நாடகக் கம்பனிகளாகும் மு.கா, அ.இ.ம.கா

0 363

எஸ்.என்.எம்.சுஹைல்

முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அதன் தலை­வர்கள், உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஏமாற்று நாட­கங்கள் மீண்டும் அரங்­கேறி வரு­கின்­றன. நாட்டில் தேசிய ரீதி­யாக அர­சியல் மாற்றம் ஒன்றைக் கோரி அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைந்து போராடி வரு­கையில், முஸ்லிம் அர­சியல் மீண்டும் அதன் மோச­மான பக்­கத்தைக் காண்­பிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ரீதியில் பாதா­ளத்தை நோக்கிச் செல்­வ­தற்கு ஊழல் மோச­டி­மிக்க கோத்­த­பாய – மஹிந்த அர­சாங்­கமே கார­ண­மாக இருக்­கி­றது என்­பது காலி முகத்­தி­டலில் 20 நாட்­க­ளாக தொடர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் இளை­ஞர்­களின் பிர­தான குற்­றச்­சாட்­டாக இருக்­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு பய­னற்ற அர­சாங்­கத்தை அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆம் திருத்தம் ஊடாக பலப்­ப­டுத்­திய பெருமை முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளையே சாரும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் (4 உறுப்­பி­னர்கள்), அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் (3 உறுப்­பி­னர்கள்), தேசிய காங்­கிரஸ் (ஒருவர்) ஆகி­யோ­ருடன் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 3 முஸ்­லிம்­க­ளு­மாக 11 பேர் 20ஆம் திருத்தம் உட்­பட அர­சாங்கம் கொண்டு வந்த அனைத்து திட்­டங்­க­ளுக்கும் கண்ணை மூடிக்­கொண்டு கை உயர்த்­தினர்.

இவ்­வாறு தனி நபரின் கைகளில் அதி­கா­ரங்­களைக் குவிப்­ப­தற்கு ஆத­ர­வ­ளித்­ததன் கார­ண­மாக இன்று முழு நாடும் குட்­டிச்­சு­வ­ரா­கி­யுள்­ளது. இதற்­கான பொறுப்பை 20ஐ ஆத­ரித்த அத்­தனை முஸ்லிம் எம்.பி.க்களும் ஏற்க வேண்டும். இந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக மக்கள் இரவு, பக­லாக போராடி வரு­கையில் முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் தொடர்ந்தும் அர­சாங்­கத்­துடன் இணைந்து அமைச்சுப் பத­வி­களைப் பெற்­றி­ருப்­பது முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மின்றி ஏனைய இன மக்­க­ளையும் கோபத்­திற்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் மரச் சின்­னத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற நஸீர் அஹமட் சுற்றாடல்துறை அமைச்­ச­ரா­கவும் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் மயில் சின்­னத்தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.எம். முஸர்ரப் ஆடைக் கைத்­தொழில் உள்­நாட்டு உற்­பத்தி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் பத­வி­யேற்­றுள்­ளனர். இது மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இதனால், பொத்­துவில் மற்றும் ஏறாவூர் பகு­தி­களில் இவர்­க­ளுக்கு எதி­ராக மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு எதிர்ப்பை வெளி­யிட்­டனர். அத்­தோடு, காலி­மு­கத்­திடல் கோட்டா கோ கம­யிலும் இவர்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பதா­தைகள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

இது இப்­ப­டி­யி­ருக்க, கட்­சியின் கட்­டுப்­பாட்டை மீண்­டு­மொரு தடவை மீறிக்­கொண்டு அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவ­மானச் சின்­ன­மாக மாற்­றிக்­கொண்­டுள்ளார் என்று குற்­றஞ்சாட்­டி­யி­ருந்தார் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.

அதே­போன்று, கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யுதீன், தமது கட்­சிக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யி­ருந்தார்.

