அறிவுஜீவிகளின் பங்களிப்பற்ற அரசியல் தலைமைகளால் பயனில்லை

0 1,527

கலாநிதி அமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

பரலோக வாழ்வே நிச்சயம். இகலோக வாழ்வு அனிச்சயம். பரலோக வாழ்வை நோக்கி இகலோக வாழ்வில் அதனை அடைவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தலே ஒரு உண்மையான முஸ்லிமின் கடமை. அதனைத்தவிர்த்து இகலோக வாழ்விலே பூரணமாக மூழ்குவதை முஸ்லிம்கள் தவிர்த்தல் வேண்டும். இவ்வுலகில் வாழ்வதற்குச் சில அடிப்படைத் தேவைகளுண்டு. உணவு, உடை, இல்லம் ஆகியன அத்தேவைகளைப் பூர்த்தி செய்யும். அவை பூர்த்தியாகினால் அதன்பின் மறு உலகப் பயண வண்டிக்காகக் காத்திருக்கும் ஒரு பிரயாணிபோல் வாழவேண்டும்.

இவ்வாறான போதனையுடன்தான் பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் மதபோதகர்கள் இலங்கை முஸ்லிம்களை வழிநடத்தி வந்துள்ளனர். அவர்களின் தலைமையிலேதான் சுமார் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக அதாவது சுதந்திரம் கிடைக்கும்வரை முஸ்லிம் சமூகம் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்துவந்துள்ளது. மனிதனை ஏன் இறைவன் தனது படைப்புகளுக்குள் மிக உன்னதமான ஒரு படைப்பாகச் சிருஷ்டித்து அம்மனிதனிடம் ஏன் மற்றைய படைப்புகளை அமானிதமாக ஒப்படைத்தான் என்ற குர்ஆனின் தத்துவத்தை யதார்த்தத்துடன் மெய்யறிவினூடாக விளங்கக்கூடிய சக்தி அவர்களிடம் அன்று இருக்கவில்லை. இன்றும் இருக்கின்றதா என்பதும் சந்தேகம்.

பிறந்த எல்லாரும் ஒருநாள் மரணித்தேயாகவேண்டும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வதற்கே பிறக்கிறோம்@ ஆகையால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்குப் பதிலாக, பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம், இந்த வாழ்க்கை ஒரு போலி என்ற நோக்கில் இயங்கும் ஒரு சமூகத்துக்கு நீண்டகாலத்தைப் பற்றிய சிந்தனை அவசியமா? அச்சமூகத்தின் சிந்தனையில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று ஆகியன விஞ்சி நிற்குமா? அதனை வழிநடத்தும் தலைமைத்துவமும் அச்சமூகத்தின் நீண்டகாலத்தைப் பற்றிச் சிந்தித்து அதன் சுபீட்சத்துக்காகத் திட்டங்களை வகுக்குமா? நாளைக்கு வழிகாட்டினால் போதுமே, நாற்பது ஆண்டுகளைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்ற போக்கில் அந்தத் தலைமைத்துவம் இயங்காதா? இவ்வாறான கேள்விகளையும் அந்தக் கேள்விகளுக்குப் பின்னணியாக அமைந்துள்ள மதபோதனையையும் மையமாக வைத்தே இக்கட்டுரை இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைக்கின்றது.

இலங்கை ஒரு முஸ்லிம் நாடல்ல. அது பல்லினங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு. சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவும், தமிழர், சோனகர், மலாயர், பறங்கியர் போன்ற இன்னும் சில இனத்தவர்கள் சிறுபான்மையினராகவும் இங்கே கலந்து வாழ்கின்றனர். எனினும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நிலவிய இனங்களுக்கிடையிலான சௌஜன்ய உறவு இன்று குறைந்துவிட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. இனவாதம், மதவாதம், சாதிப்பாகுபாடு ஆகிய பிரிவினைவாதங்கள் தேசியம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு அந்த அமைதியைக் குலைக்கின்றதென்பது ஒரு புறமிருக்க, பெரும்பான்மை இனமே இந்த நாட்டின் ஒரே உரித்தாளன் என்ற கொள்கை படிப்படியாக வளரத் தொடங்கி இன்று அது ஒரு பேராதிக்கவாதப் பேரலையாக வீசிக்கொண்டிருப்பதை அரசியல் அவதானிகள் உணர்வர். இந்த நிலையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமென்ன? அந்த எதிர்காலத்தைப்பற்றி அவற்றின் தலைமைத்துவங்கள் சிந்திக்கின்றனவா? இந்த வினாக்களுக்குரிய விடையை அல்லது விடைகளை முஸ்லிம்களின் கோணத்திலிருந்து நோக்குவோம்.

