கவனத்தில் கொள்ளப்படாத பிரதான சர்ச்சைகள்

0 343

அர­சியல் யாப்பின் 19 ஆவது திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­காரம் குறைக்­கப்­பட்டு பெய­ர­ள­வி­லான ஜனா­தி­பதி முறை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் இதன் பின்னர் அதற்குப் பொருத்­த­மான முறையில் ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை நிய­மிப்­பது குறித்து யாப்பு திருத்­தத்தின் போது குறிப்­பிடத் தவ­றி­ய­மையால் பொது­வான அர­சியல் அமைப்புத் திட்­டமும் சிக்­க­லுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாக பாரி­ய­தொரு மாற்றம் நிகழ்த்­தப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்து மக்கள் தெளி­வூட்­டப்­ப­டு­வது அரசின் மீதுள்ள பொறுப்­பாகும். ஆனால் அர­சாங்கம் இதனைத் தெரிந்தோ தெரி­யா­மலோ இது­வரை மக்­க­ளுக்கு மூடி­ம­றைத்தே வந்­துள்­ளது. அதனால் இனி வரப்­போகும் ஜனா­தி­பதி நிறை­வேற்­ற­தி­கா­ர­மற்ற ஒருவர் என்­பது மக்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்கும் கூட இது தெரி­யாத விட­ய­மா­கவே உள்­ளது. இப்­போதும் கூட இது குறித்து அவர்­க­ளிடம் சரி­யான தெளி­வின்மை காணப்­ப­டு­வ­தா­கவே தோன்­று­கி­றது.

கோடிக்­க­ணக்­கான ரூபா மக்கள் பணத்தைச் செலவு செய்து நிறை­வேற்­ற­தி­காரம் இல்லாத ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டுமா? பொரு­ளா­தார நிலையில் இலங்கை திருப்­தி­க­ர­மாக இல்லை. மிகவும் வங்­கு­ரோத்து அடைந்­துள்ள நிலை­யிலே உள்­ளது.

இந்த நிலை­யி­லுள்ள நாடு எத்­த­கைய அதி­கா­ர­மு­மற்ற பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரைத் தெரிவு செய்­வ­தற்­காக பெருந்­தொகைப் பணத்தை விர­ய­மாக்­கு­வதை எந்த வகையில் நியா­யப்­ப­டுத்த முடியும்?

அர­சியல் யாப்­போடு சம்­பந்­தப்­பட்ட தீர்க்­க­மான இப் பிரச்­சி­னையை ஆரம்­பத்­தி­லேயே தீர்த்து வைக்­காது அரசும் அசட்டை காட்­டியே வந்­துள்­ளது. இது தீர்க்­கப்­பட வேண்­டிய பார­தூ­ர­மான பிரச்­சி­னை­யென்று என்றும் எதிர்க்­கட்­சியும் கவ­னத்தில் எடுக்கத் தவ­றி­யுள்­ளது. இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்­பது குறித்து ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிய சந்­தர்ப்­பத்­தில்தான் சிந்­திக்க ஆரம்­பித்­தனர். இது விட­ய­மாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதனைத் தொடர்ந்து ஜனா­தி­பதி எதிர்க்­கட்சித் தலை­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய போதிலும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

