முடிவுறாத் துயருக்கு 33 வயது

0 132

யாழ் அஸீம்

பரம்­பரை பரம்­ப­ரை­யாக பல நூற்­றாண்டு கால­மாக வாழ்ந்த வட­புல முஸ்­லிம்கள் அவர்­க­ளது தாயக மண்­ணி­லி­ருந்து தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு, இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு இன்றுடன் 33 வரு­டங்­க­ளா­னாலும், இவ்­வ­ர­லா­றா­னது வட மாகாண முஸ்­லிம்­களின் வர­லாற்றில் என்றும் அழிக்க முடி­யாக வடு­வாக பதிந்து விட்­டது.

1990 ஒக்­டோபர் மாதத்தின் இறு­தியில் வட­மா­கா­ணத்­தி­லுள்ள சகல மாவட்­டங்­க­ளி­லி­ருந்து சுமார் 75,000 முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக்­கப்­பட்ட துயர நிகழ்வை நினைவு கூறும் கறுப்பு ஒக்­டோ­ப­ருக்கு மூன்று தசாப்­தங்கள் கடந்தும் முடி­யாத துய­ரோடு வட­புல முஸ்லிம் அக­திகள் வாழ்ந்து கொண்­டி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

வட­பு­லத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு 33 வரு­டங்­க­ளா­கியும், பூர­ண­மான மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டாமல் அகதி முகாம்­களில் வாழும் அவலம் இன்னும் தொடர்­கின்­றது. இன்னும் ஆக்­க­பூர்­வ­மான பூரண மீள் குடி­யேற்றம் நடை­பெ­றாத கார­ணத்தை முன்­னிட்டும் வெளி­யேற்­றத்தை ஆண்­டு­தோறும் நினை­வு­கூர்­வதன் மூலம் மறுக்­கப்­படும் எமது உரி­மை­களை வெளிச்­சத்­துக்கு கொண்டு வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் இது­வாகும். சில அர­சி­யல்­வா­தி­க­ளாலும் அரச அதி­கா­ரி­க­ளாலும், புனர்­வாழ்வு நிறு­வ­னங்­க­ளாலும் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிலை இன்னும் காணப்­ப­டு­வது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

முப்­பத்து மூன்று வரு­டங்கள் கடந்­தாலும் அந்த வெளி­யேற்ற நிகழ்­வு­களும், அவ­லங்­களும் எமக்கு இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­களும் இப்­போது நினைத்­தாலும் இதயம் வலிக்­கின்­றது. காலத்தின் நீட்­சியில் எம்மால் மன்­னிக்க முடிந்­தாலும் மறக்க முடி­யாது .

மீள்­கு­டி­யேற்­றமும் வீட்டுத் திட்­டமும்
1990ம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து 75,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­டனர். 33 வரு­ட­கால சனத்­தொகை வளர்ச்சி கார­ண­மாக இப்­போது இத்­தொகை பல­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. எனினும் வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் பல சவால்கள் காணப்­ப­டு­கின்­றன. அரசாங்கம், புலிகள் யுத்தம் 2009 இல் முடி­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். ‘1990ம் ஆண்டு முஸ்­லிம்கள் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட போது அதனைத் தடுக்க எவரும் முன்­வ­ர­வில்லை. இப்­போது எனது அர­சாங்கம், பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­த­ப­டியால், 2010 மே மாத­ம­ளவில் முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­டு­வ­தற்­கான சகல வேலைத் திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­படும் என்றார். இவ்­வாக்­கு­று­தியும் இதுவரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

