நாட்டின் தலைவர் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம் அவர் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­ற­வில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணைகள், கப்பல் தீப்­பற்­றி­யமை உட்­பட சம­கால விவ­கா­ரங்கள் தொடர்பில் கடும் விச­மர்­ச­னங்­களை முன்­வைக்­கிறார் கர்­தினால் மல்கம் ரஞ்சித்

0 217

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த வாரம் கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் குறித்து கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்த முக்­கிய கருத்­து­களை தொகுத்து தரு­கிறோம்.

நமது நாட்டின் இன்­றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. எமது கடல் எல்­லையில் தீப்­பற்­றிய கப்பல் மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல. இந்­நாட்டில் ஆட்­சி­யொன்று இருக்­கி­றதா? என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இலங்கை முக்­கிய கேந்­திர நிலை­யத்­தி­லுள்ள ஒரு நாடு. இந்­நாட்டை பாது­காப்­ப­தாக அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்­றுள்­ளார்கள். இது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

எமது எதிர்ப்­பார்ப்­புகள் அனைத்தும் சிதைந்து போயுள்­ளன. நாடு எங்கு செல்­கி­றது? நாட்டை யார் ஆட்சி செய்­கி­றார்கள். யார் தீர்­மானம் மேற்­கொள்­கி­றார்கள்? என்று எமக்குத் தெரி­ய­வில்லை . நாட்டில் நிச்­ச­ய­மற்ற சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் நாம் அனைத்து மக்­களும் தயவு செய்து இந்தப் பய­ணத்தை நிறுத்திக் கொள்­ளுங்கள் என்று ஆட்­சி­யா­ளர்­களைக் கேட்க வேண்­டி­யுள்­ளது.

இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது அபி­வி­ருத்­தி­யல்ல. இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது இல­கு­வாகும். எமக்கு ஆத்ம திருப்தி என்று ஒன்று உள்­ளது. இதனைப் பாது­காப்­பது அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யாகும். இந்­நி­லையில் பல நாடு­க­ளுக்கு எமது பூமியை பூஜை செய்ய வேண்டாம் என்று நாம் வேண்டிக் கொள்­கிறோம். எமது ஆத்ம கௌர­வத்தைப் பாது­காத்துக் கொள்­ளுங்கள். நாட்டின் வளங்கள் அனைத்­தையும் விற்­பது நாட்டின் நன்­ம­திப்­புக்கு எதி­ரா­ன­தாகும்.

எம்.சி.சி. உடன்­ப­டிக்­கையை நாம் எதிர்த்த போது அதற்கு ஆத­ர­வ­ளித்த இந்­நாட்டின் அர­சி­யல்­வா­திகள் இன்று அதனை விட மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது எமக்குத் தெரி­கி­றது. இது குறித்து நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். இந்­நாட்டில் பாரிய சதித்­திட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அதா­வது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பின்­ன­ணியில் சதித்­திட்டம் இருந்­துள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அந்த சதித்­திட்டம் என்ன என்­பதை நாம் அறிய வேண்டும். அவர் அப்­படிக் கூறினால் அதன் பின்­ன­ணியை அவர் தேடிப் பார்க்க வேண்டும். இல்­லையேல் அந்தப் பத­வியை தற்­போது ஏற்­றுள்ள புதிய சட்­டமா அதிபர் இது தொடர்பில் ஆராய வேண்டும். இந்­நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர் கட­மைப்­பட்­டுள்ளார்.

தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­ட­வர்கள் சில­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­ம­லி­ருக்கும் சூழ்­நி­லையை அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களில் எதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், எதனை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடாது என்­பதைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி 6 அமைச்­சர்கள் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்தார். இது உங்­க­ளுக்கு ஒரு சட்டம், எங்­க­ளுக்கு ஒரு சட்டம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்றே அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டார்கள். ஆனால் இன்று அந் நிலை­மை­யில்லை. அதி­கார பல­முள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்டம், சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்டம். இத­னாலே குறிப்­பிட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென விசா­ரணை குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தும் அவர்கள் பாது­காக்­கப்­ப­டு­கி­றார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் உளவுச் சேவையின் முன்னாள் முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்தும் இது­வரை எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சாரா­ருக்கு ஒரு­விதம், மறு­சா­ரா­ருக்கு வேறொரு வித­மாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அரசு ஊடக சந்­திப்­பு­களை நடத்­து­கி­றது. ஒரு­வரை கைது செய்­கி­றார்கள். மறு­தினம் விடு­தலை செய்­கி­றார்கள். இதுவே இன்று நடை­பெ­று­கி­றது. 20 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வினைப் பெற நடத்­திய வித்­தையை நாம் கண்டோம். இது­வொரு டீல் ஆகும். இன்று ஊழல் நிறைந்த ஆட்­சியே உள்­ளது.

