளுக்குள் இயங்­கு­வதே சிறப்­பா­னது. அர­சி­யலில் இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன ஆள்­ப­வ­னுடன் சேர்ந்­தி­ருப்­பதே மேலா­னது என்ற ஒரு வேதாந்தம் முஸ்லிம் சமூ­கத்தை ஆட்­கொண்­டி­ருந்­தது. அதற்­க­மை­யவே முஸ்லிம் தலை­வர்­களும் ஆட்­சியில் எந்தக் கட்சி அமர்­கி­றதோ அந்தக் கட்­சி­யுடன் இணைந்து தமது சமூ­கத்­துக்குத் தேவை­யா­ன­வற்றை உரிமை என்று போரா­டாமல் சலு­கை­க­ளாகப் பெற்று ஒற்­று­மை­யாக வாழ்­வதே சிறந்த அர­சியல் உபாயம் என்று கருதி முஸ்­லிம்­க­ளுக்­கென எந்­தக்­கட்­சி­யையும் அவர்கள் நிறு­வ­வில்லை.

1950கள் தொடக்கம் சிங்­கள சமூ­கத்­துக்கும் தமி­ழ­ருக்­கு­மி­டையே அர­சியல் ரீதி­யாக ஏற்­பட்ட விரி­சலில் முஸ்­லிம்­களின் அர­சியல் உபாயம் பல நன்­மை­களை சிங்­கள அர­சாங்­கங்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொ­டுத்­தது. என­வேதான் கட்­சி­விட்டுக் கட்­சி­தாவும் இந்த உபா­யத்தை வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் அர­சியல் ஞானி­களும் பய­னீட்டு அர­சியல் என கௌரவிக்கலா­யினர்.

சலு­கை­யுடன் வாழ்­வதா
உரி­மை­யுடன் வாழ்­வதா?
இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெனத் தனி­யொரு அர­சியல் கட்சி தேவை என்ற கோரிக்­கைக்குப் பின்­ன­ணி­யாக அமைந்­ததே முஸ்­லிம்கள் இந்­நாட்டில் சலு­கை­யுடன் வாழ்­வதா உரி­மை­யுடன் வாழ்­வதா என்ற கேள்வி. அந்தக் கேள்­வியை முதன்­மு­த­லாக எழுப்­பி­யவர் காத்­தான்­குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913—–1984) அவர்கள். அவர் கவி­ஞர் ­மட்­டு­மல்ல ஒரு சிறந்த சிந்­தனையா­ளரும் தத்­து­வ­ஞா­னி­யு­மாவார். அவரே எனது தந்தை என்­பதை வாச­கர்கள் அறி­வரோ தெரி­யாது. ஆனால் நான் பதின்­ம­வ­ய­தி­ன­னாக இருந்­த­போதே இதே கேள்­வியை முன்­வைத்து என்­னுடன் என் ­தந்தை உரை­யா­டிய ஞாபகம் உண்டு. அதை உரை­யாடல் என்று கூறு­வ­தை­விட குரு சிஷ்ய உப­தேசம் என்­பதே பொருத்­த­மா­னது. அவர் பதுளை நகரில் அல்-­ அதான் மகா­ வித்­தி­யா­ல­யத்தில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­றி­ய­போது (அல்-­ அதான் என்­பது கவி­ஞரின் புனைப்­பெயர்) அதைத்தான் அவ­ரது மாணாக்­கர்கள் அந்த வித்­தி­யா­ல­யத்தின் பெய­ராகப் பொறித்­தனர். அவரின் நண்­பர்­களுள் ஒரு­வ­ராக இருந்­தவர் காலஞ்­சென்ற வட்­டார நீதி­ய­ரசர் ஹுசைன் (1911-–1998) அவர்கள். அவர் கல்­மு­னை­யிலே பிறந்­தவர். இந்த இரு­வரின் நட்பு கவிஞர் இறக்­கும்­வரை நீடித்­தி­ருந்­தது. இவர்கள் இரு­வ­ருமே பாக்­கிஸ்தான் போராட்­டத்தின் சம­கால அவ­தா­னிகள். அதிலும் குறிப்­பாக அல்­லாமா இக்­பாலின் தத்­துவக் கருத்­துக்­களை லெப்பை அவர்­களும் முகம்­ம­தலி ஜின்­னாவின் பாக்­கிஸ்தான் சார்­பான சட்­ட­ரீ­தி­யான வாதங்­களை ஹுசைனும் ஆழ­மாக அறிந்து அவற்றால் கவ­ரப்­பட்­ட­வர்கள். எவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்­கென ஒரு தனி­நாடு இந்­தி­யா­வி­லி­ருந்து உரு­வாக்­கப்­பட்­டதோ அதே­போன்று இலங்­கை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்­கென ஒரு தனிக்­கட்சி உரு­வாக்­கப்­பட்டு அதன்கீழ் அனைத்து முஸ்­லிம்­களும் அணி­தி­ரண்டு தமது உரி­மை­களைச் சட்­ட­மூலம் வாதா­டிப்­பெற்றுச் சம­நி­லையில் வாழ­வேண்டும் என்­பதில் இவ்­வி­ரு­வரும் ஒத்த கருத்­து­டை­ய­வர்­க­ளாக இருந்­தனர். ஆனால் இந்­திய முஸ்­லிம்­களின் வர­லாறும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறும் முற்­றிலும் வேறு­பட்­ட­தொன்று என்­பதை அவர்கள் இரு­வரும் உண­ரத்­த­வ­றி­யது ஆச்­ச­ரி­யமே.

