முனாபிக்குகள் முன்னணியும் முஸ்லிம்களும்

0 446

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

முஸ்­லிம்­களின் திரு­ம­றை­யிலே மூன்று வகையா­னவர்களைப்­பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இறை விசு­வா­ச­முள்­ளவர்கள் அல்­லது முஃமின்கள், இறை நிரா­க­ரிப்­பாளர்கள் அல்­லது காபிர்கள், விசு­வாச வேட­தா­ரிகள், ஆஷா­ட­பூ­திகள் அல்­லது முனா­பிக்­குகள் என்­பவர்களே அம்­மூ­வ­கை­யி­ன­ரு­மாவர். இவர்களுள் மூன்றாம் வகை­யி­ன­ரைப்­பற்­றியே முஸ்­லிம்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்­க­வேண்­டு­மென்று திரு­மறை திரும்பத் திரும்ப வலி­யு­றுத்­து­கி­றது.

முஃமின்­க­ளுடன் வாழலாம், காபிர்­க­ளு­டனும் வாழலாம். ஆனால் முனா­பிக்­கு­க­ளுடன் வாழ்­வது கடினம். கூடிக் குலாவிக் கூடவே இருந்து குழி­தோண்டும் இக்­கொ­டி­யோ­ரைப்­பற்றி மத ­ரீ­தி­யாக விளக்­கு­வ­தற்கு நான் ஒரு மார்க்க மேதை­யல்ல. ஆனால் இன்று இலங்­கையில் நடை­பெறும் அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­களின் மத்­தியில் முனா­பிக்­குகள் எப்­படி எப்­ப­டி­யெல்லாம் ஒரு சமூ­கத்தை விலை பேசு­கின்­றனர் என்­பதை எண்­ணிப்­பார்த்து அதனால் எழுந்த சில கவ­லை­ப­டிந்த சிந்­த­னை­களை ‘விடிவெள்ளி’ வாசகர்களுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

நாட­ளா­விய ரீதியில் கோத்­தா­பய அரா­ஜ­கத்­துக்­கெ­தி­ரான ஓர் அறப்­போ­ராட்டம் இன்று வலுப்­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. “கோத்­தாவே போ”, “225 தேவை இல்லை” என்ற விண்ணைப் பிளக்கும் கோஷ ஒலி­யுடன் தேசியக் கொடியை ஏந்­தி­ய­வண்ணம், கொட்டும் மழை­யையும் பொருட்­ப­டுத்­தாது, சர்வமத, சர்வ இன ஆண் பெண் அனை­வ­ரையும் அணைத்து ஆயுதம் ஏந்­தாத போராட்டம் ஒன்றை விழிப்­ப­டைந்த ஓர் இளம் சந்­ததி தலை­மை­தாங்கி நடத்திச் செல்­கின்­றது.

சுதந்­திர இலங்­கையின் வர­லாற்­றிலே இவ்­வா­றான ஒரு மகத்­தா­னதும் புனி­த­மா­ன­து­மான நிகழ்வு இதற்கு முன்னர் என்­றுமே நடை­பெற்­ற­தில்லை. இந்­தப்­போ­ராட்டம் எந்த அர­சியல் சாயத்­தையும் பூசிக்­கொள்­ள­வு­மில்லை, எந்த அர­சியல் கட்­சியும் அதற்குச் சொந்தம் கொண்­டா­டவும் இல்லை. இதுவும் இப்­போ­ராட்­டத்தின் தனித்­து­வங்­களுள் ஒன்று. ஆனால் அதன் கோரிக்­கைகள் அர­சியல் சார்­பா­னவை. அர­சியல் என்­பது மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது, அதனை அர­சி­யல்­வா­தி­க­ளிடம் மட்டும் ஒப்­ப­டைப்­பது தகாது என்று அன்­றொரு நாள் ஆங்­கிலக் கவி­ஞனும் இலக்­கி­ய­வா­தி­யு­மான ரீ. எஸ். எலியெற் கூறி­ய­தற்கு ஓர் உதா­ர­ண­மாக நடை­பெ­று­கின்­றது இப்­போ­ராட்டம். இந்தக் கருத்தை பிரஞ்சுத் தலைவன் சார்ள்ஸ் டி கோலும் உரைத்­த­தா­கவும் ஒரு தகவல் உண்டு.

