வெள்ளம்,சுனாமி அனர்த்த பாதிப்புகள் நீங்க பிரார்த்திப்போம்

0 664

வட மாகாணத்தின் பல மாவட்டங்கள் பாரிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்செய்கையும் அழிவடைந்துள்ளது. சில இடங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதிக நீர் வெளியேறுகின்ற காரணத்தால் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களான வவுனிக்குளம் , உடையார் கட்டுக்குளம் , முத்தையன்கட்டு குளங்கள் வான் பாய்வதனால் அதனை அண்டிய தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந் நிலையில் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இராணுவத் தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார்

இதேவேளை,  முல்லைத்தீவு மற்றும் இரணைமடு பகுதிகளில் வௌ்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க்கும் பணிகளில், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் மக்களை மீட்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புகொண்ட அமைச்சர், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கப்பால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு வடக்கின் ஏனைய பகுதிகளில் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளன.

இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்கனவே யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். மாத்திரமன்றி யுத்த காலத்தில் வீடுகளை விட்டும் வெளியேறி முகாம்களில் தங்கியவர்கள். இந்நிலையில் மீண்டும் இயற்கை அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக நிர்க்கதி நிலையைச் சந்தித்துள்ளமை துரதிஷ்டமானதாகும்.

எனவே இம்மக்கள் கூடிய விரைவில் தமது வீடுகளுக்கு மீளத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன் நிவாரணங்கள், இழப்பீடுகளை தாமதியாது வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும்.

இதற்கிடையில், இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், ஹோட்டல்கள் சேதமடைந்துள்ளன.

2004 டிசம்பர் 26 இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் மற்றுமொரு சுனாமி அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை கவலைக்குரியதாகும். இந்தோனேசியாவின் புவியியல் அமைவிடமே அங்கு அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்படக்காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சுனாமியின் தாக்கம் இலங்கை போன்ற நாடுகளுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களதும்  இலங்கையில் வடக்கே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் துயர் நீங்கவும் விரைவில் அவர்கள் வழமைக்குத் திரும்பவும் பிரார்த்திப்போம். முடியுமாயின் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்குவோம்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.