காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிப்படையப் போவது பெண்களே!

0 729

மௌலவி எம்.ஐ.கலீலுர் றஹீம் (பலாஹி)
(முன்னாள் காதி நீதவான்)
சிரேஷ்ட விரிவுரையாளர், ஹாஷிமிய்யஹ் அறபுக் கல்லூரி,
நாவலப்பிட்டி

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்­தி­ருக்கும் சிறப்­பான உரி­மை­களில் ஒன்­றுதான் முஸ்லிம் தனியார் சட்டம். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம். இதன் மூலம் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பல வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுள்­ளனர்.
இலங்­கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டு பொதுச் சட்­டத்தின் கீழ் முஸ்­லிம்­களின் விவாக, விவா­க­ரத்துத் தொடர்­பான விவ­கா­ரங்கள் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெற்று வரு­வ­தையும் அதற்­காக ஜனா­தி­பதி செய­ல­ணி­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும் நாம் அறிவோம்.
இச்­சட்­டத்தை நீக்க வேண்­டு­மென்­ப­தற்­காக முன்­வைக்­கப்­படும் பிர­தான வாதங்­களில் ஒன்­றுதான் ‘முஸ்லிம் தனியார் சட்­டத்­தினால் பெண்­க­ளுக்கு உரிய நீதி கிடைப்­ப­தில்லை; அதனைப் பொதுச் சட்­டத்­தினால் மாத்­தி­ரமே பெற்றுக் கொள்ள முடியும்’ என்ற வாதம். இதனை ஒப்­பு­விக்க, தமது உரி­மை­களைப் பெற்றுக் கொள்ள சட்­டத்தில் இருக்கும் ஏற்­பா­டு­களைப் பின்­பற்­றாது காதியின் மீது பழி சுமத்தும் சில முஸ்லிம் பெண்­களைச் சாட்­சி­க­ளா­கவும், ஊடக நடி­கர்­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். இது “ஊராகே மஸ் ஊராகே பிடே தியலா கப­னவா” என்ற சிங்­கள முது­மொ­ழிக்கு அமை­வாக இருக்­கின்­றது. அதா­வது பன்­றியின் இறைச்­சியை பன்­றியின் முதுகில் வைத்து வெட்­டு­வதைப் போல் முஸ்­லிம்­களின் உரி­மை­களை முஸ்­லிம்­களைக் கொண்டே ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யாக இருக்­கின்­றது.

பொது­வாக இன்று காதி நீதி­மன்றம் என்­றாலே பெண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­படும் ஓரிடம் என்ற சிந்­த­னையே சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­கான காரணம் விவா­க­ரத்து எனும் போது ஆண்கள் பக்கம் எந்­நி­யா­யங்கள் இருந்த போதிலும் பெண்­களே அப்­பா­வி­க­ளா­கவும் அநீதி இழைக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் கரு­தப்­ப­டு­வ­தாகும். எனினும் பெண்கள் போன்றே ஆண்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை நம்மில் அதி­க­மா­ன­வர்கள் அறி­வ­தில்லை. இக்­கா­லத்தில் ஒரு கணவன் தன் மனை­வியைத் தலாக் கூற கார­ணங்­க­ளாக அமை­வது பெரும்­பாலும் மனை­வியின் தகாத உறவு, ஒழுக்­க­யீனம், குடும்ப வாழ்­வுக்கு ஒத்­து­ழைக்­காமை, கண­வ­னுக்கு கீழ்­ப­டி­யாமை போன்ற கார­ணங்­க­ளாகும். இந்தக் குறை­பா­டு­களை நீக்கி கணவன் மனைவி இரு­வ­ருக்கும் மத்­தியில் சம­ரசம் செய்து வைக்க எடுக்­கப்­படும் முயற்சி தோல்­வி­யுறும் போதே தலாக் நிகழ்­கின்­றது. இச்­சந்­தர்ப்­பத்தில் மஹர் வழங்கி இன்­னு­மொரு பெண்ணை மணந்து வாழ வேண்­டிய நிர்ப்­பந்­தமும் விவா­க­ரத்துச் செய்த பின் பிள்­ளை­களைப் பிரிய வேண்­டிய துன்­ப­க­ர­மான நிலையும் அப்­பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்க வேண்­டிய நெருக்­க­டியும் கண­வ­னுக்கு ஏற்­ப­டு­கின்­றது. இத­னா­லேயே பெண்கள் போன்றே ஆண்­களும் விவா­க­ரத்தின் போது பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என்று இங்கு நான் குறிப்­பிட்டேன். ஆண்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பு­களைப் பற்றி யாரும் எழு­து­வ­து­மில்லை; பேசு­வ­து­மில்லை. நீதி நியாயம் எனும் போது இரு பாலாரும் சம­மாகப் பார்க்­கப்­பட வேண்டும். ஆனால் அதே நேரம் சில கண­வன்­மார்கள் எவ்­வித நியா­ய­மான கார­ண­மு­மின்றி மனை­வி­யரைத் தலாக் கூறு­கின்ற சந்­தர்ப்­பங்­களும் இல்­லாமல் இல்லை. அதன் கார­ண­மாக பெண்கள் பெரும் துன்­பத்­துக்­குள்­ளா­கின்­றனர் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அதற்­காக தலாக் கூறும் கண­வன்­மார்கள் எல்­லோரும் அநி­யாயக் காரர்கள் என்றும் மனை­வி­யர்கள் அப்­பா­விகள் என்று சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் சித்­த­ரித்துக் காட்டி காதி நீதி­மன்ற அமைப்பை ஒழிக்க வழி அமைப்­பது கூடாது.

காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வரும் அதி­க­மான விவா­க­ரத்து வழக்­குகள் பெண்­க­ளாலே பதி­யப்­ப­டு­கின்­றன. விவா­க­ரத்துக் கோரு­வ­தற்கு போதிய கார­ணங்கள் இல்­லாத நிலையில் மிக மிக அற்பக் கார­ணங்­க­ளுக்­கா­கவும் பெண்கள் விவா­க­ரத்துக் கோரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அவ்­வா­றான வழக்­குகள் தள்­ளு­படி செய்ய வேண்­டிய நிலை இருந்தும் சம­ரச முயற்சி கைகூ­டா­மையைக் கவ­னத்திற் கொண்டு பஸஹ் விவா­க­ரத்து வழங்­கப்­ப­டு­கின்­றது. இதனால் பிள்ளைத் தாப­ரிப்பு, இத்தா தாப­ரிப்பு போன்­ற­வற்றை வழங்க வேண்­டி­யதால் கண­வன்மார் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

காதி நீதி­மன்­றங்­களில் பெண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது என்ற கருத்து நிலவப் பல கார­ணங்கள் இருக்­கின்­றன. அவை­களை சுருக்­க­மாக பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டலாம். முத­லா­வது சில காதி­களின் தவ­றான செயற்­பா­டுகள் எனக் குறிப்­பி­டலாம். இதுவே பிர­தான கார­ண­மு­மாகும். தவ­றான செயற்­பா­டுகள் என்­னும்­போது லஞ்சம் பெறல், பக்க சார்­பாக நடத்தல் போன்ற விட­யங்­களைக் குறிப்­பி­டலாம். சில காதி­மார்­களால் நடக்கும் இவ்­வா­றான தவ­று­களால் பொது­வாக எல்லா காதி­களும் அவ்­வா­றா­ன­வர்கள் தான் எனக் கரு­தப்­பட்டு காதிகள் அனை­வ­ருமே லஞ்சம் பெறக்­கூ­டி­ய­வர்கள் என்ற கண்­ணோக்கில் பார்க்­கப்­ப­டு­கின்­றனர். மற்­றை­யது நேர்­மை­யாக நடக்கும் காதி­களும் கூட தங்­க­ளது செயற்­பா­டு­க­ளினால் வழக்­கா­ளிகள் சந்­தே­கத்­துள்­ளா­கின்­றனர். எனவே இவர்­களும் லஞ்சம் பெற்றே இவ்­வாறு நடக்­கின்­றனர் என்று மக்கள் கரு­து­கின்­றனர். உதா­ர­ண­மாக ஒரு தரப்­பி­ன­ருடன் மாத்­திரம் கௌர­வ­மா­கவும் அன்­பா­கவும் பேசு­வது, அவர்கள் விட­யத்தில் மாத்­திரம் கவனம் செலுத்­து­வது, மற்­றைய தரப்­பி­னரை அலட்­சி­யப்­ப­டுத்­து­வது போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

