கோத்தாவின் சதுரங்கத்தில் ரணில் ஒரு பகடை

0 347

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

“கோத்­தாவே போ”, “225 பேரும் வேண்டாம்” என்ற கோஷங்­க­ளுடன் ஆரம்­பித்து, ‘கோத்­தாபோ’ கிரா­மங்­க­ளுடன் பரவி, அர­சியல் பொரு­ளா­தார அடிப்­படை மாற்­றங்­களைக் கேட்டு ஒரு மாதத்­துக்­கும்­மே­லாக நாட்டின் சர்வ இன மக்­களின் ஆத­ர­வுடன் விழிப்­ப­டைந்த ஓர் இளைய தலை­மு­றையின் தலை­மை­யின்கீழ் வளர்ந்த அறப்­போ­ராட்­டத்தை வன்­மு­றை­யா­லா­வது முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்­டு­மென மகிந்த ராஜ­பக்ச எடுத்த முடிவு இறு­தியில் அவ­ரையே தனது பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வைத்­தது. அவ­ரது பதவி துறப்­புடன் ஏனைய ராஜ­பக்ச அமச்சர்களும் பதவி துறக்­கவே ஜனா­தி­பதி கோத்­தா­பய மட்டும் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்டு மக்­களின் வெறுப்­புக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டது. இருந்தும் அவர் பதவி துறக்க முடி­யா­தென உறு­தி­பூண்டு தனது அர­சியல் சது­ரங்க ஆட்­டத்தை தொடர்ந்து நடத்­து­வ­தற்கு ஒரு புதிய பக­டையைத் தேட­லானார். அந்தப் பக­டையே ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ.

யார் இந்த ரணில்?
ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவின் கடந்­த­கால அர­சியல் வர­லாற்றை சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் அவர் ஒரு தலை­சி­றந்த தோல்­வி­யாளர். தன்னைப் பிர­த­ம­ரா­கக்­கொண்டு இயங்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தை தோல்­விப்­பா­தையில் வழி­ந­டத்­திய வீரர். இலங்­கையின் மிகப்­ ப­ழ­மை­வாய்ந்த அவ­ரது ஐக்­கிய தேசியக் கட்­சியை கடந்த பொதுத் தேர்தலில் இலங்­கையின் மொத்தத் தேர்தல் வாக்­கு­களில் இரண்டு சத­வீ­தத்­தை­மட்டும் பெற்று ஒரே­யொரு ஆச­னத்தை மட்டும் கைப்­பற்றி தனது ஆச­னத்­தை­யும்­கூட இழந்த ஓர் சிறப்­பாளன். அதனால் எதிர்க்­கட்சித் தலைமைப் பத­வி­யையும் பறி­கொ­டுத்த பரி­தா­பத்­துக்­கு­ரி­யவர். இவரின் தலை­மையை நம்பி கூட்­டுச் சேர்ந்த தமிழ் தலைவர்களையும் நட்­டாற்றில் தவிக்க விட்­டவர். இத்­தனை தேல்­வி­க­ளுக்கும் மத்­தியில் ஏன் இவரைப் பொறுக்­கி­யெ­டுத்து பிர­த­ம­ராக்­கினார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச? அதற்குக் காரணம் ரணில் நாடா­ளு­மன்­றத்­துக்குள் பின்­க­தவால் நுழைந்து அங்கே அவர் காட்­டிய ஒரு புது முகம். முத­லா­வ­தாக, மகிந்த அர­சாங்­கத்தின் அரா­ஜ­கத்­தையும் அவரின் குடும்ப ஆட்­சி­யையும் ஊழல்­க­ளையும் அதனால் நாடும் நாட்டு மக்­களும் அடைந்த பொரு­ளா­தார நட்­டங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் உணர்ந்த எதிர்க்­கட்சி அங்­கத்­தவர்கள் அர­சாங்கம் கலைக்­கப்­பட்டுப் புதிய தேர்தல் நடந்­தப்­பட வேண்­டு­மென கர்ஜிக்க, அதையே பெரும்­பா­லான பொது­மக்­களும் வேண்­டி­நிற்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ மட்டும் இது தேர்தலுக்­கு­ரிய சந்தர்ப்பம் அல்ல, மாறாக எல்­லாரும் இணைந்து பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் சந்தர்ப்பம் என தொடர்ந்து வாதா­டினார்.

