சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும்

0 446

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

நச்சு விருட்சம்
இலங்­கையின் இன்­றைய இனப்­பி­ரச்­சினை அர­சியல் அதி­கார நல­னுக்­காக அர­சி­யல்­வா­தி­களால் ஏழு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் விதைக்­கப்­பட்டு நீரூற்றி வளர்க்­கப்­பட்ட ஒரு நச்சு விருட்சம். இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் முக­மாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சிகள் அத்­த­னையும் அந்த விருட்­சத்தின் ஒரு சில கிளை­களை மட்டும் நறுக்கி வீசி­விட்டு மரத்தைக் காப்­பாற்றும் நோக்­க­மா­க­வேதான் அமைந்­தன என்று கூறு­வதில் எந்தத் தவறும் இல்லை. இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காணும் எண்­ணத்தில் எழுந்த போராட்­டங்கள் சாத்­வீ­க­மாக ஆரம்­பித்து, இனக்­க­ல­வ­ரங்­களை உரு­வாக்கி, ஆயு­தப்­போர்­வரை நீடித்து, பல்­லா­யி­ரக்­க­ணக்­காண அப்­பாவி உயிர்­க­ளையும் பல­கோ­டிக்­க­ணக்­கான உட­மை­க­ளையும் பலி­கொண்டு இன்று நாட்­டையே வங்­கு­ரோத்­தாக்­கி­யுள்­ளன. பல்­லி­னங்­களை உள்­ள­டக்­கிய ஒரு நாட்டில் இன­வா­தத்தை வளர்த்­து­விட்டால் அது எங்­கேபோய் முடியும் என்­ப­தற்கு இலங்கை மிகச் சிறந்­ததோர் எடுத்­துக்­காட்டு.

பசி புகட்டும் பாடம்
“பசி­வந்­திடப் பத்தும் பறந்­து­போம்”என்றாள் ஒளவை. அவள் கூறிய பத்­தினுள் இனப்­பற்று அடங்­க­வில்லை. ஏனென்றால் அப்­ப­டி­யொரு பற்றே மனி­தப்­பற்றை வளர்த்த அன்­றைய சமூ­கத்தில் இருக்­க­வில்லை. ஆனால் பத்­தோடு பதி­னொன்­றாக இன­வா­தத்­தையும் மறந்­து­வி­டக்­கூ­டிய ஒரு சூழல் இப்­போது பசியின் கொடு­மையால் உரு­வா­கி­யுள்­ளது. அதற்குக் காரணம் உள்­நாட்டு இளஞ்­சந்­த­தியின் விழிப்­பு­ணர்வு ஒரு புற­மி­ருக்க, சர்­வ­தே­சத்தின் அழுத்­தமே முக்­கி­ய­மா­ன­தெனக் கூறலாம். வெளி­நாட்டுப் பிச்சை இல்­லாமல் உள்­நாட்டுப் பசியைத் தீர்க்க முடி­யாது என்ற நிலைப்­பாட்­டுக்கு இலங்­கையின் அர­சியல் தலை­மைப்­பீடம் தள்­ளப்­பட்­டுள்­ளது. இன­வாதத் தீயை வளர்த்து, அந்த வெப்­பத்­திலே குளிர் காய்ந்­து­கொண்டு, அபி­வி­ருத்தி என்ற பெயரில் நாட்டின் செல்­வத்­தையே திட்­ட­மிட்டுச் சூறை­யாடிச் சுய­லாபம் சம்­பா­தித்த அர­சியல் தலை­மைகள், இது­வரை நாடு­பட்ட கட­னையே இறுக்க முடி­யாத நிலையில் இனியும் கடன்­ப­டா­மலும் பசியை ஓட்­ட­மு­டி­யாது என்­ப­தையும் உணர்ந்­துள்­ள­தற்கு அறி­கு­றி­யா­கவே ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­ஹவின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு சம்­பந்­த­மான அறி­விப்­பு­களைக் கரு­துதல் வேண்டும். பசியே! நீ வாழ்க.

உண­ர­வேண்­டிய ஓர் உண்மை
சர்­வ­தேச அரங்கின் அழுத்­தங்­களே இத்­தி­ருப்­பத்­துக்­கான ஒரு முக்­கிய காரணம் எனினும் இப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை சர்­வ­தே­சமோ அல்­லது வேறு எந்­த­வொரு நாடோ இலங்­கை­யின்மேல் திணிக்க முடி­யாது. இலங்­கையின் நலன்­க­ருதி ஆக்­க­பூர்­வ­மான பல ஆலோ­ச­னை­களை அவை முன்­வைக்­கலாம், ஆனால் அவற்றை ஏற்­பதும் விடு­வதும் இலங்­கையின் உரிமை. எனவே இப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதித் தீர்வு இலங்­கைக்குள் இருந்தே இலங்கை மக்­களின் ஆத­ர­வுடன் உரு­வாக வேண்டும். அதனை உரு­வாக்­கக்­கூ­டிய சாணக்­கி­ய­முள்ள தலை­வர்கள் எங்கே என்­ப­துதான் இன்­றையப் பிரச்­சினை.

