மத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

2 509

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒரே சட்டம் ’ என்ற அடிப்படையில் இலங்கையில் அமுலிலுள்ள கண்டியர், தேச வழமை, முஸ்லிம் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென ஹெல பொது சவிய அமைப்பின்  தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மத்ரஸா பாடசாலைகளுக்கு ஏனைய அரச, தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு போன்று கல்விச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பாரளுமன்றத்தில் பாரளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கத்தின் நிலைப்பாடா இது? இலங்கையிலிருந்து சூபி முஸ்லிம்கள் படிப்படியாக வஹாப் வாதத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு மத்ரஸா பாடசாலைகளே பிரதான காரணமாகும். கடந்த காலங்களில் சவூதி மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஆசிரியர்கள் வந்து இங்கு அடிப்படைவாதத்தைப் போதித்துள்ளார்கள்.

இலங்கையில் 1600 மத்ரஸா பாடசாலைகள் இருக்கின்றன. இங்கு ஷரீஆ சட்டம், அரபு மொழி, வஹாபிஸம் போன்ற அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது. இது நாட்டின் பொதுக் கல்வி முறைக்கு பொருத்தமற்றதாகும். இங்கு அடிப்படைவாதிகளே உருவாக்கப்படுகிறார்கள்.

இதனால் மத்ரஸா பாடசாலைகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இது உங்கள் அரசின் கீழ் நடைபெறாது என்பது கல்வி அமைச்சின் கருத்து மூலம் உறுதியாகியுள்ளது.

‘.ஒரே நாடு, ஒரே சட்டம் ’ என்று வாக்குறுதியளித்ததனாலே பெரும்பான்மை சமூகம் உங்களுக்கு வாக்களித்தது. அதனால் கண்டியர் சட்டம், தேசவழமை சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றை இல்லாதொழிக்க வேண்டும். இது தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

2 Comments
 1. இது கட்ச்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி சிங்களவர்கள் சொல்லிவருவதுதான். முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளிலும் இத்தகைய போக்கு வளர்ந்து வருகிறது. முஸ்லிம்கள் சிறுபாண்மையாகவுள்ள நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் களதும் முஸ்லிம் அறிவுத்துறையினதும் கருத்துக்களை சமரசங்களை தீர்வுகளை உள்வாங்கி முஸ்லிம் அறிவுத்துறை இந்த விவாதத்தை ஆக்கபூர்வமான சமரசத்தை உருவாக்கும்வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

  1. மொஹிடீன் ரஜா, எழுத்தாளர் says

   நண்ப, முஸ்லிம் மக்கள் பால் அன்றிலிருந்து கரிசனை காட்டி வரும் தங்கள் ஈர நெஞ்சுக்கு நன்றி! நிற்க ….
   போதிய அறிவு ஞானமோ தேடலோ இன்றி இந்தத் தேரர் இக்கருத்தை கூறியுள்ளார்.
   //இலங்கையிலிருந்து சூபி முஸ்லிம்கள் படிப்படியாக வஹாப் வாதத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள்.//
   இக்கருத்தையே பிரபலமான வேறொரு தேரரும் அடிக்கடி கூறுகிறார்.
   இக்கூற்று நுனிப்புல் மேய்ந்ததன் விளைவு அல்லது அரைகுறைச் செவியின் வெளிப்பாடு என்பதை உணர முடியும்.
   இலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையினர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றும் பிரிவினர் என்பதே உண்மை.

Cancel Reply

Your email address will not be published.