இந்­தி­யா­வுக்கு வாளோடு வந்த முஸ்­லிம்கள் ஆட்­சியைக் கைப்­பற்றி 16ஆம் நூற்­றாண்டு தொடக்கம் 18ஆம் நூற்­றாண்டு நடுப்­ப­கு­தி­வரை ஆண்ட ஒரு வீரப் பரம்­பரை. பிரித்­தா­னியக் குடி­யேற்ற ஆட்­சி­யா­ளர்கள் இந்­தி­யா­வுக்குச் சுதந்­தி­ரத்தை வழங்­கி­விட்டு அவ­சர அவ­ச­ர­மாக வெளி­யேற முயற்­சித்­த­வே­ளையைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி ஒரு பாக்­கிஸ்­தானை வென்­றெ­டுத்த சமூகம் அம்­முஸ்­லிம்கள். இருந்தும் அந்த முஸ்­லிம்­களின் வர­லாறு பாக்­கிஸ்தான் உரு­வா­னதன் பின்பும் குருதி படிந்­த­தா­கவே இருக்­கி­றதை யார்தான் மறுப்பர்?

ஆனால் இலங்­கைக்கு வந்த முஸ்­லிம்­களோ பண்­டங்­க­ளுடன் வர்த்­த­கத்­துக்­காக வந்­த­வர்கள். அவர்கள் சிங்­கள பௌத்த மன்­னர்­களின் விருந்­தா­ளி­க­ளாக அர­வ­ணைக்­கப்­பட்­ட­வர்கள். அந்த அர­பு­நாட்டு முஸ்­லிம்­களை ஒரு துரும்­பாகப் பயன்­ப­டுத்தி ஒப்­பற்ற உல­கப்­பே­ர­ர­சாக அன்று விளங்­கிய அப்­பா­சி­யரின் கிலா­பத்­துடன் இலங்­கையின் உறவைப் பலப்­ப­டுத்த இலங்கை மன்­னர்கள் முயன்­றதன் விளைவே அந்த அர­வ­ணைப்பு எனலாம். இந்தச் சுமு­க­மான வர­லாற்றின் கார­ண­மாக, 1948 இல் சுதந்­திரம் கிடைத்­த­தன்­பின்னர் முஸ்­லிம்­க­ளுக்குத் தேவைப்­பட்­டது மற்ற இனங்­க­ளுக்­குள்ள அதே உரி­மை­களே அன்றி தனி முஸ்லிம் நாடோ அல்­லது மாகா­ணமோ அல்ல. அந்த உரிை­ம­க­ளுக்­காகப் போராட முஸ்­லிம்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு வல்­ல­மை­யுள்ள ஒரு தலை­மையின் வழி­காட்­டலில் இயங்­க­வேண்டும் என்­பதே லெப்­பை -­ஹுசைன் ஜோடியின் நோக்­க­மாக இருந்­தது. ஆனால் 1978 இல் ஆட்­சிக்­கு­வந்த ஜே.ஆர் ஆட்சி புதிய ஒரு சூழலை உரு­வாக்­கி­விட்­டது.

