தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?

0 521

பிர­தேச மட்­டத்தில் நிர்­வாகம் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் 1989ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முறையே பிர­தேச செய­லக முறை­யாகும்.

ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கச்­சேரி முறையை மாவட்ட செய­ல­க­மாக மாற்­றியும், ஏற்­க­னவே AGA office என்று அழைக்­கப்­பட்ட உதவி அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யங்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன.

இதனால், முன்பு அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் மற்றும் கச்­சே­ரிகள் என்­ப­வற்றால் மேற்­கொள்­ளப்­பட்ட அலு­வல்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­மை­யினால் இது­வொரு முக்­கிய அரச ஸ்தாப­ன­மா­கி­யது.

கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்தப் பிர­தேச செய­ல­கங்கள் பிர­தேச செய­லா­ளரின் கீழ் இயங்­கு­கின்­றன. தற்­போது நாட­ளா­விய ரீதியில் 331 பிர­தேசச் செய­லாளர் பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. 2012 ஆம் ஆண்டின் சனத்­தொகை மதிப்­பீட்­டின்­படி 378,182 சனத்­தொ­கை­யி­னையும் 2,727 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவையும் கொண்ட திரு­கோ­ண­மலை மாவட்டம், 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் 12 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய வகையில் தோப்­பூ­ருக்­கான பிர­தேச செய­ல­க­மொன்­றினை உரு­வாக்­கு­மாறு பல தசாப்த கால­மாக கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த தோப்பூர், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மூதூர் பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட ஒரு பிர­தே­ச­மாகும். மூதூர் நக­ரி­லி­ருந்து சுமார் 16 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள இவ்­வூரில் தென்னை மரங்கள் அதி­க­மாக காணப்­பட்­டதால் தோப்பு எனவும் அழைக்­கப்­பட்­ட­தாக முன்­னோர்கள் தெரி­விக்­கின்­றனர். பின்னர் இப்­பெயர் திரி­ப­டைந்து தோப்பூர் எனவும் அழைக்­கப்­பட்­டது. நாவற்­கேணி குளத்­தி­னையும் நிறைய வயற் காணி­க­ளையும் இப்­பி­ர­தேசம் கொண்­டுள்­ளது. இவ்­வா­றான பல சிறப்­பம்­சங்­களைக் கொண்ட தோப்பூர் மக்கள் நீண்ட தூரம் பய­ணித்தே தமது நிர்­வாகத் தேவை­களை நிறை­வு­செய்ய வேண்­டி­யுள்­ளது.

இதனால் தோப்பூர் பிர­தே­சத்­திற்கு தனி­யான பிர­தேச செய­லகம் வழங்­கப்­ப­டு­மென ஆட்­சிக்கு வந்த அனைத்து அர­சாங்­கங்­க­ளி­னாலும் உறு­தி­மொழி வழங்ப்­பட்­டி­ருந்­தாலும் குறித்த மக்­களின் கனவு இது­வரை நிறை­வேற்­றப்­பட்­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் எதிர்­வரும் நவம்பர் 16 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில், குறித்த விடயம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மீண்டும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

சுமார் ஐந்து கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே சேரு­வில மற்றும் வெருகல் பிர­தேச செய­ல­கங்கள் பல வரு­டங்­க­ளிற்கு முன்னர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக தோப்பூர் மஜ்லிஸ் சூராவின் தலை­வ­ரான எம்.ஏ.ஜீ.எம்.சாபிர் தெரி­வித்தார்.

இதனால் 12 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி­ய­தாக தோப்­பூ­ருக்­கான பிர­தேச செய­ல­க­மொன்­றினை ஸ்தாபிக்­கு­மாறு கோரிக்கை முன்­வைத்­துள்ளோம். இதன் ஊடாக எமது பிர­தேச மக்­களின் அரச தேவை­களை இல­கு­ப­டுத்த முடி­யு­மென அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, தனி­யாக செயற்­பட்ட தோப்பூர் உள்­ளூ­ராட்சி மன்றம், 1989 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிர­தேச சபை சட்­ட­மூ­லத்தின் கீழ் மூதூர் பிர­தேச சபையின் கீழ் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் தற்­போது தோப்­பூ­ருக்­கென்று தனி­யா­ன­தொரு அரச இயந்­தி­ர­மொன்று இன்­மை­யினால் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதனால் மூதூர் பிர­தேச செய­லகம் மற்றும் பிர­தேச சபை ஆகி­ய­வற்றின் உப அலு­வ­லகங்கள் தனித்­த­னி­யாக தோப்பூர் பிர­தே­சத்தில் செயற்­ப­டு­கின்ற போதிலும் அவற்­றினால் எந்­த­ளவில் வினைத்­தி­ற­னான சேவைகள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளன.