நாம் 225 பிர­தி­நி­தி­களை இதற்­கா­கவா நிய­மித்தோம். வாக்­க­ளித்தோம். எமது கடல் எல்­லையில் கப்பல் தீப்­பற்றி அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். கடல் வளம், மீன் உள்­ளிட்ட உயி­ரி­னங்கள் அழி­வுக்­குள்­ளான பின்பு ஆட்­சி­யா­ளர்கள் கதை கூறு­கி­றார்கள். கப்­பலில் தீ பர­விய உடனே அதனை ஆழ்­க­ட­லுக்கு இழுத்துச் செல்­ல­வில்லை. அமைச்சர் சரி­யான பதி­லொன்று கூற­வில்லை.

எண்ணெய் கசிவு ஏற்­பட்டால் எமது மீனவ சமூ­கமும் நாடுமே பாதிக்­கப்­படும். மீனவ சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்து குறிப்­பிட்ட கப்பல் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யுங்கள். நான் அதற்குத் தலைமை தாங்­கு­கிறேன். மக்­களின் வாழ்க்­கை­யுடன் விளை­யாட வேண்­டா­மென ஆட்­சி­யா­ளர்­களை வேண்டிக் கொள்­கிறேன். இந்­நாட்டில் பௌத்­தர்­க­ளுடன் இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவ சமூக மக்கள் வாழ்­கி­றார்கள். எனவே ஏகா­தி­பத்­திய ஆட்சி வேண்டாம். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எமது வளங்­களை எமது காணி­களை வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்ப்­பது நிறுத்­தப்­பட வேண்டும்.

இன்று விவ­சா­யி­க­ளுக்கு உரம் இல்லை. சாப்­பாடு இல்லை. தொழில் இல்லை. வரு­மானம் இல்லை. தேவை­யான தடுப்­பூ­சி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு கூட அர­சாங்­கத்­திடம் போதிய நிதி­யில்லை. இது ஆட்­சி­யா­ளர்கள் மீதான சாபமா என்று நினைக்கத் தோன்­று­கி­றது. இந்தப் பய­ணத்­துக்கு தீர்­வொன்று தேவை. இலங்­கையின் காணிகள், வளங்கள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இவற்றை விற்­ப­தற்கு நாம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு ஆணை வழங்­க­வில்லை. நாம் நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு தலைவர் ஒரு­வ­ரையே தேர்தல் மூலம் நிய­மித்தோம். அந்தத் தலைவர் மீது இன்று நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. ஏனென்றால் அவர் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே நான் மக்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கிறேன். இதனை அங்­கீ­க­ரிக்க வேண்டாம்.

எமது கலா­சாரம், மதங்கள் மற்றும் சூழ்­நிலை, வளங்­களைப் பாது­காப்­ப­வர்­க­ளாக ஆட்­சி­யா­ளர்கள் இருக்க வேண்டும். மக்கள் மகிழ்­வாக குடும்­பத்­துடன் வாழும் சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட வேண்டும். நல்­லாட்சி நிலை நிறுத்­தப்­பட வேண்டும். பத­விக்கு வந்த ஒவ்­வொரு அர­சாங்­கங்­களும் நாட்டைக் காட்டிக் கொடுத்­த­தையே செய்­துள்­ளன. இவ்­வா­றான ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கா­தீர்கள். ஆட்­சி­யா­ளர்கள் தமது மோச­மான பய­ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நாடு கொள்கை, கலா­சார, சமய, பொரு­ளா­தார துறையில் பின் நோக்கிச் செல்­கி­றது. மக்கள் பக்கம் இருந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் தலை­வர்­களே நாட்­டுக்குத் தேவை. நாடு இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் தமது தற்­போ­தைய போக்­கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மனம் பெற்ற 6 பேர் கொண்ட அமைச்­ச­ரவை குழு­வினால் எதுவும் நடை­பெ­ற­வில்லை. இந்த அமைச்­ச­ரவை குழு யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும், யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கக் கூடாது என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக மாத்­தி­ரமே நிய­மிக்­கப்­பட்­டது.

