அம்பாறையில் கடலுக்குச் சென்ற இரு மீனவர்களை இருநாட்களாக காணவில்லை

0 627
அம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை சேரவில்லை என மீனவர்கள் கவலை தெரிவுத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (12-12-2018) பிற்பகல் 5 மணிளவில் ஒலுவில் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்றில் சென்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய எம்.எஸ்.சஹாப்தீன் மற்றும் 32 வயதுடைய ஏ.எம்.அப்துல் கணி ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துறை முகத்திலிருந்து சிறிய படகு மூலம் மீன்பிடிக்கச் செல்பவர்கள் மறுநாள் காலை கரை திரும்புவதே வழமையாக இருந்த போதிலும் இவர்களது வருகை தாமதமடைந்த அடுத்து வியாழக்கிழமை(13-12-2018) பகல்வேளையில் உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்ட போது தங்களது படகின் இயந்திரம் இயங்காமலுள்ளது என்றும் கடும் காற்று அடிப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கின்றனர்.

அன்று மாலை வரை குறித்த இருவரும் கரைசேராத போது மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட வேளை தொலைபேசி இயங்கவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.  காணாமல் போயுள்ள மீனவர்களை தற்போது தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கடற்படையினர் இல்லாத நிலையில் துறைமுகத்தின் படகு வாயில் பகுதி மணலால் மூடப்பட்டு பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வானிநிலை அவதான நிலையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியனவற்றினால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எதிர்வரும் 16 அம் திகதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலையும் பொருட்படுத்தாமல் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வது பெரும் ஆபத்தான நிலைமையை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.