பஸ் விபத்துகளைத் தவிர்க்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்

0 89

பதுளை, பசறை– மடுல்­சீமை பிர­தான வீதியின் ஆறாம் மைல் கல் பகு­தியில் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பஸ்­ஸொன்று 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். படு­கா­யங்­க­ளுக்­குள்­ளான 41 பேர் பசறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­பெற்று வரு­கின்­றனர்.

இவ்­வி­பத்துச் சம்­பவம் அப்­ப­குதி மக்­களை மாத்­தி­ர­மல்ல முழு இலங்கை மக்­க­ளையும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. பல்­வேறு தேவை­க­ளுக்­கா­கவும், கட­மை­க­ளுக்­கா­கவும் பொதுப்­போக்­கு­வ­ரத்து பஸ்­களில் பய­ணிக்கும் மக்கள் இவ்­வா­றான அகோர விபத்­துக்­குள்­ளாகி உயி­ரி­ழப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த திங்­கட்­கி­ழமை மாலை 5.20 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது. பச­றை­யி­லி­ருந்து– மடுல்­சீமை நோக்கி பய­ணித்த பஸ் வண்­டியே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. விபத்து நடந்த பகு­தியில் பஸ் சாரதி லொறி­யொன்று முன்­நோக்கிப் பய­ணிக்க இடம்­கொ­டுக்க முற்­பட்­ட­போதே பஸ் வண்டி 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்­துள்­ள­தாக ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் வீதிக்­கட்­ட­மைப்­புகள் உரிய தரத்­தினைக் கொண்­ட­ன­வாக இல்லை. குறிப்­பாக மலை­ய­கத்தின் வீதிகள் மிகவும் ஒடுங்­கி­ய­­ன­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. இதன் கார­ண­மாக விபத்­துக்கள் தவிர்க்க முடி­யா­த­தா­கி­வி­டு­கின்­றன என்­பதை அரசும், பொறுப்­பான அரச நிறு­வ­னங்­களும் உணர்ந்­து­கொள்ள வேண்டும். விபத்து ஒன்று இடம்­பெற்­றதன் பின்பு நஷ்ட ஈடு வழங்­குவோம் எனத் தெரி­விப்­பது கேலிக்­கு­ரி­ய­தாகும். ஒரு­வரின் உயி­ருக்­கான நஷ்ட ஈட்­டினை எவ்­வளவென்று எவ­ராலும் தீர்­மா­னிக்க முடி­யாது.

விபத்தில் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப் பட்­டுள்­ள­வர்­களில் 21 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள், 4 பேர் பிள்­ளைகள் ஆவர். இவர்­களில் 4 பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இந்த பஸ் வண்­டியில் அதி­க­ளவில் பாட­சாலை மாண­வர்­களும் தொழில் முடிந்து வீடு திரும்­பு­ப­வர்­க­ளுமே இருந்­துள்­ளனர்.

போக்­கு­வ­ரத்து அமைச்சர் மஹிந்த அம­ர­வீர நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி கிங்ஸ்லி ரண­வக்­க­வுடன் விபத்து தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார். விபத்தில் உயி­ழந்­த­வர்கள் மற்றும் காயங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்கள் தொடர்பில் உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு போக்­கு­வ­ரத்துச் சபையின் தலை­வ­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இத­ன­டிப்­ப­டையில் போக்­கு­வ­ரத்துச் சபை உயி­ரி­ழந்­த­வர்­களின் இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அத்­தோடு காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வோ­ருக்குத் தேவை­யான பொருட்­களை வழங்­கு­வ­தற்கும் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

பொதுப்­போக்­கு­வ­ரத்துச் சேவையில் பழு­த­டைந்த, பழைய பஸ்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்டும். அத்­தோடு வீதிக் கட்­ட­மைப்பை சீர்­தி­ருத்­து­வது தொடர்­பிலும் அரசு தாம­தி­யாது கவனம் செலுத்­த­வேண்டும். பஸ் சார­திகளுக்கு விபத்­துக்­களைத் தவிர்ப்­பது தொடர்­பான பயிற்சிப் பட்­ட­றைகள் நடாத்­தப்­ப­ட­வேண்டும்.

நேற்று பசறை வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்­த­வர்­களின் பிரேத பரி­சோ­த­னையும், விசா­ர­ணை­களும் இடம்­பெற்­றன. பதுளை நீதிவான் சமிந்த கரு­ணா­தாச விசா­ர­ணை­களை நடத்­தினார். இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைத் தலைவர் கிங்ஸ்லி ரண­வக்க விபத்து நடந்த இடத்­துக்கு விஜயம் செய்து மேல­திக தக­வல்­களைத் திரட்­டினார்.

நேற்று பசறை வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்­த­வர்­களின் மரணம் தொடர்­பான விசா­ரணை நடை­பெற்­ற­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் வைத்­தி­ய­சாலை வளா­கத்­துக்குச் சென்­றி­ருந்தார். அங்கு பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் குழு­மி­யி­ருந்­தனர்.

‘மோச­மான, பழைய பஸ்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தாலே விபத்­துக்கள் நிகழ்­கின்­றன. அதனால் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்’ என அவர் மக்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டனர். அதிகாரத்திலிருந்த போது எதுவும் செய்யாதவர்கள் இங்கு ஆறுதல் கூறி அரசியல் பேசவேண்டாம் என மக்கள் அவரை எச்சரித்தார்கள். இறுதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூறவேண்டும். அவர்கள் மக்களுக்கு உரிய சேவையாற்றினால் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.