ஜனா­தி­ப­தியின் தவ­றான ஆரம்பம்
ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ, எதிர்­வரும் சுதந்­தி­ர­தின விழா­வுக்கு முன்­ன­ராக இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண வேண்­டு­மென்ற அவ­ச­ரத்­தினால் மூவி­னங்­களின் அர­சியல் தலை­வர்­களை முதலில் வர­வ­ழைத்­துப்­பேச எடுத்த முடிவு தவ­றான ஓர் ஆரம்பம் என்­பதே இக்­கட்­டு­ரையின் நிலைப்­பாடு. அர­சி­யல்­வா­தி­களால் அதி­கார நல­னுக்­காகத் தோற்­று­விக்­கப்­பட்ட பிரச்­சி­னை­யொன்­றிற்கு அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்தே அதற்­கான பரி­கா­ரத்­தையும் கோரு­வது திரு­ட­னி­டம்போய் திருட்டை ஒழிக்க ஆலோ­சனை கேட்­பது போல் இல்­லையா?

அவ­ருடன் சந்­தித்த முத­லா­வது சந்­தர்ப்­பத்­தி­லேயே ஒவ்வோர் அர­சி­யல்­வா­தியும் அவ்­வ­வர்­களின் வாக்குச் சாவ­டி­க­ளிலும் தேர்தல் தொகு­தி­க­ளிலும் கண்­களை வைத்­துக்­கொண்டு அவர்­களின் வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டிய தீர்­வு­க­ளையே முன்­வைத்து உரை­யா­டி­னார்­களே ஒழிய இந்த நாட்டின் சபீட்­சத்தை கருத்­திற்­கொண்டு இன­வா­தத்தின் முழு­வ­டி­வத்­தையும் முன்­வைத்து அந்த உரை­யா­டலை ஆரம்­பித்­த­தாகத் தெரி­ய­வில்லை. எடுத்த எடுப்­பி­லேயே அர­சியல் சட்­டத்தில் பதின்­மூன்றாம் திருத்­தத்தை கொண்­டு­வர வேண்­டு­மென்று சில பிர­ப­லங்­களும், கிழக்­கையும் வடக்­கையும் இணைப்­பதா இல்லையா என்ற பிரச்­சி­னை­பற்றி இன்னும் சில பிர­ப­லங்­களும், அதி­காரப் பங்­கீ­டு­பற்றி மேலும் சில தலை­மை­களும், தமி­ழ­ரி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் இழப்­பு­க­ளைப்­பற்றி ஒன்­றி­ரண்டு தலை­மை­களும் என்­ற­வாறு பிரச்­சி­னை­க­ளையே முன்­வைத்துப் பேச்­சு­வார்த்­தையை ஆரம்­பித்­தமை அத்­த­லை­மை­க­ளி­டமும் ஜனா­தி­ப­தியைப் போன்று அர­சியல் சாணக்­கியத் திறன் இல்லை என்­ப­தையே தெளிவு படுத்­து­கி­றது.

இவ்­வாறு கூறு­வ­தனால் இப்­பி­ரச்­சி­னை­களை நிரா­க­ரிப்­ப­தாகக் கருதக் கூடாது. அற்றை எதிர்­கொண்டு தீர்க்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். ஆனால் அவற்றைச் சூழ்ந்­துள்ள சில தப்­பான சிந்­த­னை­களை முதலில் போக்க வேண்டும். உதா­ர­ண­மாக, பதின்­மூன்றாம் திருத்­தத்­திலும் வடக்குக் கிழக்கு இணை­த­லிலும் இந்­தி­யாவின் முத்­திரை பதிந்­துள்­ளதை யார்தான் மறுப்பர்? ஆகவே அவை இந்­தி­யாவின் திணிப்பு என்ற கருத்து சிங்­கள மக்­க­ளி­டையே அதுவும் தென்­னி­லங்கைப் பொது ஜனங்­க­ளி­டையே புதைந்து கிடக்­கி­றது. அவர்­களின் இந்­திய வெறுப்­புக்கு ஒரு நீண்ட வர­லா­றுண்டு. அதனை இங்கே விப­ரிப்­பது பொருத்­த­மற்­றது.

