கிழக்கு மாகாணத்தில் 13ஐ அமுல்படுத்துவேன்

இன்றேல்  நீதிமன்றம் செல்வேன் என்கிறார் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

0 1,012

கிழக்கு மாகாணத்தில் 13 ஆவது சரத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் நீதி மன்றம் செல்லப்போவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆளுநருக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  பாராளுமன்ற பிரதிநிதியாக கடமையாற்றிய நிலையிலேயே அந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுள்ளேன். இதனை நான் கேட்டுப் பெற்றிருப்பது கிழக்கு மாகாண மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்காக ஜனாதிபதிக்கு கிழக்கு மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாகாண அரசினால் தீர்த்து வைக்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொடுக்கவேண்டிய பொறுப்பு மாகாண ஆளுநருக்கு இருக்கின்றது. மாகாண சபை இருந்தால் நான் இந்த பொறுப்பினை ஏற்றிருக்கமாட்டேன். 13 ஆவது சரத்து முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசு இடைக்கிடையே கொண்டுவந்த சுற்று நிருபங்கள் வர்த்தமானிகளால் 13 ஆவது சரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் தடை செய்துள்ளனர்.

நான் மாகாண அமைச்சராக இருக்கின்றபோது 13 ஆவது சரத்து அமுல்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தினோம். மத்திய அரசில் அமைச்சராக இருந்த போதும் 13 ஆவது சரத்தினை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலும் 13 ஆவது சரத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தலைமையில் 13 ஆவது சரத்தினை அமுல்படுத்துவது என  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நான் ஒரு வருட காலத்திற்கு மாத்திரமே கிழக்கு ஆளுநராக பதவி வகிப்பேன். மீண்டும் 2020 ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசில் இருந்து செயற்படுவேன். இந்த ஒரு வருட காலத்தில் 13 ஆவது சரத்தினை படிப்படியாக நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளேன். பிரச்சினைகள் வருகின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு  நாம் முயற்சிப்போம். இதனைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.  தேவையேற்படின் ஆளுநர் என்ற அடிப்படையில் நீதிமன்றம் சென்றேனும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பேன்.

1988 இல் நான் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்று முதலாவதாக  மாகாண சபை உறுப்பினராக தெரிவானேன். மீண்டும் 2008 இல் மாகாண சபையில் அமைச்சராக  செயற்பட்டு இருக்கிறேன்.  இக்காலப்பகுதியில் ஆளுநரின் செயற்பாடுகள் பற்றி  பல முறைப்பாடுகள் செய்திருக்கிறேன். ஆளுநரின் அதிகாரங்களினால்  நிருவாகத்தை செய்வதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். 89 தொடக்கம் இற்றைவரை நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அனைவரும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இராணுவ கமாண்டர்கள், உயர் பதவிகளை வகித்தவர்கள். அவர்களின் பாதுகாப்பு பிரச்சினை, மொழிப்பிரச்சினை,  எமது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத நிலையில் எமது பிரச்சினைகள் அவர்களால் தீர்த்துத்தரப்படவில்லை.

ஒரு முஸ்லிம் இந்த பதவிக்கு வந்துள்ளதால் தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கக்கூடும்.  இறைவனுக்கு பயந்தவனாக எனது செயற்பாடுகள் அமையப்பெற்றிருக்கும். மத்திய அரசினதும் வெளிநாட்டு  நிதி வளங்கள் மூலமும்  கிழக்கினை அபிவிருத்தி செய்ய இரவு பகலாக செயற்படுவேன். எந்தவொரு சமூகமும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

400 தொண்டர் ஆசிரியர்கள்  15 வருடங்களாக அலைந்து திரிகின்றனர். 2008 இல் நாம் அமைச்சுக்களை பெற்றபோது சிலருக்கு நியமனங்கள் கொடுத்தோம். அதில் விடுபட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். பாடசாலை, வைத்தியசாலை போன்றவற்றில் ஆளணி பற்றாக்குறை இருக்கின்றது . இந்த சூழ்நிலையில் மாகாண மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூடிய  ஒருவர்தான் இவற்றுக்கு தீர்வுகாண முடியும். கிழக்கு மக்களின் காணி, விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு   தீர்வுகான முடியாது. மக்களின் காலடிக்குச் செல்கின்றபோதுதான் கிழக்கு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

அதிக வளங்களையும், அதிக இன ரீதியான முரண்பாடுகளையும் கொண்ட மாகாணம் கிழக்கு மாகாணம். சந்தேகப் பார்வையை வைத்துக்கொண்டு  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.  அவைகள் பேசித் தீர்க்கப்படல் வேண்டும். யுத்தத்தில் பல்வேறு வேதனைகளையும் சோதனைகளையும்  உணர்ந்தவன்  என்ற அடிப்படையிலும், கிழக்கு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் என்ற அடிப்படையிலும் ஆளுநர் மாளிகையில்  இருப்பதை விட்டுவிட்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து கிழக்கில் உள்ள 45 பிரதேச செயலகங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு பிரதேச செயலகங்களில் மூன்றரை மணிநேரம் நானும் உத்தியோகத்தர்களும் தங்கி பிரதேச செயலகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செயலகத்தை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

விமர்சனம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இன ரீதியான முரண்பாடுகளைக் களைந்து கிழக்கு மக்களின் வாழ்வில் ஒற்றுமையை ஏற்படுத்தி கிழக்கு மாகாணத்தின் பெறுமதிமிக்க வளங்களை பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு நிருவாக கட்டமைப்பை உருவாக்க என்னோடு இணைந்து செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த,  சுபீட்சமான,  அமைதியான மாகாணமாக உருவாக்க அனைவரும் முன்வாருங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.