இன்று இலங்கை மக்­களை வாட்­டி­வ­தைக்கும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் ஏராளம். அந்தப் பிரச்­சி­னைகள் பல உயிர்­க­ளையும் பலி கொண்­டுள்­ளன. நாடே வங்­கு­ரோத்­தா­கி­விட்­டதை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆனால் அத்­த­னைக்கும் அடிப்­படைக் காரணம் கோத்­தா­பய தலை­மை­யி­லான ராஜ­பக்ச குடும்ப ஆட்­சியின் ஊழல் மலிந்த அரா­ஜகம் என்­பதை இனங்­கண்டு அதனை ஒழிக்­காமல் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடி­யாது என்­பதே இப்­போ­ராட்­டத்தின் சாராம்சம்.

கொழும்பு நகரின் காலி முகத்­திடல் இப்­போ­ராட்­டத்தின் மையக்­க­ள­மாக மாறிக் கொண்­டி­ருப்­பதை ஒளிக்­காட்­சிகள் உல­கெலாம் பரப்பிக் கொண்­டி­ருக்­கின்­றன. 2011 இல் எகிப்­திலே கைரோ நகரின் தஹ்ரீர் அல்­லது தியா­கிகள் சதுக்­கத்தில் நிகழ்ந்த சம்­ப­வங்­களை அது ஞாப­கப்­ப­டுத்­து­கி­றது.

இந்தப் போராட்­டத்­திலே நோன்­பையும் நோற்­றுக்­கொண்டு துணிச்­ச­லுடன் பங்­கு­பற்றி வீர உரை­யாற்றும் முஸ்லிம் ஆயி­ஷாக்­க­ளையும் கதீ­ஜாக்­க­ளையும், அவர்களுடன் இணைந்து போராடும் பல நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் இளைஞர்களையும் குடும்­பஸ்தர்களையும் காணும்­போது பெரு­மை­யாக இருக்­கி­றது. அவர்களின் தேசப்­பற்றும் சமூ­கப்­பற்றும் முஸ்லிம் சமூ­கத்தின் அண்­மைக்­கால மாற்­றத்­தைத் தெளி­வாகப் படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றன. இந்த மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும் என்­பதை கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக எனது கட்­டு­ரை­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். இறை­வ­னுக்கே புக­ழெல்லாம். முஸ்­லிம்­களை ஒரு வர்த்தக சமூ­க­மெனப் பட்­டஞ்­சூட்டி, அவர்களுக்கும் இந்த நாட்­டுக்கும் உள்ள உறவு மாட்­டுக்கும் புல்­லுக்கும் உள்ள உற­வென வரு­ணிக்­கப்­பட்டு, பள்­ளி­வா­சலும், தொழிலும் குடும்­பமும் என்ற ஓர் அர­ணுக்குள் வாழ்வைக் கழித்த ஒரு சமூகம் எவ்­வாறு கல்வி வளர்ச்சியால் இலங்­கையின் உயி­ரோட்­ட­முள்ள ஒரு சமூ­க­மாக மாறி­யுள்­ளது என்­ப­தற்கு அவர்களின் அறப்­போ­ராட்டப் பங்கு சிறந்த ஓர் எடுத்­துக்­காட்டு.

முஸ்­லிம்கள் நாட்டின் பொதுப்­ பி­ரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை மற்­றவர்களுடன் இணைந்து போரா­டாது ஒதுங்கி இருப்பர் என்ற ஒரு கறை வர­லாற்றில் படிந்­துள்­ளது என்­பதை கடந்த வாரக்­கட்­டு­ரை­யில் நான் சுட்டிக் காட்­டினேன். முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் இன்­றைய போராட்­டத்தின் ஒரு கிளைக்­க­ள­மாக மாற வேண்­டி­யது அவ­சியம். இந்தப் பொறுப்பை முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் துணி­வுடன் ஏற்­க­வேண்டும். ஏற்­பார்­க­ளென இக்­கட்­டுரை எதிர்­பார்க்­கி­றது. ஏனெனில் முஸ்­லிம்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னை­களை முஸ்­லிம்­களால் மட்டும் தனித்­து­நின்று தீர்க்க முடி­யாது. தேசிய நீரோட்­டத்­துடன் இணைந்­துதான் அவற்றை தீர்க்க வேண்டும். அதற்கு அவ­சியம் தேவை நாட­ளா­விய அறப்­போ­ராட்­டங்­களில் முஸ்­லிம்கள் முழு மூச்­சுடன் பங்­கு­பற்­று­வது. இப்­போது நடை­பெறும் அறப்­போ­ராட்­டத்­தை­வி­டவும் ஓர் அரி­ய­ சந்தர்ப்பம் இனியும் கிடைக்­குமோ தெரி­யாது.