கலங்­கிய குட்­டையில் மீன் பிடித்தல்

அடுத்து வரும் ஜனா­தி­ப­திக்கு நிறை­வேற்­ற­தி­காரம் இல்­லாது, பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தி­யா­க­வுள்ள நிலை­யிலும் பெரிய அதி­காரப் போட்­டி­யொன்­றுக்­கான முஸ்­தீபு இப்­போதே முடுக்கி விடப்­பட்­டுள்­ள­மையைக் காண­மு­டி­கி­றது. பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தி­யொ­ருவர் மக்கள் வாக்­க­ளிப்பின் மூலம் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. அதற்­காகப் பெருந்­தொகைப் பணம் செலவு செய்­யப்­ப­டு­வது மிகவும் அநி­யா­ய­மாகும் என்­பதை புதி­தாகச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்துக் கொள்­வ­தற்கு இவ்­வ­ளவு காலம் கடத்­தி­யமை ஏன் என்­ப­துதான் இப்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னை­யாகும். இது­வரை ஜனா­தி­பதி வேட்­பாளர் இருவர் களம் இறங்­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி அபேட்­ச­கரைத் தேர்ந்­தெ­டுப்­பதில் மரணப் போராட்டம் நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது. நிறை­வேற்­ற­தி­கா­ர­மற்ற பெய­ர­ளவு ஜனா­தி­பதி என்ற நிலை­யிலும் முன்னர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்று எண்­ணி­யி­ருந்­த­வர்கள் இப்­போதும் தம் மன­நி­லையை மாற்­றி­ய­மைக்கத் தயா­ராக இல்லை என்­ப­தா­கவே தெரி­கி­றது. அவர்கள் தம் மேதா­வி­லா­சங்­களைக் காட்ட முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்­க­ளே­யன்றி, நாட்டின் மீது ஏற்­றப்­படும் பாரிய பணச் சுமை பற்­றிய கவலை அவர்­க­ளுக்­கில்லை. இப்­பி­ரச்­சி­னையை முன்­னரே தீர்த்துக் கொள்ள முயற்­சி­யெ­டுக்­காத ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இறுதிக் கட்­டத்­தி­லா­வது இதற்குத் தீர்­வு­காண முன்­வந்­தமை நாட்டின் மீதுள்ள அபி­மா­னத்­தி­லல்ல. தமது சுய­நல அபி­லா­ஷை­களைக் கருத்தில் கொண்டே என்­பது நன்கு புல­னா­கி­றது.
இவ்­வா­றி­ருக்­கிற நிலையில் எதிர்­கா­லத்தில் பாரி­ய­தொரு சிக்கல் தோன்றும் வாய்ப்­பி­ருக்­கவே செய்­கி­றது. இலங்­கையின் ஆட்­சியில் மூன்று பிர­தான சக்­திகள் உள்­ளன. அவை நிறை­வேற்­ற­தி­காரம், அர­சி­ய­ல­மைப்பு அதி­காரம், நீதி­மன்றம் ஆகிய மூன்­று­மாகும். இவை மூன்றும் இன்று சிக்­க­லுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளன. நிறை­வேற்­ற­தி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்­லாத போதிலும் மேற்­கண்ட மூன்று அதி­கா­ரங்­களும் உரிய முறை­யி­லி­ருந்து தடம்­பு­ரண்­டுள்­ளதால் மக்கள் வாக்கு மூலம் தெரி­வாகும் ஒருவர் கையில் மேற்­கண்ட மூன்று அதி­கா­ரங்­களோ அல்­லது அவற்றில் இரண்டோ வரும் பட்­சத்தில் சர்­வா­தி­காரப் போக்­கு­டை­ய­வ­ராக அவர் உரு­வா­கு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கவே செய்­கி­றது. அவ்­வாறு நிகழும் பட்­சத்தில் பானை­யிலே வெந்து உழன்று கொண்­டி­ருக்­கிற நாடு அடுப்­புக்குள் விழு­வது தவிர்க்க முடி­யாது போகும்.