இதனால் இந்­நாட்டில் இரு சட்­டங்கள் இருக்­கின்­றன என்­பது தெளி­வா­கி­றது. அதி­கார பலம், செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்­டமும் மற்றும் சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் என இரு வேறு சட்­டங்கள் நடை­மு­றை­யி­லுள்­ளன. எனவே நாட்டில் சட்டம் முறை­யற்ற விதத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த தற்­போ­தைய நிலைமை குறித்து நாம் கவ­லை­ய­டை­கிறோம். இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் உரிய முறையில் நடத்­தப்­ப­டாமை குறித்து நாம் இந்த அர­சுக்கு எதி­ராக செயற்­ப­டுவோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் உண்­மை­யான பொறுப்­பு­தா­ரி­களை இனங்­கா­ணு­வ­தற்­கான விசா­ர­ணைகள் எவ்­வித அக்­க­றை­யு­மின்றி நடை­பெ­று­கி­றது. இது தொடர்பில் எமக்குத் தெளி­வில்லை. எனவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­வுக்கு கடி­த­மொன்று அனுப்பி வைத்­துள்ளேன்.

முன்னாள் சட்­டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யொ­ருவர் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். அந்த நபர் யாரென அவர் தெளி­வாகக் குறிப்­பி­ட­வில்லை. இத்­தாக்­குதல் தொடர்­பான சில விட­யங்கள் இது­வரை விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தெரி­கி­றது. முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னுடன் தொடர்­பு­டைய சில இஸ்­லா­மிய நட­வ­டிக்­கைகள் மற்றும் தொடர்­பு­டை­ய­வர்கள் என பெயர் குறிப்­பி­டப்­பட்ட அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் இன்னும் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனத் தெரி­கி­றது. அத்­தோடு விசா­ரணை மேற்­கொண்டு ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் இன்னும் முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட காலத்தில் இறு­தி­யாக குண்­டினை வெடிக்கச் செய்து கொண்ட ஜெமீல் என்­பவர் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ரு­வரை சந்­தித்­துள்­ள­தாக சாட்­சி­யங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர் யார்? இந்த தாக்­கு­தலில் அவர் ஜெமீ­லுடன் தொடர்­பு­பட வேண்­டி­யது ஏன்? என்­பது தொடர்பில் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் கூட முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை? இந்த இரா­ணுவ அதி­காரி யார்.? இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் பேசப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீன் பர்­னாந்து பாரா­ளு­மன்­றத்தில் இந்தக் கேள்­வியை எழுப்­பினார். இந்தக் கார­ணிகள் விசா­ரணை செய்­யப்­பட வேண்­டு­மென்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பயங்­க­ர­வா­திகள் மட்­டக்­க­ளப்பில் குண்­டு­களை வெடிக்கச் செய்து கொண்­டனர். அங்கு பலி­யா­ன­வர்­களின் உடற்­பா­கங்கள் டி.என்.ஏ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. டி.என்.ஏ. பரி­சோ­தனை அறிக்­கையின் படி சாரா ஜெஸ்­மினின் உடற்­பா­கங்கள் அங்கு இருக்­க­வில்லை. அறிக்­கையின் படி சம்­ப­வத்தின் போது சாரா அங்கு இருக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் அவர் எங்கே? இது தொடர்­பிலும் தெளி­வாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. என்­றாலும் உடற்­பா­கங்கள் தோண்­டப்­பட்டு மீண்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அவரும் சம்­பவம் நடந்த இடத்தில் இருந்தார் என்ற பொய்யை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு விசா­ர­ணை­யா­ளர்கள் முயற்­சித்து வரு­கி­றார்கள். உடற்­பா­கங்­களை தோண்டி எடுத்தோம். சாரா அங்­கி­ருந்­துள்ளார் என்று கூற முயற்­சிக்­கி­றார்கள்.

