ஆர்ப்பாட்டங்களால் சாதிக்க வேண்டியதென்ன?

0 345

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

வீட்­டிலே பால்­கேட்டுக் குழந்தை தாயிடம் துடித்­த­ழும்­போது, சிறார்கள் பசி­யென்று தந்­தை­யிடம் கதறி ஏங்­கும்­போது அந்தப் பெற்­றோர்கள், “மக்காள் சற்றுப் பொறுங்கள், ஏதா­வது கொண்­டு­ வ­ரு­கி­றோம்” என்று கூறிக்­கொண்டு வெளி­யே­செல்ல எத்­த­னிக்­கையில் அவர்களைச் செல்­லாதே என்று சட்டம் தடுத்தால் அவர்களால் அதைத் தாங்­கிக்­கொள்ள முடி­யுமா? இதைத்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஊர­டங்குச் சட்டம் செய்து தோல்­வியும் கண்­டுள்­ளது. நாட்டில் நடப்­பதோ உண­வுக்கும் ஊழ­லுக்கும் எதி­ரான மக்கள் போராட்டம். அர­சாங்கம் கையாள்­வதோ ஆட்­சியைக் காப்­பாற்­று­வ­தற்­கான பாது­காப்புப் பித்­த­லாட்டம். பசியை அடக்க உணவு தேவை. ஊழலை ஒழிக்க கண்­ணி­ய­மான ஆட்சி தேவை. ஊர­டங்குச் சட்­டமும் அவ­ச­ரகால ஆட்­சியும் அவற்றை வழங்­காது ஜனா­தி­பதி அவர்களே!

இந்தப் பசிக்குக் கார­ணமே ஜனா­தி­பதி என்­பதை நாடே ஏன்? உல­கமே அறியும். அதற்­கு­ரிய கார­ணங்­களை ஏற்­க­னவே இப்­பத்­தி­ரி­கையின் சில கட்­டு­ரைகள் விளக்­கி­யுள்­ளன. ஆதலால் அவற்றை மீண்டும் இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை. சுருக்­க­மாகக் கூறின், இன்­றைய பொரு­ளா­தாரப் பிணிக்கு அடிப்­படைக் காரணம் அரசின் வங்­கு­றோத்து நிலைமை. அதற்குப் பின்­ன­ணி­யாக அமை­பவை ஆட்­சி­யாளர்களின் தலைக்­கனம் பிடித்த கொள்­கை­களும், சிக்­க­ன­மற்ற செல­வு­களும், ஊழல் நிறைந்த நிர்­வா­கமும், மக்­களைப் பிரித்­தாளும் தந்­தி­ரங்­க­ளுமே. இத்­த­னை­யையும் வளர்த்துக்­கொண்டு, அவற்றின் வெப்­பத்­திலே கூதல் காய்ந்­து­கொண்டு அதி­கா­ர­பீ­டத்தில் அமர்ந்துள்ள இவர்களால் மக்­களின் பசி­யையும் அகற்ற முடி­யாது, பொரு­ளா­தா­ரத்­தையும் வளர்க்க முடி­யாது, நாட்டின் அமை­தி­யையும் காக்க முடி­யாது. ஆனால் இந்தப் பிணி­களைத் தீர்ப்­ப­தற்கு ஆட்­சி­யாளர்களை மாற்­று­வது மட்டும் பரி­கா­ர­மா­காது. அதைத்­தானே எழு­பது வரு­டங்­க­ளுக்கும் மேலாக இலங்கை மக்கள் செய்­தனர். தலை­யிடி தீரத் தலை­ய­ணை­யை ­மட்டும் மாற்­று­வ­துபோல் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் எல்­லாமே பாடிய படல்­களின் வரி­கள்தான் வித்­தி­யா­சமே தவிர இராகம் ஒன்­றுதான். இன்­றைய தேவை ஒரு புதிய ராகம். அத­னைப்­பற்­றிய சில சிந்­த­னை­களே இக்­கட்­டுரை.

