இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு உறவுகளோடு இணைந்த பச்சிளம் பாலகி

0 138

எம்.ஐ.அப்துல் நஸார்

சிரி­யாவில் இடிந்து விழுந்த கட்­டி­டத்தின் இடி­பா­டு­க­ளுக்கு அடியில் பிறந்த குழந்­தை­யொன்று, பாரிய நில­ந­டுக்­கத்தில் இருந்து உயிர் தப்­பிய குடும்ப உற­வி­னர்­க­ளான மாமி மற்றும் மாமா­வினால் தத்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

மீட்­கப்­ப­டும்­போது தாயுடன் தொப்புள் கொடியால் இணைக்­கப்­பட்­டி­ருந்த அப் பெண் குழந்­தையைத் தத்­தெ­டுக்க பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் முன்­வந்­தனர்.
குறித்த பெண் உற­வினர் மர­பணுப் பரி­சோ­த­னையில் அக் குழந்­தையின் தாய்­வழி இரத்த உற­வினர் என உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து அந்த உற­வி­ன­ரோடு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கவும் அக் குழந்தை ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தா­கவும் வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

‘இவள் இப்­போது என் குழந்­தை­களுள் ஒருத்தி, நான் எனது குழந்­தை­க­ளுக்கும் அவ­ளுக்கும் இடையே வேறு­பாடு காட்ட மாட்டேன்’ என அப் பெண் குழந்­தையை தத்­தெ­டுத்­துள்ள மாமா­வான கலீல் அல்-­ச­வாதி அசோ­சி­யேட்டட் பிரஸ் செய்தி நிறு­வ­னத்­திடம் தெரி­வித்தார்.

தற்­போது அக் குழந்­தைக்கு உயி­ரி­ழந்த தாய் அப்­ராவின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது. அவள் மீட்­கப்­பட்ட சிறிது நேரத்தில், அதி­கா­ரிகள் அவ­ளுக்கு அயா என்று பெய­ரிட்­டனர், அதா­வது அரபு மொழியில் அதி­சயம் என்­பது அதன் கருத்­தாகும். நில­ந­டுக்கம் ஏற்­பட்ட சிறிது நேரத்தில் அக் குழந்தை மீட்­கப்­பட்ட காணொளி சமூக ஊட­கங்­களில் வைர­லாக பர­வி­யது.

நெஞ்சு படப­டக்கும் காட்­சி­களைக் கொண்ட அக் காணொ­ளியில், ஒருவர் தனது கைகளில் தூசு­களால் மூடப்­பட்­டி­ருக்கும் குழந்­தையை தூக்­கிக்­கொண்டு, இடி­பா­டு­க­ளுக்கு மேலாக வேக­மாக ஓடு­வது காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. கட்­டடம் இடிந்து விழுந்து 10 மணி நேரத்­திற்கு பின்னர் அக் குழந்தை அக் கட்­டி­டத்தின் கீழ் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது. அக் குழந்­தையின் உடல் முழு­வதும் காயங்கள் மற்றும் சிராய்ப்­பு­க­ளுடன் மிக ஆபத்­தான நிலையில் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

துருக்­கிய எல்­லைக்கு அருகில் அமைந்­துள்ள இட்லிப் மாகா­ணத்தில் எதிர்த்­த­ரப்­பி­னரின் கட்­டுப்­பாட்டில் உள்ள நக­ர­மான ஜிண்­டாய்­ரிஸில் 7.8 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கத்தால் இடிந்து வீழ்ந்த 50 கட்­ட­டங்­களுள் ஒன்றில் அக் குழந்­தையின் குடும்பம் வாழ்ந்து வந்­தது.

அக் குழந்­தையின் தாய் அனர்த்தம் நடந்த சிறிது நேரத்தில் அவர் உயி­ரி­ழப்­ப­தற்கு முன்னர் அக் குழந்­தை­யினை பிர­ச­வித்­தி­ருந்தார், இந்த அனர்த்­தத்­தின்­போது அக் குழந்­தையின் தந்தை, உடன் பிறப்­புக்கள் நான்கு பேர் மற்றும் அக் குழந்­தையின் மாமி­யொ­ரு­வரும் உயி­ரி­ழந்­த­தாக உற­வினர் ஒருவர் தெரி­வித்தார்.

‘இந்தக் குழந்­தையின் குடும்­பத்தில் எவரும் தற்­போது உயி­ருடன் இல்லை, இதனால் எமக்கு இக் குழந்தை மிகவும் முக்­கி­ய­மா­னது’ என அல்-­ச­வாதி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­திடம் தெரி­வித்தார். ‘இக் குழந்தை எனக்கும், அவ­ளது மாமிக்கும் மற்றும் அவ­ளு­டைய தாய் மற்றும் தந்­தையின் கிரா­மத்தில் உள்ள எமது உற­வி­னர்கள் அனை­வ­ருக்கும் ஒரு நினைவுச் சின்­ன­மாக இருப்பாள்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

அப்­ராவை தத்­தெ­டுப்­ப­தற்­காக ஏரா­ள­மானோர் முன்­வந்­தி­ருந்­ததால், அவள் வைத்­தி­ய­சா­லையில் இருந்த இரண்டு வாரங்­களில் அவளை யாரா­வது கடத்திச் சென்­று­வி­டு­வார்­களோ என தான் கவ­லைப்­பட்­ட­தாக அக் குழந்தை இடி­பா­டுகளி­லி­ருந்து மீட்­கப்­பட்­ட­போது உட­னி­ருந்த அல்-­ச­வாதி, அசோ­சி­யேட்டட் பிரஸ்­ஸிடம் தெரி­வித்தார்.

அப்­ரா­வுக்கு சிறந்­தது அவ­ளது குடும்­பத்­துடன் இருப்பதாகும் என அப்ராவை தத்தெடுத்துள்ள அல்-சவாதி மற்றும் அவரது மனைவி ஹாலாவும் தெரிவித்தனர், இவர்­க­ளது வீடும் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­தோடு உற­வி­ன­ரொ­ரு­வரின் வீட்­டி­லேயே வசித்து வரு­கின்­றனர்.

நில­ந­டுக்கம் ஏற்­பட்டு மூன்று நாட்­க­ளுக்குப் பின்னர் ஹாலா­வுக்குப் பெண் குழந்­தை­யொன்று பிறந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.