கொவிட் ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோத்தா!

‘அரகலய’ பற்றிய நூலில் கூறுவது என்ன?

0 153

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்த கோத்­தா­பய ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல தமிழ் சமூ­கமும் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்­ளா­கின. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்கும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே அவர் கவனம் செலுத்­தினார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் எமது சமூகம் பீதி­யு­டனே காலத்தை கடத்­தி­யது.

ஈற்றில் அவர் தனது சொந்த சமூ­கத்தின் இளை­ஞர்­களால் வழி­ந­டாத்­தப்­பட்ட ‘அர­க­லய’ போராட்­டத்தின் விளை­வாகத் துரத்­தி­ய­டிக்­கப்­பட்டார்.

நாடு தழு­விய ரீதியில் எழுச்­சி­ய­டைந்த மக்கள் போராட்­டத்தின் விளை­வாக நாட்­டை­விட்டுத் தப்­பி­யோடி பதவி விலக வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ ‘ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து என்னை வெளி­யேற்­று­வ­தற்­கான சதி’ எனும் நூலை கடந்த வாரம் வெளி­யிட்டார். ஆங்­கில மொழி­யிலும், சிங்­கள மொழி­யிலும் இந்நுால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நூலில் அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் மக்கள் அவரை வெளி­யேற்­று­வ­தற்கு மேற்­கொண்ட அர­க­லய போராட்­டத்தின் பின்­னணி, போராட்­டக்­கா­ரர்­களின் எழுச்­சியை அடுத்து தான் நாட்டை விட்டும் வெளி­யே­றிய விதம், அவ்­வி­வ­கா­ரத்தில் நில­விய வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள், கொரோனா தொற்றில் மர­ண­மான முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யாமல் எரிப்­ப­தற்கு மேற்­கொண்ட தீர்­மானம், வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் போன்ற பல்­வேறு விட­யங்­க­ளையும் அவ­ரது பார்­வையின் அடிப்­ப­டையில் நூலில் உள்­வாங்­கி­யி­ருந்தார்.

நூலில் கோத்­த­பாய எழு­தி­யி­ருப்­பது என்ன?
“அர­க­லய போராட்­டத்­திற்கு வருகை தந்­த­வர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனை­வரும் ஏற்­க­னவே என்னை எதிர்த்­த­வர்கள் என்­பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்­போ­ராட்­டத்தில் சிறு­பான்­மை­யி­னரின் வகி­பாகம் பெரு­ம­ள­வுக்கு இருந்­தது. ஏனெனில் போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் தமி­ழர்­களும் பொது பல சேனாவின் எழுச்­சிக்குப் பின்னர் முஸ்­லிம்­களும் என்னை எதிர்த்­தார்கள். முஸ்­லிம்கள் என்னை விரோ­தி­யா­கவே பார்த்­தார்கள். எனவே நான் பத­வியில் தொடர்ந்தால் சிங்­கள பெளத்­தர்கள் மேலும் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என்ற அச்­சத்தின் கார­ண­மாக இப்­போ­ராட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு அவர்கள் தூண்­டப்­பட்­டி­ருக்கக் கூடும்”­என முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தான் எழு­திய நூலில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

“2012ஆம் ஆண்டு பொது­ப­ல­சேனா அமைப்பு உரு­வா­னது. அந்த அமைப்­பு­ட­னான தொடர்பின் கார­ண­மாக நான் முஸ்­லிம்­களின் எதி­ரி­யாக பார்க்­கப்­பட்டேன். 2019 ஆம் ஆண்டு நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டேன். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மற்றும் முஸ்­லிம்­களின் வாக்­குகள் என்னை எதிர்த்துப் போட்­டி­யிட்­ட­வ­ருக்கே வழங்­கப்­பட்­டன. இதனை நான் ருவன் வெலி­சாய புனித தலத்தில் ஆற்­றிய உரையில் தெரி­வித்­தி­ருந்தேன். சிங்­கள பெளத்த மக்­களின் வாக்­கு­க­ளி­னா­லேயே நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டேன் என்­ப­த­னையும் கூறினேன்.