இரண்­டா­வ­தாக, மகிந்த அரசு காலம் தாழ்த்­தாது சர்­வ­தேச நிதி நிறு­வ­னத்­திடம் உத­வி­கேட்டு விரைய வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­ய­வர்­களுள் முதன்­மை­யா­னவர் இவர். மூன்­றா­வ­தாக, டொலர் நாணயப் பஞ்­சத்தை நீக்க வெளி­நா­டு­களின் கூட்­ட­ட­ணி­யொன்றை நாட­வேண்­டு­மெ­னவும் ஓர் ஆலோ­ச­னையை முன்­வைத்­தவர். இறு­தி­யாக, பொரு­ளா­தார நலன்­க­ருதி அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்­கை­யையும் சீனச்­சார்­பு­டை­ய­தாக வைத்­தி­ருக்­காமல் மேற்­கு ­நா­டுகள் சார்­பா­ன­தா­கவும் இந்­தியா சார்­பா­ன­தா­கவும் நகர்த்த வேண்­டு­மெ­னவும் அதே நேரம் சீன நட்­பையும் இழக்­கக்­கூ­டா­தென வலி­யு­றுத்­தி­யவர். ஒட்­டு­மொத்­தத்தில் ஏனைய தலை­வர்கள் அர­சியல் சார்­பான மாற்­றத்­துக்­காகப் போராட ரணில் மட்டும் பொரு­ளா­தா­ரத்தை முன்­வைத்து அப்­போ­ராட்­டத்­தி­லி­ருந்து தனிப்­ப­ட­லானார். இதுவே ஜனா­தி­ப­தியின் காது­க­ளுக்கு மது­ர­கீ­த­மாக ஒலித்­தது. தனது பத­வி­யையும் காப்­பாற்­றிக்­கொண்டு தனது குடும்­பத்­துக்கும் பாவ விமோ­சனம் தேடவும் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் ரணிலே பொருத்­த­மா­னவர் என உணர்ந்தே அவரை பிர­த­ம­ராக்­கினார். அதே வேளை, மறை­மு­க­மாக, ரணிலின் பத­விக்கு வெளி­நா­டு­களின் ஆத­ரவும் இருந்­தது என்­ப­தையும் மறுக்க முடி­யாது. எல்­லா­வற்­றிற்கும் மேலாக, இது­வரை தன்­னை­மட்டும் நோக்கி வீசப்­படும் எதி­ர­ணி­களின் கணைகள் இனிமேல் ரணிலை நோக்­கியும் வீசப்­ப­டு­மா­தலால் அந்த வலியை அவ­ருடன் பகிர்ந்து கொள்­வதால் தனது வலி ஓர­ள­வா­வது குறையும் என்று கோத்­தா­பய நினைத்­ததும் இன்­னொரு காரணம். இந்த இறுதிக் காரணம் இப்­போது நிரூ­ப­ண­மா­கிக்­கொண்டு வரு­கின்­றது. அந்த அள­வுக்கு கோத்­தாவின் சது­ரங்க ஆட்டம் வெற்றி பெற்­றுள்­ளது எனக்­க­ரு­தலாம். ஆனால் அது பூரண வெற்­றியை ஈட்­டுமா?

அர­சியல் உறு­திப்­பாடு
அர­சியல் உறு­திப்­பாடு, பொரு­ளா­தார மீட்சி ஆகிய இரண்­டையும் ரணி­லினால் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்­லை­யெனின் ஆட்டம் தோல்­வி­யி­லேயே முடியும். முதலில் அர­சியல் உறு­திப்­பாட்­டி­லுள்ள சில சிக்­கல்­களை அறிந்­து­கொள்­ளுதல் அவ­சியம். முத­லா­வ­தாக ரணில் தலைமை தாங்கும் சர்­வ­கட்சி அர­சாங்­கத்­துக்கு மக்­க­ளது அங்­கீ­காரம் இல்லை. இது ஜனா­தி­ப­தியின் தயவில் மட்டும் உரு­வா­கிய ஓர் அமைப்பு. இரண்­டா­வது, மக்­க­ளி­னதும் எதி­ர­ணி­யி­னதும் அறப்­போ­ரா­ளி­க­ளி­னதும் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக அவர் மேற்­கொள்ளும் அர­சியல் தந்­திரம் 21வது அர­சியல் யாப்புச் சட்டத் திருத்தம். இதன் வெளிப்­ப­டை­யான நோக்கம் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைப் பிடுங்கி நாடா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை உயர்த்தி முன்னர் நீக்­கப்­பட்ட 19வது திருத்­தத்தை மீண்டும் புகுத்­து­வ­தாகும்.

