இலங்கையின் பொருளாதார நெருக்கடி: சிங்கள இனவாதிகளின் கள்ள மௌனம்!

0 827

எம்.எல்.எம்.மன்சூர்

இன்று நாட்டில் தோன்றி இருக்கும் பாரிய சமூக, அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியை மஹிந்த ராஜ­பக்­சவின் இரண்­டா­வது பதவிக் காலத்தில் (2010 – 2015) ஊன்­றப்­பட்ட விஷ வித்­துக்­களின் அறு­வ­டை­யா­கவே பார்க்க வேண்டி இருக்­கி­றது. அது மக்கள் மத்­தியில் ஒரு­போதும் இல்­லாத விதத்­தி­லான ஒரு பேரச்­சத்­தையும், எதிர்­காலம் குறித்த ஒரு நிச்­ச­மற்ற உணர்­வையும் எடுத்து வந்­தி­ருக்­கி­றது. அண்­மைய வரு­டங்­களில், இலங்கை அர­சியல் சமூ­கத்தில் ஒரு பெரும் சக்­தி­யாக எழுச்­சி­ய­டைந்­தி­ருக்கும் சிங்­கள இன­வா­திகள் மற்றும் தேசி­ய­வா­திகள் இந்த நெருக்­க­டியை தமது வாழ்­நாளில் சந்­திக்க நேரிட்ட மிகப் பெரிய ஒரு சோத­னை­யாகப் பார்க்­கி­றார்கள்.

இந்த மோச­மான பொரு­ளா­தார நெருக்­கடி குறித்தோ அல்­லது அது எடுத்து வந்­தி­ருக்கும் எடுத்து வர­வி­ருக்கும் பயங்­க­ர­மான பின்­வி­ளை­வுகள் குறித்தோ வாய் திறக்க முடி­யாத நிலையில் இந்தத் தரப்­புக்கள் இருந்து வரு­கின்­றன. அவர்­க­ளு­டைய இந்த கள்ள மௌனத்­துக்­கான காரணம் இந் நெருக்­க­டியின் சூத்­தி­ர­தா­ரிகள் தம்மால் போஷித்து வளர்க்­கப்­பட்ட ராஜ­பக்­சாக்கள் என்ற பகி­ரங்க இர­க­சி­யத்தை ஏற்றுக் கொள்­வ­தி­லுள்ள தயக்கம் மற்றும் குற்ற உணர்ச்சி.

1956 இன் பின்னர் முதல் தட­வை­யாக சிங்­கள மக்­களை இன மத அடிப்­ப­டையில் ஒன்று திரட்­டிய சாத­னையை 2010 இல் நிகழ்த்திக் காட்­டிய அவர்கள், இப்­பொ­ழுது அந்தப் பெரும் கனவு சிதைந்து போவதைப் பார்த்து கடும் விரக்தி நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ‘அப்­ப­டி­யான ஒரு அணி திரட்­ட­லுக்­கான வாய்ப்பு அடுத்து வரும் வரு­டங்­களில் அநே­க­மாக சாத்­தி­ய­மில்லை‘ என்ற யதார்த்தம் அவர்­க­ளு­டைய கவ­லைக்­கான முக்­கிய காரணம்.

ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தைப் பெரு­ம­ள­வுக்குக் குறைக்கும் அர­சியல் யாப்­புக்­கான 21 ஆவது திருத்தம் குறித்த நகர்­வுக்கு சிங்­கள சமூ­கத்தில் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அள­வுக்கு எதிர்ப்­புக்கள் கிளம்­பாமல் இருப்­பதை மற்­றொரு பின்­ன­டை­வாகப் பார்க்­கி­றார்கள் இந்த தேசி­ய­வா­திகள்.