மதிக்க வேண்­டிய ஜன­நா­யகம் மிதிக்­கப்­படும் அவ­ல­ம்

இலங்கை தேர்­தல்கள் நடை­பெறும் ஒரு நாடாக விளங்­கு­கி­ற­போ­திலும் ஜன­நா­யக விழு­மி­யங்கள் கொண்­ட­தொரு நாடாகக் கணிக்க முடி­வ­தில்லை. ஜன­நா­யகம் குறித்த எத்­த­கைய தெளிவும் இல்­லா­தி­ருப்­ப­துடன் இங்­குள்ள அர­சியல் தலை­வர்­களைப் போன்றே மக்­க­ளுக்கும் ஜன­நா­யக அறிவு சூனியம் நில­வு­வ­தா­கவே கூறலாம். இது இன்று, நேற்று உரு­வா­ன­தொரு சூழ்­நி­லை­யல்ல. இலங்கை சுதந்­திரம் பெற்ற நாள் முதலே நில­விவரும் இலட்­ச­ண­மாகும். நாட்டு நிர்­வா­கி­களும் சமூ­கமும் நாட்டின் சட்­டத்­தை அவ­ம­தித்து நடக்கும் நிலை மேற்­படி பிரச்­சி­னையின் மறு­பக்க விளை­வாகும்.

நாட்டின் சட்டம் மற்றும் கொள்கை இயற்றும் பிர­தான நிறு­வ­ன­மாக பாரா­ளு­மன்றம் விளங்­கு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்­துடன் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்குத் தடை. இது இலங்­கையில் மட்­டு­மல்ல; ஜன­நா­யக முறை­மை­யுள்ள எல்லா உலக நாடு­க­ளிலும் கண்­டிப்­பாக அமு­லி­லுள்ள ஒரு தர்­ம­மாகும். இவ்­வா­றி­ருந்தும் கடந்த சுமார் 40 வரு­டங்­க­ளாக இலங்கைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சுடன் பகி­ரங்­க­மா­கவே வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இக்­குற்றச் செயலை அங்­கீ­க­ரித்து வரு­கி­றார்­க­ளே­யன்றி அதனைத் திருத்­தி­ய­மைப்­ப­தற்கு முன்­வ­ரு­வ­தில்லை. இது குறித்து நாம் சபா­நா­ய­கரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்தோம். ஆனால் அது குறித்து கவனம் செலுத்­து­வ­தற்கு அர­சியல் யாப்பில் தனக்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டில்லை என்ற பதிலே அவ­ரி­ட­மி­ருந்து எமக்குக் கிடைத்­தது. நாம் 64 பேர் ஒன்­றி­ணைந்து இவ்­வி­டயம் குறித்த முறைப்­பாட்­டினை உயர்­நீ­தி­மன்­றத்தின் முன் சமர்ப்­பித்தோம். உயர்­நீ­தி­மன்றம் இதற்கு என்ன நிலைப்­பாட்டைத் தரப்­போ­கி­றதோ நாம­றியோம். நாம் மேற்­படி நீதி­மன்­றத்தில் முறைப்­பாடு செய்­ததன் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ரஞ்ஜன் ராம­நா­யக்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்த அறிக்­கையில், மது­பான விற்­பனை நிலை­யங்­களை நடத்­து­வ­தற்­காக 100 க்கும் மேற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அனு­மதிப் பத்­தி­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எதனோல் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள்–4, 75 பா.ம. உறுப்­பி­னர்­க­ளுக்கு மணல் விற்­ப­னைக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.14 பா.ம. உறுப்­பி­னர்­க­ளுக்கு விமான நிலை­யங்­களில் வர்த்­தகக் கடைகள் நடத்த அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் விநி­யோ­கிக்கப் பட்­டுள்­ளன. இந்தப் பட்­டி­ய­லுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் அரச காணிகள் பெற்­றுள்ளோர், இறக்­கு­மதி அனு­ம­திப்­பத்­திரம் பெற்றோர், பெற்றோல் நிரப்பு நிலை­யத்­திற்­கான அனு­ம­திப்­பத்­திரம் பெற்றோர் போன்றோர் பட்­டி­யலை இணைக்கும் போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இலட்­சணம் எப்­ப­டி­யென்­பது புரி­கி­ற­தல்­லவா? மேற்­படி குற்­றச்­சாட்டுக் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்த முறைப்­பாடு நிரா­க­ரிக்­கப்­பட அது உயர் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில் அங்கும் உதா­சீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் நாட்டு மக்­க­ளா­கிய எங்­களால் வேறு எத­னைத்தான் செய்ய முடியும்?

