பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்துவது ‘இனவழிப்பு’

தூத­ர­கத்­திற்கு விஜயம் செய்து சர்­வ­ம­தத்­ த­லை­வர்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் கூட்­டாக வலி­யு­றுத்து

0 124
(நா.தனுஜா)
எந்தவொரு மதத்தின் பெயராலும் யுத்தம் இடம்பெறுவதையும், சகமனிதர்கள் துன்புறுத்தப்படுவதையும், வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் கடவுள் ஒருபோதும் விரும்பமாட்டார் என்பதை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று யுத்தமும் வன்முறைகளும் எதிர்பார்க்கின்ற தீர்வை ஒருபோதும் பெற்றுத்தராது. எனவே இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் உடனடியாக நிறுத்தப்பட்டு, நியாயமான முறையில் பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்வு காணப்படவேண்டும் என்று சர்வமதத்தலைவர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
ஹமால் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் பெருமளவான சிறுவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போதுவரை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவருவதுடன் அதன் மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியுள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி சகல மக்களும் ஒன்றிணைந்து இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கான வன்மையான கண்டனத்தையும், பலஸ்தீன மக்களுடனான தமது உடன்நிற்பு மற்றும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில வாரங்களாக இலங்கையிலும், குறிப்பாக தலைநகர் கொழும்பில் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவையும், உடன்நிற்பையும் வெளிப்படுத்தும் வகையிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன் ஓரங்கமாக கடந்த திங்கட்கிழமை (23) சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்களும், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டை கூட்டாகச் சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதன்படி மதத்தலைவர்கள் சார்பில் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் துஷ்யந்த லக்ஷ்மன் ரொட்ரிகோ, மருதானை சமூக, சமய நடுநிலையத்தின் (சி.எஸ்.ஆர்) பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான், கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பி.ராஜன் ரொஹான், இலங்கை கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச்செயலாளர் அருட்தந்தை சுஜித்தர் சிவநாயகம், மிலாகிரிய சென்.போல்ஸ் தேவாலயத்தின் அருட்தந்தை ஆன்ட்ரூ, அருட்சகோதரி ரசிகா, காத்தான்குடி பிஸ்மி பாடசாலை – ஃபிர்தௌஸ் நலிமி மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கெகிராவ சுதஸ்ஸன தேரர் ஆகியோரும், சிவில் சமூகத்தின் சார்பில் இளம் பெண்களின் கிறிஸ்தவ அமைப்பின் தலைவி சாரா ஆறுமுகம், சட்டத்தரணியும் தொழிற்சங்கவாதியுமான சுவஸ்திகா அருலிங்கம், சட்டத்தரணி ஷஃபானா குல் பேகம், சிரேஷ்ட சட்டத்தரணியும் தேர்தல்கள் ஆணையாளருமான அமீர் ஃபாயிஸ், சட்டத்தரணி அஸாத் முஸ்தபா, திருகோணமலை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் பிரதிநிதி நூருல் இஸ்மியா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான மரிஸா டி சில்வா, அஷோகா ஆறுமுகம், ஷ்ரீன் ஸரூர் ஆகியோரும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஹனா இப்ரஹிம், லக்ஷ்மன் குணசேகர ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி அமீர் ஃபாயிஸ்
இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட சட்டத்தரணி அமீர் ஃபாயிஸ், ‘பொதுமக்கள் மீதான ஹமாஸின் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, அதற்கான பதிலடியாக ஹமாஸுடன் எவ்வகையிலும் தொடர்புபடாத சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உள்ளடங்கலாக காஸாவில் வாழும் மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்திவரும் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அதேபோன்று இத்தாக்குதல்களைக் கண்டிப்பதை விடுத்து, அதற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் மேற்குலகநாடுகளின் போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. எந்தவொரு யுத்தத்திலும் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதற்கு அப்பால், யுத்தமும் வன்முறைகளும் எதிர்பார்க்கின்ற தீர்வை ஒருபோதும் பெற்றுத்தராது. எனவே இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, நியாயமான முறையில் பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்வு காணப்படவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

 