பொது­வாக காதி நீதி­மன்ற சட்­ட­வி­தி­களைப் பற்­றிய தெளிவு இல்­லா­மையும் பொது மக்­க­ளுக்கு மத்­தியில் காதி­நீ­தி­மன்றம் பற்றி நல்­லெண்­ணத்தை இல்­லா­தாக்கி தப்­ப­பிப்­பி­ரா­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ணி­யாக அமை­கின்­றது. போதிய சட்டத் தெ ளிவு இல்­லாமல் வரும் அதி­க­மா­ன­வர்கள் தன் பக்­கமே நியாயம் இருக்­கின்­றது; அதன்­ப­டியே தீர்ப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென்ற எண்­ணத்தில் இருக்­கின்­றனர். ஆனால் சட்­டமும் நியா­யமும் அதற்கு மாற்­ற­மாக இருக்கும் போது சட்ட விதி­களைப் பேணி காதி தீர்ப்­ப­ளிக்கும் போது, காதி தனக்கு அநி­யாயம் செய்து விட்­ட­தாகக் கூறு­கின்­றனர். சட்­டத்தின் நடை­முறை விதி­களைப் பின்­பற்ற வேண்­டி­யதன் கார­ண­மாக நிவா­ரணம் பெற ஏற்­படும் தாம­தமும் காதி நீதி­மன்றம் பற்றி அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும் கார­ணங்­களில் ஒன்­றாக இருக்­கின்­றது. ஒருவர் தாப­ரிப்பு செலுத்த தவ­றும்­போது அதனை அற­விட சட்­டத்தில் நடை­மு­றை­யொன்று இருக்­கின்­றது. அதனைப் பின்­பற்றி சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் போது கால­தா­மதம் ஏற்­ப­டு­கின்­றது. உட­ன­டி­யாக நிவா­ரணம் எதிர்­பார்த்து வரு­ப­வர்கள் காதி நீதிவான் வேண்­டு­மென்று தாம­தப்­ப­டுத்­து­கின்றார் என்று குறை கூறு­கின்­றனர். எனினும் பொது நீதி­மன்­றங்­களில் இதனை விடக் கூடு­த­லான கால­தா­மதம் ஏற்­ப­டுவதை அவர்கள் அறி­வ­தில்லை. காதி­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களே வழங்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வ­தி­கா­ரங்­க­ளுக்கு உட்­ப­டாத விஷ­யங்­களை அவை­க­ளுக்­கு­ரிய நீதி­மன்­றங்­களின் ஊடா­கவே செய்து கொள்ள வேண்டும். இது பற்­றிய தெளிவு இல்­லா­ததன் கார­ண­மா­கவும் காதி நீதி­மன்­றங்­களில் எமக்கு நீதி கிடைக்­க­வில்லை எனக் குறை கூறு­ப­வர்­களும் இருக்­கின்­றனர்.

காதி நீதி­மன்­றங்கள் ஒழிக்­கப்­படும் நிலை ஏற்­பட்டால் முஸ்­லிம்கள் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­பதை நம்மில் பலரும் அறி­யாது இருக்­கின்­றனர். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஏற்­படும் இழப்­பு­களும் சிர­மங்­களும் அளப் பெரி­யன.
முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டால், நாம் எமது விவாக விவா­க­ரத்து தொடர்­பான விவ­கா­ரங்­களில் பொதுச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டுவோம். அதனால் இஸ்­லா­மிய நெறி­மு­றை­களைப் பேண முடி­யாத நிலைமை ஏற்­படும்; முஸ்­லி­மான ஆண்­களும் பெண்­களும் இஸ்­லா­மியச் சட்­டத்­தினால் தமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் உரி­மை­களை இழக்க நேரிடும். இதனால் ஆண் பெண் இரு­பா­லாரும் பாதிக்­கப்­ப­டுவர். அதிலும் பெண்­களே அதிகம் பாதிக்­கப்­ப­டு­வார்கள். பின்­வரும் தலைப்­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதனை நாம் சுல­ப­மாக புரிந்த கொள்­ளலாம்.