ஓவ்வொரு சமூகத்திலும் காலத்துக்குக்காலம் தலைமைத்துவங்கள் உருவாகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தின் தலைமைத்துவம் அச்சமூகத்தின் வரலாற்றையும், அது வாழும் சூழலையும், தலைமைத்துவத்தின் சுயசிந்தனையையும் அடிப்படைகளாகக் கொண்டு தூரநோக்குடனும் தீர்க்கதரிசனத்துடனும் தனது சமூகம் எதிர்வரும் காலம், சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வாழக்கூடியவாறு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும். எனினும், ஒரு காலகட்டத்தில் வெற்றிகரமாக இயங்கிய தலைமைத்துவமே எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான பாதையை வகுத்துக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.

எனவே இன்று இயங்கும் ஒரு தலைவன் மறைந்துபோன ஒரு தலைவனின் பாதையிலேயே தனது சமூகத்தை வழிநடாத்துவானாயின் அவனை நிகழ்காலத்துக்குப் பொருத்தமற்ற தலைவனென்றே கூறவேண்டும். அவனால் வருங்காலச் சந்ததிக்கும் பயனில்லை.
உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவுறும் காலகட்டத்தில் இலங்கையின் பௌத்த, இந்து மதத்தவர்களிடையே ஒரு கலாச்சார விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த விழிப்புணர்வின் ஓர் அங்கம் தேசிய விடுதலை. நாடு அன்னியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடையவேண்டுமென்ற தாகம் அவர்களிடையே குடிகொள்ளத் தொடங்கிற்று. அவ்வாறு சுதந்திரமடைந்தால் நாட்டை ஆளும் சக்தி தமது மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான ஆயத்தமாக நவீன கல்விப் பாதையில் தமது சமூக மக்கள் நடைபோட வேண்டுமென்ற தீர்க்கதரிசனத்துடன் சமூகத் தலைவர்கள் கல்லூரிகளையும் கலைக் கூடங்களையும் நிறுவலாயினர். அந்த விழிப்புணர்வால் உந்தப்பட்ட ஒரு முஸ்லிமே சித்தி லெப்பை. சுதந்திர இலங்கையில் முஸ்லிம்களின் ஈடேற்றம் மதக்கல்வியுடனான உலகியல் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளதென்பதை அவர் உணர்ந்ததனாலேதான் ஒரு ஸாஹிராக் கல்லூரி அன்று உருவானதும் அதிலிருந்து பின்னர் நூற்றுக்கணக்கான சிறந்த நற்பிரஜைகளை முஸ்லிம் சமூகம் உருவாக்கியதும். தான் வாழ்ந்த காலத்தின் போக்கினை உணர்ந்து தனது சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி தூரநோக்குடன் சிந்தித்த தலைவன் சித்தி லெப்பை. அவரை முஸ்லிம் சமூகம் உருவாக்கவில்லை, காலமே உருவாக்கியது. அன்றைய முஸ்லிம்கள் அவருக்குக் கொடுத்த பரிசு கண்டனம் மட்டுமே.

முஸ்லிம்கள் உலகியற் கல்வி கற்கவேண்டுமென்பதை வலியுறுத்திய சித்தி லெப்பை அந்தக் கல்வியை யார் கற்பிப்பது என்பதைப்பற்றி அன்று சிந்திக்கவில்லை. மாணவர்களே இல்லாதவேளையில் ஆசிரியனைப்பற்றி ஏன் அவர் கவலைப்பட வேண்டும்? ஆனால், முஸ்லிம் மாணவ சமுதாயமொன்று உருவானதன்பின் முஸ்லிம் ஆசிரியனைப்பற்றிச் சிந்தித்தார் இன்னொரு தலைவர். அவர்தான் 1950கள் உருவாக்கிய ராசிக் பரீத். அவரது தூரசிந்தனையின் விளைவே அட்டாளைச்சேனை முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையும் அதிலிருந்து பயிற்றப்பட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியர்களுமாகும்.

இதனைத் தொடர்ந்து 1960களிலிருந்து சுதந்திர இலங்கையின் வளர்ச்சி ஒரு புதிய பாதையில் செல்லத் தொடங்கிற்று. ஆங்கில மொழியின் ஆட்சி மங்கத்தொடங்கி தாய்மொழிக்கல்வியில் நாடு கவனம் செலுத்தியது. தாய்மொழியிற் கல்விகற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைந்து பட்டம்பெற்று உயர்பதவிகளை வகிக்கலாயினர். இவர்களுள் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்ததைப்பற்றிச் சிந்தித்த இன்னொரு தலைவன் பதியுத்தீன் மஹ்மூத். அந்தச் சிந்தனையின் வெளிப்பாடே இன்றைய முஸ்லிம் மகா வித்தியாலயங்கள். முஸ்லிம் மகா வித்தியாலயங்கள் அன்று உருவாக்கப்படாது இருந்திருந்தால் புத்திஜீவிகள் என்ற ஒரு வர்க்கமே முஸ்லிம்களிடையே இன்று வளர்ந்திருக்கமாட்டாது.