ஜனாஸா எரிப்பு
கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­ப­டக்­கூ­டாது தகனம் செய்­யப்­பட வேண்டும் என்று எனது ஆட்­சிக்­கா­லத்தில் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்­லிம்கள் அவர்­க­ளது மதத்­தின்­படி உடல்கள் தகனம் செய்­யப்­படக் கூடாது. அடக்கம் செய்­யப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தனர்.

நான் முஸ்­லிம்­களின் கொவிட் தொற்று ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய வேண்டும் என்ற எண்­ணத்தில் தான் இருந்தேன். ஆனால் எமது சுகா­தார பிரிவின் நிபு­ணர்கள் கொவிட் தொற்று ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் கொவிட் வைரஸ், நிலத்­தடி நீருக்குள் கலக்கும் என்று கூறி ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு உத்­த­ர­விட்­டார்கள்.

ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் கொன்­கிரீட் பெட்­டி­யொன்று அமைத்து அதற்குள் ஜனாஸா அடக்க முடியும் என்ற யோச­னை­யையும் நான் நிபுணர் குழு­வுக்கு முன்­வைத்­தி­ருந்தேன். ஆனால் சுகா­தார பிரிவு அதனை அனு­ம­திக்­க­வில்லை. குறிப்­பாக நிபுணர் குழுவின் பேரா­சி­ரியர் மெத்­திகா விதா­னகே தான் இந்த நிலை­மை­க­ளுக்குக் காரணம் எனவும் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தனது நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ நாட்டில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பிலும் தனது நூலில் எழு­தி­யுள்ளார். ‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பிலும் என்­மீது பல தரப்­பு­க­ளினால் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

தனக்கும் கர்­தி­னா­லுக்கும் இடையில் சுமு­க­மான தொடர்­புகள் இருந்­தன. கர்­தி­னா­லுக்கு என்­மீது விசு­வாசம் இருந்­தது என்று குறிப்­பிட்­டுள்ள கோத்­தா­பய தனது நூலில் அது தொடர்­பான சாட்­சி­யங்­க­ளையும் முன்­வைத்­துள்ளார்.
கர்­தினால் உட­னான எனது தொடர்பு மற்றும் அவர் என்­மீது வைத்­துள்ள உற­வுகள் – சிலர் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் உண்­மையை திரித்து வழங்­கிய சாட்­சி­யங்­களின் கார­ண­மா­கவே சீர்­கு­லைந்­தன.

இதன் கார­ண­மாக விசா­ரணை நட­வ­டிக்­கைகள் மீதி­ருந்த நம்­பிக்கை மூழ்­க­டிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதுவோர் சூழ்ச்சி என்­பது அனை­வ­ரதும் கருத்­தா­க­வுள்­ளது என்றும் தெரி­வித்­துள்ளார்.

முன்பு என்­னுடன் உற­வுடன் இருந்த கர்­தி­னாலும், கத்­தோ­லிக்க ஆல­யத்தைச் சேர்ந்த சிலரும் ஏன் எனக்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழுந்­தார்கள் என்­பது உண்­மை­யி­லேயே பிரச்­சி­னைக்­கு­ரி­யது என்றும் கோத்­தா­பய தனது நூலின் 136ஆம் பக்­கத்தில் தெரி­வித்­துள்ளார்.

தான் பத­வியில் இல்­லாத காலத்தில் நடாத்­தப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் எனக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை முழு­மை­யாக மறுப்­ப­தா­கவும் கோத்­தா­பய குறிப்­பிட்­டுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ச­வுக்கு எதி­ரா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் அந்தக் குற்­றச்­சாட்­டுகள் அவ­ரது பதவிக் காலத்தில் நடந்­த­வை­க­ளுக்கு எதி­ரா­ன­வை­யாகும். ஆனால் எனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுகள் நான் பத­வியில் இல்­லாத போது நடந்­த­வைகள் பற்­றி­ய­தாகும். இது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மா­ன­தாகும். இந்த நாட்­டுக்கு நல்­லது நடக்­காது’ என்றும் நூலின் 152 ஆம் பக்­கத்தில் எழு­தி­யுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தான் பத­வியைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக நடத்­தப்­பட்ட ஒன்று எனக் குறிப்­பி­டு­ப­வர்கள் பற்­றியே அவர் இந்­நூலில் இவ்­வாறு எழு­தி­யுள்ளார்.