சி.ஐ.டி.யும் இது தொடர்பில் முறை­யாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­வ­தில்லை. தாக்­குதல் தொடர்பில் முறை­யாக விசா­ரணை நடத்­து­மாறு கோரி நான் நீதி­மன்றம் சென்றேன். இது­பற்றி ஆராய இரு சி.ஐ.டி. குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். என்­றாலும் அந்த இரண்டு குழுக்­க­ளுக்கும் என்ன நடந்­தது என்­பது கூட எமக்குத் தெரி­ய­வில்லை. இதற்குக் காரணம் அவர்­களும் அர­சியல் நிகழ்ச்சி நிர­லின்­படி பணி­யாற்­று­வ­தே­யாகும். அதனால் குறிப்பிட் சி.ஐ.டி குழுக்கள் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அத்­தோடு பொலிஸ் மாஅ­திபர் மீதும் எமக்கு நம்­பிக்­கை­யில்லை.

விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட சில விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் அவர் இது தொடர்பில் எந்தக் கவ­னமும் செலுத்­த­வில்லை. அத்­தோடு தாக்­கு­தலை தடுக்க முடி­யாமற் போனமை தொடர்­பாக சட்­டமா அதிபர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்­புக்கு பொறுப்­பான சில முக்­கிய அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இவர்­களால் இத்­தாக்­கு­தலைத் தடுத்­தி­ருக்க முடியும். என்­றாலும் இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி நிய­மித்த 6 அமைச்­சர்கள் கொண்ட குழு வெறும் கண்­து­டைப்­பாகும்.

இரண்­டா­வது நட­வ­டிக்­கை­யாக நாம், முன்னாள் சட்­ட­மா­அ­திபர் குறிப்­பிட்­ட­வாறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக, இனங்­கா­ணு­வ­தற்­காக சர்­வ­தேச நீதி­மன்றின் உத­வியை நாட வேண்­டி­யுள்­ளது. பிர­தான சூத்­தி­ர­தா­ரியை அறிய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கத்­தோ­லிக்க ஆல­யங்கள் சபைக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடையில் தொடர்­புகள் உள்­ள­மை­யினால் எங்­களால் சர்­வ­தேச ரீதியில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வது இல­கு­வாக உள்­ளது.

எங்­க­ளுக்கு சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்­புகள் உள்­ளன. மற்றும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் நிறு­வ­னங்­களை நேர­டி­யாக தொடர்பு ு கொள்ளும் சக்தியும் எம்மிடம் உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். ஏனென்றால் எந்­த­வொரு கத்­தோ­லிக்­கரும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. நாங்கள் இஸ்­லா­மி­யர்­களைப் பாது­காக்க முயற்­சித்­தோமே அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. கத்­தோ­லிக்கர் என்ற வகையில் நாம் அவர்­களைப் பாது­காப்­ப­தற்கே முயற்­சித்தோம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலும் தாக்­கு­தல்கள் இடம்­பெறா வண்ணம் நாம் பாது­காத்தோம். நாம் தொடர்ந்தும் அவர்­களைப் பாது­காப்போம். நாம் தொடர்ந்தும் முஸ்­லிம்­களை மதிக்­கிறோம். அதனால் எமது மக்­களை இவ்­வாறு பலி­யெ­டுத்­த­தற்­கான காரணம் என்ன என்­பதை அறிந்து கொள்­வ­தற்­காக பக்­க­சார்­பற்ற நேர்­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது அவ­சி­ய­மாக உள்­ளது. இது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­க­வல்ல பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­தாகும்.

எனவே நாம் வெளிப்­ப­டை­யான விசா­ர­ணை­களைக் கோரு­கிறோம். உண்­மையில் என்ன நடந்­தது? இந்த மக்கள் ஏன் கொலை செய்­யப்­பட்­டார்கள்? ஏன் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டார்கள்? இதற்குக் காரணம் என்ன? அமைச்­ச­ருக்கு எழு­திய கடி­தத்தில் நான் இங்கு தெரி­வித்­த­வைகள் அனைத்­தையும் குறிப்­பி­ட­வில்லை. என்­றாலும் குறிப்­பாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.