வட­மா­காண முஸ்­லிம்கள் மீள்குடி­யே­றாமைக்கு பல இறுக்­க­மான நிபந்­த­னைகளும் கார­ண­மா­கும். குறிப்­பாக வீட்டுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மாயின் மீள்­கு­டி­யே­றிய மாவட்­டத்­தி­லுள்ள அந்த இடிந்து சிதைந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும். குறு­கிய கால 2 அல்­லது 3 வரு­டங்­களில் மீளக் குறி­யேறும் தமிழ் மக்­க­ளு­டைய வீடு­களில் உடன் குடி­யேற முடியும். முப்­பத்து மூன்று வருட கால­மாக இடம்­பெ­யர்ந்து அக­தி­மு­காம்­களில் அல்­ல­லுற்று வீடு திரும்பும், வட மாகாண முஸ்­லிம்கள், இடிந்து சிதைந்து குட்டிச் சுவ­ராகி காடு­க­ளாக மாறி­யி­ருக்கும் நிலையில் எவ்­வாறு குடி­யே­று­வது? எப்­படி வசிப்­பது? கிண­று­களும் மலசலகூடங்­களும் அழிந்து சிதைந்த நிலை­யி­லுள்ள வீட்டில் எவ்­வாறு வாழ்­வது? இத்­த­கைய இறுக்­க­மான நிபந்­த­னையும் வட மாகாண முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்தில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
யுத்­தத்தால் வெளி­யேற்­றப்­பட்டு, அக­தி­க­ளா­கவும் உள்­நாட்­டிலும், இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்ற மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தவும், அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈட்­டை பெற்றுக் கொடுக்­கவும் மீண்டும் இவ்­வாறு நடக்­காது என உத்­த­ர­வாதம் அளிப்­பதும் நிலை­மாறு கால நீதி எனப்­படும். இம்­மு­றைமை பல நாடு­களில் நடை­மு­றை­ப்­ப­டுத்­தப்படு­கி­றது. இந்­நீதி ஒழுங்கை ஐக்­கிய நாடுகள் சபையும் அங்­கீ­க­ரித்­துள்­ளது. இதனை கடந்த நல்­லாட்சி அரசும் அங்­கீ­க­ரித்து கையொப்­ப­மிட்­டுள்­ளது.
இந்­நீதி ஒழுங்­கின்­படி வட மாகாண முஸ்­லிம்கள் உட­ன­டி­யாக மீளக்­கு­டி­யேற முடி­யாத காரணம் 30 வரு­டங்­க­ளாக பாவ­னை­யற்று, காடு­க­ளாக மாறி­யுள்ள இடங்­களில் கொட்­டில்கள் அமைத்து, மல­சல கூடங்கள் உரு­வாக்கி எவ்­வாறு குடி­யே­று­வது என்­ப­தாகும். இவ்­வாறு பல இறுக்­க­மான நிபந்­த­னை­களை விதிப்­பதன் கார­ண­மாக வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது பற்றி சமத்­து­வத்­துக்­கான யாழ் சிவில் சமூக அமைப்பின் தலை­வரும், யாழ் கிளி­நொச்சி முஸ­்லிம் சம்­மே­ள­னத்தின் பொதுச் செய­லா­ள­ரு­மான ஆர். கே. சுவர்­கஹான் (சுனீஸ்) பல்­வேறு கார­ணி­களைக் குறிப்­பிட்­டுள்ளார்.
“வட­மா­காண முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேற்ற விட­யத்தில் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தற்­கான சில உதா­ர­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.
1. மீள் குடி­யேற்­றத்­துக்­கான ஆண்­டுகள் 13 வரு­டங்கள் சென்­றாலும் யாழ் முஸ்­லிம்­களைப் பொறுத்தவரை பூர­ண­மாக சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இது­வரை 250 க்கு உட்­பட்ட வீட்டு உத­விகள் தான் யாழ் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இது ஏற்றுக் கொள்ள முடி­யாது. நாம் வெளி­யேற்­றப்­ப­டும்­போது 4500 குடும்­பங்கள் இருந்­தன. மீள் குடி­யே­று­வ­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்ட போது 2500 குடும்­பங்கள் விருப்பம் தெரி­வித்­தி­ருந்­தன. அதனை பேருக்கும் பதிவு ஏற்­ப­டுத்தி பங்­கீட்டு அட்­டையும் வழங்­கப்­பட்­டது. ஆனாலும் திட்­ட­மிட்டு இதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மீளாய்வு என்ற பெயரில் யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­வர்­களை மட்டும் பதிவில் வைத்­தனர். பதிவில் உள்ள 600 பேரைத் தவிர ஏனை­ய­வர்­களை இரத்துச் செய்­தனர். தற்­போது சிறிது சிறி­தாகக் குடி­யேறி 1000 குடும்பங்கள் குடி­யே­றி­யுள்­ளனர். இன்னும் 1000 குடும்பங்கள் குடி­யே­றக்­கூ­டிய சாத்­தியம் உண்டு. கடந்த 13 ஆண்­டு­களில் 250 க்கு உட்­பட்ட வீட்டு உத­விகள் கிடைத்­தன என்றால் 2000 குடும்­பங்­க­ளுக்கு எடுக்கும் காலம் மிகக் கூடி­ய­தாகும். இவ்­வா­றான சூழ்­நி­லையில் வெளி­யேற்­றத்தின் வலி­களை சுமந்­த­வர்­களும், மீள்­கு­டி­யேற்றம் தேவை என விருப்­புடன் வந்­த­வர்­களும் மீளக்­கு­டி­யே­று­வதில் விரக்­தி­ய­டைந்து திரும்பி விடு­வார்கள். இவ்­வா­றான சூழ் நிலைக்குக் காரணம் அர­சாங்­கமா, மாவட்ட அர­சாங்க அதி­கா­ரி­களா என்­பதை நாம் சிந்­திக்­கும்­போது யாழ் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் திட்­ட­மிட்டுத் தடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதைப் புரிந்து கொள்ள முடியும்.