வர்த்தக சமூகமெனப் பட்டம் சூட்டப்பட்ட ஒரு சமூகத்தை ஆசிரிய சமூகமாக மாற்றியவர் அந்தச் சிந்தனையாளன். இவ்வாறு கால மாற்றங்களை உணர்ந்து தீர்க்கதரிசனத்துடன் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால சுபீட்சத்துக்காகப் பாடுபட்டவர்களே அன்றையத் தலைவர்கள். அவர்கள் தன்நலன் கருதாது தமது சமூகத்துக்காக உழைத்த தியாகிகள். அவர்களுள் எவருமே மந்திரிப் பதவிகளுடன் மாடமாளிகைகளை அமைத்துக்கொண்டு, செல்வச் சீமான்களாகி, சுகபோகம் கொண்டாடியவர்களல்லர். அவர்களின் இறுதிக்காலத்தில் வறுமை அவர்களை அணுகியது என்பதை இன்றைய சந்ததி அறியுமா? துரதிஷ்டவசமாக அவர்களின் மறைவுக்குப்பின்னர் முஸ்லிம் தலைமைத்துவத்தின் போக்கும் நோக்கும் திசை திரும்பிவிட்டது.

சென்றகாலத் தலைவர்கள் வாழ்ந்த காலகட்டங்களும் அவர்கள் கையாண்ட அரசியல் தந்திரங்களும் இன்று செல்லுபடியாகா. அதனால் அதே வியூகங்களை இன்றைய தலைமைத்துவமும் கையாள எத்தனிக்குமாயின் அவை பயனளிக்காமற் போவது திண்ணம். உதாரணமாக, ராசிக் பரீத் அவர்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் தானும் ஒருவனென இணைந்து செயற்பட்டார். மற்றவர்கள் தூற்றினாலும் பரவாயில்லை என்று கருதி தனது சோனக இனத்துக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.
அவருக்கு மதப்பற்றைவிட இனப்பற்றே அதிகமாக இருந்தது. பதியுத்தீனோ நாட்டுப்பற்றுள்ளவர். ஒரே கட்சியின் தூணாக நின்று பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நினைத்ததைச் சாதித்து முடித்த சாதனையாளன். இவ்விரு தலைவர்களின் அரசியல் வியூகங்களுக்கு நாட்டின் அன்றைய ஜனநாயக அரசியல் அரணாக அமைந்திருந்தது. அந்த அரண் இன்றில்லை.

இலங்கை அரசியலை இப்போது ஆட்கொண்டிருப்பது ஜனநாயகமல்ல, அப்பட்டமான இன-மதவாதம். சிறுபான்மை இனங்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையுமில்லை என்று கூறுபவர்களுடன் இணைந்து நின்று செயற்பட்டால் நன்மையடையலாமென முஸ்லிம் தலைமைத்துவம் நினைப்பது தலைவர்களைப் பொறுத்தமட்டில் கும்பிட்டு வாழ்ந்தாலும் குபேரர்களாகலாம் என்று நினைப்பதுபோல் இருக்கிறது.

அதனாலேதான் இத்தலைமைத்துவம் அடுத்த தேர்தலைப்பற்றிச் சிந்திக்கின்றதேயன்றி அடுத்த ஐம்பது ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறிருக்கப் போகின்றது, அது ஒரு சமூகமாக நிலைத்திருக்குமா, அதன் சுபீட்சத்துக்கு வழியென்ன என்பனபற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அவர்களுள் எவருமே இதனைப்பற்றிப் பேசுவதாகவும் தெரியவில்லை.

மதத்தலைவர்களோ இன்னும் பரலோக ஈடேற்றத்தைப்பற்றிய பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றனரே ஒழிய, இவ்வுலகத்தில் மற்றைய இனங்களுடன் சரிநிகர்சமானமாக முஸ்லிம்கள் நீண்டகாலம் வாழ்வதெப்படி என்பதைப்பற்றிய சிந்தனையற்றவர்களாக இருப்பது முஸ்லிம்களின் துரதிஷ்டமே.
முஸ்லிம் சமூகத்தின் வருங்கால நிலையை ஆராய்வதற்கு அடிப்படைத்தேவை அதன் நிகழ்கால நிலையைப்பற்றிய பூரண விபரங்கள். அது இன்றைய முஸ்லிம் தலைமைத்துவத்திடம் உண்டா? இல்லையென்றால் அந்த விபரங்களைத் திரட்டும் முயற்சியில் எந்தத்தலைவன் இன்று ஈடுபட்டுள்ளான்? அதில் யாரும் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவில்லை. இந்த விபரங்கள் இல்லாமல் வருங்காலத்துக்கான திட்டங்களை வகுக்க முடியாது. பொது மேடைகளிலே ஏறிநின்று முஸ்லிம்களின்; நிலைபற்றி ஒப்பாரி வைப்பதில் பயனில்லை.