ஞான­சார தேரர் போன்­ற­வர்கள் சந்­திக்கும் நெருக்­கடி வேறு வித­மா­னது. தமக்கு எப்­பொ­ழுதும் பாது­காப்பு வழங்கி, அர­வ­ணைத்துக் கொள்ளும் போஷகர் நிலையில் இருந்து வரும் கோட்­டா­பய ராஜ­பக்ச இப்­பொ­ழுது எத­னை­யுமே செய்ய முடி­யாத அள­வுக்கு பல­வீ­ன­ம­டைந்து போயி­ருப்­பது அவர்­க­ளுக்கு மத்­தியில் ஒரு வித­மான அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ‘எந்த ஒரு நேரத்­திலும் சட்டம் தம் மீது பாய முடியும்‘ என்ற பீதியும் இப்­பொ­ழுது அவர்­களை அலைக்­க­ழித்து வரு­கி­றது.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செய­ல­ணியின் இறுதி அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட நிகழ்வு – சிங்­கள பௌத்த செயல்­திட்­டத்தின் மற்­றொரு வர­லாற்று மைல் கல்­லாக கரு­தப்­பட்­டி­ருக்கக் கூடிய நிகழ்வு – எத்­த­கைய பர­ப­ரப்­புக்­களோ, ஊட­கங்­களின் உயர் அள­வி­லான கவ­னமோ இல்­லாத விதத்தில் கடந்து போயி­ருக்­கி­றது. ஒரு விதத்தில், இன்­றைய இலங்­கையின் புதிய கள யதார்த்­தத்தை துல்­லி­ய­மாக எடுத்துக் காட்டும் ஒரு மாற்­ற­மாக அதனைக் கருத முடியும்.

அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் சேவைகள் என்­ப­வற்றின் கடு­மை­யான தட்­டுப்­பாடு, வர­லாறு காணாத விதத்­தி­லான விலை­யேற்­றங்கள் என்­ப­வற்­றுடன் கூடிய ஒரு பொரு­ளா­தார நெருக்­கடி நாட்டின் வாசல்­ப­டியில் வந்து நின்­றி­ருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடுப் பகு­தியில் ‘ஹிரு’ டிவி காதி நீதி­மன்­றங்கள் குறித்து நடத்­திய ‘Talk Show’ வை இங்கு நினை­வூட்­டு­வது பொருந்தும்.

சிங்­கள ஊட­கங்கள் நாட்டின் முன்­னு­ரி­மை­களை எந்த அள­வுக்கு குழப்­பி­ய­டித்துக் கொண்­டி­ருந்­தன என்­ப­தற்­கான நல்ல உதா­ரணம் அது. நாட்டின் குடித்­தொ­கையில் 9% ஆக மட்­டுமே வாழ்ந்து வரும் ஒரு சிறு­பான்மைச் சமூகம் சம்­பந்­தப்­பட்ட ஒரு பிரச்­சி­னையை, அவர்­களே தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்­டிய ஒரு பிரச்­சி­னையை காட்சி ஊட­கங்­களின் மொழியில் ‘Prime Time’ என்று அழைக்­கப்­படும் இரவு 07 மணிக்கும் 09 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் ஒன்­றரைக் கோடி சிங்­களப் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு (சிங்­கள மொழியில்) ஒளி­ப­ரப்­பி­யது ஏன்?

முஸ்லிம் தனியார் சட்­டங்கள் சிங்­கள பௌத்­தர்­களின் இருப்­புக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக இருந்து வரு­கின்­றன என்ற செய்­தி­யையே அதன் மூலம் ‘ஹிரு’ டிவி சிங்­கள மக்­க­ளுக்கு சொல்ல முயன்­றது. அதை விட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடி­யாது.
Ratings ஐ மட்­டுமே கருத்தில் கொண்டு செயற்­பட்டு வரும் ஊட­கங்கள் இப்­பொ­ழுது நாட்டில் எழுச்­சி­ய­டைந்து வரும் புதிய நிலை­மை­க­ளுடன் அனு­ச­ரித்துச் செல்லும் விதத்தில் தமது நிலைப்­பா­டு­களை மாற்றிக் கொண்­டி­ருப்­பதை பார்க்க முடி­கின்­றது.