2. மேலும் புத்­தளம் மாவட்­டத்தில் யாழ் முஸ்லிம் வாக்­குகள் 21,000 ஐ தாண்­டி­யுள்­ளது. யாழ் மண்ணில் இந்த வாக்­குகள் இருக்­கு­மாயின் நாம் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை பெறக்­கூ­டிய சாத்­தியம் உண்டு. அதே நேரம் புத்­தளம் மாவட்­டத்தில் யாழ் மண்ணில் பிறந்­தவர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­ராயின் புத்­தளம் மக்க­ளுடன் முரண்­ப­டக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாகக் கூடும். அதே­நேரம் புத்­த­ளத்­தி­லுள்ள பல அகதி முகாம்­களில் அடிப்­படை வச­தி­க­ளின்றி பல சிர­மங்­களை எதிர்­நோக்கி வாழ்­கின்­றனர். எனவே அவர்­க­ளு­டைய தேவை­களை நிறை­வேற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தேவை. எனினும் யாழ் மண்ணை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரு­வ­ருக்கு அது சாத்­தி­ய­மில்லை. அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் 2010 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் 4 பிர­தி­நி­தி­களைப் பெற முடிந்­தது. 2018 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் 4 பிர­தி­நி­தி­களைப் பெற முடிந்­தது. 2018 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் ஒரு பிரதி நிதி­யையே பெற்றோம். எதிர் காலத்தில் எவ­ரையும் பெற முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது. வட்­டார இணைப்­புக்கள் கார­ண­மாக இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக யாழ் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அர­சியல் அனா­தை­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கிறோம்.
3. வீட்டுத் திட்­டத்­துக்கு விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு வெளி­மா­வட்­டத்தில் சொந்­த­மாக விடு இருக்கக் கூடாது என்­பதும் மீள் குடி­யேற்­றத்தை தடுக்கும் ஒரு கார­ணி­யாகும். 33 வரு­டங்கள் வாழ்­ப­வர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து சிறி­ய­தொரு குடி­சையை வாங்­கி­னாலும் மீள்­கு­டி­யேற்ற உரிமை மறுக்­கப்­ப­டு­வது மிகப்­பெரும் அநீ­தி­யாகும்.
4. தாம் வாழும் பிர­தே­சத்­தி­லி­ருந்து வாக்­கு­களை இரத்துச் செய்து விட்டு மீளக்­கு­டி­யேறும் மாவட்­டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில் போன்ற கார­ணங்­களால் ஏற்­க­னவே வாழ்ந்த மாவட்­டங்­களில் திடீ­ரென வாக்­கு­களை வெட்டிச் செல்­வது சாத்­தி­ய­மில்லை. இதன் கார­ண­மா­கவும் மீள்­கு­டி­யேற்றம் தடைப்­பட்­டுள்­ளது.
5. வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்றம் தொடர்பாக ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு, விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடப்­பட்ட போதிலும், இன்­று­வரை நிரா­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது.
6. அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஐக்­கிய நாடுகள் அக­திகள் அமைப்பு போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு, வட­பு­ல­முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்தை விரும்­பாத அரச அதி­கா­ரி­களும், சில அர­சி­யல்­வா­தி­களும், சில இன­வா­தி­களும், மீளத்­தி­ரும்பும் அக­திகள் தம் சொத்­துக்­களை விற்­ப­தற்கும், வியா­பா­ரத்­துக்­கா­கவும், நட்­ட­ஈட்டைப் பெறவும் வரு­கின்­றனர், இவர்கள் நிரந்­த­ர­மாக குடி­யி­ருக்க வர­வில்லை என்ற கார­ணங்­களைக் கூறி மீள் குடி­யேற்­றத்தை தந்­தி­ர­மாகத் தடுத்து வரு­கின்­றனர்.