ஆனால் ரணில் கொண்­டு­வந்த திருத்தப் பிரே­ரணை ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தாக எதி­ர­ணி­யி­னரும் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கமும் குற்றஞ் சாட்­டு­கின்­றன. உதா­ர­ண­மாக, ஜனா­தி­ப­திக்கு ஒரு சில அமைச்­சு­களைப் பொறுப்­பேற்­ப­தற்கு இப்­பி­ரே­ரணை வழி­வ­குத்­துள்­ளது எனத் தெரி­கி­றது. ரணிலின் இந்தக் கப­ட­நா­டகம் வெளிப்­ப­டுத்­தப்­படும் வேளையில் அர­சியல் அமைதி ஏற்­ப­டுமா? இது அறப்­போ­ராட்­டத்தை ஏமாற்றும் ஒரு தந்­தி­ர­மாகத் தெரி­ய­வில்­லையா? அதனால் சர்­வட்சி அர­சுக்­குள்­ளேயே வெடிப்­புகள் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளன. அது பொது­மக்­க­ளையும் தொழிற் சங்­கங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­களில் இறக்­கு­வது உறுதி. அடுத்து வரும் வாரங்கள் சர்­வ­கட்சி ஆட்­சிக்கு அர­சியல் தலை­யி­டியைக் கொடுப்­பதை எதிர்­பார்க்­கலாம்.

சர்­வ­கட்சி ஆட்­சி­யி­லும்­கூட சிறு­பான்மை இனங்கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தையும் உண­ர­வேண்டும். அறப்­போ­ரா­ளி­க­ளுக்கும் இது புரியும். என­வேதான் அவர்கள் சிறு­பான்மை இனத்­த­லை­மை­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் இறங்­கி­யுள்­ளனர். இது வெற்­றி­ய­ளிக்க வேண்டும் என்­பதே இக்­கட்­டு­ரையின் எதிர்­பார்ப்பும்.

பொரு­ளா­தார மீட்சி
பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பவே ரணில் பிர­த­ம­ராக்­கப்­பட்டார். நாட்டின் பொரு­ளா­தாரச் சீர்­கேட்­டைப்­பற்­றிய உண்­மை­யான நில­மையை ஒளி­வு­ம­றை­வின்றி தனது உரை­களில் வெளிப்­ப­டுத்­தி­ய­தற்கு அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் அதனை நிவர்த்­தி­செய்ய அவர் அறி­வித்­துள்ள நட­வ­டிக்­கை­களில் சில ஓட்­டைகள் காணப்­ப­டு­கின்­றன. மொத்­த­மாகச் சொல்­லப்­போனால் அந்த நட­வ­டிக்­கைகள் சர்­வ­தேச நிதி நிறு­வ­னத்தைத் திருப்­திப்­ப­டுத்த எடுத்த நட­வ­டிக்­கை­க­ளாகும். ஒரு பக்­கத்தில் மத்­திய வங்கி நாணயக் கொள்­கையில் கடி­ன­மான மாற்­றங்­களை சுய­மா­கவே மேற்­கொண்­டுள்­ளது. அதனால் வங்­கி­களின் வட்­டி­வீதம் உயர்ந்து இலங்கை நாண­யத்தின் மதிப்பும் குறை­வதை தடுக்க முடி­யாது. அது பண­வீக்­கத்தை மட்­டுப்­ப­டுத்­தி­னாலும் விலை­வா­சியை அதி­க­ரிக்கும். இத­னி­டையில் அர­சாங்கம் வரிக்­கொள்­கை­யிலும் பல மாற்­றங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. நேர் வரி­களும் நேரில் வரி­களும் உயர்ந்து, இறக்­கு­ம­தி­க­ளுக்­கான வரி­களும் தடை­களும் பெருகி இறக்­கு­மதிப் பொருள்­களின் தொகையும் குறைந்து அவற்றின் சந்தை விலை பெரு­கு­வது நிச்­சயம். இவை­யெல்லாம் இறு­தி­யாக மக்­களின் அன்­றாடக் கொள்­வ­ன­வு­களைப் பாதிப்­பதைத் தடுக்க முடி­யாது. ஆனால் இதனால் மிகவும் பாதிப்­ப­டை­வது யார்? குறைந்ந வரு­மா­னத்தில் வாழும் குடும்­பங்­களின் நிலை பரி­தா­பத்­துக்­குள்­ளா­வது நிச்­சயம். வியா­பா­ரிகள் பணம் திரட்­டுவர். ஆனால், பணக்­கா­ரர்­களை இக்­கட்­டுப்­பா­டுகள் அதிகம் பாதிக்கப் போவ­தில்லை. ஆகையால் ஏற்­க­னவே விரி­வ­டைந்­தி­ருக்கும் பொருளா­தார ஏற்றத் தாழ்வு மேலும் விரி­வ­டையும். ரணிலின் பொரு­ளா­தார மாற்­றங்­களில் ஏழை­க­ளுக்கு நிவா­ரணி எங்கே? அதைப்­பற்றி இது­வரை எந்த அறி­விப்பும் ஏன் அவ­ரி­ட­மி­ருந்து வர­வில்லை?

