நான்கு வருட பூர்த்தியை கொண்டாட முடியா நிலை

தேர்தலுக்குச் செல்வதே சிறந்தது என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

0 519

ஜனாதிபதியின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரது பதவியேற்பின் நான்கு வருட பூர்த்தி நிகழ்வை கொண்டாட முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம். அத்துடன் ஜனாதிபதி வேறு கட்சியில் இருப்பதால் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகவே செயற்படுவார். அதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலொன்றுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி பதவியேற்று இன்று (நேற்று) 4வருடங்கள் ஆகின்றன. இதனை கொண்டாட முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம். ஜனாதிபதி அதிகாரத்துக்கு வரும்போது இருந்த கொள்கையில் இருந்து இன்று மாறி இருப்பதனாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இன்று முதல் எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலொன்றுக்குச் செல்லும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

மேலும் எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை எனத் தெரிவித்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசியல் சதித்திட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் 89 பேரே இருந்தனர். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளாமல்  ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை மீண்டும் நிரூபித்தாலும் இந்த ஜனாதிபதியுடனே அரசாங்கத்தை கொண்டுசெல்லவேண்டி இருக்கின்றது. ஜனாதிபதி தற்போது கட்சி மாறி இருப்பதால் அவர் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகவே செயற்படுவார். அதனால் தற்போது ஜனாதிபதியே பிரச்சினையாக இருக்கின்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி தேர்தலுக்கே செல்லவேண்டும். அதற்கான அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.