அநா­க­ரிக முறைமை

நல்ல நாக­ரிக நாடு என்றால், அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை எந்­த­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் உதா­சீனம் செய்­யாது அதனை மிகவும் பரி­சுத்­த­மா­ன­தொன்­றாக மதித்து உன்­னத நிலை­யிலே வைத்­தி­ருக்கும். இந்த முறைமை இலங்­கை­யிலே மிகவும் கீழ் மட்­டத்­திலேதான் உள்­ளது.

சட்­ட­மி­யற்றும் உயர் சபை­யாக பாரா­ளு­மன்றம் விளங்­கு­கிற போதிலும் 19 ஆவது யாப்புத் திருத்தம் கொண்டு வரப்­பட்டு நிறை­வேற்­றி­யதன் மூலம் அதி­யுயர் சட்­ட­மான யாப்பு, பாரா­ளு­மன்­றத்­தா­லேயே துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. அர­சியல் யாப்பின் அடிப்­படை உறுப்­பொன்றை மாற்­று­வ­தாயின் பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்கும் விடப்­பட்டு அங்­கீ­காரம் பெறப்­பட வேண்டும். ஆனால் 19 ஆவது திருத்­தத்தில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்டு அவர் பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தி­யா­கவும் அவ­ருக்­குள்ள அந்த அதி­கா­ரங்கள் யாவும் பிர­த­மரின் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யிடம் சென்­ற­டையும் விதத்தில் மாற்றம் செய்­ய­ப்பட்­டுள்­ளது. இது மக்கள் அபிப்­பி­ரா­யத்­திற்கு செல்­லாது பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் நீதி­மன்றம் இதனை ஏற்றுக் கொள்­ள­வில்லை. சட்ட மூலத்தில் சில பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மாத்­திரம் நிறை­வேற்ற முடி­யு­மான போதிலும் மற்றும் சில சட்ட மூலங்கள் பாரா­ளு­மன்றின் மூன்றில் இரண்­டுடன் மக்கள் அபிப்­பி­ராயம் பெறப்­பட வேண்டும் என்­றுள்­ள­தாக நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இவ்­வாறு சட்­ட­மி­ருக்­கையில் யாப்பின் பிர­தான கூறான ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்கி, அவற்றை பிர­தமர் என்ற வகையில் தன்­னிடம் வந்­த­டை­யும்­வாறு 19 ஆவது யாப்­புத்­தி­ருத்­தத்தை சட்­ட­மாக்கிக் கொள்­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்­றி­கண்டு கொண்டார். இது உலகில் யாப்பு உரு­வாக்­கத்தில் இடம்­பெற்ற பாரிய மோசடி ஒன்­றாகக் கணிப்­பிட முடியும். இந்த மோசடி வித்­தையைத் தெரிந்தோ அல்­லது தெரி­யா­மலோ நிறை­வேற்­று­வதில் பங்­க­ளித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­ப­தியும் பொறுப்­புக்­கூற வேண்டும். ஆளும் தரப்புப் போன்றே எதிர்த்­த­ரப்­பி­னரும் இதற்கு பொறுப்புச் சொல்­வ­தற்குக் கட­மைப்­பட்­டுள்­ளார்கள். யாப்பு விதிக்கு முர­ணாக நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட்­டதை எதிர்த்து இது­வரை எவரும் நீதி­மன்றை நாடவும் இல்லை.

கடந்த வருடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அரசை அகற்றி மகிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான அரசை அதி­கா­ரத்தில் அமர்த்­தினார். அதன்­போது பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்க எத்­த­னித்தார். இந்தப் பிரச்­சினை நீதி­மன்­றத்­திடம் கொண்டு செல்­லப்­பட்­டது. அதன்­போதும் தற்­போது திருத்­தப்­பட்­டுள்ள யாப்பு விதிக்­க­மைய ஜனா­தி­ப­தியின் இந்த செயற்­பா­டா­னது சட்­டத்­திற்­குட்­பட்­டதா அல்­லது முர­ணா­னதா என்­பதை மாத்­தி­ரமே நீதி­மன்றம் உரசிப் பார்த்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் நீதி­மன்­றத்தால் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கும் வேறு­வழி இல்­லா­தி­ருக்­கலாம். அதனால் யாப்­புக்கு முர­ணாக நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட்ட 19 ஆவது திருத்­தத்­திற்கும் நீதி­மன்­றத்தின் இச்­செ­யற்­பாடு மூலம் சட்­ட­பூர்வம் வழங்­கப்­பட்­ட­தென்றே கூறலாம்.