மனைவி கண­வனைத் தாப­ரிக்க
வேண்­டிய நிலை ஏற்­படும்
தற்­போ­தைய முஸ்லிம் தனியார் சட்­டத்தின் பிர­காரம் ஒரு முஸ்­லி­மான மனைவி எவ்­வித செல்வ நிலையில் இருந்­தாலும் தனது கண­வ­னுக்குப் பரா­ம­ரிப்பு வழங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கண­வனே அவ­ளுக்குப் பரா­ம­ரிப்பு வழங்க வேண்டும். எனினும் பொதுச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்ற ஒரு முஸ்லிம் அல்­லாத பெண் போதிய வரு­மா­ன­முள்­ள­வ­ளாக இருந்தால் அவ­ளுக்கு அவ­ளது கணவன் பரா­ம­ரிப்பு வழங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதே நேரம் கணவன், தனக்குப் போதிய வரு­மானம் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் தன் மனை­வி­யிடம் பரா­ம­ரிப்புக் கோரி வழக்குத் தொட­ரலாம். ஆகவே , முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டால் வச­தி­யுள்ள ஒரு முஸ்லிம் பெண், தன் கண­வ­னிடம் பரா­ம­ரிப்புப் பெற முடி­யாத நிலை ஏற்­ப­டு­வ­துடன் வரு­மானம் அற்ற தன் கண­வ­னுக்கு அவள் பரா­ம­ரிப்பு வழங்க வேண்­டிய நிலையும் ஏற்­படும்.

மனைவி கண­வ­னுக்கு நஷ்­ட­யீடு
வழங்க வேண்டும்

பொதுச்­சட்­டத்தில் கண­வ­னது தவறின் கார­ண­மாக மனைவி விவா­க­ரத்துச் செய்தால், கணவன் மனை­விக்கு நஷ்­ட­யீடு வழங்க வேண்டும். அவ்­வாறே மனை­வியின் தவறின் கார­ண­மாக அவளைக் கணவன் விவா­க­ரத்து செய்தால், மனைவி கண­வ­னுக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும். எனினும் இஸ்­லா­மியச் சட்­டத்தின் பிர­காரம் ஒரு கணவன் தன் மனை­வியை எக்­கா­ர­ணத்­துக்­காக விவா­க­ரத்துச் செய்­தாலும் அவள், தன் கண­வ­னுக்கு எவ்­வித நஷ்­ட­ஈடும் வழங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதுவே காதி நீதி­மன்ற நடை­மு­றை­யிலும் உள்­ளது. முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டு பொதுச் சட்­டத்­தினால் நாம் ஆளப்­படும் நிலை ஏற்­பட்டால், விவா­க­ரத்தின் போது முஸ்­லி­மான மனை­வியும் கண­வ­னுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

தாய் பிள்­ளை­களைத் தாப­ரிக்க வேண்­டிய நிலை ஏற்­படும்
தாய்க்கு எவ்­வி­த­மான வரு­மானம் இருந்த போதிலும் தகப்­பனே பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்க வேண்­டு­மென்­பது இஸ்­லா­மியச் சட்­ட­மாகும். அவ்­வாறே முஸ்லிம் தனியார் சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது. காதி நீதி­மன்ற நடை­மு­றை­யிலும் அதுவே இருக்­கின்­றது. பொதுச் சட்­டத்தில் தாய்க்கு வரு­மானம் இருக்கும் போது தாயே பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்க வேண்­டு­மென்று கூறப்­பட்­டுள்­ளது. தகப்­ப­னுக்கு அக்­க­டமை இல்லை. முஸ்லிம் தனியார் சட்டம் நீக்­கப்­பட்டு பொதுச் சட்­டத்­தினால் நாம் ஆளப்­படும் நிலை ஏற்­பட்டால் , தாய்க்கு வரு­மானம் இருப்பின் தகப்­ப­னிடம் பிள்ளைத் தாப­ரிப்புக் கோர முடி­யாத நிலை ஏற்­படும். தாயே பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்க வேண்­டி­வரும்.

மஹர், இத்தாப் பணம் இல்லை
இஸ்­லா­மியச் சட்­டத்தில் ஒரு பெண்­ணுக்கு உரித்­தான இத்தாப் பணத்­தையும் மஹ­ரையும் பெறும் வாய்ப்பைப் பொதுச் சட்­டத்தின் கீழ் இழக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