இதனால் நான்கு தமிழ் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய வகையில் தோப்­பூ­ருக்­கான பிர­தேச செய­ல­க­மொன்­றினை ஸ்தாபிக்­கு­மாறு உள்­நாட்­ட­லுவல்கள், அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட புதிய பிர­தேச செய­லக உரு­வாக்கம் தொடர்­பான குழு­விடம் வேண்­டுகோள் விடுத்­ததாக ஓய்­வு­பெற்ற வங்கி முகா­மை­யாளர் சாபிர் தெரி­வித்தார்.

இந்தப் பிர­தேச செய­லக உரு­வாக்­கத்­திற்­கான சிபா­ரிசு குறித்த குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போதிலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா சம்­பந்­தனின் தலை­யீட்­டினால் குறித்த விடயம் தற்­போது கிடப்பில் போடப்­பட்­டுள்­ள­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்த அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பிர­தி­ய­மைச்சர் அப்­துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்ற நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பந்­தனின் கடி­தத்­தினால் தோப்பூர் பிர­தேச செய­லக கன­விற்கு தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் குச்­ச­வெளி மற்றும் தம்­ப­ல­காமம் ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளிற்கு பொறுப்­பாக தமிழ் பிர­தேச செய­லா­ளர்­களே நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.தௌபீக், இந்த நிய­ம­னத்­திற்கு ஒரு­போதும் முஸ்­லிம்கள் எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை என்றார்.

அது­போன்று தோப்பூர் பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­படும் போதும் தமிழ் பிர­தேச செய­லா­ளரை நிய­மிக்க முடியும். அத்­துடன் இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழும் நோக்­கி­லேயே இந்த பிர­தேச செய­லக கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அவர் கூறினார்.
இதே­வேளை, முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மற்றும் காணி­களைக் கொண்ட தோப்­பூ­ரினை அண்­டிய சில கிரா­மங்கள், சேரு­வில மற்றும் வெருகல் பிர­தேச செய­ல­கங்­க­ளுடன் ஏற்­கவே இணைக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த சந்­தர்ப்­பங்­களில் முஸ்­லிம்கள் எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் புதி­தாக அமை­யப்­பெ­ற­வுள்ள தோப்பூர் பிர­தேச செய­ல­கத்தின் கீழ் கிளி­வெட்டி, நேங்­காமம், கந்­து­வெளி மற்றும் நல்லூர் ஆகிய தமிழ் கிரா­மங்­கள் உள்­ள­டக்­க­ப­டு­வ­த­னா­லேயே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றது.

எனினும், இந்தக் கிரா­மங்­க­ளி­லுள்ள பெரும்­பான்­மை­யான காணிகள் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­னவை என்­பதை அவர்கள் மறந்­து­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. அது மாத்­தி­ரமல்­லாமல் செல்­வ­நகர் என்று அழைக்­கப்­படும் நாவற்­கேணி காடு எனும் கிரமாம் சேரு­நு­வர எனப்­படும் சிங்­கள பிர­தேச செய­ல­கத்­துடன் இணைக்­கப்­பட்ட போது, இந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஏன் வாய்­மூடி மௌனி­யா­யி­ருந்­தது என அப்­பி­ர­தேச மக்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இரா. சம்­பந்தன் எழு­திய கடி­தத்தில்,

“மூதூர் பிர­தேச செய­லாளர் பிரிவு தமிழர் பெரும்­பான்­மை­யி­ன­ரா­க­வி­ருந்த ஒரு தமிழ் பிரி­வா­கிய முன்­னைய கொட்­டி­யா­பு­ர­பற்று பிரிவின் ஓர் உப பிரி­வாகும். எனினும் மூதூர், சேரு­வில மற்றும் வெரு­கல் பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் என கொட்­டி­யா­புர மூன்று உப பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டது.

மூதூர் பிர­தேச செய­லாளர் பிரிவும் ஆரம்­பத்தில் தமிழர் பெரும்­பான்­மை­யா­க­வி­ருந்த ஒரு பிர­தே­ச­மே­யாகும். யுத்தம் கார­ண­மாக பெரும் எண்­ணிக்­கை­யி­லான தமிழர் இடம்­பெ­யர்ந்து தற்­போது நாட்டின் பல பாகங்­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் வசிப்­ப­தை­ய­டுத்து, மூதூர் பிர­தேசம் தற்­போது முஸ்லிம் பெரும்­பான்மை பிர­தேச செய­ல­க­மாக மாறி­யுள்­ளது.

தற்­போ­தைய முன்­மொ­ழிவு முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யி­ன­ரா­கவும் ஒரு­சில தமி­ழர்­க­ளையும் கொண்ட தோப்பூர் பிர­தேச செய­லகப் பிரிவு என்­ற­ழைக்­கப்­படும் இன்­னு­மொரு முஸ்லிம் பெரும்­பான்மை பிரிவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­ன­தாகும்.

