மிம்பர் அருள் நிறைந்த ஓர் அமானிதம்

0 1,422

 

மிம்பர் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் பரிபூரணத்தன்மையையும் அதன் முழுமையான வாழ்க்கைத் திட்டத்தையும் அது இந்த உலகத்திற்கு சொல்கின்ற தூதுச் செய்தியையும் எடுத்துரைப்பதற்கான மிகப்பெரும் பெறுமதி வாய்ந்த ஓர் ஊடகமாகும். இந்த ஊடகம் விலைமதிப்பற்றது, இங்கு பேசப்படுகின்ற செய்திகள் வானவர்களால் சூழப்பட்ட ஒரு சபையை நோக்கியே பேசப்படுகின்றன, அல்லாஹ்வின் அருளும் அமைதியும் இறங்கிக் கொண்டிருக்கும் உயர்ந்த சபையை நோக்கியே பேசப்படுகின்றன.

மிம்பரும் மிம்பரில் கதீப் உரையாற்றுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் நேரமும் அமானிதங்களாகும். அதுபற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும். பல இலட்சக்கணக்கான மனித மணித்தியாலங்களை வீணடிப்பது மிகப்பெரும் பாவச்செயலாகும். சிறந்த தலைப்புக்கள், தேவையான வழிகாட்டல்கள், பயனுள்ள தகவல்கள், இடம், காலம், நேரம் சூழலுக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்ட பிரசங்கங்கள், உள்ளங்களைச் சென்றடையும் கவர்ச்சிகரமான உரையாடல்களும் இல்லையென்றால் அது மிப்பெரும் அமானித மோசடியாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் சுவனவாதிகளின் பண்புகள் குறித்து ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறான். “இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர்.”

“அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.”

(சூரத்துல் மஆரிஜ்: 32-33)

உலக இலாபங்களுக்காகவும் தமது கோபங்கள், குரோதங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் பிறரது குறைகளை அம்பலப்படுத்துவதற்காகவும் பெண்களையும் இளைஞர்களையும் வீணாக சபிப்பதற்காகவும் மிம்பர்களை பயன்படுத்துவது உகந்த காரியமல்ல, சாபமிடாது சாந்தமாக சொல்வதும் வசைபாடாமல் வழிகாட்டுவதும்

சிரமப்படுத்தாது இலகுபடுத்துவதும், அசிங்கமாக திட்டாமல் அன்பாக அணுகுவதும், அநாகரிகமாக விமர்சிக்காமல் அழகாக உரையாடுவதுமே மிம்பர்கள் செய்ய வேண்டிய பணியாகும்.

அமானிதங்கள் குறித்து அதிகமாக பேசுகின்ற கண்ணியமிக்க மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், நாம் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் மிம்பரை மிகப்பெரிய அமானிதமாக பார்க்க வேண்டும், அதில் மக்களது உள்ளங்களோடு உரையாடி அவர்களது நடத்தைகளில் மாற்றங்களை கொண்டு வருதற்காக எமக்கு வழங்கப்பட்டிருக்கும் கால நேரத்தின் விடயத்திலும் அமானிதம் பேணிக் கொள்ள வேண்டும். பொருத்தமற்ற தலைப்புக்களாலும் பயனற்ற உரைகளாலும் குத்பாவுக்கு சமுகளிக்கின்றவர்களின் கால நேரங்களை வீணடித்து அவர்களது ஏச்சுப் பேச்சுக்களுக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் அவர்களது சாபமிடல்களுக்கும் நாம் ஆளாகிவிடக்கூடாது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். இமாம் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்; அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி)  (நூல் – புஹாரி 7138)

நாம் மார்க்க அறிஞர்கள், நாம் உலமாக்கள் நாம் எதனைச் சொன்னாலும் எந்த தலைப்பைப் பேசினாலும் சம்பந்தமில்லால் எப்படி உளறிக்கொட்டினாலும் எவ்வித கேள்வி கணக்குமின்றி மக்கள் அவற்றை செவிமடுத்து விட்டு அமைதியாக செல்லவேண்டும், நாம் பேசியது சரியோ பிழையோ பொருத்தமானதோ இல்லையோ எதுவாயினும் அப்படியே அவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எம்மிடம் இருப்பதுவும் மிகப்பெரும் தவறாகும்.

“காலத்தின் மீது சத்தியமாக” (103:01) “இரவின் மீது சத்தியமாக அது மூடிக்கொள்ளும் போது. பகலின் மீது சத்தியமாக அது வெளியாகிய போது”. (92: 01- 02), “விடியற்காலையின் மீது சத்தியமாக” (89: 01), “காலையின் மீது சத்தியமாக அது தெளிவாகிய போது” (81:18), “முற்பகல் மீது சத்தியமாக” (93:01) என புனித அல்குர்ஆனில் அல்லாஹ் கால நேரங்களின் மீது ஆங்காங்கே சத்தியம் செய்வதைக் காணலாம்.

