வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு: மொஹமட் ரூமி பிணையில் விடுவிப்பு

0 580

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் கைது செய்யப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட சகலவள்ளி ஆரச்சிகே சரத் குமார, வட்டரெக கமகே அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகியோரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் முதல் இரு சந்தேக நபர்களான சகலவள்ளி ஆரச்சிகே சரத்குமார, வட்டரெக கமகே அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகியோருக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டாளர் தரப்பால் வாபஸ் பெறப்பட்டு பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

4 ஆம் சந்தேக நபரான அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், பிடியாணை இன்றி கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் சட்ட ரீதியாக எழுப்பிய கேள்விக்கு சி.ஐ.டி.யோ சட்ட மா அதிபரோ பதிலளிக்காத நிலையிலேயே அதனையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

4 ஆவது சந்தேக நபரான அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவால் பிணை கோரப்பட்டது. அத்துடன் பிணை வழங்க மேலதிக காரணிகளாக ரூமி மொஹம்மட்டின் குடும்ப பின்னணி, அவரது வர்த்தக தொழில்சார் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார இணைத்துக்கொண்டார்.

எனினும் சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் எதிர்ப்பு வெளியிட்டார். ரூமி மொஹம்மடை மிக கஷ்டத்துக்கு மத்தியில் கைது செய்ததாகவும், பிணை வழங்கினால் விசாரணைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன, 4 ஆவது சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், பிடியாணை இன்றி கைது செய்ய முடியாதவை. அப்படி இருக்கையில் அவரை எவ்வாறு மறு நாள் கைது செய்தீர்கள் என முறைப்பாட்டாளர் தரப்பிடம் வினவினார்.

இதனையடுத்து பிணைகள் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. முதலில் முதலாம், 2 ஆம் சந்தேக நபர்களின் பிணையை நிராகரிக்க எந்த காரணிகளும் இல்லை என சுட்டிக்கடடிய நீதிவான் அவர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார்.
இதனையடுத்து 4 ஆவது சந்தேக நபர் ரூமி மொஹம்மட்டின் பிணை தொடர்பில் தீர்ப்பை நீதிவான் அறிவித்து அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்தார்.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.