வைத்தியர் ஷாபி விவகாரம்: முறைப்பாடளித்த தாய்மார்களுக்கு மருத்துவமனைகளில் பரிசோதனை

இதுவரை 758 வாக்கு மூலங்களை பதிவு செய்தது சி.ஐ.டி

0 709

வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை மற்றும் சட்­ட­வி­ரோத கருத்­தடை விவ­கார குற்­றச்­சாட்­டுக்­களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும் நிலையில் நேற்­று­வரை 758 பேரின் வாக்­கு­மூ­லங்­களை விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சமூக கொள்ளை குறித்த விசா­ரணை அறை அதி­கா­ரிகள் பதிவு செய்­துள்­ளனர். 

கருத்­தடை விவ­கா­ரத்தால் தாம் பாதிக்­கப்பட்­ட­தாக முறைப்­பா­ட­ளித்­துள்ள பெண்­களில் 601 பேர், மகப்­பேற்று மற்றும் பிர­சவ விஷேட வைத்­திய நிபு­ணர்கள் 7 பேர் உள்­ளிட்ட 758 பேரின் வாக்­கு­மூ­லங்­களே இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கூறினார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று அவர் நடாத்­திய சிறப்பு செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் கூறினார்.

இந்­நி­லையில் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை அறை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் இந்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான பல்­வேறு நீதி­மன்ற உத்­த­ர­வு­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

அதன்­படி சட்ட விரோத கருத்­தடை தொடர்பில் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்ள பெண்­களை கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரியின் கீழ்,  பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபு­ணர்கள் இருவர் அடங்­கிய சிறப்­புக்­குழு முன்­னி­லையில் மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்த நீதி­மன்றின் அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.

குறித்த மருத்­துவ  பரி­சோ­த­னைகள் கொழும்பு காசல் வைத்­தி­ய­சாலை மற்றும் டி சொய்ஸா பெண்கள் வைத்­தி­ய­சா­லை­களில் முன்­னெ­டுப்­ப­தற்­கான அனு­ம­தியை சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்­டுள்­ளது. அதன்­படி சி.ஐ.டி. மன்றில்  குரு­நாகல் நீதி­வா­னிடம் முன்­வைத்த கோரிக்­கைக்கு அமைய,  குறித்த இரு வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கும் குறிப்­பிட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்கத் தேவை­யான உப­க­ர­ணங்கள் உள்­ளிட்ட வச­தி­களில் குறை­பா­டுகள் இருக்­கு­மாயின் அதனை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்­து­கொ­டுக்­கு­மாறு சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ருக்கு  உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் செய்­யப்­பட்ட சிசே­ரியன் சத்­திர சிகிச்­சைகள், அவற்றின் பிர­தி­கூ­லங்கள் தொடர்பில் பதி­வான சத்­திர சிகிச்­சைகள் உள்­ளிட்ட விட­யங்­களை மைய­ப்ப­டுத்தி விரி­வான அறிக்­கையை சி.ஐ.டி.க்கு கொடுக்­கவும் சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ருக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதே­வேளை, நேற்று வரை வைத்­தியர் சாபி விவ­கா­ரத்தில் சி.ஐ.டி. பதிவு செய்­துள்ள 758  வாக்கு மூலங்­களின் விப­ரங்­களும் விடி­வெள்ளிக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. அதில் சட்­ட­வி­ரோத கருத்­தடை விவ­காரம் தொடர்பில் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முறைப்­பா­டு­களை முன்­வைத்த தாய்­மார்­களில் 601 பேரி­டமும், பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபு­ணர்கள் 7 பேரி­டமும், ஷாபி வைத்­தி­யரின் தரத்­துக்கு சம­னான தரத்தை உடைய குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவு வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும், குழந்­தைகள் தொடர்­பி­லான  6 வைத்­தி­யர்­க­ளி­டமும், சிசே­ரியன் வைத்­தி­யர்­க­ளுக்கு உதவி வைத்­தி­யர்­க­ளாக கட­மை­யாற்றும் 11 வைத்­தி­யர்­க­ளி­டமும், உணர்­வி­ழக்கச் செய்யும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் 10 வைத்­தி­யர்­க­ளி­டமும்  பதிவு செய்த வாக்­கு­மூ­லங்கள் உள்­ள­டங்­கு­கின்­றன.

இத­னை­விட, சிசே­ரியன் சிகிச்­சை­களின் போது குறைந்­தது இரு தாதி­யர்கள் அந் நட­வ­டிக்­கையில் பங்­கேற்கும் நிலையில், அவ்­வாறு அந்த சிகிச்­சை­களில் பங்­கேற்ற  பிர­தான தாதி ஒருவர் உள்­ளிட்ட 70 தாதி­யர்­க­ளி­டமும், 18 உத­வி­யா­ளர்­க­ளி­டமும் பலோப்­பியன் உறுப்­புகள் தொடர்­பி­லான வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட  குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ளரின் வாக்­கு­மூ­லத்­தையும் சி.ஐ.டி. பதிவு செய்­துள்­ளது.

குரு­நாகல் வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ளரின் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்ய முன்னர், சி.ஐ.டி. அவருக்கு எதிராக விஷேட நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றிருந்தது. அதில் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தொகுப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிவானுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.