காலம் மிகவும் பெறுமதி வாய்ந்தது, வீண்விரயங்ளில் மிகப்பெரிய வீண்விரயம் கால நேரங்கள் வீணடிக்கப்படுவதாகும். அதனால்தான் அல்லாஹ் கால நேரங்களை வீண்டிப்பவர்களை மிகப்பெரும் நஷ்டவாளிகள் என்பதாக திருமறையில் குறிப்பிடுகிறான், குத்பாக்களுக்கு நேரகாலத்துடன் வராதவர்கள் குறித்து கடுமையாக சாடுகின்ற எத்தனையோ கதீப்மார்கள், நேர காலத்தோடு குத்பாக்களுக்கு சமுகளித்து குத்பாக்களின் மூலம் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்களின் கால நேரங்களை வீணடித்து விடுகிறார்கள். இப்படி மனிதர்களது கால நேரங்களை வீணடிப்பதும் மிகப்பெரும் பாவமாகும்.

குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள், செய்திகள், நம்பத்தகுந்த வரலாற்றுச் சுவடுகள், தரம் வாய்ந்த தகவல்கள், சமகால நிகழ்வுகள், பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான வழிகாட்டல்களை அழகான சொல்லாடல்கள் மூலம் குறித்த நேரத்துக்குள் எவரையும் சிரமப்படுத்தாது எடுத்துரைப்பதானது கதீப்மார்கள் மிம்பர் எனும் அமானிதத்தை உரிய முறையில் பேணிக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

‘‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள். மேலும் நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசடி செய்யாதீர்கள்’’. (8:27)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு மனிதன் தான் கேள்விப்பட்டதையெல்லாம் பேசுவதே அவன் பொய்யன் என்பதற்கு போதிய சான்றாகும்.  (முஸ்லிம்)

மிகப்பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகள், ஆதாரமற்ற சம்பவங்கள், கிடைக்கின்ற கட்டுக்கதைகள், செவிகளுக்கு எட்டுகின்ற பொய்யான செய்திகள், வதந்திகள், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் நேரத்தை முகாமைத்துவம் செய்யாது வரையறையின்றி வாய்க்கு வருவதையெல்லாம் கொட்டித் தீர்ப்பதானது மிம்பர் எனும் அமானிதத்துக்கு செய்கின்ற மிகப்பெரும் அநியாயமாகும்.

மிம்பரில் நிற்கும் பொழுது உளத்தூய்மையும் அழகான ஆடையும் கவர்ச்சிகரமான தோற்றமும் கம்பீரமான குரல் வளமும் எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமான அம்சமே கீழுள்ள ஒவ்வொருவரினதும் கால நேரத்துக்கு நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தை எம்மில் ஏற்படுத்திக் கொள்வதாகும். ஏனெனில், முதலாவது அம்சம் அது நம்மோடு மாத்திரம் தொடர்புடையது. அதனை நாம் சீர்செய்துகொள்ளும் பட்சத்தில் அது சரியாகிவிடும். ஆனால் இரண்டாவது அம்சம் பிற மனிதர்களோடு சம்பந்தப்பட்டது அதில் நாம் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்கள் அதனை மன்னிக்காதவரை அல்லாஹ் எம்மை மன்னிக்கப் போவதில்லை என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) (நூல்: முஸ்லிம் )

நபித் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவாற்றினார்கள். அவர்கள் (மிம்பர் மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள். நிச்சயமாக பயானில் (சொற்பொழிவில் பிறரை வயப்படுத்தும்) ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூவாயில் (ரலி) நூல்: முஸ்லிம்)

மென்மையாகவும் நிதானமாகவும் அழகிய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியும் மக்களுக்கு தேவையான, பயனுள்ள வகையிலும் உபதேசம் புரிவதே நபிகளாரின் சுன்னாவாகும். அதே நேரம் இயலுமான வரை சுருக்கமாகவும் சொற்செறிவுள்ளதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம்களைத் தவிர உலகில் வேறு எவருக்குமே கிடைக்காத இந்த அருள் நிறைந்த மிம்பர் எனும் சமூக ஊடகத்தை இன்றிருக்கின்ற தொழில்நுட்ப வசதிக்கமைய நாம் பேசுகின்ற மொழியை அறியக்கூடிய உலக வாழ் மக்கள் அனைவருக்கும் மிக இலகுவாக சென்றடையும் விதமாக அமைத்துக் கொள்ள முடியும், அப்படியாயின் உலகின் எந்த மூலையிலிருந்து கொண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் கேட்கும் விதமாக மிகப்பயனுள்ள உரைகளாக எமது உரைகளை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும், நூறு, இருநூறு நபர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த நமது உரைகள் பல இலட்சக்கணக்கானோருக்கு சென்றடையும் பட்சத்தில் அது நமக்கும் ஏனைய மக்களுக்கும் மென்மேலும் பல நன்மைகளை ஈட்டித்தரக்கூடியதாக அமைந்து விடும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த அமானிதத்தை வீணடித்து விடாது இதனை மிகப்பக்குவமாகவும் யாவருக்கும் பயனுள்ள வகையிலும் அமைத்துக் கொள்வதே இந்த அருளுக்கும் அமானிதத்துக்கும் நாம் செய்கின்ற மிகப்பெரும் நன்றிக்கடனாகும்.

Leave A Reply

Your email address will not be published.