முஸ்லிம்களின் அரசியல் கணக்கு

0 435

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

வைசி­ய­ராக இலங்­கைக்கு வந்த முஸ்­லிம்கள் வணி­கத்­தையே வாழ்­வா­தா­ர­மாகக்­கொண்டு வாழ்ந்­தது மட்­டு­மல்­லாமல் அவர்­களின் மத­போ­த­னை­களும் வணி­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நடை­பெற்­ற­தனால் அர­சியல் சிந்­த­னையும் அதே பாணி­யிலே தொடர்­வதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. இன்­றைய அர­சியற் சூழ­லிலும் அதே சிந்­த­னைதான் முஸ்லிம் தலை­வர்­க­ளையும் வாக்­கா­ளர்­க­ளையும் ஆட்­கொண்­டுள்­ளதை மறுக்க முடி­யாது. அந்தச் சிந்­த­னையை விப­ரிப்­ப­துடன் அதன் விளை­வு­க­ளையும் விளக்­கு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

இஸ்­லாமும் வணி­கமும்
இஸ்­லாத்­துக்கும் வணி­கத்­துக்­கு­முள்ள தொடர்பு மிகவும் நெருக்­க­மா­னது. உதா­ர­ண­மாக, இறை­தூ­தரே வணி­கத்தில் ஈடு­பட்­டவர். அவ­ரது முதல் மனைவி ஒரு வியா­பார ஸ்தாப­னத்தின் தலைவி. குறை­ஷி­யர்கள் வணி­கர்கள். மக்கா ஒரு வணி­கத்­தலம். வரு­டத்தில் ஒரு­முறை அது ஒரு மாபெரும் கடை வீதி­யாக மாறும். அந்த நாட்­களில் அந்த மைதா­னத்­துக்குள் சண்­டைகள் போடு­வ­தற்குத் தடை. ஏனெனில் அது வர்த்­த­கத்தைப் பாதிக்கும்.

இவ்­வா­றான ஒரு வணிகச் சூழ­லிலே இறங்­கிய ஒரு மார்க்கம் அந்தச் சூழ­லுக்­கேற்­ற­வாறு அதன் போத­னை­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்­து­வது அந்த மார்க்கம் பர­வு­வ­தற்கு இல­கு­வாக இருக்­காதா? என­வேதான் குர்­ஆ­னிலும் வணிகம் தொடர்­பான வார்த்­தை­களும் உதா­ர­ணங்­களும் மலிந்து காணப்­ப­டு­கின்­றன. அவற்­றை­யெல்லாம் விப­ரிப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல. ஏரா­ள­மான ஆராய்ச்சி நூல்கள் ஐரோப்­பிய மொழி­க­ளிலும் ஏன் அரபு மொழி­யி­லும்­கூட வெளி­வந்­துள்­ளன. விரும்­புவோர் அவற்றைப் படித்­த­றி­யலாம்.

இலங்­கையில் இஸ்­லா­மிய
மத­போ­தனை
‘அல்­லாஹ்வை பயந்து கொள்­ளுங்கள். ஆகிறம் நிச்­சயம். இவ்­வு­லக வாழ்க்கை நிரந்­த­ர­மில்லை. நல்ல அமல்­களைச் செய்­து­கொண்டு சுவர்க்­கம்­போக வழி­தே­டுங்கள். அந்த அமல்­க­ளா­வன கலி­மாவைச் சொல்லி ஈமான் கொள்­ளுதல், ஐவேளைத் தொழுகை, றம­ழானில் நோன்பு, ஏழை வரி, ஹஜ் ஆகிய கட­மைகள் ஐந்தும் குர்­ஆனை ஓது­வதும் நபிகள் நாய­கத்தின் போத­னை­க­ளின்­படி நடப்­ப­து­மாகும். நீங்கள் செய்த நன்­மை­களை தராசின் ஒரு தட்­டிலும் தீமை­களை இன்­னொரு தட்­டிலும் போட்டு எந்­தத்­தட்டு தாழ்­வா­கப்­ப­ணி­யுமோ அதன்­படி அல்லாஹ் உங்­களை சுவர்க்­கத்­துக்கோ நர­கத்­துக்கோ அனுப்­புவான்’. இந்தச் சுருக்­கத்தைச் சுற்­றியே எல்லா மத­போ­த­னை­களும் ஆண்­டாண்டு கால­மாக நடை­பெற்று வந்­தன. இந்தப் போத­னையில் இறை­வ­னையே ஒரு வியா­பா­ரி­யாக மாற்­றி­விட்­ட­தையும் வாச­கர்கள் கவ­னிக்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் பக்­தர்­களும் பள்­ளி­வாசல், குடும்பம், தொழில் என்ற மூன்­றையும் சுற்­றியே தங்­களின் வாழ்க்­கையை அமைத்துக் கொண்­டனர். இந்தப் போத­னையில் சமூ­கத்­தைப்­பற்­றிய சிந்­தனை, நாட்­டைப்­ பற்­றிய சிந்­தனை, கலை ஆர்வம், அர­சியல் ஈடு­பாடு, ரசா­ஞானம் என்­ப­வற்­றிற்கு இட­முண்டா? இவ்­வாறு தாமும் தம்­பாடும் என்று வாழ்ந்த ஒரு சூழ­லிற்தான் நாட்­டுக்குச் சுதந்­திரம் கிடைத்து ஜன­நா­யக ஆட்சி அறி­மு­க­மா­னது. அதன் பிறகு நடந்­த­தென்ன?