அது ஒரு புற­மி­ருக்க, இவ்­வா­றான பெரு­மை­மிக்க ஒரு மாற்­றத்தின் மத்­தி­யிலே முனா­பிக்­கு­க­ளாக முளைத்­தி­ருக்கும் ஒரு சில முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களைப் பார்த்து அவர்களைச் சபிப்­பதா அல்­லது அவர்களுக்­காக இறை­வ­னி­டத்தில் மன்­றா­டு­வதா என்­பது தெரி­ய­வில்லை. முஸ்­லிம்­களின் உரி­மைகள் எவை என்ற விப­ரமே இல்­லாமல் அவை­களைப் போராடிப் பெறுவோம் என்று போலி உறுதி மொழி­களை வழங்கி, தாடியும் தொப்­பியும் அணிந்­து­கொண்டு, அல்லாஹு அக்பர் என்ற கோஷத்­துடன் தேர்தல் மேடை­களை மதப்­பி­ரச்­சார மேடை­க­ளாக மாற்றி, முஸ்லிம் வாக்­கு­க­ளைப்­பெற்று நாடா­ளு­மன்றம் சென்­றபின், அங்கே சந்தர்ப்பம் வரும்­போது பணத்­துக்கும் பத­விக்கும் ஆசைப்­பட்டு எதி­ரி­க­ளுடன் கைகோர்த்­துக்­கொண்டு சமூ­கத்­தையே விலை­பேசும் இவர்களை முனா­பிக்­குகள் என்று அழைப்­ப­திலே தவ­றுண்டா?

இரண்­டா­யி­ரத்துப் பதி­னான்காம் ஆண்­டி­லி­ருந்தே அடுக்­க­டுக்­காக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அவிழ்த்­து­வி­டப்­பட்ட பேரி­ன­வாதக் கல­வ­ரங்­களை கண்டும் காணா­த­து­போ­லி­ருந்த அன்­றைய பாது­காப்புச் செய­லாளர்தானே இன்­றைய ஜனா­தி­பதி. நெறி­த­வ­றிய ஒரு முஸ்லிம் தீவி­ர­வாதக் கும்­பலை கரு­வி­யாகப் பயன்­ப­டுத்தி அரங்­கேற்­றப்­பட்ட ஒரு கொலை­வெறி நாட­கத்­தால்­தானே அவர் ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டிந்­தது என்று பல­ராலும் இப்­போது கரு­தப்­ப­டு­கின்­றது. அப்­படி ஜனா­தி­ப­தி­யா­கிய பின்­பா­வது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளுக்கு இவரால் முற்­றுப்­புள்ளி வைக்க முடிந்ததா? அந்தச் சம்­ப­வங்­களை பட்­டி­ய­லிட நான் விரும்­ப­வில்லை. அண்­மையில் கூர­கலை பள்­ளி­வா­சலின் சில பகு­தி­களைத் தகர்ப்பதற்கு அனு­ம­தி­ய­ளித்­த­வரும் இவர்தானே. அப்­ப­டிப்­பட்ட ஒரு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக நாடா­ளு­மன்­றத்தில் 20ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது பணத்­துக்­கா­கவும் பத­விக்­கா­கவும் அதனை ஆத­ரித்துக் கை உயர்த்தியவர்கள்­தானே ஏழு முஸ்லிம் தலை­மைகள். முழு முஸ்லிம் சமூ­க­முமே தேசத்தின் இழி­சொல்­லுக்­கா­னது இந்த முனா­பிக்­கு­களால் என்­பதை எவ்­வாறு மறப்­பதோ? இப்­போது அதை­வி­டவும் கீழ்த்­த­ர­மான ஒரு செயலை, அதுவும் நாடே கொந்­த­ளித்து அறப்­போ­ராட்­டத்தில் குதித்­துள்ள வேளையில் அந்தப் போராட்­டத்தின் இலட்­சி­யங்­க­ளைக்­கூட விளங்க முடி­யாமல் அற்ப அமைச்சுப் பத­வி­க­ளுக்­காக முஸ்லிம் சமூ­கத்தை மீண்டும் ஒரு முறை அட­கு­வைத்­துள்ள தலை­மைத்­து­வத்தை சமூகம் மன்­னிக்­குமா என்­பது சந்­தே­கமே.

ஆனாலும் இவர்கள் அந்தப் பத­வி­களில் நீண்ட காலம் நீடிக்­கப்­போ­வ­தில்லை என்­ப­து­ மட்டும் உறுதி. புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள அமைச்சரவை புதிய கல­சத்தில் ஊற்­றிய பழைய மது என்­பதை யாவரும் அறிவர். ஏற்­க­னவே பதவி துறந்த அமைச்சர்களின் இரத்த வாரி­சு­களே அந்தப் பத­வி­களுட் பெரும்­பா­லா­ன­வற்றை கௌவிக் கொண்­டுள்­ளனர் என்­பதும் இப்­போது தெளி­வாகிவிட்­டது.