அர­சாங்­கத்தின் செல­வி­னங்­களைக் குறைப்­பதும் ரணிலின் நோக்கம். அது தேவைதான். ஆனால் எந்தச் செலவை எவ்­வாறு குறைப்­பது என்­பது பற்றி எந்த முடிவும் இது­வரை இல்லை. உதா­ர­ண­மாக அர­சாங்கம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வழங்கும் மொத்தச் சம்­பளத் தொகையில் ஏறத்­தாழ ஐம்­பது சத­வீதம் சுமார் 300,000 இரா­ணுவ வீரர்­க­ளுக்குச் செல்­கின்­றது. இன்­றைய நிலையில் இது ஒரு விரயம். இத்­தனை இரா­ணு­வத்­தி­னரும் தேவை­தானா? இது அனா­வ­சி­ய­மான ஓர் உள்­நாட்­டுப்போர் சுமத்­திய ஒரு பாரம். இதனைக் களைந்­தா­லன்றி அரசின் செல­வி­னங்­களை குறைக்க முடி­யாது. ஆனால், இரா­ணு­வத்தில் கைவைக்கும் துணிவு ரணி­லுக்கு உண்டா? அவ்­வாறு துணிந்­தாலும் கோத்­தா­பய விடு­வாரா? ஜனா­தி­ப­தியின் இறுதி ஆயுதம் இது­தானே. அவ­ரு­டைய திட்டம் இந்த இரா­ணு­வத்­தி­னரை எவ்­வா­றா­யினும் வடக்­கிலும் கிழக்­கிலும் நிலைப்­ப­டுத்தி அங்­குள்ள நிலங்­களை அவர்­க­ளைக்­கொண்டு ஆக்­கி­ர­மித்து அவர்­களை விவ­சா­யி­க­ளாக மாற்றி அந்த இரண்டு மாகா­ணங்­களின் சிறு­பான்மை இனச் செறிவை குலைப்­ப­தாகும். அந்த வழியில் அர­சாங்­கத்தின் இரா­ணுவச் செலவுப் பாரத்­தையும் குறைப்­பது கோத்­தா­ப­யவின் எண்ணம். ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்கள். இது பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் நீண்ட காலக் கனவு என்­ப­தையும் மறத்­த­லா­காது.

இற்கும் மேலாக நாட்டின் கடன் பளுவைச் சீர்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச நிதி நிறு­வனம் எடுக்கும் நட­வ­டிக்­கை­களும் மேலும் கடி­ன­மான முறையில் மக்­களின் பொரு­ளா­தார வாழ்வைப் பாதிக்கும். அந்தப் பளு மேலும் உய­ரப்­போ­வது தடுக்க முடி­யா­த­தொன்று. இந்­தி­யாவும் சீனாவும் இப்­போது காட்டும் கருணை என்ன நன்­கொ­டையா? அதுவும் ஒரு வகை கடன்­தானே. இவற்­றை­யெல்லாம் நிதி நிறு­வ­னத்தின் கண்­கா­ணிப்­பு­டனும் ஓரி­ரண்டு ஆண்­டு­களில் தீர்க்க முடி­யாது. ஆகவே திட்­ட­மிட்ட முறையில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ரணிலின் அர­சாங்­கத்­துக்கு மக்­களின் ஆத­ரவும் இல்லை. அதே­வேளை பரந்த ஒரு செயல் திட்­டமும் அவ­ரி­ட­மில்லை. அவ்­வா­றான திட்­டத்­தைத்தான் அறப்­போ­ரா­ளிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