நாட்டில் நடைபெறும் அரசியல் மாற்றங்களின் பங்காளிகளாக முஸ்லிம்கள் மாறவேண்டுமே ஒழிய வெறும் பார்வையாளர்களாக இருந்து கொண்டு முஸ்லிம் தலைவர்களின் பின்னால் ஓடுவதால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தலைவர்களின் செல்வம்தான் பெருகும்.

இராமன் ஆண்­டா­லென்ன
இரா­வணன் ஆண்­டா­லென்ன?
ஆகி­றத்­தைப்­பற்­றியும் சுவர்க்கம், நர­கத்­தைப்­பற்­றியும் மௌத்­தைப்­பற்­றியும் சதா சிந்­தித்துக் கொண்டு வாழ்ந்த ஒரு வைசியர் இனம் அர­சி­ய­லையும் வியா­பாரக் கண்­கொண்டே நோக்­கி­யதில் வியப்­பில்லை. எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் தமது தொழி­லுக்கும் மார்க்­கத்­துக்கும் இடை­யூறு ஏற்­ப­டுத்­தாமல் ஆண்டால் அதுவே போது­மா­னது என்­ற­போக்­கி­லேயே அர­சி­யலை முஸ்­லிம்கள் அணு­கினர். அதைத்தான் மத­போ­த­கர்­களும் சரி­கண்­டனர்.

பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்கும், மத­ர­சாக்­களை அமைப்­ப­தற்கும், ஹஜ் கட­மையை நிறை­வேற்­றவும், அனு­ம­தி­களை வழங்கி, வியா­பார அபி­வி­ருத்­திக்கும் தடை­யில்­லாமல் ஓர் அர­சாங்கம் அமை­யு­மானால் அந்த அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வதே சிறந்­தது என்ற ஒரு நியதி சமூ­கத்தில் உரு­வா­கிற்று. இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன, இரு­வ­ருமே காபிர்கள். ஆதலால் மேற்­கூ­றிய தேவை­களை யார் பூர்த்தி செய்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கே எங்கள் வாக்கு என்ற ஓர் அர­சியல் சூத்­திரம் முஸ்­லிம்­க­ளி­டையே வளர்ந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் அந்தச் சூத்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இயங்­கினர்.

வியா­பார அர­சி­யலும் விபச்­சார
அர­சி­யலும்
1980க்குப் பின்னர் முஸ்லிம் கட்­சி­யொன்று உரு­வா­கும்­வரை மேலே விப­ரிக்­கப்­பட்ட வியா­பார அர­சி­யல்தான் முஸ்லிம் சமூ­கத்­துக்­கென சில சலு­கை­களைப் பெற்றுக் கொடுத்­தது என்­பதை மறுக்க முடி­யாது. இன்­றைய முஸ்லிம் பாட­சா­லை­களும் முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யங்­களும் ஆசி­ரிய பயிற்சிக் கலா­சா­லை­களும் அதற்குச் சிறந்த உதா­ர­ணங்கள். சிங்­கள தமிழ் இனங்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட இன­வாத விரிசல் முஸ்­லிம்­களை இடை­ந­டுவே நுழை­ய­விட்­டமை முஸ்­லிம்­க­ளுக்குச் சாத­க­மாக அமைந்து அவர்­களின் வியா­பார அர­சி­யலை இலா­ப­க­ர­மா­ன­தொன்­றாக ஆக்­கி­விட்­டது. ஆனால் ஒன்றை மட்டும் வலி­யு­றுத்த வேண்டும். அதா­வது அந்தச் சலு­கை­களைப் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் தமது சுய­ந­லத்தை முன்­வைத்து அவற்­றுக்­காகப் பாடு­ப­ட­வில்லை. அவர்­களின் சேவை­களை இன்­றைய முஸ்லிம் சந்­ததி மறந்­து­விட்­ட­மையும் இச்­ச­மூ­கத்தின் வியா­பாரக் கலாச்­சா­ரத்தின் ஒரு பிர­தி­ப­லிப்பே. சிந்­திப்­ப­வர்­க­ளுக்கு அந்த உண்மை விளங்கும்.