அதே சமயம் அறப்­போரை எப்­ப­டி­யா­வது முடி­வுக்குக் கொண்­டு­வரும் உபா­யங்­க­ளிலும் ஜனா­தி­பதி இறங்­கி­யுள்­ள­தா­கவும் செய்­திகள் கசி­கின்­றன. றம்­புக்­க­னையில் ஓர் அப்­பாவி உயிர் பொலி­சாரின் துப்­பாக்கிச் சூட்­டுக்குப் பலி­யா­கி­யுள்­ளது. இன்னும் எத்­தனை உயிர்கள் பலி­யாகப் போகி­றதோ? ஆனால் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் சபை இவற்­றை­யெல்லாம் களத்­தி­லி­ருந்தே நோட்­ட­மிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஏற்­க­னவே உலக அரங்கில் தனது பெயரை மாசு­ப­டுத்­திக்­கொண்ட ராஜ­பக்ச ஆட்சி, ஏதா­வது அசம்­பா­வி­தங்­களை எப்­ப­டி­யா­வது ஏற்­ப­டுத்தி அவற்றை ஒரு சாட்­டாகப் பாவித்து படை­க­ளைக்­கொண்டு அறப்­போ­ராட்­டத்­டதை அடக்க நேரிட்டால் சர்வதேச நாண­ய ­நி­தியின் உத­விகள் கிட்­டுமா என்­பதும் சந்­தேகம். அவ்­வா­றாயின் பொரு­ளா­தார நெருக்­கடி இன்னும் பெருகும்.

அறப்­போ­ராட்டம் தனது குறிக்­கோளை அடை­யும்­வரை ஆறுதல் அடை­யப்­போ­வ­தில்லை. ஏனெனில் அதைத்­த­லைமை தாங்கி நடத்­து­பவர்கள் விழிப்­புற்ற ஓர் இளந்­த­லை­மு­றை­யினர். அவர்கள் ஜனா­தி­ப­தியின் பசப்பு வார்த்­தை­க­ளுக்கு மசியப் போவ­தில்லை. இது­வரை காலமும் இன­வா­ரி­யா­கவும் மொழி­வா­ரி­யா­கவும் மத­வா­ரி­யா­கவும் மக்களைப் பிரித்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபின்னர் அலிபாபாக்களாக மாறிய அரசியல்வாதிகளை அவர்கள் இனங்­கண்­டுள்­ளனர். அந்தக் கொள்­ளையர்களுக்கு இனி­மேலும் சந்தர்ப்பத்தை வழங்க அவர்கள் ஒரு­போதும் உடன்­படப் போவ­தில்லை. அவர்களை ஏமாற்ற முடி­யாது. ஜனா­தி­பதி ராஜி­னாமாச் செய்தே ஆக­வேண்டும். ராஜ­பக்ச அர­சாங்­கமும் கலைக்­கப்­பட்டே தீர­வேண்டும்.

பொறுப்பு வாய்ந்த புதிய அரசை மக்கள் தெரிந்­தெ­டுப்­ப­தற்கு வழி­வ­குக்­கும்­வரை அவர்கள் போரா­டுவர். அந்தப் பொறுப்பை எதிர்க்­கட்­சிகள் ஏற்று அர­சியல் சட்­டத்தில் பொருத்­த­மான மாற்­றங்­களைக் கொண்­டு­வந்து சாத்­தி­யப்­ப­டுத்தக் கட­மைப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான மாற்­றங்­க­ளேற்­பட்டு பொதுத் தேர்தலொன்று நடை­பெ­றும்­போது இந்த முனா­பிக்­கு­களின் முன்­ன­ணியை முறி­ய­டிப்­பது முஸ்­லிம்­களின் கடமை. அதைச் செய்­யா­விடின் இறை­வனும் உங்­களை மன்­னிக்­க­மாட்டான். எத்­தனை காலம்தான் அவர்கள் உங்­களை ஏமாற்­று­வார்கள்? நீங்­களும் எத்­தனை காலம்தான் ஏமா­றப்­போ­கி­றீர்கள்? இன­வா­ரி­யான கட்சிகளின் எதிர்காலம் இருள்படிந்தது என்பதையே இன்றைய அறப்போராட்டம் வலியுறுத்துகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.