அருட்பணி பி.ராஜன் ரொஹான்
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற சுமார் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் தற்போது பலஸ்தீன மக்கள் முகங்கொடுத்துவரும் வலியையும், வேதனையையும் நன்கு புரிந்துகொள்ளமுடிவதாகக் குறிப்பிட்ட அருட்பணி பி.ராஜன் ரொஹான், ‘இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் என்பது மிகநீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக பலஸ்தீனத்துக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் பலஸ்தீன மக்களின் பொருளாதாரம் வெகுவாக சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அண்மையில் ஹமாஸ் நடத்திய மிகமோசமான தாக்குதலுக்குப் பதிலாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை ‘இனவழிப்பு’ என்றே கூறமுடியும். திருமறையின்படி இஸ்ரேல் தீர்க்கதரிசன தேசம் எனவும், இந்த யுத்தம் கடவுளின் திட்டம் எனவும் கூறி இதனை நியாயப்படுத்துகின்ற போக்கையும் காணமுடிகின்றது. ஆனால் இது நாம் மதத்தையும், அதன் போதனைகள் மற்றும் கோட்பாடுகளையும் புரிந்துகொள்ளும் விதத்திலேயே தங்கியிருக்கின்றது. எந்தவொரு மதத்தின் பெயராலும் யுத்தம் இடம்பெறுவதையும், சகமனிதர்கள் துன்புறுத்தப்படுவதையும், வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் கடவுள் ஒருபோதும் விரும்பமாட்டார். எனவே இந்த யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்’ என்று தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர்
மேலும் இச்சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர் இதுபற்றி பின்வருமாறு கருத்துரைத்தார்:
பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் 75 வருடகால ஆக்கிரமிப்பு மற்றும் பலஸ்தீனர்களின் தனித்துவமான கலாசாரம், மிகப்பழமை வாய்ந்த வரலாறு, அவர்களுக்குச் சொந்தமான நிலம், வளங்கள் மற்றும் அவர்களது நிலைத்திருப்பு என்பன படிப்படியாகத் திட்டமிட்டு அழிக்கப்படல் ஆகிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அதேபோன்று இஸ்ரேலுக்கு அவசியமான போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்குவதன் மூலம் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு மேற்குலகம் ஆதரவளிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்
சிவில் சமூக செயற்பாட்டாளரும், தொழிற்சங்கவாதியும், சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் கருத்து வெளியிடுகையில், ‘இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதான நிலைவரத்தை ஒத்த சூழ்நிலையே தற்போது காஸாவிலும் நிலவுகின்றது. இஸ்ரேலிய மக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் முற்றிலும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். இருப்பினும் அதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல்கள் போர் தொடர்பான சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் புறம்பான விதத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாம் இவ்விவகாரம் தொடர்பில் அரசியல் நிலைப்பாடு எதனையும் எடுக்கத்தேவையில்லை. இருப்பினும் சர்வ நிச்சயமாக இந்த யுத்தத்துக்கு எதிரான மனிதாபிமான நிலைப்பாடொன்றை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
அருட்தந்தை சுஜித்தர் சிவநாயகம் 
‘இவ்விவகாரத்தில் இஸ்ரேலா? அல்லது பலஸ்தீனமா? என்பதைத் தாண்டி, நாமனைவரும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பக்கம் நிற்கவேண்டும்’ எனக் குறிப்பிட்ட இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச்செயலாளர் அருட்தந்தை சுஜித்தர் சிவநாயகம், இந்த யுத்தத்தினால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் எந்தத் தரப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்கவேண்டும் என்று தெரிவித்தார். அதேபோன்று இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், ‘இலங்கையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுபவர்களோ அல்லது விமர்சிப்பவர்களோ மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும். இனங்களுக்கு இடையில் விரிசல்களை உருவாக்கக்கூடிய விதத்திலோ அல்லது பிழையாகவோ சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களால் தவறாக வழிநடத்தப்பட்டுவிடக்கூடாது’ எனவும் எச்சரித்தார்.

பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட் 

இச் சந்திப்பில் பலஸ்தீன நிலைமைகளை விளக்கும்போது கண்ணீர் சிந்தும் தூதுவர்
இச்சந்திப்பின்போது பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர்மல்க காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்து விபரித்தார். இஸ்ரேலுக்கு உதவுவதற்கு முன்வந்த பலஸ்தீனம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுவருவதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தற்போது இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துவரும் நிலையில், அதனைச் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தூதுவர், மிகமோசமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப் பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலில் தள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போது மேற்குலக நாடுகள் செயற்படும் விதம் குறித்து விளக்கமளித்த அவர், மிகவும் தனித்துவம் வாய்ந்த பலஸ்தீன சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவருவதாகவும், இது ‘இனப்படுகொலை’ எனவும் சுட்டிக்காட்டினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.