ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படை பண்பு சகவாழ்வு

0 1,686
  • அலி றிசாப்

உடத்தலவின்னை

இப்போதுதான் நக­ரங்கள் மீண்டும் வழ­மைக்குத் திரும்பிக் கொண்­டி­ருக்­கின்­றன. சிங்­க­ள-­–தமிழ் புத்­தாண்­டுக்குப் பூட்­டிய கடைகள் மீண்டும் திறக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வியா­பா­ரங்கள் இப்­போ­துதான் விழிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. கடந்த ஒரு மாதத்­துக்குள் எது­வெல்லாம் நடக்க நாம் விரும்ப மாட்­டோமோ அவைகள் எல்லாம் நடந்­தேறி விட்­டன. மீண்டும் வழ­மைக்குத் திரும்பி  முன்­பை­விட வேக­மா­கவும் புத்தி சாதுர்­யத்­தோடும் செயற்­பட வேண்­டிய ஒரு சமூ­க­மாக நாம் மாறி­விட்டோம் அல்­லது அவ்­வாறு செயற்­பட கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளோம். இப்­போது சக­வாழ்வு பற்றி நிறையப் பேசப்­ப­டு­கின்­றது. அதற்­காக எத்­த­னையோ முன்­னெ­டுப்­புக்கள் மேற்­கொள்­கின்ற போதும் அவை­களில் பெரும்­பா­லா­ன­வைகள் போலித்­த­ன­மாக இருக்­கின்­றது. காரணம் சக­வாழ்வு என்­பது வெறும் சீசன் சுலோ­க­மல்ல. அது பரம்­ப­ரை­யாக உணர்த்­தப்­பட வேண்­டிய மற்றும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய விடயம். நம் முன்­னோர்கள் அந்­நிய மதச் சகோ­த­ரர்­க­ளுடன் இருந்த அந்­நி­யோன்­ய­மான உறவு தற்­போது முக­நூ­லு­டனும் வாட்ஸ்அப் உடனும் சுருங்­கி­விட்­டது. நாம் சக­வாழ்­வுக்­காக பெரி­தாக ஏதும் செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சிறு சிறு விட­ய­ங்கள் கூட நிலை­யான சக­வாழ்­வுக்கு உறு­தி­யான அத்­தி­வா­ர­மாக அமை­யும். அவ்­வாறு செயற்­பட வேண்­டிய சில விட­யங்­களை உங்கள் முன் கோடிட்டுக் காட்ட விரும்­பு­கின்றேன்.

 

மாற்றம் பெற வேண்­டிய

மனப்­பாங்கு:

இஸ்­லா­மிய சமூகம் அல்­லாஹ்­வினால் பொருந்திக் கொள்­ளப்­பட்ட ஒரே சமூகம். இவ்­வு­லகம் அவர்­க­ளா­லேயே நல்­வ­ழிப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். நன்மை பெறல் வேண்டும். மற்றும் இவ்­வு­லகம் செழிப்­பாக்­கப்­படல் வேண்டும். ஒரு முஸ்லிம் இவ்­வு­லகம், மறுமை இரண்­டையும் அழ­காக்­கு­வ­தற்­கா­கவே படைக்­கப்­பட்­டுள்ளான். மாறாக இவ்­வு­லகை வெறுத்து அதைச் செழிப்­பாக்­காமல் மறு­மையை மட்டும் நோக்­காகக் கொண்டு செயற்­ப­டு­பவன் உண்மை முஸ்­லி­மாக  இருக்­க­மாட்டான். அவ்­வா­றா­ன­வர்கள் வெளித்­தோற்­றத்தில் தக்­வா­தா­ரி­க­ளாகத் தோற்­ற­ம­ளித்­தாலும் அல்­லாஹ்­வி­டத்தில் எவ்­வித பெறு­ம­தி­யு­மற்­ற­வர்கள். மறு­மையை மட்டும் நோக்­காகக் கொண்டு இவ்­வு­லகில் செயற்­படல் வேண்டும் என்று மூளைச் சலவை செய்­யப்­பட்­ட­வர்­களால் ஏப்ரல் மாதத்தில் ஏற்­ப­டுத்­திய பேர­ழி­வினால் தற்­போது இலங்கை முஸ்லிம் சமூகம் தற்­போது இன்­னல்­களில் மாட்டிக் கொண்­டுள்­ளது. தானும் வாழ்ந்து அடுத்­த­வர்­க­ளையும் வாழ­வைக்கப் பழ­குங்கள். இவ்­வு­லகைச் செழிப்­பாக்க என்­ன­வெல்லாம் செய்ய முடி­யுமோ அதைச் செய்வோம். அந்­நிய மதச் சகோ­த­ரர்கள் எதுவும் அறி­யா­த­வர்கள். அவர்­க­ளுக்கு எங்­களைப் பற்றி புரி­ய­வைக்க வேண்­டி­யது நம் கடமை. எமது அழ­கான பண்­பா­டு­களின் ஊடாக எமது மார்க்­கத்தைப் புரிய வையுங்கள். எமது மார்க்­கத்தின் அழகைப் புரிந்­து­கொண்டால் அவர்­களே எமக்கு ஒத்­தா­சை­யாக மாறு­வார்கள். வெளி­நாட்­டுக்கு தஃவா பணி செய்ய செல்ல செல­வ­ழிக்கும் கால நேரங்­களை மற்றும் பணத்தை புதிய எமது நாட்டின் அந்­நிய மதச் சகோ­த­ரர்­க­ளுக்கு இஸ்­லாத்தைப் புரிய வைக்க முயற்­சி­களை மேற்­கொள்­ளவும் அதற்­காக புதிய தஃவா நுட்­பங்­களின் அபி­வி­ருத்­திக்­கா­கவும் பயன் படுத்­து­வதே காலத்தின் அவ­சி­ய­மாகும்.

 

கண்­ணி­ய­மான சக­வாழ்வு

தற்­போது அரங்­கேறிக் கொண்­டி­ருக்கும் சக­வாழ்வு நாடக அரங்­கேற்­றங்­களைப் பார்க்­கும்­போது அதில் ஒரு போலித்­தனம் இருப்­பதைத் தெளி­வாகக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அந்­நிய மதச் சகோ­தரர்­களே இவர்­களின் போலித்­த­ன­மான செயற்­பாட்டைப் பார்த்து விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கடந்த வாரம் முக­நூலில் சிங்­கள சகோதர் ஒருவர் இவ்­வாறு எழுதி இருந்தார் “நாங்கள் உங்­களை மன்­னித்து விட்டோம். நீங்கள் எங்கள் மதக் கட­மை­களைச் செய்­யப்போய் பாவி­க­ளாகி விடா­தீர்கள்” எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். நாங்கள் போலி­யாகச் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவர்கள் தெளி­வாகப் புரிந்து கொண்­டார்கள். நாம் முஸ்­லிம்கள் என்று காட்­டிக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக தொப்­பி­களை அணிந்து கொண்டு வெசாக் கொடிகள் கட்­டு­வதை கடந்த காலங்­களில் காணக் கூடி­ய­தாக இருந்­தது. இந்த போலித்­த­ன­மான செயற்­பா­டுகள் எமது சமூ­கத்­துக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. மாறாக நாம் செய்ய வேண்­டிய போலித்­த­ன­மற்ற  சிறு சிறு விட­யங்­க­ளை மேற்­கொள்­ளலாம்.