யாப்பு துஷ்­பி­ர­யோகம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போல ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரால் யாப்பு துஷ்­பி­ர­யோகம் செய்த முதற்­கட்டம் இது­வல்ல.

குடி­ய­ரசின் இரண்­டா­வது அர­சி­ய­ல­மைப்பின் சிருஷ்­டி­கர்த்தா ஜே. ஆர். ஜய­வர்­தன, தனது குறு­கிய சுய­நல அர­சியல் அபி­லா­சை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காகப் புதிய யாப்­பொன்றைக் கொண்டு வந்தார். அப்­போது பாரா­ளு­மன்­றத்தில் தனக்­கி­ருந்த ஆறில் ஐந்து பெரும்­பான்மைப் பலத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் யாப்பை துஷ்­பி­ர­யோகம் செய்தார். அதன் மூலம் தன்னால் தயா­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தையும் தேசத்தின் யாப்­பையும் விகா­ரப்­ப­டுத்­தினார். ஜனா­தி­பதி ஜே. ஆரின் பத­விக்­கா­லத்தில் நான்­கா­வது யாப்புத் திருத்­தத்தின் மூலம் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பி­னூ­டாக ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை நீடித்துக் கொண்டார். இது மிகவும் மோச­மா­ன­தொரு யாப்பு விகா­ரப்­ப­டுத்­த­லாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது. ஏனெனில் நாட்டில் இரத்த ஆறு பெருக்­கெ­டுப்­ப­தற்கு இந்த யாப்­புத்­தி­ருத்­தமே வழி­வ­குத்­தது எனலாம்.

சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யான போது ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் அதி­கூ­டிய பாரா­ளு­மன்றப் பலம் போல் அவ­ரது பாரா­ளு­மன்றம் அமை­ய­வில்லை. அதனால் ஜே.ஆர்.போல அவரால் கையாள முடி­யா­விட்­டாலும் அவர் மாற்று நட­வ­டிக்­கை­யொன்றில் இறங்­கினார். அவர் நீதி­மன்றப் பிர­தா­னியை தனது கைக்குள் போட்டுக் கொண்டு வழக்குத் தீர்ப்­பி­னூ­டாக யாப்பை தனக்கு வேண்­டி­ய­வாறு கையாடல் செய்து கொண்டார்.

ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வினால் தயா­ரிக்­கப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பில் பொதுத் தேர்தல் ஒன்றில் ஒரு கட்சி பெறும் உறுப்­பு­ரிமை. அதே பத­விக்­காலம் முடியும் வரை கூட்டல் குறைச்­ச­லின்றி அதே அளவில் இருக்கும் வண்­ணமே அமைக்­க­ப்பட்­டி­ருந்­தது. நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாலும் அதனை மாற்ற முடி­யாது. உறுப்­பினர் ஒரு­வரால் கட்சி மாறவும் முடி­யாது. மாறினால் தாமா­கவே உறுப்­பு­ரிமை துறக்­கப்­ப­டுவார். பதவிக் காலத்­திற்­கி­டையே காலி­யாகும் இடத்­திற்கு இடைத்­தேர்தல் நடக்­காது. அதே கட்­சியில் அடுத்­துள்ள ஒருவர் அவ்­வி­டத்­திற்கு அமர்த்­தப்­ப­டுவார். இதன் மூலம் பத­விக்­காலம் வரை நிலை­யான ஆட்சி ஒன்று நிலைத்­தி­ருக்­கும்­வாறே இந்த யாப்பு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்சி மாறி ஆட்­சியைக் கவிழ்க்­கவும் முடி­யாத குறிப்­பி­டத்­தக்க யாப்­பாக இருந்­தது.