ஜே.ஆர் சூழ்ச்சி
ஜே.ஆர். ஜய­வர்த்­தன அர­சி­யலில் ஒரு குள்­ள­நரி என்­பதை யாவரும் அறிவர். சிறி­மாவோ தலை­மையில் இயங்­கிய இட­து­சாரிக் கூட்­டணி ஆட்­சி­யின்மேல் வெறுப்­ப­டைந்த முஸ்லிம் வர்த்­த­கர்­களும் மெள­ல­வி­களும் ஜே.ஆரின் திறந்த பொரு­ளா­தார மந்­தி­ரத்தில் மயங்கி அவ­ரது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வாக முஸ்­லிம்­களைத் திசை­தி­ருப்பி 1978 தேர்­தலில் அவரை ஆட்­சியில் அமர்த்­தினர். ஆனால் அவரின் அர­சியல் அந்­த­ரங்க நோக்­கு­களை முஸ்­லிம்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை. உண்­மை­யி­லேயே சிறு­பான்மை இனங்­களின் அர­சியல் செல்­வாக்கை வெறுத்த ஒரு சிங்­கள பௌத்த பேரி­ன­வாதி ஜே.ஆர். என்­பதை அர­சியல் வர­லாறு கூறும். அவ­ரு­டைய விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறை இலங்­கையின் ஆட்சி எப்­போதும் சிங்­கள பௌத்த இனத்தின் கைக­ளுக்­குள்­ளேயே இருக்­க­வேண்டும் என்ற நோக்­கத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு தந்­தி­ரோ­பாயம். அதன் விளைவே 1983ல் தமி­ழி­னத்­துக்கு எதி­ராக வெடித்த இனச்­சுத்­தி­க­ரிப்புக் கல­வரம். அந்தக் கல­வ­ரத்தின் களத்­திலே உரு­வா­னதே விடு­தலைப் புலி­களின் தமி­ழீழப் போராட்­டமும் அதன் பிற்­கால விளை­வு­களும். ஆனால் அந்தப் போராட்­டத்­தினால் மிகவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கிழக்­கிலும் வடக்­கிலும் வாழ்ந்த முஸ்­லிம்கள். அந்த முஸ்­லிம்­களின் நிலை­யைப்­பற்றிக் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம் தலை­வர்கள் கவ­லை­யீ­ன­மாக இருந்­ததே சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் கட்சி உரு­வா­கு­வ­தற்கு உட­னடிக் கார­ண­மாக அமைந்­தது. அந்தக் கட்சி கால­வோட்­டத்தில் இரண்­டாகப் பிள­வ­டைந்­தமை வேறு விடயம்.

ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்
முதலில் ஒரு குறிப்பு. அதா­வது, இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி 1988ல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகப் பதி­வு­செய்­யப்­பட்­ட­போது கவிஞர் அப்துல் காதர் லெப்பை உயி­ருடன் இருக்­க­வில்லை. ஆனால் அந்­தக்­கட்­சியின் ஆரம்பத் தலைவர் அஷ்ரப் அவர்­களை ஓர் அர­சி­யல்­வா­தி­யாக இனங்­கண்டு அவ­ரது அர­சி­யல்-­ ச­மூகச் சிந்­த­னா­வ­ளர்ச்­சிக்கு வித்­திட்­டவர் கவிஞர் என்­ப­தற்கு கவிஞர் அஷ்­ர­புக்கு எழு­திய கடி­தங்­களே சான்று. அது­மட்­டு­மல்­லாமல் அர­சி­யல்­வாதி அஷ்ரப், ஹுசைன் அவர்­களின் தங்கை மகன் என்­ப­தையும் மறத்­த­லா­காது.