ஏற்­க­னவே கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யா­கி­ய­போது, அவர் முதன் முதலில் புது தில்­லிக்குப் பய­ண­மாகி, அங்கே இந்­தி­யா­வி­ட­மி­ருந்து கடன் பெறு­வ­தற்­க­ாக பதின்­மூன்றாம் திருத்­தத்தை அமுல் நடத்­து­வ­தாகப் பிர­தமர் மோடிக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து, இலங்கை திரும்­பி­யதும் தென்­னி­லங்­கையின் சீற்­றத்தை உணர்ந்த ஜனா­தி­பதி இர­வோ­டி­ர­வாக அந்த வாக்­கு­று­தியைப் பின்­வாங்­கி­யமை வாச­கர்­க­ளுக்கு ஞாப­க­மி­ருக்­கலாம். இப்­போ­தும்­கூட ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுடன் சிறு­பான்­மை­யி­னரின் தள­ப­திகள் நடாத்­திய பேச்­சு­வார்த்தை­களின் விப­ரங்கள் கசியத் தொடங்­கவே சில சிங்­கள இன­வா­திகள் அவர்­களின் வழ­மை­யான எதிர்ப்பை வெளிக்­காட்டத் தொடங்­கி­யுள்­ளனர்.

இதற்கு மத்­தியில் அவ் இன­வா­தி­க­ளுக்கு ஆத­ரவு திரட்­டு­வ­து­போன்று ஒரு முஸ்லிம் பிர­பலம் வடக்­கையும் கிழக்­கையும் இணை­வதை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்ற பல்­ல­வியை மீண்டும் பாடத் தொடங்­கி­யுள்ளார். பணத்­துக்கும் பத­விக்கும் ஆசைப்­பட்ட இவ்­வா­றான முஸ்லிம் பிர­ப­லங்­களின் ஆத­ர­வி­னா­லே­தானே 20ஆம் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு அதன்­வி­ளை­வாக ஏற்­பட்ட இத்­தனை அர­சியல் அமளி தும­ளி­களும் பொரு­ளா­தாரக் கஷ்­டங்­களும் நாட்டின் வங்­கு­ரோத்தும் என்­பதை மக்கள் மறப்­பார்­களா? என­வேதான் இவ்­வா­றான பிர­ப­லங்கள் வாய் மூடி இருந்­தாலே இப்­பி­ரச்­சினை தீர்­வ­தற்குப் போது­மா­னது என்­பதை இங்கே வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்­தப்­பி­ரச்­சி­னையை உண்­மை­யி­லேயே தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஜனா­தி­ப­திக்கு இருந்­தி­ருந்தால் முதலில் அவர் செய்­ய­வேண்­டி­யது என்­ன­வெனில், இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல இந்­நாட்டின் அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்கும் சொந்­த­மா­னது என்ற உண்­மை­யையும் சகல இனங்­க­ளி­னதும் ஒத்­து­ழைப்­பின்றி இந்த நாட்டை இனிமேல் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்ற உண்­மை­யையும் தென்­னி­லங்கைச் சிங்­கள பௌத்த சமூ­கத்­தி­ன­ரிடம் துணி­வுடன் வெளிப்­ப­டுத்தி அவர்­களின் ஆத­ரவைப் பெற்­ற­பின்னர் சிறு­பான்மை இனங்­களின் தலை­மை­க­ளு­ட­னான உரை­யா­டலை ஆரம்­பித்­தி­ருக்க வேண்டும். அவ்­வா­றான ஒரு முயற்­சிக்கு நிச்­ச­ய­மாக இன்­றைய இளஞ்­சந்­ததி அவ­ருடன் இணைந்து செயற்­பட்­டி­ருக்கும் என்­பதை அவ்­வி­ள­வல்­களின் அர­க­லய போராட்டம் எடுத்­துக்­காட்­டி­யது.

தவ­ற­விட்ட சந்­தர்ப்பம்
இளை­ஞர்­களின் அந்த அர­க­லயப் போராட்டம் சகல இனங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் எந்­தவோர் அர­சியல் கட்­சி­யையும் சாரா­த­தா­கவும் ஆரம்­பித்­தமை இன ஒற்­று­மையின் அவ­சியம் பற்­றிய அவர்­களின் தாகத்­தையும் விழிப்­பு­ணர்­வையும் எடுத்­துக்­காட்­ட­வில்­லையா? இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்கு இந்த இளம் படை­யையே ஜனா­தி­பதி ஓர் ஆயு­த­மாகக் கொண்­டி­ருக்­கலாம். ஆனால் நடந்­த­தென்ன? அந்த இளை­ஞர்­க­ளையே தீவி­ர­வா­தி­க­ளெனப் பட்டம் சூட்டி அவர்­களின் தலை­வர்­க­ளையும் சிறை­யி­ல­டைத்து அர­ச­ப­டை­களின் ஆத­ர­வுடன் அவர்­களின் மறு எழுச்­சிக்கும் தடை­வ­குத்­தி­ருக்கும் இந்த ஜனா­தி­ப­தியின் அர­சியல் மட­மையை என்ன சொல்லி அழைப்­பதோ? அரி­ய­தொரு சந்­தர்ப்­பத்தை தனது அர­சியல் அதி­கார நல­னுக்­காக நழு­வ­விட்­ட­பின்னர் இப்­போது அவர் மேற்­கொள்ளும் முயற்சி நிச்­சயம் தோல்­வி­யுறும் என்­பதை இனியும் வலி­யு­றுத்த வேண்­டுமா?