வரி­களை விதிப்­பது இலகு. ஆனால் அந்த வரி­களைத் திரட்­டு­வது வேறு விடயம். நாட்டின் வரி வசூ­லிப்பு இலா­காவில் உள்ள ஊழல்­களை நீக்­கு­வ­தற்கு ரணிலின் நட­வ­டிக்­கைகள் எது­வுமே இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இது சம்­பந்­த­மாக பின்­வரும் கேள்­வியை அர­சிடம் முன்­வைக்க வேண்­டி­யுள்­ளது. இந்த நாட்டின் மிகப்­பெரும் செல்­வந்தன் யார்? மிகப்­பெரும் இலாபம் ஈட்டும் நிறு­வனம் எது? அதே வேளை ஆகக்­கூ­டிய வரி­யினைச் செலுத்­து­பவர் யார்? அல்­லது நிறு­வனம் எது? இந்த இரண்டு வகையான கேள்­வி­க­ளுக்கும் விடை ஒன்­றுக்­கொன்று பொருந்­த­வில்லை என்றால் வரி­வ­சூ­லிப்பில் ஓட்­டைகள் உண்டு என்­பதே அர்த்தம். இந்த ஓட்­டை­களை அடைக்­காமல் வரி­களின் பூரண வரு­வாயை அர­சாங்­கத்தால் அதி­க­ரிக்க முடி­யுமா? நாட்­டிலே நடை­பெறும் ஊழல்­களுள் இது பார­தூ­ர­மா­னது. இந்தச் சீர்­கேடு இலங்­கையில் நீண்ட கால­மாக நடைபெற்று வரு­கின்­றது. நடை­மு­றை­யி­லுள்ள நிர்­வாக அமைப்பில் மாற்றம் ஏற்­ப­டா­த­வரை பொரு­ளாதார நட­வ­டிக்­கைகள் பூரண பலன் தரா. அறப்­போ­ரா­ளிகள் வேண்டும் மறு­சீ­ர­மைப்பில் இந்த மாற்­றமும் அடங்கும்.

அண்­மையில் உலக வங்­கி­யிடம் அர­சாங்கம் நிதி­யு­தவி கேட்­ட­போது அது கொடுத்த பதில் என்­ன­வெனில் ஏற்­க­னவே முடிவு செய்­யப்­பட்ட உத­வி­களின் நோக்­கங்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து வேறு தேவை­களைப் பூர்த்­தி­செய்யும் நோக்­குடன் வழங்­கப்­படும் என்­ப­தாகும். அந்த நோக்­குகள் யாவை? சிறு கமச்­செய்­கை­யா­ளர்­க­ளுக்கும், ஏழை மாண­வர்­களின் பள்­ளிக்­கூட மதிய உண­வுக்கும், சிறு தொழில்­களில் ஈடு­பட்­டுள்­ளோர்க்கும், மற்றும் ஏழை­ மக்­க­ளுக்கும் நிவா­ரணம் வழங்­குதல் அவற்றுள் அடங்கும். ஆனால் அந்த நிவா­ர­ணங்கள் வரும்­போது அதனை உரி­ய­வர்­க­ளுக்குச் சேரக்கூடிய வகையில் திறம்பட இயங்கும் நிர்வாக அமைப்பு அரசாங்கத்திடம் உண்டா? உதவிப்பணங்களை இடையிலே உள்ள நடுவர்கள் பகிர்ந்துகொண்டு ஒரு சிறு தொகையே குறிப்பிட்டவர்களுக்குக் கிடைப்பதுதானே வரலாறு. இந்த வகையான சீர்திருத்தங்கள் செய்யக்கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அறப்போராளிகளின் கோரிக்கை.

இருள் படரும்
எனவே ரணில் விக்கிரமசிங்ஹவை பகடையாகக் கொண்டு ஜனாதிபதி ஆடும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் பூரண வெற்றியடையப் போவதில்லை. ஒரு சில நன்மையான மாற்றங்கள் ஏற்படலாம். அவை பொருளாதார மறுசீரமைப்புக்குப் போதா. இருளில் முழ்கியுள்ள இலங்கை மீண்டும் ஒளிபெற அடிப்படைக் கொள்கைளில் புரட்சிகரமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை மேற்கொள்ள மக்களால் தெரியப்பட்ட ஓர் அரசாங்கம் அவசியம். அடுத்துவரும் வாரங்களிலும் மாதங்களிலும் மக்களின் கிளர்ச்சி அதிகரிப்பதை தடுக்க முடியாது. அறப்போராட்டமும் ஒரு புதிய உத்வேகத்தை அடையலாம் எனவும் எதிர்பார்க்க இடமுண்டு. அவ்வாறு இடம்பெறுகையில் ரணிலின் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? காலம் பதில் சொல்லட்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.