அவர்­க­ளுக்கும் சலாம் சொல்­லுங்கள்- “அறிந்­த­வர்­க­ளுக்கும் அறி­யா­த­வர்­க­ளுக்கும் சலாம் சொல்­லு­வதே எமது கடமை” அதையும் புதி­ய­வர்­க­ளுக்குச் சொல்ல முற்­ப­டா­தீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்கள், பாட­சா­லை­க­ளி­லுள்ள உங்கள் அந்­நிய மத சகோ­தர நண்­பர்கள் மத்­தி­யி­லி­ருந்து   ஆரம்­பி­யுங்கள். அந்­நிய மதச் சகோ­த­ரர்­க­ளுக்கு கடும்­போக்­கு­டைய ஒரு­சில அறி­ஞர்கள் சலாம் சொல்­வது கூடாது என்­றி­ருந்­தாலும் நவீன இமாம்­களின் கருத்­துப்­படி குறிப்­பாக இமாம் அஸ்ரப் அலி அல்-­த­ஹ­னவி அவர்­களின் கருத்­துப்­படி அந்­நிய மதச் சகோ­த­ரர்­க­ளுக்கும் சலாம் சொல்­லலாம் என்று குறிப்­பிட்­டுள்ளார். நாம் சொல்லும் சலாம் அல்­லாஹ்வின் அருளால் அவர்­களின் மனதில் ஒரு சாந்­தியை ஏற்­ப­டுத்த போது­மா­ன­தாக இருக்கும்.

நோன்பு காலத்தில் உங்கள் அயல் வீட்­டார்கள் அந்­நிய மதத்­த­வர்­க­ளாக இருந்தால் அவர்­க­ளுக்கும் ஒரு கோப்பைக் கஞ்­சியைக் கொடுங்கள். பெருநாள் சாப்­பாட்­டுக்கு உங்கள் அந்­நிய மத நண்­பர்­க­ளையும் அயல் வீட்­டார்­க­ளையும் அழைத்துக் கொள்­ளுங்கள். சாப்­பிடும் போது ஒன்­றாக இருந்து சாப்­பி­டுங்கள் அல்­லது சமைக்கும் பெருநாள் சாப்­பாட்டில் அவர்­க­ளுக்கும் ஒரு பங்கை ஒதுக்கி வையுங்கள். 20 வரு­டங்­க­ளுக்கு முன் நான் இவ்­வா­றான உறவை நேர­டி­யாக அனு­ப­வித்­தி­ருக்­கின்றேன். ஆனால் இப்­போது தலை­கீ­ழாக மாறி­விட்­டது. சில வீடு­களில் இப்­ப­டியும் கீழ்த்­த­ர­மான விட­யங்கள் நடக்­கின்­றன. அந்­நிய மதத்­தவர் ஒருவர் எமது வீட்டில் பாவிக்கும் பாத்­தி­ர­மொன்றில் தண்ணீர் குடித்­து­விட்டால் அல்­லது சாப்­பிட்­டு­விட்டால் அப்­பாத்­தி­ரத்தை திரும்ப பாவிக்க மாட்­டார்கள். அல்­லது 07 முறை கழு­வு­வார்கள். இது மிகவும் அசிங்­க­மான பண்பு. மனி­தனை மனி­த­னாக மதிக்கப் பழ­குவோம். அல்­லாஹ்வின் எப்­ப­டைப்­புக்­க­ளையும் கீழ்த்­த­ர­மாக  எண்­ணு­வதை அல்லாஹ் ஒரு­போதும் விரும்­ப­மாட்டான்.

அந்­நிய மதச் சகோ­த­ரர்கள் எல்­லோரும் எம்­மீது காழ்ப்­பு­ணர்ச்சி கொண்­ட­வர்கள் அல்ல. 90சத­வீ­த­மான சகோ­த­ரர்கள் எம்­மீது நல்­லெண்­ணத்­தையே வைத்­துள்­ளார்கள். அவர்கள் நடாத்தும் ஹோட்­டல்­க­ளுக்கும் கடை­க­ளுக்கும் செல்­லுங்கள். எப்­போதும் போலவே போலித்­தனம் இல்­லாமல் அவர்­க­ளுடன் நடந்து கொள்­ளுங்கள்.