பால் மாவுக்கும், எரிவாயு­வுக்கும் தினம் தினம் கால்கள் கடுக்கக் கடுக்க அமை­தி­யாக வரி­சையில் நின்று, அதனால் பலர் மயங்கி விழுந்­த­தையும், அவர்களுட் சிலர் உயி­ரி­ழந்­த­தையும் கண்டு துடி ­து­டித்த மக்கள் திர­ளொன்று இனி­மேலும் நின்று பய­னில்லை, நடந்தே செல்வோம் ஜனா­தி­ப­தியின் இல்­லம்­நோக்கி என்று முடி­வெ­டுத்­ததன் விளைவே சில தினங்­க­ளுக்கு முன்னர் மிரி­ஹா­னயில் பெங்­கி­ரி­வத்தை வீதியில் ஜனா­தி­பதி இல்­லத்­தின்­முன்னே இடம்­பெற்ற அமை­தி­யான ஆர்ப்­பாட்டம். இலங்­கையில் எந்த ஓர் ஆர்ப்­பாட்­டமும் இது­வரை நாட்டின் தலை­வனின் இல்­லத்­திற்­குமுன் நடை­பெற்­ற­தில்லை. அந்த வகையில் மிரி­ஹான ஆர்ப்­பாட்டம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது. அந்த ஆர்ப்­பாட்­டத்தைக் குலைக்­க­வென்று அரசின் கைக்­கூ­லிகள் கையாண்ட வன்­செ­யல்­களே அரசின் பாது­காப்புப் பிரி­வி­னரின் தடி­யடிப் பிர­யோ­கத்­துக்கும், நீர்ப் பீரங்­கி­க­ளுக்கும், கைது­க­ளுக்கும் காரணம் என்­பது இப்­போது தெளி­வா­கி­யுள்­ளது. அதனைத் தொடர்ந்து இரண்­டொரு நாட்­களில் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்த சமூக ஊட­கங்­க­ளி­னூ­டாக ஆயத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதை அறிந்த அரசு ஊர­டங்குச் சட்­டத்தைப் பிறப்­பித்துச் சமூக ஊடக வலைத்­த­ளங்­க­ளையும் மூடி­யது. ஆனால் ஊர­டங்­கை­யும்­மீறி மக்கள் வீதிக்கு வந்­துள்­ளனர். அமை­தி­யான ஆர்ப்­பாட்­டங்கள் செய்தல் ஒரு ஜன­நா­ய­கத்தின் அடிப்­படைச் சுதந்­திரம். அதனைப் படை­கொண்டு தடுத்­தலும் அடக்­கு­வதும் அரா­ஜகம்.

மிரி­ஹான ஆர்ப்­பாட்­டத்தை ஒட்­டிய நிகழ்­வு­களை நோக்­கும்­போது எகிப்தின் தஹ்ரீர் அல்­லது தியா­கிகள் சதுக்­கத்தில் “ரொட்­டியும் கௌர­வமும்” வேண்டும் எனக் கோஷ­மிட்டு 2011 இல் ஆரம்­ப­மான அரபு வசந்தம் “முபா­ரக்கே வெளி­யேறு” என்ற கோரிக்­கை­யுடன் துளிர்­விடத் தொடங்­கி­ய­து­போன்று இலங்­கை­யிலும் “உணவு தா, ஊழலை ஒழி” என்ற குர­லுடன் ஆரம்­பித்து “கோத்­தாவே வெளி­யேறு” என்று மலர்ந்துள்­ளது. ஆனால் அங்கே நடந்­த­து­போன்று இங்­கேயும் ஏமாற்­றங்கள் ஏற்­ப­டலாம். உதா­ர­ண­மாக, அரபு வசந்தம் இன­மத வேறு­பா­டின்றி எல்லா எகிப்­தி­ய­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒரு போராட்டம். ஆனால் அந்த ஆர்ப்­பாட்­டத்­துக்குத் தலை­ைம­ தாங்கி அதனை ஓர் அர­சியல் போராட்­ட­மாக மாற்­று­வ­தற்­கான முற்­போக்குக் கட்­சி­களை எல்லாம் முறி­ய­டித்து அவற்றின் தலைவர்களையும் முபாரக் ஏற்­க­னவே சிறைக்குள் தள்­ளி­விட்டு, பிற்­போக்­கு­வாத முஸ்லிம் சகோ­த­ரத்­துவக் கட்­சியை மட்டும் தனது அர­சியல் நல­னுக்­காக இயங்­க­விட்டார். அதனால் அரபு வசந்­தத்தை இப்­பிற்­போக்­கு­வா­தி­களே வழி­ம­றித்து அதனை கொப்றிக் கிறித்­தவர்களுக்­கொ­தி­ரான போராட்­ட­மாக மாற்­றினர். அதே போன்ற ஒரு முயற்சி இங்­கேயும் இடம்­பெற வாய்ப்­புண்டு. உண்­மை­யி­லேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மிரி­ஹான ஆர்ப்­பாட்­டத்தின் பின்னர் ‘அரபு வசந்தத் தீவி­ர­வா­திகள்’ என்ற வார்த்­தை­களைப் பிர­யோ­கித்து அவ­ற்றிற்­கொரு மத­வாத மூலாம்­பூசி முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இனக்­க­ல­வ­ர­மொன்றைத் தூண்ட முயன்ற விஷ­மத்­த­னத்தை ஓர் ஆங்­கில வார இதழ் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அது­மட்­டு­மல்ல, அரபு வசந்தம் ஈற்றில் எவ்­வாறு மார்­கழிக் கூத­லாக மாறி, பழைய குருடி கத­வைத்­தி­றடி என்ற கதை­போன்று, பழைய ஆட்­சி­யையே புது முகங்­க­ளுடன் உறு­திப்­ப­டுத்­திற்று என்­ப­தையும் இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இப்­போது இங்­கேயும் பிர­த­ம­ரைத்­த­விர ஏனைய அமைச்சர்களெல்லாம் பதவி துறந்து புதி­யதோர் அர­சாங்­கத்தை பழைய முகங்­க­ளி­லி­ருந்தே அமைக்க எடுக்கும் முயற்சி அப்­ப­டிப்­பட்­ட­தொரு ஏமாற்று வித்­தையே. இன்­றைய காற்­புண்­ணுக்கு இது மருந்­தா­காது. காலையே வெட்­டி­வீசும் காலம் வந்­து­விட்­டது.