வழக்­குக்­காக தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­படும்
தற்­போது நடை­மு­றையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்­டத்தின் பிர­காரம் விவா­க­ரத்துக் கோரு­பவர் கணவன், மனைவி இரு­வரில் யாராக இருந்த போதிலும் மனைவி வசிக்கும் பிர­தே­சத்­துக்­கு­ரிய காதி நீதி­மன்­றத்­தி­லேயே அதற்­கான வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இது முஸ்லிம் பெண்­க­ளி­னது வச­திக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட சட்ட விதி­யாகும். எனினும் பொதுச் சட்­டத்தில் அது கவ­னத்திற் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. பொதுச் சட்­டத்தில் விவா­க­ரத்­துக்­கான வழக்கை கண­வ­னது பிர­தேசம் அல்­லது மனை­வி­யி­னது பிர­தேசம் அல்­லது விவாகப் பதிவு செய்­யப்­பட்ட பிர­தேசம் ஆகிய மூன்று பிர­தே­சங்­களில் ஏதே­னு­மொரு பிர­தே­சத்­துக்­கு­ரிய மாவட்ட நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யலாம். எனவே கண்­டியில் வசிக்கும் மனை­வியை யாழ்ப்­பா­ணத்தில் வசிக்கும் கணவன் விவா­க­ரத்துச் செய்ய விரும்­பினால், அவர் யாழ்ப்­பாண மாவட்ட நீதி­மன்­றத்தில் அதற்­கான வழக்கைத் தாக்கல் செய்­யலாம். அப்­போது மனைவி கண்­டி­யி­லி­ருந்து வழக்­குக்­காக யாழ்ப்­பாணம் செல்ல வேண்­டிய நிலை ஏற்­படும்.

சம­ரசத்­துக்­கான வாய்ப்பு இல்­லாமை
முஸ்லிம் தனியார் சட்­டத்தில் விவா­க­ரத்து வழங்க முன்னர் கணவன் மனை­விக்­கி­டையில் சம­ரசம் ஏற்­ப­டுத்­து­வதில் காதி கூடிய முயற்­சிகள் மேற்­கொள்ள வேண்­டு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் காதி­மார்கள் சம­ர­சத்­திற்கு தன்­னா­லான முயற்­சி­களை மேற்­கொண்டு அம்­மு­யற்­சிகள் பய­ன­ளிக்­காத போதே விவா­க­ரத்து வழங்­கு­கின்­றனர். வேறு நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் தம் கட்­சிக்­கா­ரர்­களின் கோரிக்­கையை நியா­யப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு விவா­க­ரத்துப் பெற்றுக் கொடுப்­ப­தி­லேயே கரி­ச­னையாக இருப்பர். சில­வேளை அப்­பாவிப் பெண்கள் மீது அவர்கள் செய்­யாத தவ­று­களும் திணிக்­கப்­ப­டு­வ­துண்டு. எனவே காதி நீதி­மன்ற முறைமை நீக்­கப்­பட்டு முஸ்லிம் பெண்கள், பொது நீதி­மன்­றத்­துக்கு செல்ல நேரிட்டால் அவர்­க­ளுக்கும் இந்த அவல நிலை ஏற்­பட வாய்ப்­புண்டு.

விவா­க­ரத்துப் பெற அதிக காலம் செல்லும்
பொதுச் சட்­டத்தில் விவா­க­ரத்துக் கோரு­பவர் கணவன் மனைவி யாராக இருந்­தாலும் அவர் மூன்று கார­ணங்­களில் ஒன்றை அடுத்த தரப்­பி­ன­ரிடம் இருப்­பதை ஒப்­பு­விப்­பதன் மூலமே விவா­க­ரத்துப் பெறலாம். 1. பாலியல் இய­லாமை (விவா­க­ரத்­துக்கு முன்பு ஏற்­பட்­டி­ருக்க வேண்டும்.) 2. வன்மை உற­வ­றுத்தல் (விட்டுச் செல்லல்) 3. சோரம் போகுதல் அதா­வது பிர­தி­வாதி தவ­றான பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக ஒப்­பு­வித்தல். இக்­கா­ர­ணங்­களில் ஒன்றை நிரூ­பிக்­காது பொதுச் சட்­டத்தின் கீழ் விவா­க­ரத்துப் பெற முடி­யாது. எனினும் தற்­போ­தைய முஸ்லிம் விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் ஒரு மனைவி பின்­வரும் ஆறு கார­ணங்­களில் ஒன்று கண­வ­னிடம் இருக்கும் போது விவா­க­ரத்துக் கோரலாம். 1. மனநோய், 2. குஷ்டம், 3. பாலியல் இய­லாமை 4. தாப­ரிக்­காமை, 5. உடல் அல்­லது உள ரீதி­யான துன்­பு­றுத்தல், 6. வன்மை உற­வ­றுத்தல் (விட்டுச் செல்லல்)