7. மீள் குடி­யேற்­றத்தை தடுப்­ப­திலும், வீட்டுத் திட்­டங்­களில் உள்­வாங்­கப்­ப­டு­வ­தற்கும் இடை­யூ­றான கார­ணி­களுள் பிர­தா­ன­மா­னது யாதெனில், 2008 க்கு முன் இடம் பெயர்ந்­த­வர்கள், பழைய அக­திகள் எனவும், 2008 க்கு பின்னர் இடம் பெயர்ந்­த­வர்கள் புதிய அக­திகள் எனவும் பாகு­ப­டுத்­தப்­பட்டு, புதிய அக­தி­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­ட­தாகும். இது1990 இல் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் அக­தி­களைப் புறக்­க­ணிப்­ப­தற்கு அர­சி­யல்­வா­தி­க­ளாலும், சில தமிழ் உயர் அதி­கா­ரி­க­ளாலும் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­ட­தாகும்.
அண்­மையில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, வடக்கில் வாழும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சத்தில் 100 ஏக்கர் காணி வழங்கத் திட்­ட­மிட்­டுள்ளேன் எனக் கூறி­ய­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழ் – முஸ்லிம் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த பிர­தமர் முயற்­சிக்­கிறார், இம்­மீள்­கு­டி­யேற்றம் சாத்­தி­ய­மில்லை எனக்­கூறி தடுக்க முயற்­சிக்­கிறார். இவ்­வா­றான அர­சி­யல்­வா­தி­களும், தமிழ் உயர் அதி­கா­ரி­களும் வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை தடுக்க முடி­யற்­சிக்­கின்­றனர் என்­ப­தற்கு இந்­நி­கழ்வு அத்­தாட்­சி­யாகும்.
33 வரு­டங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து தாயக மண்­ணுக்கு திரும்பும் இம்­மக்கள் மீது கரு­ணை­காட்­டு­வ­தற்குப் பதி­லாக, எவ்­வித நெகிழ்வுத் தன்­மை­யற்ற இறுக்­க­மான நிபந்­த­னை­க­ளையே தொடர்ந்தும் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். மீள்­கு­டி­யேற்றம் ஆரம்­ப­மாகி கடந்த 13 வரு­டங்­க­ளாக யாழ் முஸ்லிம் அக­தி­க­ளுக்கு கிராம சேவை­யாளர் பிரிவு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு, இந்­திய வீட­மைப்புத் திட்டம் என்­ப­வற்­றி­னூ­டாக இது­வரை 250 வீடுகள் மட்டும் வழங்­கப்­பட்­டுள்­ளன என்பதிலிருந்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் நாச்சிக்குடாவிலிருந்து ஹாமீம் என்ற சகோதரரும் அவருடன் ஈசப்பா என்பவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் வரை நடந்து சென்று தமது கோரிக்கைகளை கையளித்தனர். 45 நாட்களாக பலசிரமங்களுக்கு மத்தியிலும் நடந்து சென்ற அவர்களுக்கு நீர்கொழும்பில் சிறிது தடை ஏற்பட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். நாச்சிக்குடா மக்களுடைய மீள்குடியேற்றத்தில் பல தடைகளும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய வாழ்விட எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடா என்ற பிரதேசம் சுருங்கி முழங்காவில் என்ற பிரதேசம் விரிவாக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளால் எமது மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுவதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணமாகும்.
1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சகல பொருட்களும் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு உலகறிந்த விடயம். அம்மக்கள் வாழ்ந்து இடிந்து சிதையுண்ட வீடு, காணி உறுதிப்பத்திரம், முன்னர் குடியிருந்ததற்கான வாக்குப்பதிவு, இவைகள் யாவும் இருக்கும்போது, இம்மக்கள் தாயக மண்ணில் வாழ்ந்த உரிமையை நிரூபிக்க வேறென்ன ஆதாரம் வேண்டும்.
எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கு அறியத்தருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும், குறுகிய காலத்தில் மீள் குடியேறிய தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கென விசேட திட்டங்களையும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.