‘திவ­யின’ நாளிதழ் எவ்­வித ஆதா­ரங்­க­ளையும் முன்­வைக்­காமல் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்­தி­யொன்றின் மூலம் டாக்டர் ஷாபி தொடர்­பான புர­ளியை கிளப்பி, முழு நாட்­டுக்கும் தீ மூட்­டிய பாவ காரி­யத்தைச் செய்­தது. இப்­பொ­ழுது அது குறித்த எவ்­வி­த­மான குற்ற உணர்ச்­சியும் இல்­லாமல், இன்­றைய நெருக்­க­டியின் பின்­பு­லத்தில், ‘இலங்கை சர்­வ­தேச ரீதியில் எந்த அள­வுக்குக் கேவ­லப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது‘ என்­பதை விலா­வா­ரி­யாக எடுத்து விளக்கும் விதத்தில் அது ஆசி­ரியர் தலை­யங்­கங்­களைத் தீட்டிக் கொண்­டி­ருக்­கி­றது.

தம்மை சிங்­கள தேசி­ய­வா­திகள் எனச் சொல்லிக் கொள்ளும் ஆட்­களின் நிலைமை மிகவும் பரி­தாபம். ராஜ­பக்ச ஆட்­சிக்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் அவர்கள் நிபந்­த­னை­யற்ற விதத்தில் ஆத­ர­வ­ளித்து வந்­தி­ருக்­கின்­றார்கள். போர் வெற்றி அந்த ஆத­ரவை மேலும் பலப்­ப­டுத்­தி­யது. அதனால் 2010 – 2015 ராஜ­பக்ச ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற பாரிய ஊழல்கள், மோச­டிகள், முறை­கே­டுகள், ஜன­நா­யக விரோதச் செயல்கள் மற்றும் சட்­டத்தின் ஆட்­சியில் ஏற்­பட்ட சீர்­கு­லைவு ஆகிய எல்­லா­வற்­றையும் அவை என்றோ ஒருநாள் நாட்டை பெரும் நெருக்­க­டிக்குள் தள்ளி விட முடியும் என்­பதை நன்கு தெரிந்து கொண்டே இவர்கள் கண்டும் காணா­மலும் இருந்­தார்கள்.

கடும் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் ‘அற­க­லய’ வடிவில் தோன்­றிய பாரிய மக்கள் எழுச்சி என்­ப­வற்றை அடுத்து நாட்டில் உரு­வாகி இருக்கும் புதிய நில­வரம், தேசி­ய­வா­திகள் ‘மரணப் பொறி‘ என வர்­ணிக்கும் 21 ஆவது திருத்­தத்­துக்கு பெரு­வா­ரி­யான மக்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உசி­த­மா­ன­தொரு சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக, சிங்­கள பொது­சன அபிப்­பி­ராயம் அதற்கு சார்­பான விதத்தில் திருப்­பப்­பட்­டி­ருக்­கி­றது.

‘ராஜ­பக்ச சகோ­த­ரர்­களில் பசில் ராஜ­பக்­சவே மிகவும் மோச­மான ஆள்; ஊழல் பேர்­வழி; ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்தின் அடி­வ­ருடி. ஆனால், மஹிந்த ராஜ­பக்ச மற்றும் கோட்­டா­பய ராஜ­பக்ச இரு­வரும் மாபெரும் தேசா­பி­மா­னிகள்’ என்ற நிலைப்­பாட்­டி­லேயே சிங்­கள தேசி­ய­வா­திகள் இது வரையில் இருந்து வந்­துள்­ளார்கள். ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தம மந்­தி­ரி­யாக நிய­மனம் செய்­ததன் மூலம் அந்த தேசி­ய­வா­தி­களின் முகத்தில் கரியைப் பூசி­யி­ருக்­கிறார் கோட்­டா­பய ராஜ­பக்ஷ.