அடுத்­தது எவ்­விதக் கார­ணங்கள் இல்­லாத நிலை­யிலும் இரு­வரும் உடன்­பட்டு பரஸ்­பர இணக்­கப்­பாட்­டுடன் ஒரே நாளில் விவா­க­ரத்துப் பெறும் வாய்ப்பும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மாத்­தி­ரமே இருக்­கின்­றது. இவ்­வாய்ப்பு பொதுச் சட்­டத்தில் இல்லை.
மாவட்ட நீதி­மன்­றங்­களில் விவா­க­ரத்துப் பெற ஆறு, ஏழு வரு­டங்கள் காத்­தி­ருக்க வேண்டும். அப்­போது ஆணும் பெண்ணும் மறு­மணம் செய்து மகிழ்ச்­சி­யாக வாழும் வயதைத் தாண்­டி­யி­ருப்பர்.

கூடிய பணச் செலவு ஏற்­படும்
மாவட்ட நீதி­மன்­றத்தில் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு கட்­டணம் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­படல். அதிலும் பெண்கள் மிகச் சிர­மப்­ப­டு­வார்கள். வழக்கு­க­ளுக்­காக காதி நீதி­மன்றம் வரு­வ­தற்கு பஸ் பயணக் கட்­டணம் கூட இல்­லாது பெண்கள் சிர­மப்­படும் நிலை­மை­களை காதி நீதி­வான்­க­ளாகக் கட­மை­யாற்­றிய நாம் அவ­தா­னித்­தி­ருக்­கின்றோம். இந்­நி­லையில் பொதுச் சட்­டத்தின் கீழ் மாவட்ட நீதி­மன்­றங்­களில் வழக்­காட சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு பணம் செலுத்த அவர்­களால் எவ்­வாறு முடியும்? ஆண்கள் எவ்­வாறோ கூடிய பணம் செலுத்தி திற­மை­யான சட்­டத்­த­ர­ணி­களைப் பிடித்து தம் இலக்­கு­களை அடைந்­து­கொள்­வார்கள்.

சிரமம் உண்­டாகும்
பொது­வாக பெண்கள் தமக்குத் தேவை­யான நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொள்ள காதி நீதி­மன்றம் வரு­வ­தற்குக் கூட பின்வாங்குகின்றனர். அதிலும் ஆண்கள் தாபரிப்புப் பணத்தை செலுத்தத் தவறும் போது அதனை அறவிட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தல் கட்டளை அனுப்பப்படும் போது பணத்தைப் பெற அங்கு செல்ல முடியாதெனக் கூறி தாபரிப்புப் பெறுவதைக் கைவிட்டு விடுகின்றனர். இவ்வாறான நிலையில் காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் , முஸ்லிம் பெண்கள் பொது நீதிமன்றத்துக்கு எங்ஙனம் போகப்போகின்றார்கள்?

மேலும் உரிய நேரத்தில் கணவன் தாபரிப்பை செலுத்தத் தவறும் போது எந்நேரத்திலும் காதி நீதிவானுடன் தொடர்பு கொண்டு அதைப் பெற்றுத் தருமாறு கோரும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது உண்டு. பொதுச் சட்டத்தின் கீழ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாபரிப்புக் கோரும் நிலை வந்தால் இவ்வசதியை இழக்க வேண்டியிருக்கும். அப்போது சட்டத்தரணி மூலம் தோன்றியே மஜிஸ்ட்ரேட் நீதிவானிடம் கணவன் தாபரிப்பு வழங்கவில்லை என்பதை முறையிட வேண்டிய நிலை ஏற்படும்.

ஆகவே இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்திற் கொண்டு பார்க்கும் போது காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது பெண்களே. இவைகளைப் பற்றித் தெளிவில்லாமல் நம்மில் சிலர் காதி நீதிமன்றம் ஒழிக்கப்பட்டு முஸ்லிம்களது விவகாரங்கள் பொது நீதிமன்றத்துக்குச் செல்வது சிறந்தது எனக் கருதுகின்றனர். இது ‘கபலின் லிபட’ (சட்டி சூடு என அடுப்பில் குதித்தான்) என்ற சிங்கள முதுமொழிக்கு ஒப்பாக ஆகிவிடும். எனவே காதி நீதிமன்ற நடைமுறையில் இருக்கும் சில குறைபாடுகளை நீக்கி அதனைப் பாதுகாக்க முயற்சிப்பதுஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அல்லாஹ் அருள்புரிவானாக! -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.