அமை­தி­யுடன் அடிப்­படைத் தேவை­க­ளுக்­காக ஆர்ப்­பாட்டம் செய்யும் அப்­பாவி மக்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் சிருஷ்­டித்து அவர்களின் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்குள் கைக்­கூ­லி­க­ளையும் காவாலிக் கூட்­டத்­தி­ன­ரையும் நுழை­ய­விட்டு வன்­செ­யல்­களைப் புகுத்­தி­ய ­பின்னர் இரா­ணு­வத்­தி­னரை ஏவி­விட்டு அக்­க­ல­வ­ரத்தை அடக்கி உல­கத்தின் பார்­வை­யிலே ஆர்ப்­பாட்­டக்­காரர்களின் புனித போராட்­டத்தை மாசு­ப­டுத்திக் காட்­டு­வது ஆட்­சி­யாளர்களுக்குக் கைவந்த ஒரு கலை. முபாரக் ஆட்­சியும் அதைத்தான் தஹ்ரீர் சதுக்­கத்தில் அரங்­கேற்­றி­யது. அதே­மா­தி­ரி­யான அரங்­கேற்­றந்தான் பெங்­கி­ரி­வத்தை வீதி­யிலும் சிறு அளவில் அன்று நடை­பெற்­றது. ஆனால் ஈற்றில் பட்­டி­னிப்­படை வென்­றது ஆயுதப் படை தோற்­றது என்­ப­தற்கு அமைச்சர்களின் இரா­ஜி­னாமா ஒரு சிறு நிரூ­பணம் எனக் கூறு­வ­திலே தவ­றில்லை.

மிரிஹான சம்­ப­வத்தில் ஏற்­பட்ட ஒரு துர­திஷ்டம் என்­ன­வெனில் எகிப்தில் நடந்­த­து­போன்று இங்கும் அந்த ஆர்ப்­பாட்­டத்தில் எந்தக் கட்­சித்­த­லை­வனும் கலந்­து­ கொள்­ள­வில்லை. ஆட்­சிக்­கெ­தி­ராகத் தோன்றும் சாதா­ரண மக்­களின் இயல்­பான எதிர்ப்­பு­க­ளையும் அவர்களின் கொதிப்­பு­க­ளையும் ஒன்று திரட்டி அவற்றை அர­சியல் அடிப்­ப­டையில் ஒழுங்­கு­ப­டுத்தித் தலை­மை­தாங்கி வழிப்­ப­டுத்­தக்­கூ­டிய ஓர் அர­சியல் கட்­சியோ குழுவோ இல்­லா­தி­ருப்­பது எதிர்க் கட்­சி­களின் கொள்கை வங்­கு­றோத்­தையே காட்­டு­கி­றது. ஆர்ப்­பாட்டம் செய்­பவர்களோ சாதா­ரண மக்கள். அவர்கள் மத்­தி­ய­தர வர்க்கத்­தி­ன­ராக இருக்­கலாம் அல்­லது அடி­மட்ட வர்க்கத்­தி­ன­ரா­கவும் இருக்­கலாம். அவர்களுக்கு கூச்­ச­லிட்டுக் குறை­களைக் கூறத் தெரி­யுமே ஒழிய அவற்­றிற்குப் பரி­காரம் காணத் தெரி­யாது. அந்தப் பரி­கா­ரத்தை வழங்கி அதன்­மூலம் மக்­களின் ஆத­ரவைத் திரட்­டு­வதே அர­சியற் தலை­மை­களின் கடமை.