இவ்­வா­றி­ருந்த யாப்பை ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க, அப்­போ­தைய பிர­தம நீதி­ய­ரசர் சரத்.என் சில்­வாவின் உத­வியைப் பெற்று அர­சி­ய­ல­மைப்பின் அடி­மட்­டத்­தையே தகர்த்­தெ­றிந்தார். அதா­வது சில ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உறுப்­பு­ரிமை இழக்­கப்­ப­டாது அவர்­களை ஆளும் தரப்­புக்குள் உள்­வாங்­கத்­தக்­க­தாக நீதி­மன்­றத்­தி­னூ­டாக அதனைச் சாதித்துக் கொண்டார். இது அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­ப­டுத்­திய பாரிய ஓட்­டை­யாகும். அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை பாரிய விலை கொடுத்து வாங்கும் மோச­டிக்கும் இது வழி­வ­குத்து விட்­டது.

இவ­ருக்குப் பின்னர் அதி­கா­ரத்­திற்கு வந்த மகிந்த ராஜபக் ஷவும் தனக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலம் வந்­த­வுடன் அதனைப் பயன்­ப­டுத்தி தமக்கு வேண்­டி­ய­வாறு அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தங்­களைச் செய்து கொண்டார். அதன்­மூலம் 17 ஆவது அர­சியல் யாப்புத் திருத்தத்தை வலு­வி­ழக்கச் செய்து அர­சி­ய­ல­மைப்புச் சபை­யையும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளையும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தின் கீழ் கொண்டு வந்தார். அத்­துடன் ஜனா­தி­ப­தி­யொ­ரு­வ­ருக்கு இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பத­வியில் இருக்க முடி­யா­தென்­பதை மாற்றி அதற்கு மேலும் பல தட­வைகள் பத­வியில் இருக்கத் தக்­க­வாறு சட்­டத்தைத் திருத்திக் கொண்டார். இவற்­றுக்கு மேலாக பிர­தம நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­நா­யக்­கவை பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்­காகச் சட்­ட­வி­ரோ­த­மாக பல­வந்­தத்தைப் பிர­யோ­கித்த மகிந்­தவின் செயற்­பாடு பார­தூ­ர­மான யாப்புத் துஷ்­பி­ர­யோ­கமாய் பேசப்­ப­டு­கி­றது. மேலும் ரிட் கட்­டளைச் சட்­ட­மு­றைமை விட­யத்தில் மிகவும் அநா­க­ரி­க­மா­கவே நடந்து கொண்டார். இங்­கி­லாந்தில் பலம் வாய்ந்த அரச பரம்­ப­ரை­யி­னர்­கள்­கூட ரிட் கட்­ட­ளை­க­ளுக்கு நல்ல மரி­யாதை கொடுத்தே வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மகிந்த மிகவும் கீழ்த்­த­ர­மாக நடந்து கொண்­டமை நாட்­டுக்கே தலை­கு­னி­வாகும். பிர­தம நீதி­ய­ரசர் சிராணி விட­யத்தில் நீதி­மன்ற கட்­ட­ளையை பாரா­ளு­மன்றம் மதிக்­க­வில்லை. பாரா­ளு­மன்­றத்தால் ரிட் மனு காலால் உதைக்­கப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும்.