1980க்குப் பின்னர் ஏற்­பட்ட மாற்றம் வியா­பார அர­சி­யலை விபச்­சார அர­சி­ய­லாக்கி விட்­டது. ஒரு விபச்­சா­ரிக்கு யாருடன் உட­லு­றவு கொள்­ள­வேண்டும் என்ற கட்­டுப்­பாடு இல்லை. யார் பணம் தரு­வாரோ அவ­ருடன் உறவு கொள்­வதே ஒரு விப­சா­ரியின் ஒரே நியதி. அதைப்­போ­லவே 1980க்குப் பின்னர் முஸ்லிம் கட்­சி­களை உரு­வாக்கி நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்­த­வர்கள் எந்தக் கட்­சி­யுடன் இணைந்து, எந்தச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு என்ன தந்­தி­ரத்தைப் பாவித்து நுழைந்­தாலும் அவர்­களின் குறிக்கோள் எதி­ர­ணியில் அமர்­வ­தல்ல. அர­சாங்­கத்தில் அங்கம் வகித்து அமைச்­சர்­க­ளா­கவும் ஆளு­னர்­க­ளா­கவும் பத­வி­பெற்றுப் பணம் சம்­பா­திப்­பதே. அதற்­காகத் தம் இனத்தை எந்த ஒரு ஆட்­சிக்கும் ஈடு­வைக்கும் அர­சியல் தலை­மை­களை விபச்­சா­ரிகள் என்று கூறு­வது தவறா? அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பத­வியும் பணமும். அதற்­காக சமூ­கத்­தையும் ஏன் சந்­தர்ப்பம் நிர்ப்­பந்­தித்தால் மார்க்­கத்­தை­யும்­கூட ஈடு­வைக்க இவர்கள் தயார். முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் போராடிப் பெறுவோம் என்று பறை அடித்­த­வர்கள் இது­வரை போரா­டிப்­பெற்ற ஏதா­வது ஓர் உரி­மையை எடுத்துக் கூறு­வார்­களா? அதுதான் போகட்டும். அந்த உரி­மைகள் எவை என்ற பட்­டி­ய­லை­யா­வது அவர்­களால் வெளி­யிட முடி­யுமா?

முஸ்­லிம்­களின் உரி­மை­களா
பிரச்­சி­னை­களா?
எந்த ஒரு ஜன­நா­யக ஆட்­சி­யிலும் ஜன­நா­ய­கத்தின் விழு­மி­யங்­களை அர­சியல் யாப்பு கட்டிக் காக்­கு­மானால் எந்­தவோர் இனத்­துக்கும் அல்­லது சாதிக்கும் அல்­லது மதத்­துக்கும் தனிப்­பட்ட உரி­மை­க­ளென்று எதுவும் இருக்க முடி­யாது. ஓர் அப்­பு­ஹா­மிக்கோ அரு­ளப்­ப­னுக்கோ ஆறு­மு­கத்­துக்கோ இல்­லாத உரிமை அப்­துல்­லா­வுக்கு இருக்க முடி­யுமா? மற்­ற­வர்­க­ளுக்­குள்ள உரி­மைகள் முஸ்­லிம்­க­ளுக்கு மறுக்­கப்­ப­டு­மானால் போராட வேண்­டி­யது முஸ்­லிம்­க­ளுக்கு உரிமை கேட்­டல்ல. ஏனெனில், அப்­போ­ராட்டம் இன­வா­த­மாக மாறும் ஆபத்து உண்டு;. ஆகவே ஜன­நா­யக உரி­மை­களை கட்­டிக்­காக்கும் போராட்­ட­மாக அது மாற­வேண்டும். அந்தப் போராட்­டத்­துக்கு முஸ்லிம் கட்­சி­யென்ற ஒன்று தேவை இல்லை.
இந்த நாட்­டிலே ஜன­நா­யகம் இல்லை. அது இருக்க வேண்­டிய இடத்தில் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் குடி­கொண்­டி­ருக்­கி­றது. அதுதான் ஒரு புது­மை­யான அர­சியல் கலாசா­ரத்தை உரு­வாக்கி முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மல்­லாமல் சகல சிறு­பான்மை இனங்­க­ளுக்கும் எதி­ரி­யாக மாறி­யுள்­ளது. இதுதான் இன்­றைய தலை­யாய பிரச்­சினை. அந்த இன­வா­தமே கடந்த ஏழு தசாப்­­தங்­க­ளாக இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் சீர­ழித்துள்­ளது. அந்த இன­வா­தத்தை ஒழிக்­கவும் ஜன­நா­ய­கத்­துக்­காகப் போரா­டவும் முஸ்லிம் கட்­சி­க­ளென்ற ஒன்று தேவையா? தேவை­யென்றால் அந்த அர­சியல் கணக்கு தப்­பா­னது என்­ப­தைத்தான் இக்­கட்­டுரை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