மேலும் இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் கார­ண­மாக நாடு பிள­வு­ப­டு­வ­தற்கு வாய்ப்­புண்டு. இதுவோர் நல்ல நிலைமை அல்ல. சிறு­பான்மை வாக்­கு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஓர் அரசு நாட்டை ஆட்­சி­செய்யும் போது இது­பற்றி அனை­வரும் புரிந்து கொள்­வார்கள் என்றும் அவர் தனது நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

ரஷ்யா அவ­தானம்
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வெளி­யிட்­டுள்ள புத்­தகம் தொடர்பில் ஊட­கங்­களில் வெளி­யாகும் அறிக்­கைகள் குறித்து அவ­தானம் செலுத்தி வரு­வ­தாக இலங்­கைக்­கான ரஷ்ய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது. தூத­ர­கத்தின் எக்ஸ் தளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள பதி­வொன்­றி­லேயே இவ்­வி­பரம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் இரா­ணுவ முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தி­க­ளுக்கு வெளி­நாட்டுத் தூது­வர்­களின் வருகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என கோத்­த­பா­யவின் நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும் ரஷ்ய தூத­ரகம் கோரி­யுள்­ளது.

கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் குறிப்­பிட்ட கருத்து எந்­தெந்த நாடு­களின் இராஜ தந்­தி­ரி­களை சுட்­டிக்­காட்­டு­கி­றது என ரஷ்ய தூத­ரகம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு வலி­யு­றுத்தி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொழும்பில் திரண்டு போராட்­டங்­களை நடத்­தினர். அர­க­லய போராட்­டத்­தி­னை­ய­டுத்தே கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்.

நாட்­டி­லி­ருந்து தப்பிச் சென்ற அவர் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தனது பதவி விலகல் கடி­தத்­தையும் அனுப்­பி­யி­ருந்தார். அவர் தற்­போது எழு­தி­யுள்ள புத்­த­கத்தில் தன்னை பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்கு சர்­வ­தேச சதி­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ள­தாக ரஷ்ய தூத­ரகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

மேலும் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தனது நூலில் ‘சில பலம்­வாய்ந்த நாடுகள் தாம் ஜன­நா­யகம் மற்றும் சட்­டத்தின் பாது­கா­வ­லர்கள் என்று உல­குக்கு கூறிக்­கொள்­கி­றார்கள். ஆனால் அவர்கள் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தில்லை. அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக சுய­ந­ல­மாகச் செயற்­ப­டு­கி­றார்கள் என்று தெரி­வித்­துள்ளார்.

நான் பத­வியில் அமர்த்­தப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்த மூன்று பிர­தான கார­ணிகள், நான் எனது பத­வியை இரா­ஜி­னாமா செய்து விட்­டதன் கார­ண­மாக தொடர்ந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளன. அதா­வது சிங்­க­ள­வர்­களும், சிங்­கள பெளத்­தர்­களும் தங்­க­ளது சொந்த நாட்­டினுள் அவ­மா­னத்­துக்­குள்­ளாகி இரண்டாம் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளமை, நாட்டின் கடன்­சுமை அதி­க­ரித்­துள்­ளமை, பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை மற்றும் தேசிய பாது­காப்பு சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளமை என்­ப­ன­வற்­றுக்கு இன்னும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. இந்தப் பிரச்­சி­னை­களை எதிர்­கா­லத்தில் மற்­று­மொரு தலை­வரும் தீர்த்து வைக்க வேண்­டி­யேற்­படும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.
மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய பொரு­ளா­தாரத் தீர்­வுகள் தொடர்­பிலும் நூலில் அவர் விப­ரித்­தி­ருக்­கிறார்.