ஒவ்வொரு தலைவனும் தனது பெயரும் புகழும் நிலைப்பதற்காகப் பொதுக் கட்டிடங்களையும் ஸ்தாபனங்களையும் உருவாக்குகின்றனரே ஒழிய அவை சமூகத்தின் நீண்டகால தேவையைப் பூர்த்தி செய்கின்றனவா, அவற்றால் தனது சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மையுண்டா என்பதை உணர்ந்து செய்வதாகத் தெரியவில்லை. இதனால் அவர்களின் ஆக்கங்கள் பெரும் பிரச்சினைகளை முஸ்லிம் சமூகத்துக்குத் தேடிக் கொடுத்துள்ளன. இதற்கொரு சிறந்த உதாரணம் புணானையில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகக் கட்டிடம். அதன் இன்றைய பரிதாப நிலை ஒரு தூர சிந்தனையற்ற தலைமைத்துவத்தின் துயரமான வெளிப்பாடு.

முடிவாக, நாடும் உலகமும் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் பாரிய மாற்றங்களைக் கண்டுள்ளன. அந்த மாற்றங்களைக் கருத்திற்கொண்டு வளரும் சந்ததியை வழிநடத்தக்கூடிய தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்னர், 1970களில், இலங்கை அரசு பல்கலைக்கழகப் பிரவேசத் தரப்படுத்தலை மேற்கொண்டபோது, ஒரு தமிழ்த் தலைவர், “எங்கள் மாணவர்களின் கல்வியில் கைவைக்காதீர்கள், உங்களிடம் நாங்கள் உத்தியோகம் கேட்கவில்லை” என்று எச்சரித்தது ஞாபகத்துக்கு வருகின்றது. அவ்வாறு அவர் கூறும்போது உலகமே தொழில் வாய்ப்புகளுக்காக விரைவில் திறந்துவிடப்படும் என்பதை உணர்ந்திருந்தார் என்பது தெளிவாகிறதல்லவா? எவ்வளவு தூரநோக்குடன் அத்தலைவன் சிந்தித்தான் என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. அதுதான் தலைமைத்துவத்தின் இலக்கணம்.

இன்றைய முஸ்லிம் தலைமைத்துவமோ பல கோணங்களில் சமூகத்தை இழுத்துச் செல்கின்றது. இதனால் சமூகம் தடுமாற்றத்திலுள்ளது. ஆட்சிக்குள் இருந்துகொண்டு ‘ஆமா’ போட்டு சலுகைகளைப் பெறுவதா அல்லது வெளியேயிருந்து நீதி கேட்பதா என்றவாறு தலைமைத்துவம் பிளவுபட்டுக் கிடக்கின்றது. பேராதிக்கவாதிகளின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அம்பு முஸ்லிம் பாடசாலைகளையும், மதரசாக்களையும், ஏன் நளீமியாவையும்கூட குறிவைத்துள்ளது என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர்வார்களா? உணர்ந்திருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் வழிவகைகள் எவையேனும் இவர்களிடம் உண்டா? அதேபோன்று தொல்லியல் ஆராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் நிலங்களும் ஆபத்துக்குள்ளாவதையும் இவர்கள் அறிவார்களா? அதற்கேனும் மாற்று வழிகள் இவர்களிடம் உண்டா?

இன்றுள்ள சூழலில் முஸ்லிம்களுக்கு வேண்டியது திட்டமிட்ட ஒரே பாதை. அந்தத் திட்டத்தையும் பாதையையும் வகுக்க அறிவுஜீவிகளின் பங்கு அவசியம். சென்றகாலத் தலைமைத்துவத்தின் பயனாய் அவ்வாறான ஓர் அறிவுஜீவிகளின் குழாம் இன்று முஸ்லிம்களிடையே உருவாகி, அது வேண்டுவாரற்று அனாதரவாகி நிற்கின்றது. அவர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய அரசியல் தலைமைத்துவத்தினால் பயனில்லை. இதனை முஸ்லிம்கள் உணர்வார்களா?

அறிவுஜீவிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு தலைமைத்துவத்தின் காவலரணாய் அமைந்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால வாழ்வைப்பற்றிய திட்டங்களை வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்தவற்றை எவ்வாறு அமுலாக்கலாம் என்பதையும் கூட்டாய்ச் சிந்திக்க வேண்டும். நீங்களே திருந்தாதபோது இறையும் உங்களைத் திருத்தாது என்பது திருமறையின் வாக்கு. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.