அமைப்பு மாறாமல்
பிரச்­சி­னைகள் தீராது
முஸ்­லிம்­க­ளுக்கு நிலப் பிரச்­சினை, தொழில் பிரச்­சினை, வறுமைப் பிரச்­சினை, கல்விப் பிரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சினை எனப் பல்­வேறு பிரச்­சி­னைகள் உண்டு. அவற்றை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அந்தப் பிரச்­சி­னைகள் மற்ற இனங்­க­ளுக்கு இல்லையா? முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும்தான் உண்டு என்­ப­துபோல் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் பிரச்­சாரம் செய்­வது அவர்­களும் இன­வா­தத்தை வளர்த்து அதன் வெப்­பத்­திலே கூதல் காய்­வ­தற்­காக என்­பதை முஸ்­லிம்கள் உணர வேண்டும். ஒரு இன­வா­தத்­துக்கு மருந்து இன்­னொரு இன­வாதம் என்று கரு­தினால் இந்த நாட்டு மக்­க­ளுக்கு என்­றுமே விடிவு காலம் வராது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களும் என்­றுமே தீரப்­போ­வ­தில்லை. அதைத் தீர்க்­காமல் வைத்­தி­ருந்­தாற்தான் முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களும் அந்தப் பல்­ல­வி­யையே பாடிக்­கொண்டு தேர்தல் நாடகம் நடத்­தலாம். இதுதான் கடந்த நாற்­பது ஆண்­டு­கால முஸ்லிம் அர­சியல்.

அமைப்பை மாற்ற சந்­தர்ப்பம் தேவை
முதலில் இந்த நாட்டைப் பீடித்­துள்ள பேரி­ன­வாத அர­சியல் கலாச்­சா­ரத்­தையும் அதற்குப் பக்­க­ப­ல­மாக இருக்கும் அர­சியல் யாப்­பையும் நீக்­க­வேண்டும். அதனை உணர்ந்­துதான் கடந்த வருடம் இளைய சமு­தா­ய­மொன்று அமைப்பை மாற்று என்ற கோரிக்­கையை முன்­வைத்து காலி­மு­கத்­தி­டலில் கிளர்ந்­தெ­ழுந்­தது. அந்த மாற்­றத்தை இப்­போது நாடா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்­பான்­மை­யான அங்­கத்­த­வர்கள் செய்யமாட்­டார்கள் என்­பதை அறிந்­துதான் அந்த 225 அங்­கத்­த­வர்­க­ளை­யுமே வேண்­டா­மென்றும் குர­லெ­ழுப்­பினர். அந்தக் கிளர்ச்­சியை முறி­ய­டித்து அதன் தலை­வர்­க­ளையும் சிறையில் தள்­ளி­யபின் ரணிலின் தலை­மையில் அதே இன­வாதக் கும்பல் ஆட்­சியைத் தொடர்­கி­றது.

இந்த ஆட்­சி­யையும் அதன் அரசியல் கலாச்சார அமைப்பையும் மாற்றுவதற்கு மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றக்கூடிய ஓர் அணியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு வெள்ளோட்டமாகவே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஊராட்சிமன்றத் தேர்தலை கருதவேண்டும். ஆனால் அதை நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் ரணிலின் ஆட்சி இறங்கியுள்ளது. அந்த முயற்சியை எதிர்த்து மக்கள் சக்தி ஒன்று திரள்கிறது. அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை. நாட்டில் நடைபெறும் அரசியல் மாற்றங்களின் பங்காளிகளாக முஸ்லிம்கள் மாறவேண்டுமே ஒழிய வெறும் பார்வையாளர்களாக இருந்து கொண்டு முஸ்லிம் தலைவர்களின் பின்னால் ஓடுவதால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தலைவர்களின் செல்வம்தான் பெருகும்.

முடி­வாக, கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்கள் போட்ட அர­சியல் கணக்கு தப்­பா­னது என்­ப­தையும் புதிய கணக்­கொன்று அவ­சியம் என்­ப­தையும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளா­வது உணர்ந்து செயற்­ப­டு­வார்­க­ளாயின் அதுவே இக்­கட்­டு­ரையின் வெற்றி.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.