முன்னாள் அமைச்சர்
பைசர் முஸ்­தபா
“கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஒரு புத்­த­க­மல்ல பத்து புத்­த­கங்கள் எழு­தி­னாலும் முஸ்லிம் மக்கள் உட்­பட முழு நாட்டு மக்­களும் அவரை மன்­னிக்­க­மாட்­டார்கள். அவரை ஏற்­க­னவே நிரா­க­ரித்து விட்­டார்கள்” என முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ எழுதி வெளி­யிட்­டுள்ள நூல் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில் ‘இவ­ரது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் பழி வாங்­கப்­பட்­டது. எமது நாட்டின் அர­சியல் வர­லாற்றில் நாட்டு மக்­களால் நாட்­டி­லி­ருந்தும் விரட்­டப்­பட்ட ஒரே தலைவர் அவர். முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் இவ­ரது பத­விக்­கா­லத்­தி­லேயே முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்ப்­பையும் மீறி எரிக்­கப்­பட்­டன. அன்று முஸ்லிம் சமூகம் கண்ணீர் சிந்­தி­யது. இன்று முஸ்லிம் ஜனா­ஸாக்­களின் எரிப்­புக்கு காரணம் சுகா­தார பிரிவின் பேரா­சி­ரியர் மெத்­திக்­காவே என்­கிறார். கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்தால் நிலத்­தடி நீர் மூலம் கொவிட் தொற்று பரவும் என்று கூறியே அத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அன்று கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பத­வியில் இருந்தார். அவர் நினைத்­த­ருந்தால் முஸ்­லிம்­களின் ஜனாஸா எரிப்பு தீர்­மா­னத்தை மாற்றி அமைத்­தி­ருக்­கலாம். ஆனால் கோத்­தா­பய ராஜ­பக்ஷ அன்று மெள­ன­மா­கவே இருந்தார்.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ முன்னாள் இரா­ணுவ வீரர். அவர் தனது அடக்­கு­முறை ஆட்­சியால் நாட்­டு­மக்­களின் ஆத­ர­வினை இழந்து விட்டார். மீண்டும் அர­சியல் இலாபம் கரு­தியே புத்­தகம் வெளி­யிட்­டுள்ளார். நாட்டு மக்கள் ஒரு­போதும் அவரை மன்­னிக்­க­மாட்­டார்கள்.

பல­வந்­த­மாக, கொவிட் தொற்­றினைக் காரணம் காட்டி எரிக்­கப்­பட்ட முஸ்லிம் ஜனா­ஸாக்­களின் கண்ணீர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை விட்டு வைக்­காது. இறை­வனின் தண்­டனை அவ­ருக்குக் கிடைக்கும்.

புத்­தகம் ஒன்று எழு­து­வ­தற்குக் கூட அறி­வில்­லாத அவர் எப்­ப­டித்தான் இந்தப் புத்­த­கத்தை எழு­தினார் என்று தெரி­ய­வில்லை. நாட்டு மக்­க­ளினால், குறிப்­பாக முஸ்­லிம்­களால் முற்­றிலும் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர் அவர். அவ­ரது கருத்­துகள் எதுவும் மக்­க­ளினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. முற்­றிலும் நிரா­க­ரிக்­கப்­படும் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம்
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ எத்­தனை புத்­த­கங்கள் எழு­தி­னாலும் முஸ்­லிம்கள் அவரை நிரா­க­ரிப்­பார்­களே தவிர ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். மன்­னிக்­க­மாட்­டார்கள். அவர் எழு­தி­யுள்ள நூலில் முஸ்­லிம்­களை சமா­தா­னப்­ப­டுத்த தெரி­வித்­துள்ள கருத்­து­களை முஸ்லிம் சமூகம் நிச்­சயம் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்கும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

நாட்டில் முஸ்லிம் சமூ­கத்தை ஓரம் கட்டும் செயற்­பா­டு­க­ளையே அவர் முன்­னெ­டுத்தார். ஜனாஸா எரிப்பு கால­கட்­டத்தில் அவரே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி.

முஸ்­லிம்­களின் கொவிட் ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு உத்­த­ர­விட்­டவர் அவரே. இன்று பேரா­சி­ரியர் மெத்­திகா மீது குற்றம் சுமத்­து­கிறார். மெத்­திகா இவ்­வா­றான ஒரு தீர்­மானம் மேற்­கொண்­டாலும் இவர் தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அத்­தீர்­மா­னத்தை தடுத்­தி­ருக்­கலாம்.