இதன் விளை­வாக ஏற்­படும் நிலை­யா­னது, இரண்டு முஸ்லிம் பெரும்­பான்மை பிரி­வுகள் இருக்கும் என்­ப­தாகும். இவ்­விரு பிரி­வு­க­ளிலும் தமிழ் மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே இருப்பர். இது அவர்­க­ளது எதிர்­கா­லத்­திற்குப் பாத­க­மா­ன­தாகும்.நான் இம்­மா­வட்­டத்தைச் சேர்ந்த ஒரு சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போதும், இவ்­வி­டயம் தொடர்­பாக என்­னுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்த அனைத்து மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளோடும் உரிய கலந்­து­ரை­யா­டல்கள்; செய்து தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். தற்­போ­தைய முன்­மொ­ழிவு தமிழ் மக்­க­ளுக்கு பெரும் அநீதி விளை­விக்கும்.எனவே, தற்­போ­தைய முன்­மொ­ழிவு முன்­கொண்­டு­செல்­லப்­ப­ட­லா­காது என்றும் அனை­வ­ருக்கும் நீதி வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளோடும் உரிய கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் நான் வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன்.

தோப்பூர் பிர­தேச செய­லகப் பிரிவு என்று பெய­ரி­டப்­பட்ட இன்­ன­மொரு முஸ்லிம் பெரும்­பான்மை பிர­தேச செய­லகப் பிரிவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான தற்­போ­தைய முன்­மொ­ழிவு இறுதித் தீர்­மா­னங்கள் எட்­டப்­ப­டும்­வரை நிறுத்­தப்­ப­ட­வேண்டு என வின­ய­மாக கேட்­டுக்­கொள்­கிறேன்” எனக் குறிப்­பிட்டார்.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ்­கின்­றனர். தோப்பூர் பிர­தேச செய­லக கோரிக்கை முஸ்­லிம்­களின் கோரிக்கை மட்­டு­மல்ல, அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அனைத்து இன, மத மக்­க­ளி­னதும் அனைத்து கட்சி பிர­தி­நி­தி­க­ளி­னதும் கோரிக்­கை­யா­கவே இருக்­கி­றது என தெரி­விக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் முஸ்­லிம்­களின் கோரிக்­கையை எதிர்க்கக் கூடி­யவர் அல்ல என தொடர்­கிறார்.

“தமி­ழர்­க­ளுக்குத் தனி­யான பிர­தேச செய­லகம் தேவை­யெனின் அந்த கோரிக்­கைக்கு நாம் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்க தயா­ரா­கவே இருக்­கிறோம். தோப்பூர் பிர­தேச செய­லக விட­யத்தில் திரை­ம­றைவில் ஒரு குழு செயற்­பட்டு அதனை தடுப்­ப­தாக நான் உணர்­கிறேன். இது இன்று நேற்­றுள்ள கோரிக்­கை­யல்ல, நீண்­ட­காலக் கோரிக்கை. இது தொடர்­பான ஆவ­ணங்கள் கச்­சே­ரி­யி­லி­ருந்து கள­வா­டப்­பட்­டி­ருக்­கின்­றன அல்­லது மறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
ஆனாலும் எங்­க­ளிடம் ஆவ­ணங்­களின் மூலப்­பி­ர­திகள் இருக்­கின்­றன. இவற்­றைக்­கொண்டு நாம் எமது முயற்­சி­களை முன்­னெ­டுத்துச் செல்­கிறோம்” என்றார்.

இதே­வேளை, தேர்­தல்­கா­லங்­களில் இந்தக் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும். சிலர் இதனை தமது சுய­நல அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்குள் உட்­ப­டுத்தி பூதா­க­ர­மாக்கி பெரி­து­ப­டுத்­து­கின்­றனர். அவ்­வாறு செய்­வ­தா­னது மக்களின் கோரிக்கையில் மண்ணைப்போடும் செயலாகவே கருதுவதாக இம்ரான் எம்.பி. குற்றம் சாட்டினார். தமிழ் – முஸ்லிம் உறவு பாலத்திற்கான சிறந்த தமிழ் தலைவர் என முஸ்லிம்களினால் வர்ணிக்கப்படும் இரா. சம்பந்தனின் இனவாத அடிப்படையிலான இந்த கடிதத்தினை அடுத்து பல்வேறு நியாயங்களை உள்ளடக்கிய தோப்பூர் பிரதேச செயலக கோரிக்கை தற்போது கிடப்பில் உள்ளது.

கல்முனையில் தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச செயலகம் கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தோப்பூர் முஸ்லிம்களின் பிரதேச செயலக கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று தோப்பூர் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் வாழும் இரு இனத்தவர்களும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு கலதுரையாடல் களின் ஊடாக இதற்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்.இல்லாத பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் திணிக்கப்பட்ட தீர்வுகளை இப்பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை எதிர்காத்தில் உருவாகலாம். இதனால் ஆளும் அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஒரு மேசையிலிருந்து இந்த தோப்பூர் மக்களின் பிரச்சினைக்கு உடனடியாகவும் அவசரமாகவும் தீர்வு காண முன்வர வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.