மன்னிப்புக் கோரி பதவி விலகுங்கள்

0 444

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை தொடர்பில் நிதி­ய­மைச்சர் அலி சப்ரி நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யிட்ட கருத்­துக்கள், எதிர்­காலம் குறித்த அச்­சத்தை மேலும் தீவி­ர­ம­டையச் செய்­கின்­றன.

இலங்­கையின் கையி­ருப்பில் 50 மில்­லி­ய­னுக்கும் குறை­வான அமெ­ரிக்க டொலர்­களே பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார். 2019 ஆம் ஆண்டு இறு­தியில் தாம் அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்கும் போது, கையி­ருப்பில் 7 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் இருந்­தது என்றும், தற்­போது 50 மில்­லியன் டொலர்­கூட பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் கையி­ருப்பில் கிடை­யாது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வி­ட­மி­ருந்து எரி­பொருள் இறக்­கு­ம­திக்­காக பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட 500 மில்­லியன் டொலரில் தற்­போது, சுமார் 100 மில்­லியன் டொலர் மட்­டுமே எஞ்­சி­யுள்­ளது. அத்­துடன், மருந்து உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக இந்­தி­யா­வினால் வழங்­கப்­பட்ட ஒரு பில்­லியன் டொலர் தொகையில், தற்­போது 200 மில்­லியன் டொலர் மாத்­தி­ரமே உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்;.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான பொறுப்­பினை அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­கி­றது. வரிக்­கு­றைப்பு செய்­தமை தவ­றான தீர்­மா­ன­மாகும். அத்­தி­யா­வ­சிய சேவை விநி­யோ­கத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்­ன­ரா­வது தீர்வு காண முடி­யுமா என்­பதைக் குறிப்­பிட்டுச் சொல்ல முடி­யா­துள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அத்­துடன் இறு­தி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்ட 2022 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்டம் காலத்­திற்குப் பொருத்­த­மற்­றது என்றும் புதிய வரவு செல­வுத்­திட்டம் ஒன்றை முன்­வைக்க எதிர்­பார்க்­கிறோம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அமைச்சர் அலி சப்­ரியின் இந்தக் கருத்­துக்கள் அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் கொள்­கைகள் தவ­றா­னவை என்­ப­தையும் நாட்டை நிர்­வ­கிப்­பதில் அவர்கள் தோல்வி கண்­டுள்­ளனர் என்­ப­தை­யுமே பறை­சாற்­று­கின்­றன.

கோத்­தாபய ராஜ­பக்ச பத­விக்கு வந்­ததும் செய்த முதல் தவறு வரி­களை நீக்­கி­ய­மை­யாகும். பெறு­மதி சேர் வரியை 15 வீதத்­தி­லி­ருந்து 8 வீத­மாக குறைத்­த­துடன் ஏனைய 7 வரி­க­ளையும் அர­சாங்கம் நீக்கம் செய்­தி­ருந்­தது. இதுவே இலங்­கையின் கையி­ருப்பு திவா­லா­கு­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும். இவ்­வாறு வரி­களை நீக்­கி­ய­மையை ஒரு வர­லாற்றுத் தவறு என நிதி­ய­மைச்சர் அலி சப்ரி அண்­மையில் ஆங்­கிலப் பத்­தி­ரிகை ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லிலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 2019 இல் இவ்­வாறு வரி நீக்கம் செய்­யப்­பட்­ட­மையை கடு­மை­யாக எதிர்த்த முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, இதன் மூலம் இலங்கை கிரீஸ் அல்­லது வெனி­சு­வேலா ஆகிய நாடு­களைப் போன்று வங்­கு­ரோத்து நிலைக்குச் செல்லும் என எச்­ச­ரித்­தி­ருந்தார். அவர் மறைந்­து­விட்­டாலும் இன்று அவ­ரது கருத்­துக்கள் நிதர்­ச­ன­மா­கி­யுள்­ளன.

இந் நிலையில் இந்த தோல்­விகள், பின்­ன­டை­வுகள் அனைத்­திற்கும் பொறுப்­பேற்­ப­தாக கூறு­வ­துடன் மாத்­திரம் நின்­று­வி­டாது, தமது அர­சாங்கம் இழைத்த வர­லாற்றுத் தவ­றுக்­காக மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வ­துடன் உட­ன­டி­யாக ஆட்­சி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். மாறாக, தாம் பதவி விலகப் போவ­தில்லை என ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் திரும்பத் திரும்பக் கூறி வரு­கின்­றனர். சுமார் 25 தினங்­க­ளுக்கும் மேலாக ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முன்­பாக மக்கள் இரவு பக­லாகப் போராடி வரு­கின்ற போதிலும் அர­சாங்கம் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்ப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக, போராட்­டக்­கா­ரர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்கே முயற்­சித்து வரு­கி­றது.

போராட்­டக்­கா­ரர்கள் தற்­போது அலரி மாளி­கைக்கு முன்­பா­கவும் முகா­மிட்­டுள்­ளனர். அங்கு போராட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டிருந்த கட்­ட­மைப்­பு­களை அகற்­று­வ­தற்கு பொலிசார் நீதி­மன்ற உத்­த­ரவைப் பெற்­று அகற்றியுள்ளனர். மறு­புறம் நேற்று பாரா­ளு­மன்­றத்­திற்குச் செல்லும் வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எப்­ப­டி­யேனும் பலத்தைப் பிர­யோ­கித்து இந்த மக்கள் எழுச்­சியை அடக்­கி­விட்டு தாம் ஆட்­சியில் தொட­ரலாம் என்­பதே ராஜ­பக்ச குழு­வி­னரின் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது. எனினும் மக்கள் இந்த அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணி­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இந்த அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்டு வரு­வதில் பௌத்த பிக்­கு­களின் பங்­க­ளிப்பு அபா­ர­மாகும். தற்­போது அதே பிக்­குகள் அர­சுக்கு எதி­ராக கள­மி­றங்­கி­யுள்­ளனர். நாட்டில் உறு­தி­யான மாற்­றங்கள் ஏற்­ப­டாத வரை எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யையும் சந்­திப்­ப­தில்லை என மகா­நா­யக்க தேரர்கள் அறி­வித்­துள்­ளனர். போராட்­டங்­களில் பங்­கேற்கும் பௌத்த பிக்­கு­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கின்­றது. நாட­ளா­விய ரீதியில் இவ்­வாறு பிக்­குகள் தொடர்ந்தும் வீதிக்கு இறங்­கு­வார்­க­ளாயின் விளை­வுகள் விப­ரீ­த­மா­கலாம். அதற்கு முன்­ன­ராக தாமா­கவே பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நல்­லது.

பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் ஜனா­தி­ப­திக்கு எதி­ரா­கவும் நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை வெற்றியளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஊழல்மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கூட உறுதியான ஒரு நிலைப்பாட்டை எட்ட முடியாதிருப்பது துரதிஷ்டமே.

எது எவ்வாறிருப்பினும் நாடு மிக மோசமான நெருக்கடி நிலையைச் சந்தித்துவிட்டது. அடுத்து வரும் நாட்கள் இதைவிட மோசமாகவே மாறப் போகின்றன. இதற்கிடையிலேனும் ஒரு திருப்திகரமான மாற்றம் நாட்டில் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் வெறும் மனிதர்களை மாத்திரம் மாற்றுவதாக அன்றி, முழு முறைமையையும் மாற்றுவதாக அமைய வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.