பய­ணங்­களின் போது இருக்­கையை கொடுக்க வேண்­டிய அந்­நிய மத சகோ­த­ரிகள் மற்றும் தாய்­மார்கள் உங்கள் அருகில் வரு­வார்­க­ளாயின் எவ்­வித தயக்­க­மு­மின்றி உங்கள் இருக்­கையைக் கொடுப்­பது இஸ்­லாத்தின் அழகைக் காட்டும். உங்கள் பிள்­ளைகள் மத்­தியில் மற்­றைய மதத்­த­வர்கள் மற்றும் அவர்­களின் மத அனுஷ்­டா­னங்­களை மதிக்கும் பண்பை வள­ருங்கள். நாட்டில் தற்­போ­தைக்கு நடக்கும் விட­யங்­களைப் பற்றி பிள்­ளை­களின் முன்னால் கதைக்­கா­தீர்கள். குறிப்­பாக சிறி­ய­வர்கள் முன்­பாக கதைப்­பதை தவிர்ந்து கொள்­ளுதல் வேண்டும். அவ்­வாறு கதைப்­பது அவர்­களின் மனதில் வன்­மத்தை ஏற்­ப­டுத்த வழி­வ­குக்கும்.

தனது ஊரில் உள்ள பன்­ச­லை­யுடன் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொண்டு அத­னூடாகப் பொது­வான நிகழ்ச்­சி­களை ஒழுங்கு செய்­வ­துடன் அங்கு தர்மப் பாட­சா­லை­க­ளுக்கு வரும் சிறு பிள்­ளை­க­ளுக்கு இந்­நாட்டின் முஸ்­லிம்­களைப் பற்­றிய ஒரு நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்த அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் முயற்­சி­களை மேற்­கொள்­ளலாம். சிங்­கள வர­லாற்றுப் பாட­நூல்­களில் வர­லாற்றுச் சான்­று­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­துவம் 1000 வரு­டங்களுக்கு மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்ட முஸ்­லிம்­களைப் பற்றி அறிந்து கொள்ளும் விட­யங்கள் அவர்­களின் பாட­வி­தா­னத்தில் இல்லை என்­பது கவ­னத்திற் கொள்ள வேண்­டிய விட­ய­மாக இருக்­கின்­றது (அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­களின் மீதான தாக்­கு­தல்­களில் அதிகம் ஈடு­பட்­ட­வர்கள் 17 வய­துக்கும் 20 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது)

வியா­பாரக் கொடுக்கல் வாங்­கல்­களில் நம்­பிக்­கை­யுடன் நடந்து கொள்­வதே ஒரு முஸ்­லி­மு­டைய பண்­பாக இருக்கும். இவ்­வி­ட­யத்தில் எம்­ம­வர்­களில் ஒரு­சிலர் மிகவும் அசி­ரத்­தை­யுடன் செயற்­ப­டு­வது முழு முஸ்லிம் சமூ­கத்­துக்கும் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உதா­ர­ணத்­துக்கு ஒரு நிகழ்வைக் குறிப்­பிட விரும்­பு­கின்றேன். “கடந்த வெசாக் தினத்­தன்று பன்­ச­லை­யொன்றில் பிக்கு ஒருவர் அவ்­வா­றா­ன­தொரு சம்­ப­வ­மொன்றை நினைவு படுத்திப் பேசி­யுள்ளார். அதா­வது கடு­கஸ்­தோட்­டையில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான பேக்­கரி ஒன்று இருந்­த­தா­கவும் குறித்த பேக்­க­ரிக்கு சிங்­கள இன வாடிக்­கை­யாளர் ஒருவர் சென்­ற­போது அவ­ருக்குத் தேவை­யான கேக்கை காட்­சிக்­காக வைக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து எடுத்துக் கொடுத்­த­தா­கவும் அதே­வேளை, ஒரு முஸ்லிம் வாடிக்­கை­யாளர் வந்­த­போது அதே கேக்கை உள்­ளி­ருந்து எடுத்துக் கொடுத்­த­தா­கவும் என்ற கதையை அல்­லது சம்­ப­வத்தை நாம் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு கேள்­விப்­பட்­டி­ருப்போம். அச்­சம்­ப­வத்தின் பின்­புலம் என்ன என்­பது எமக்குத் தெரி­யாது. ஆனால் அச்­சம்­ப­வத்தை அவர்கள் இன்னும் மறக்­க­வில்லை என்­பது கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