“கோட்­டா­பய ராஜ­பக்ஷ இந்த நாட்­டுக்கு பொருத்­த­மற்­றவர், நாட்டை குட்டிச் சுவ­ராக்­கி­வி­டுவார், எனவே அவ­ருக்கு வாக்­க­ளிக்­காமல் எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று கூறியே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மக்­க­ளிடம் வாக்கு கேட்­டது. நான் உட்­பட முஸர்­ர­பாக இருக்­கலாம், இஸாக் ரஹ்­மா­னாக இருக்­கலாம், அலி சப்ரி ரஹீ­மாக இருக்­கலாம். அனை­வரும் கோத்தா அர­சுக்கு எதி­ரா­கவே வாக்கு கேட்டு பாரா­ளு­மன்றம் வந்தோம். நான் சிறையில் இருக்கும்போது அவர்­களை பயன்­ப­டுத்தி 20ஐ நிறை­வேற்றிக் கொண்­டீர்கள். இன்று வெட்கம் இல்­லாமல் எனது கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு அமைச்சுப் பத­வியும் வழங்­கி­யி­ருக்­கி­றீர்கள். அவர்­களும் வெட்­க­மில்­லாமல் அமைச்சுப் பத­வியை பெறு­கின்­றனர்” என ரிஷாட் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

மு.கா.விலி­ருந்து நஸீர் அகமட் நீக்கம்
முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் உச்ச பீடம் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை கொழும்பில் கூடி­யி­ருந்­தது. இதன்போது, கட்­சியின் 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை குறித்து விளக்கம் கோரும் விடயம் குறித்து ஆரா­யப்­பட்­ட­தாக கட்­சியின் தலைவர் ஹக்கீம் தெரி­வித்தார்.

மேலும், அவர்­களில் மூன்று பேர் அனுப்­பி­யி­ருக்கும் விளக்­கங்­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக ஓய்­வு­பெற்ற நீதி­பதி ஊடாக விசா­ரணை நடத்­து­வது என தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். அது­வ­ரையும் அவர்­களை கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நிறுத்­து­வ­தாக முடி­வெ­டுத்­தி­ருக்­கிறோம். நஸீர் அஹமட் அனுப்­பி­யி­ருந்த விளக்கம் கட்­சிக்கு திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை என்ற அடிப்­ப­டை­யிலும் அவர் உண்­மைக்கு புறம்­பான விட­யங்­களை அதில் சொல்­லி­யி­ருக்­கிறார் என்ற அடிப்­ப­டை­யிலும் அவரை உட­ன­டி­யாக கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்றும் தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம் என்று உச்ச பீட கூட்­டத்தின் பின்னர் மு.கா. தலைவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நஸீர் அக­மடின் பதில்
தான் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்பில் அமைச்சர் நஸீர் அகமட் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். தான் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ரவூப் ஹக்­கீமின் தீர்­மா­னமே கார­ண­மாகும் என கூறி­யுள்ள அமைச்சர் நஸீர் அஹமட், அவ்­வா­றி­ருக்­கையில் முறை­யான விசா­ர­ணைகள் எது­வு­மின்றி முஸ்லிம் காங்­கி­ரஸில் இருந்து என்னை திடீ­ரென நீக்­கி­விட்­ட­தாகக் கூறி அவர் எவ்­வாறு இந்த நாட்டைத் தவ­றாக வழி­ந­டத்த முடியும்?” என்றும் கேள்வி எழுப்­பி­யுள்ளார். இவ்­வாறு தாம் ஆத­ரிப்­ப­தற்கு முன்னர் மு.கா. தலை­வ­ருக்கும் பசில் ராஜ­பக்­ச­வுக்­கு­மி­டையில் நடந்த இர­க­சிய சந்­திப்­புகள் பற்­றிய உண்­மை­க­ளையும் அவர் வெளி­யிட்­டுள்ளார்.

“தற்­போது நமது அயல் நாடொன்றில் இலங்­கையின் தூது­வ­ராக இருக்கும் அவ­ரது நண்­ப­ருடன் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதோ அல்­லது சமகி ஜன பல­வே­க­யவின் அனு­மதி இன்றி ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் பொது­ஜன பெர­முன மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜனா­தி­ப­தி­யுடன் உறு­தி­யான புரிந்­து­ணர்­வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்­ததை அவரால் மறுக்க முடி­யுமா?

அதனை தொடர்ந்து, 2020 ஒக்­டோபர் 18ஆம் திகதி ரவூப் ஹக்கீமின் கார்­னிவல் அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் சகோ­தரர் பசில் ராஜ­பக்­ச­வுடன் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு மேல் சந்­திப்பு நடத்­தி­யதை ஹக்கீம் மறுக்க முடி­யுமா?