பொது­ப­ல­சேனா அமைப்­போடு நெருங்கிச் செயற்­பட்­டவர் கோத்­த­பாய. அவ்­வ­மைப்­புக்கு உத­விகள் செய்­தவர். ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் கட்­டி­டங்­களை அகற்­றி­யவர். ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியை உரு­வாக்கி அதன் தலை­வ­ராக பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை நிய­மித்து நாட்டில் ஒரே சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்டும் என்று செயற்­பட்­டவர். தனியார் சட்­டங்­களை இல்­லாமற் செய்ய வேண்டும் என்று முனைப்­புடன் செயற்­பட்­டவர். இக்­கா­ர­ணங்­களால் முஸ்­லிம்கள் மன­த­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இன்று ஞான­சார தேரரும் முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யுள்ளார். அவர் அல்­லாஹ்­வையும், புனித குர்­ஆ­னையும் அவ­ம­தித்­தவர். முஸ்­லிம்கள் ஞான­சார தேரரை மாத்­தி­ர­மல்ல அவ­ரோ­டுள்ள கோத்­தா­ப­ய­வையும் மன்­னிக்­கவே மாட்­டார்கள் என்றார்.

தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள்
‘அர­க­லய’ போராட்­டத்தில் தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் வகி­பா­கமே மேலோங்­கி­யி­ருந்­த­தாகக் கூறு­வதன் மூலம் சிங்­கள மக்கள் மத்­தியில் உறங்­கிக்­கொண்­டி­ருக்கும் இன­வா­தத்தை தூண்டி மீண்டும் ஆட்சி பீட­மே­று­வற்கு முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக் ஷ முற்­ப­டு­வ­தாக தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

அப்­போ­ராட்­டத்தை ஒருங்­கி­ணைந்து வழி நடாத்­திய தலை­வர்­களில் குறிப்­பிட்டுக் கூறத்­தக்க அளவில் தமி­ழர்கள் எவரும் இருக்­க­வில்லை எனவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

கோத்­தா­பய ராஜ­பக் ஷ தனது நூலில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­ஞானம் சிறி­தரன், தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் விமர்­சனம் செய்­துள்­ளனர்.

‘அர­க­லய’ போராட்டம் இன மத வேறு­பா­டின்றி நாட்டு மக்கள் கலந்து கொண்ட போராட்டம் என்று தெரி­வித்­துள்­ளனர்.

பொது­பல சேனா உரு­வாக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் அதன் பின்­ன­ணியில் கோத்­தா­பய ராஜ­பக் ஷ இருப்பதாக நம்பப்பட்டதாகவும் எனவே தற்போது பொதுபல சேனாவின் எழுச்சியை அடுத்து முஸ்லிம்கள் என்னை விரோதியாகப் பார்த்தார்கள் எனக் கூறுவதன் மூலம் அவர் அதனை உறுதிப்படுத்துகின்றாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் சமூகம்
நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மீண்டும் நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய எத்தனை நூல்கள் எழுதினாலும் முஸ்லிம் சமூகத்தை அவரால் சமாதானப்படுத்த முடியாது.

முஸ்லிம் சமூகத்தையே குறிவைத்து செயற்பட்ட பொதுபல சேனாவின் ஆதரவாளர் அவர். ஞானசார தேரருடன் நெருங்கிச் செயற்பட்டவர். தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தனது அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் தலைமையில் செயலணியொன்றினை நிறுவி அது தொடர்பான சிபாரிசுகளைக் கோரியவர். அச்செயலணியின் அறிக்கை முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. அர­புக்­கல்­லூ­ரி­களின் செயற்­பா­டு­க­ளுக்கும் பாடத்­திட்­டங்­க­ளுக்கும் சவா­லாக அமைந்திருந்தது.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் மன நிறைவு கண்டவர் அவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படுபவர். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த அவரால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அசைந்து கொடுக்கவில்லை. இன்று ஜனாஸா எரிப்பு விவகாரத்தை சுகாதார பிரிவின் நிபுணர்களின் மீது சுமத்திவிட்டு நழுவப் பார்க்கிறார். அவர் என்னதான் எழுதினாலும் முஸ்லிம் சமூகம் அவரை ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.