1970களின் பிற்­ப­கு­தியில் அன்­றைய கல்வி அமைச்சர் பதி­யுதீன் மஹ்மூத் முஸ்லிம் பாட­சா­லை­களின் பாட­வி­தா­னத்தில் நடனம் இசை போன்ற கவின்­க­லை­களை புகுத்­தி­ய­போது அதற்­காகக் கொதித்­தெ­ழுந்த முல்­லாக்­களின் எதிர்ப்­புக்குத் தலைமை தாங்கிப் போராடி ஒரு அர­சி­யல்­வா­தி­யாக அரும்­பிய அஷ்­ரபை இனங்­கண்­டவர் லெப்பை அவர்கள். கவிஞர் ஆசி­ரியத் தொழி­லி­ருந்து ஓய்­வு­பெற்று, தனது ஒரே மக­னையும் வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­விட்டு, பெறா­மகன் ஆப்­தீ­னுடன் மாத்­த­ளை­யிலே வாழ்ந்­த­காலை அஷ்ரப் அவர்கள் தன் தாய்­மாமன் ஹுசை­னுடன் சென்று கவி­ஞரைச் சந்­தித்து உரை­யா­டு­வது வழக்­கமாய் இருந்­தது. அந்த உரை­யா­டல்­களின் சாத்­திய வெளிப்­பாடே முஸ்லிம் காங்­கிரஸ். ஆகவே அந்தக் கட்­சியின் உண்­மை­யான பிறப்­பிடம் மலை­ய­கத்தின் மாத்­தளை என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால் அதன் வளர்ச்­சியில் கவி­ஞ­ருக்கோ 1991ல் மறைந்த அஷ்­ரபின் மாமா­வுக்கோ எந்தப் பங்­க­ளிப்பும் இல்லை என்­பதும் உண்மை. எனவே அவர்கள் இரு­வரும் வாழ்ந்­தி­ருந்தால் இக்­கட்சி முஸ்­லிம்­களின் ஓர் அமுக்­கக்­கு­ழு­வா­கவே இயங்கி இருக்கும் என்று எண்­ணவும் இட­முண்டு.

மார்க்க முலாம் பூசப்­பட்ட தேர்தல் பிரச்­சா­ரங்கள்
முஸ்லிம் காங்­கி­ரசின் அடை­யாளச் சின்­னங்­களும் தேர்தல் பிரச்­சா­ரங்­களும் முஸ்­லிம்­களின் உரி­மைகள் எவை என்­பதை பட்­டி­ய­லிட்டு விளக்­காமல் வெறு­மனே மார்க்க முலாம் பூசப்­பட்ட பேச்சு மேடை­க­ளா­கவே விளங்­கின. தப்லீக் இயக்­கத்தின் இஜ்­தி­மா­வுக்கும் காங்­கி­ரசின் பிரச்­சாரக் கூட்­டங்­க­ளுக்­கு­மி­டையே வித்­தி­யா­சமே இல்­லை­யெனும் அள­வுக்கு அவை காணப்­பட்­டன. எனினும் கட்­சிக்­கான முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் ஆத­ரவு பெரு­கிற்று என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்த ஆத­ரவை வளர்த்­துக்­கொண்டு தேர்­த­லிலே வென்ற முஸ்லிம் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­திகள் தமது சொந்த நலனைப் பெருக்­கி­னார்­களே ஒழிய சமூ­கத்தின் நல­னுக்­காக என்ன செய்தார்கள் என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.

முஸ்லிம் கட்சியே இல்லாமல் ராசிக் பரீத், பதியுதீன் போன்ற தலைவர்கள் சாதித்தவற்றில் நூற்றில் ஒன்றையாவது இவர்களால் சாதிக்க முடிந்ததா? முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று கர்ஜிக்கின்றவர்கள் ஒரு ஜனநாயக நாட்டில் அப்புஹாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இல்லாத உரிமை அப்துல்லாவுக்கு இருக்குமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் அப்துல்லாவின் உரிமைகள் மறுக்கப்பட்டால் அவற்றுக்காக நீதிகேட்டுப் போராட வேண்டும்.

போராடினார்களா இந்தப் பெருந்தகைகள்? கொரோனாவால் மரணித்த முஸ்லிம் உடல்களை தகனம் செய்தபோது வாய்மூடி இருந்தார்களே. அவ்வாறு மௌனிகளாக இருந்துவிட்டு 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாகக் கைதூக்கி அதற்காகச் சன்மானமும் பெற்றார்களாமே! இதற்காகவா முஸ்லிம்களுக்கென ஒரு தனிக்கட்சி தேவை?

மோப்பமிடும் கட்சிகள்
விரைவில் தேர்­த­லொன்று வரப்­போ­கி­றது. வழ­மை­போன்று எவர் அல்­லது எந்­தக்­கட்சி அல்­லது கூட்­டணி வெல்­லப்­போ­கி­ற­தென்று இரு கட்­சி­களும் மோப்பம் பிடிக்கத் தொடங்­கி­விட்­டன. இக்­கட்­சிகள் காற்­ற­டிக்­கிற பக்கம் பறந்­துபோய் ஒரு கம்­பத்தில் ஒட்­டிக்­கொள்ளும் கட­தா­சிகள் போன்­றவை. இக்­கட்­சி­க­ளுக்குப் போடும் வாக்­குகள் வீண் விரயம் என்­பதை என்­றுதான் முஸ்லிம்கள் உணர்வார்களோ?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.