ஒரே வழி
ஏற்­க­னவே கூறி­ய­து­போன்று அர­சி­யல்­வா­தி­களால் அர­சியல் நலன் கருதி ஆரம்­பிக்­கப்­பட்ட இப்­பி­ரச்­சி­னையை அர­சி­யல்­வா­தி­களே தீர்த்­து­வைப்பர் என்று யாரா­வது எதிர்­பார்த்தால் அது ஒரு பகற்­க­ன­வா­கவே முடியும். அதே­போன்று அன்­னி­யரின் தலை­யீடும் இதனைத் தீர்க்க உத­வாது. அவ்­வா­றாயின் இதற்கு வழி என்ன? இந்­தப்­பி­ரச்­சினை பற்­றிய தீர்வை அர­சி­யல்­வா­தி­களின் கைக­ளி­லி­ருந்து பிடுங்­கி­யெ­டுத்து நாட்­டுப்­பற்றும் மனி­த­நே­யமும் அர­சியல் சாணக்­கிய நிபு­ணத்­து­வமும் கொண்ட ஒரு குழு­விடம் (a committee of statespersons) சமர்ப்­பித்து அக்­கு­ழு­வினை இளந்­த­லை­மு­றை­யி­ன­ருடன் இணைந்து செயற்­ப­டு­மாறு சமூகம் பணிக்­க­வேண்டும். அவ்­வா­றான ஒரு குழுவில் எல்லா இனங்­களும் அங்­கத்­துவப் படுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதும் அவ­சி­ய­மில்லை. ஏனெனில் அக்;குழு­வினர் மேலே வரை­யறை செய்­யப்­பட்ட இலக்­க­ணங்­க­ளுக்குள் அடங்­குவர். ஆனால் முக்­கிய பிரச்­சினை என்­ன­வெனில் அப்படிப்பட்ட நிபுணத்துவர்களை எங்கே தேடுவது என்பதே.

இன­வாதச் சூழ­லி­லேயே பிறந்து வளர்ந்து முதிர்ச்சி அடைந்து இன­வாத நிழ­லி­லேயே தூங்­கி­யெழும் ஒரு சந்­த­திக்கும் அந்த இன­வா­தத்தின் தீய விளை­வு­களால் தங்­களின் எதிர்­காலக் கன­வு­களை நன­வாக்க முடி­யாமல் துடிக்கும் ஓர் இளம் சந்­த­திக்கும் இடையே ஒரு பாரிய இடை­வெளி உண்டு. இந்த இளஞ்­சந்­ததி வாழும் உல­கையும் அவர்­களின் சிந்­த­னை­யையும் செயற்­பா­டு­க­ளையும் முது­மை­ய­டையும் சந்­த­தியால் விளங்­கு­வது கடினம். இள­வல்­களை வெறும் கன­வு­லகில் வாழும் பதின்­ம­வ­ய­தினர் என்று எடை­போட்டு அவர்­களை சமூக விவ­கா­ரங்­க­ளி­லி­ருந்து ஒதுக்க முனை­வது மடமை. அதை­யேதான் ஜனா­தி­பதி இப்­பொ­ழுது செய்­துள்ளார். மேற்­கூ­றப்­பட்ட குழு­வி­னரை அடை­யாளம் காண்­ப­தற்கு இந்த இள­வல்­களின் ஆலோ­ச­னையும் ஒத்­து­ழைப்பும் அவ­சியம். அந்தக் குழு­விலே அங்­கத்­துவம் பெறும் தகுதி இளம் தலை­மு­றை­யி­ன­ரிடம் இல்­லை­யென்­றாலும் அந்தத் தகு­தி­ய­டையோர் யார் என்­பதை அவர்­களால் சுட்­டிக்­காட்ட முடியும். ஆக­வேதான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நீக்கி இளந்­த­லை­மு­றை­யி­னரை அணைத்துச் செயற்­ப­டக்­கூ­டிய சாணக்கியத் திறனாளிகளிடம் ஒப்படைத்தல் வேண்டும். அவ்வாறான அனுபவமுள்ள திறனாளிகள் இலைமறை காய்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.