இந்த நிலை­மைக்கு கணி­ச­மான அள­வி­லான பங்­க­ளிப்பை வழங்கி வந்­தி­ருக்கும் இன­வா­தி­களும், தேசி­ய­வா­தி­களும் இப்­பொ­ழுது அந்த விடயம் குறித்து பேசு­வதை கவ­ன­மாக தவிர்த்து வரு­கி­றார்கள். அதற்குப் பதி­லாக, ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­வதன் விளை­வாக சிங்­கள மக்கள் எதிர்­கொள்ள வேண்டி வரும் மோச­மான பின்­வி­ளை­வுகள் குறித்து மட்டும் பேசத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

தேசி­ய­வாத அமைப்­புக்­களின் ஒன்­றியம், தேசிய மக்கள் சபை மற்றும் ‘56 இன் குழந்­தைகள்’ அமைப்பு என்­பன கடந்த வாரம் கொழும்பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த “அர­சியல் யாப்­புக்­கான 21 ஆவது திருத்தம் என்ற மரணப் பொறியில் கால் வைக்­கா­தி­ருப்போம்” என்ற நூலின் வெளி­யீட்டு நிகழ்வில் இந்தக் கரி­ச­னைகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அங்கு உரை நிகழ்த்­திய சிங்­கள தேசி­ய­வா­தத்தின் பிதா­ம­கர்­களில் ஒரு­வ­ராகக் கரு­தப்­படும் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­தி­ருக்கும் பின்­வரும் கருத்­துக்கள் இந்தப் பின்­ன­ணியில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன:

”21 ஆவது யாப்புத் சீர்த்­தி­ருத்­தத்தின் நோக்கம் எமது பண்­பாட்டின் ஆணி­வே­ரான சிங்­கள – பௌத்த பாரம்­ப­ரி­யத்தை முற்­றாக நிர்­மூ­ல­மாக்கி, நாட்டை ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் ஒரு விளை­யாட்டுக் கள­மாக மாற்­றி­ய­மைப்­ப­தாகும்.”

”எமது நண்­பர்­களும், எதி­ரி­களும் 21 ஆவது திருத்தம் குறித்து ஒரே மாதி­ரி­யான கருத்­துக்­களைக் கொண்­டுள்­ளார்கள். 19 ஆவது திருத்­தத்தின் மூலம் ஸ்தாபிக்­கப்­பட்ட ஜன­நா­ய­கத்தை அது மேலும் வலுப்­ப­டுத்தும் என்­பதே அவர்­களின் நிலைப்­பாடு. 21 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வது இலங்­கையின் ஜன­நா­ய­கத்­துக்கு கிடைத்­தி­ருக்கும் ஒரு வெற்றி என்றும் அவர்கள் சொல்லி வரு­கி­றார்கள்.”

“ஆனால், இந்த 21 ஆவது திருத்தம் நமது தேசத்­தி­னதும், இனத்­தி­னதும் அஸ்­த­ம­னத்தை எடுத்து வரும் ஒரு மரணப் பொறி­யாக இருந்து வரு­கின்­றது என்றே நாங்கள் கரு­து­கின்றோம்.”

”இலங்கை இன்று அனர்த்த ஏகா­தி­பத்­தி­ய­வாதம் (Disaster Imperialism) என்று அழைக்­கப்­படும் ஒரு நிலை­மைக்கு இரை­யா­கி­யுள்­ளது. மேலைய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் கையி­லெ­டுத்­தி­ருக்கும் புதிய ஆயுதம் ‘அனர்த்த ஏகா­தி­பத்­தி­ய­வாதம்’ என்­பது. அதா­வது, ஒரு நாடு ஓர் அனர்த்த நிலை­மையை, ஒரு கொந்­த­ளிப்பு நிலை­மையை எதிர்­கொள்ளும் சந்­தர்ப்­பங்­களில் ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் அங்கு போய் இறங்கி, அந்­நி­லையை தமக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்தி, அந்­நாட்டை அடி­மைப்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்கள். கடந்த காலத்தில் ஈராக்­கிலும், லிபி­யா­விலும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் இதற்­கான சிறந்த உதா­ர­ணங்கள்… சமீப கால­மாக நமது அயல் நாடான இந்­தி­யாவும் இலங்கை தொடர்­பாக இதே தந்­தி­ரோ­பா­யத்தை பன்­ம­டங்கில் மேற்­கொண்டு வரு­வ­தனை நாங்கள் பார்க்­கிறோம்.”