அந்த சந்­திப்பில் ரவூப் ஹக்­கீமின் அழைப்பின் பேரில் நான் உட்­பட பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், தௌபீக் ஆகிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­ட­துடன் எங்கள் அனை­வ­ரையும் 20வது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கு­மாறும் பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­மாறும் எங்­களை கேட்டுக் கொண்­ட­தோடு, நான் அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்ற விரும்­பி­னாலும் சமகி ஜன பல வேக­யவின் தலை­மைத்­துவம் மற்றும் அவ­ரது கண்டி மாவட்ட தேர்­தலில் சமகி ஜன பல­வே­க­யவில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு என்­பன கார­ண­மாக அவரால் அவ்­வாறு செய்ய முடி­யாமல் உள்­ளது.

ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கு­மாறு அழைத்­ததன் பின்னர் தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்­றுக்­கொண்டேன். எந்த விசா­ர­ணையும் இன்றி என்னை உட­ன­டி­யாக கட்­சி­யினை விட்டும் நீக்­கி­ய­தாக கூறப்­படும் எந்தத் தக­வலும் இது­வரை எனக்கு வர­வில்லை, அவ்­வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதி­ல­ளிப்பேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

ரிஷா­டுக்கு சவால் விடும்
முஸர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம்
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடம் கடந்த 23 ஆம் திகதி சனி­யன்று கூடி­யது. அதன் பின்னர் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் அ.இ.ம.கா. தலைவர் கருத்து வெளி­யி­டு­கையில்,“அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஸர்ரப் ஆகியோர் கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­ட­மைக்கு விளக்கம் கோரி கட்சி அனுப்பி வைத்த கடி­தத்­திற்கு அவர்கள் பதில் கடிதம் அனுப்­பி­யி­ருந்­தனர். அது நீண்­ட­காலம் நிதா­ன­மாக ஆரா­யப்­பட்டு குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விசா­ரணை செய்­வ­தற்கு அர­சியல் உயர்­பீடம் முடி­வெ­டுத்­துள்­ளது. எதிர்­வரும் மே மாதம் 4,5 அல்­லது 9 ஆம் திக­தி­களில் அவர்கள் விரும்பும் ஒரு தினத்தில் அவர்கள் அர­சியல் பீடத்­திற்கு முன்­னி­லை­யாகி விளக்­க­ம­ளிக்க முடியும்” என கட்சித் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் கட்­சியின் தலை­வ­ருக்கு சவால் விடும் வகையில் இரா­ஜாங்க அமைச்சர் முஸர்ரப் மற்றும் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

“இரு­ப­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும்­படி மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் தான் கூற­வில்லை என்று கட்­சியின் தலை­வரால் (ரிஷாட்) சத்­தியம் செய்ய முடி­யுமா?” என இரா­ஜாங்க அமைச்சர் முஸர்ரப் சவால் விடுத்­துள்ளார்.

அத்­தோடு, ஆளும் கட்­சி­யி­லுள்ள முக்­கிய அர­சியல் புள்ளி ஒரு­வ­ரோடு கடைசி நேரத்தில் பேசி தமது கட்சி உறுப்­பி­னர்கள் அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தாக ரிஷாட் உறு­தி­மொழி அளித்தார். நானும் வாக்­க­ளிக்­கட்­டுமா என்று மர்ஜான் பழீல் எம்.பியிடம் கேட்டார் என்று கூறி­யுள்ள முஸர்ரப்,என்­னு­டைய சவா­லுக்கு அவர் பதி­ல­ளிக்­கட்டும். அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்டாம் என பொய் சொல்லி அவரால் நடிக்க முடி­யாது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­போன்று அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கும் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமும் கட்சித் தலைமை மீது சவால் விடுத்­துள்ளார். “உங்­களின் விருப்­பப்­படி 20 ஆவது திருத்த சட்­ட ­மூ­லத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறும், இவ்­வாறு நான் சொன்­ன­தாக வெளி­யிலோ அல்­லது ஊட­கங்­க­ளிலோ சொல்ல வேண்டாம் எனவும் ரிசாட் பதி­யுதீன் எம்­மிடம் கேட்­டுக்­கொண்டார். தலைவர் அன்று சொன்ன ஒரே வார்த்­தைக்­காக இது­பற்றி நாம் யாரும் வாய் திறக்­க­வில்லை. ஆனாலும், தனது அர­சியல் தேவைக்­காக எங்­களை கய­வர்கள் என்று சொல்லி மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் உணர்ச்­சி­வ­சப்­பட்டு உரை­யாற்­றி­யி­ருந்தார். எனவே,தான் 20க்கு வாக்­க­ளிக்க சொல்­ல­வில்லை என்றால், புத்­தளம் பெரிய பள்­ளிக்கு வந்து நான் அப்­படிக் கூற­வில்லை என்று சத்­தி­ய­மி­டு­மாறு அழைக்­கிறேன்” என்றும் அலி சப்ரி ரஹீம் சவால் விடுத்­துள்ளார்.