இலங்­கை­யிலே இப்­போது பல கட்­சிகள் உள்­ளன. அவை எல்லாம் ஒன்­றோ­டொன்று முட்டி மோதிக்­கொண்டு எவ்­வாறு ஆட்­சிக்கு வர­லா­மென்று துடிக்­கின்­ற­னவே ஒழிய இன்­றைய நிலை­மையை நிரந்­த­ர­மாக மாற்­று­வ­தற்கு யாது வழி என்­பதை ஆராய்ந்து அதற்­கான திட்­ட­மொன்றை வகுத்து அந்தத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் ஒன்­று­பட்டு அதனை மக்­கள்முன் சமர்ப்பித்து அவர்களின் ஆத­ர­வுடன் இந்த ஆட்­சியை மாற்ற இது­வரை முயற்­சிக்­க­வில்லை. இருந்தும் இரண்டு கட்­சிகள் அவ்­வா­றான ஒரு விஞ்­ஞா­ப­னத்­தை­யா­வது வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதை இங்கு குறிப்­பிட வேண்டும். ஒன்று இட­து­சா­ரி­களின் தேசிய மக்கள் சக்தி, மற்­றது இன­வாத சம்­பிக ரண­வ­கவின் 43ஆம் படை.

இன்­றைய எதிர்­க்கட்­சி­களுள் மூன்று ஏற்­க­னவே ஆட்­சியில் அமர்ந்திருக்­கின்­றன. கடந்த எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அவை மாறி மாறி ஆட்­சிக்கு வந்­த­போதும் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் சமூக அமை­தி­யையும் கரு­வ­றுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளான ஊழல் நிறைந்த நிர்­வாகம், பண முத­லை­களின் அழுத்தம், இன­வாத மத­வாத அர­சியல், கல்வித் தகை­மைக்கும் முயற்­சித்­தி­ற­னுக்கும் புறக்­க­ணிப்பு, குடும்ப ஆட்சி, வியா­பார அர­சியல் ஆகி­ய­ன­வற்றை அகற்ற எந்த முயற்­சி­யுமே அவை மேற்­கொள்­ள­வில்லை. ஏனெனில் அந்தக் கிரு­மி­களை வளர்ப்பதி­லேதான் அக்­கட்­சி­களின் அர­சியல் பலமும் செல்­வாக்கும் தங்­கி­யுள்­ளன. கட்­சி­களின் சின்னங்களும் நிறமும் பெயரும்தான் வித்தியாசமே ஒழிய கொள்கைகளும் நோக்கங்களும் ஒன்றுதான். எனவே இவர்களையே மாறிமாறி ஆட்சிசெய்ய விடுவது நாட்டின் இன்றைய பரிதாப நிலைமைக்குப் பரிகாரமாகாது. நடைமுறையிலுள்ள அரசியல் பொருளாதார அமைப்புகளுக்கு அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்து ஒரு புதிய யுகத்தையே ஏற்படுத்தக் கூடிய ஓர் அரசியல் தலைமைத்துவமே இன்றைய பிரதான தேவை. மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி மட்டுமே அவ்வாறான நோக்கோடு போராடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கலாம்.

நடைமுறையிலுள்ள ஆட்சியையும் அதன் காவலாளிகளையும் முழுமையாக அகற்றுவது மட்டுமே ஆர்ப்பாட்டங்களின் முழு நோக்காக இருக்கக் கூடாது. அந்த வெற்றிடத்தை யாரைக்கொண்டு நிரப்பி நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணலாம் என்ற நோக்கில் மாற்றுத் தலைமைத்துவத்தை இனங்காணும் முயற்சியாக அது மாறவேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.