“இந்த ‘அனர்த்த ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்­துக்கு’ மூன்று வழி­களில் செயல்­வ­டிவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. –

ஆட்சி மாற்றம் (Regime Change)
அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் (Constitutional Change)
இரா­ணுவத் தலை­யீடு (Military Intervention). சுப்­ர­ம­ணியம் சுவாமி இந்த வகை­யி­லான இரா­ணுவத் தலை­யீடு தொடர்­பாக ஏற்­க­னவே பேசி இருக்­கிறார்.”

“இலங்­கையில் இந்த அனர்த்த ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் மிகவும் இர­க­சி­ய­மான விதத்தில் செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள். அதற்­கான சிறந்த உதா­ரணம் அண்­மையில் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்றம். ஆனால், மக்கள் இன்­னமும் அதனைப் புரிந்து கொள்­ள­வில்லை. 69 இலட்சம் மக்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்ட கோட்­டா­பய ராஜ­பக்ச இன்­னமும் ஆட்சி பீடத்தில் இருக்­கி­றா­ரென சிலர் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சிறி­சங்­கபோ மன்னன் தனது தலையைத் தான­மாகக் கொடுத்­தது போல, ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் செல்லப் பிள்­ளை­யான ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கோட்­டா­பய ராஜ­பக்ச தனது தலையைத் தான­மாகக் கொடுத்­தி­ருக்­கிறார்.”

“21ஆவது அர­சியல் யாப்புத் திருத்தம் 13ஆவது திருத்­தத்­துடன் உள்­வாங்­கப்­பட்டால் அது ஒரு தேசிய அனர்த்­த­மா­கவே இருக்கும். அது, நாங்கள் எமது கைக­ளா­லேயே எமது கழுத்தை நெரித்துக் கொள்­வ­தற்கு இணை­யா­ன­தாகும். 21ஆவது திருத்தம் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது எப்படிப் போனாலும், அதற்கு நாட்டில் இது வரையில் எத்­த­கைய எதிர்ப்­புக்­களும் தெரி­விக்­கப்­ப­டா­தி­ருப்­பதே இங்­குள்ள கொடுமை.”

குண­தாச அம­ர­சே­கர போன்­ற­வர்கள் இப்­பொ­ழுது முதல் தட­வை­யாக கோட்­டா­பய ராஜ­பக்­சவின் தேசா­பி­மா­னத்தை சந்­தே­கிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். அவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கிய செயல் மன்­னிக்­கவே முடி­யாத ஒரு துரோகச் செயல் எனக் கரு­து­கி­றார்கள்.

சிங்­கள தேசி­ய­வா­தி­களும், இன­வா­தி­களும் இன்று எதிர்­கொண்டு வரும் தடு­மாற்ற நிலை ராஜ­பக்­சாக்கள் களத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தனை அடுத்து, தமது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தாம் எந்த அணி­யுடன் சேர்ந்து கொள்­வது என்­ப­தாகும்.

இலங்கை அர­சியல் களம் பெரு­ம­ள­வுக்கு சிக்­க­ல­டைந்­தி­ருப்­ப­துடன், புதி­தாக உரு­வாகப் போகும் அர­சியல் அணிகள் குறித்த ஒரு தெளி­வான சித்­திரம் இன்­னமும் முழு­மை­யாக உருப்­பெ­ற­வில்லை. வழ­மை­யாக பெரிய கட்­சி­க­ளுடன் கூட்­டணி சேர்ந்து தேர்­தல்­களில் போட்­டி­யிடும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே தடுமாற்ற நிலையில் இருந்து வருகின்றன.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.