தலை­வர்­களின் ஆசீர்­வா­தத்­து­டன்தான் வாக்­க­ளித்­தார்­களா?
இத­னி­டையே, தலை­வர்­களின் அனு­மதி மற்றும் ஆசீர்­வா­தத்­துடன் தான் தாம் 20 க்கு ஆத­ர­வ­ளித்­த­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இது­வரை ஹக்­கீமோ ரிஷாடோ உரிய பதி­ல­ளிக்­க­வில்லை. பதில் தரு­வார்கள் என்று எதிர்­பார்க்­கவும் முடி­யாது. இவர்கள் கடந்த காலங்­களில் எவ்­வாறு டீல் அர­சியல் செய்­தார்கள் என்­பதை மக்கள் நன்­க­றி­வார்கள். இந்த விட­யத்தில் கட்சி உறுப்­பி­னர்­களும் தலை­மை­களும் இணைந்து மக்­களை ஏமாற்றும் நாட­கத்தை அரங்­கேற்­று­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும்.

அடுத்த வாரத்­திற்குள் பிரதி சபா­நா­யகர் தெரி­வுக்­கான வாக்­க­ளிப்பும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும் வர இருக்­கி­றது. இந்த நிலையில் அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை விலக்கிக் கொண்ட முஸ்லிம் எம்.பி.க்களும் இதன்­போது எவ்­வாறு செயற்­படப் போகிறார் என்­பது தெரி­ய­வில்லை. ஆனாலும்,இவர்கள் மற்­று­மொரு அர­சியல் வியா­பா­ரத்தை முன்­னெ­டுக்க எத்­த­னிக்­கலாம் என்ற சந்­தேகம் இருக்­கி­றது. ஆத­ரவை விலக்கிக் கொண்டு பேரம் பேசலில் ஈடு­பட்டு மீண்டும் ஆத­ர­வ­ளிக்கும் வாய்ப்­பு­களும் இல்­லாமல் இல்லை. இதற்கு முன்னர் இவ்­வாறு நடந்து கொண்­ட­வர்­களே இன்றும் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மின்றி சத்­தியம் செய்யும் விட­யத்­தையும் இவர்கள் கேலிக் கூத்தாக்கியிருக்கின்றர். குறிப்பாக பள்ளிவாசலில் சென்று சத்தியமிடுதல் என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஏற்கனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவ்வாறு பள்ளிகளுக்கு சென்று சத்தியம் செய்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஏராளம். தேர்தலுக்கு பின் குறித்த சத்தியத்தை காப்பாற்றினார்களா என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே, இஸ்லாததின் பெயரால் அரசியல் செய்து முஸ்லிம்களை ஏமாற்றும் இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டவேண்டும்.

இன்று இளைஞர்கள் மத்தியில் திருப்திகரமான அரசில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதை காணக் சுடியதாக இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இவ்வாறான பிற்போக்குத் தனமான கேவலமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட புதிய எழுச்சியொன்று தேவைப்படுகின்றது. தெற்கில் சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் குறிப்பிட்டளவு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் புத்துணர்வு பெற்றிருக்கும் அரசியல் செயற்பாடுகள் கிழக்கிலும் வியாபிக்க வேண்டும். அவ்வாறின்றேல் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் நம் சமூகம் அரசியலில் மாற்றம் கண்டு நாட்டின் நலனுக்கு முன்னுரிமையளித்து எமது உரிமைகளை வென்று தரப் போவதில்லை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.