மேலும் என் நேரடி அனு­பவம் ஒன்­றையும் சொல்­கின்றேன். ஒரு சமூ­க­வியல் ஆய்­வொன்­றுக்­காக காலி­யி­லுள்ள பன்­ச­லை­யொன்­றுகுச் சென்­ற­போது அங்கு கற்றுக் கொண்­டி­ருக்கும் சிறிய வய­து­டைய பிக்­கு­க­ளையும் சந்­திக்கும் வாய்ப்பு கிட்­டி­யது. இலங்கை முஸ்­லிம்­களைப் பற்­றிய அவர்­களின் மனோ­பாவம் மகிழ்ச்­சி­ய­டையும் வித­மாகக் காணப்­ப­ட­வில்லை. இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­களின் மீதான காழ்ப்­பு­ணர்ச்சி ஏதோ ஒரு வகையில் அவர்­க­ளுக்கு ஊட்­டப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளிடம் இஸ்­லாத்தைப் பற்­றிய போதிய தெளி­வின்மை காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடிந்­தது. அப்­பன்­ச­லையில் பணி­யாற்றும் தலைமைப் பிக்­குவின் கருத்­துப்­படி தற்­போது சிங்­கள சமூ­கத்­துக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்­கா­கவும் இடை­யி­லான உறவு விரி­ச­ல­டைந்து விட்­டது. முன்பு போல் முஸ்லிம் சமூகம் எம்­மோடு சேர்ந்து பொது விட­யங்­களில் ஈடு­ப­டு­வ­தில்லை எனக் குற்றம் சாட்­டினார். இதன் மூலம் புலப்­ப­டு­வது என்­ன­வெனில் சக­வாழ்வு விட­யத்தில் எமது சமூகம் ஆரோக்­கி­ய­மாக இயங்­க­வில்லை என சாட்சி பகர்கின்றது. எமது சமூகத் தலைமைகள் ஆரோக்கியமான சகவாழ்வு விடயத்தில் போதுமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாவிடின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இலங்கையில் இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என்பதை எதிர்வு கூறமுடியும்.

சகவாழ்வு என்பது எமது மத உரிமைகளையும் அடையாளங்களையும் விட்டுக் கொடுப்பதல்ல. அப்படி விட்டுக் கொடுப்பது ஆரோக்கியமானதாக இருக்கவும் மாட்டாது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு அழகாக சுன்னத்தான முறையில் தாடி வைத்திருந்தவர்கள் தற்போது முகத்துடன் ஒட்டிய மாதிரி இருக்கின்றது. முகத்தை மறைப்பது மட்டுமே சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர அபாயக்கள் மற்றும் ஹிஜாப் அணிவது தடை செய்யப்படவில்லை. ஆனால் எம்முடைய சில பெண்கள் உடனடியாக சாரிக்கு மாறியது தன் அடையாளங்களையே மாற்றிக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.

ஆகவே, புரிதலுடன் கூடிய சகவாழ்வே ஆரோக்கியமானதாக இருக்கும். அந்நிய சமூகத்தவர்களுக்கு எமது மத அடையாளங்களின் முக்கியத்துவம் புரியவில்லையாயின் அவர்களுக்குப் புரியவைப்பது எமது கடமை. அதற்காக அழகான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது நம்மவர்களின் கடமை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.