இதே­போன்றே 1977 க்கு முன்­னரும் யாப்பு மீறல்கள் இடம்­பெற்­றுள்­ளன. சோல்­பரி அர­சியல் அமைப்­பி­னது மை காய்­வ­தற்குள் அது மீறப்­பட்ட சம்­பவம் ஒன்றும் இடம்­பெற்­றுள்­ளது. பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் கொண்டு வரப்­பட்டு இந்­திய தோட்டத் தமி­ழர்­களின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­டது. அதே போன்றே 1956 இல் சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழிச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. இவை சோல்­பரி அர­சியல் அமைப்புச் சட்­டத்தை மீறும் சட்­டங்­க­ளா­கவே நிவை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

தவறை திருத்திக் கொள்­ளாத தவறு

பொது­வாக நாக­ரி­க­மாக நடக்கும் எந்­த­வொரு அரசும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை புறக்­க­ணிப்­ப­தில்லை. அதனைப் புனிதப் பொரு­ளாகக் கருதி அதற்கு உரிய மரி­யாதை கொடுத்து வரு­வதே மரபு. அரச தலை­வர்­க­ளாலோ அல்­லது அர­ச­மைப்­பா­ளர்­க­ளாலோ அல்­லது நீதி­மன்­றத்­தாலோ யாப்பு துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­மையை கேள்­விப்­பட்­ட­தே­யில்லை. நாக­ரி­க­முள்ள நாடொன்றில் தப்பித்தவறி இத்தகைய மீறல்கள் உருவாகும் பட்சத்தில் கண்டறிந்ததும் உடனே சீர்செய்து கொள்வார்கள்.

இந்தியாவில் இந்திரா காந்தியின் பரிபாலனத்தின் போது 1976 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசியலமைப்பில் 42 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டது. அது யாப்போடு முரண்படுவதாகவே இருந்தது. ஆனால் அதனை நிரந்தரமாக வைத்திருக்கவில்லை. அடுத்து அதிகாரத்திற்கு வந்த ஜனதா அரசு 43 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து யாப்பை முன்னைய நிலைக்கே கொண்டு வந்தது. இந்த 43 ஆவது திருத்தத்திற்கு இந்திராவின் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு வழங்கியது.

இலங்கையிலோ நாட்டுத் தலைவர், தலைவி மற்றும் நீதி மன்றத்தாலும் யாப்பு புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. ஆனால் மேற்படி எத்தரப்பினராவது யாப்பு விகாரப்படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து அதனைத் திருத்திக் கொண்ட வரலாறும் இல்லை. எமது நாட்டின் அரசியல் இலட்சணம் இப்படியுள்ளது. பெயரளவில் தான் இலங்கையில் ஜனநாயகப் பண்புள்ளது. ஜனநாயகத்தை வளர்த்துக்கொள்ளும் கடப்பாடு எவருக்கும் இல்லை.
அங்குமிங்கும் பலரும் கையாடி இலங்கையின் யாப்பு படுமோசமான நிலைக்கே சிதைவு கண்டுள்ளது. பல சிக்கல்களுக்கும் உள்ளான யாப்பாகவே உள்ளது. யாப்பு இல்லாத ஒரு நாடு சுக்கான் இல்லாத கப்பலுக்குச் சமனாகும். எமது நாடும் பயங்கர ஆழ்கடலுக்கு மத்தியில் சுக்கான் இல்லாத கப்பல் போன்றே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலோ அல்ல. நாட்டுக்குகந்த அரசியலமைப்புச் சட்டம் ஒன்றே எமக்குத் தேவை.

அது அரசியலமைப்பு உறுப்பினர்களைத் தட்டிக்கொடுப்பதாக மாத்திரம் அமையாது, நாட்டு மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியதொன்றாக அமையப்பெற வேண்டும்.
அது சகல இன, மத, குலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எத்தகைய வேற்றுமைகளுமின்றி அனைவரையும் சமநிலையில் வைத்து சம உரிமை வழங்கும் மனிதாபிமானம் காட்டக்கூடியதொரு யாப்பாகவும் விளங்க வேண்டும். அனைத்தின மக்களுக்கும் கௌரவமளித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடியதான அமைப்புச் சட்டமாகவும் அமைய வேண்டும்.
நன்றி–ராவய வார இதழ்.

சிங்­க­ளத்தில்: விக்டர் ஐவன்

தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.