சமூக விவகாரங்களை கையாள்வதில் முஸ்லிம் சிவில்சமூகத்தின் பங்கு

0 1,360

சிவில் சமூ­கத்­தி­லுள்ள மனித வளங்­களை முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் பொருத்­தப்­பா­டு­டைய விட­யப்­ப­ரப்­பு­களில் பயன்­ப­டுத்த, பங்­க­ளிப்பைப் பெற்­றுக்­கொள்ள முன்­வ­ர­வேண்டும். தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய சமூகப் பிரச்­சி­ணை­களை சிவில் சமூ­கத்தால் மாத்­திரம் அல்­லது அர­சியல் தலை­யீ­டுகள் தேவைப்­ப­டாத விட­யங்­களை சுதந்­தி­ர­மாக விட்­டு­விட வேண்டும். சமூகப் பொதுப் பிரச்­சி­னை­க­ளுக்குள் கட்சி அர­சி­யலை உள்­ளீர்ப்­ப­தி­லி­ருந்து குறிப்­பாக, பிர­தேச அர­சியல் பிர­மு­கர்கள் ஒதுங்­கி­யி­ருக்க வேண்டும். தேவைப்­படும் சந்­தர்ப்­பங்­களில் உண்­மை­யான அர­சியல் பங்­கேற்­பையும், செல்­வாக்­கையும் பிர­யோ­கிக்க வேண்டும்.

சமூ­க­நீதி என்­பது யாவ­ருக்கும் பொது­வா­னது. அது குறிப்­பிட்ட கட்சி அர­சி­ய­லுக்கோ, குறிப்­பட்ட மதம் சார்ந்த உள்­ளக இயக்­கங்­க­ளுக்கோ, குறிப்­பிட்ட தொழில் வல்­லு­நர்­க­ளுக்கோ மாத்­திரம் வரை­யறை கொண்ட விட­ய­மல்ல என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். பாரா­பட்ச கவ­னிப்­பு­க­ளி­லி­ருந்து சிவில் சமூ­கங்கள் வில­கிக்­கொள்ள வேண்டும். பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­க­மாக இருக்­கலாம், பள்ளி பரி­பா­லன சபை­யாக இருக்­கலாம், தொழிற்­சங்­கங்­க­ளாக இருக்­கலாம், விளை­யாட்டுக் கழ­கங்­கங்­க­ளாக இருக்­கலாம் இன்னும் பிற விவ­கா­ரங்­களில் பாரா­பட்ச கவ­னிப்­புக்­குட்­ப­டுத்­து­வது ஜன­நா­யகப் பண்­பல்ல. உதா­ர­ண­மாக ஒரு கிரா­மத்தில் அல்­லது பிர­தே­சத்தில் வறுமைக் கோட்­டிற்­குட்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு உண்­மை­யான தேவை­யு­டைய வறிய மக்­க­ளுக்கு சமுர்த்திக் கொடுப்­ப­னவு கிடைக்கப் பெறு­வ­தி­லி­ருந்து கட்சி அர­சி­யலைக் கொண்டு, உள்­ளக மதப் பிரி­வு­களைக் கொண்டு அல்­லது ஏனைய தனிப்­பட்ட விட­யங்­களைக் கொண்டு விலக்கிக் கொள்­வ­தி­லி­ருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

அதேபோல் அவ்­வா­றான கொடுப்­ப­ன­வுகள் அரச நிதி ஒதுக்­கீ­டு­க­ளி­லி­ருந்து கிடைக்­கப்­பெ­று­கி­றது என்­ப­தையும், இந்­நாட்டின் பிர­ஜைகள் என்ற வகையில் அவர்­க­ளுக்கும் அவ்­வா­றான கொடுப்­ப­ன­வு­களை பெற்றுக் கொள்­வ­தற்கும் உரி­மை­யு­டை­ய­வர்கள் என்­ப­தையும் புரிந்­து­கொள்ள முன்­வர வேண்டும்.

வறிய மக்கள் என்­றாலும் அவர்­க­ளுக்கும் தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யங்கள் இருக்கும், மாற்றுக் கருத்­துக்கள் இருக்கும், தான் விரும்­பிய அர­சியல் கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் கூட இட­மி­ருக்­கி­றது. எனவே, இவ்­வா­றான விட­யங்­களை கருத்­திற்­கொள்­வது யாவ­ருக்கும் பய­ன­ளிக்கும். கட்சி அர­சி­யலைக் கொண்டு, கட்சி ஆத­ரவைக் கொண்டு பாரா­பட்ச கவ­னிப்­புகள் உரு­வா­கு­வ­தி­ல­ிருந்து தவிர்ந்­தி­ருப்­பதில் பிர­தேச சிவில் சமூ­கங்கள் கவனம் செலுத்­தலாம். மனித உரிமை, சமத்­துவம் சார்ந்தும் பார்க்­கப்­பட வேண்­டிய விடயம்.

இன்று முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பைப் பாது­காப்­ப­தற்­கான புதிய சமூக ஒழுங்­குகள் குறித்து சிந்­திக்க சிவில், மத அமைப்­புக்கள் தீவி­ர­மாக சிந்­திக்க வேண்டும். கொழும்பில் ஒன்­று­கூடும் சிவில் அமைப்­பு­களை பிராந்­திய மட்­டத்தில், கிராம மட்­டத்தில் வலுப்­ப­டுத்­த வேண்டும். சிவில், சமூக செயற்­பா­டு­களை பகுப்­பாய்வு ரீதி­யாக மீள வடி­வ­மைக்க வேண்டும். உள்­ளக ஒழுங்­கு­ப­டுத்தல் மிகவும் சவால்­மி­குந்த விட­யப்­ப­ரப்பு. எல்­லோரும் எல்­லா­வற்­றையும் செய்­ய­மு­டி­யாது. காலத்தின் தேவைக்­கேற்ப சமூக ஒழுங்­குகள் வளர்ச்­சி­ய­டைய வேண்டும், வலுப்­பட வேண்டும். இன்றேல் எதிர்­கா­லத்தை வடி­வ­மைப்­பதில் வலு­வி­ழந்த சமூ­க­மாக எங்­களை நாங்­களே பல­வீ­னப்­ப­டுத்­திய சமூ­க­மாக இருப்போம். குறிப்­பாக, இஸ்­லா­மிய மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சிவில் சமூ­கங்கள் இந்­நாட்டின் தங்­க­ளு­டைய பணி பற்­றிய மீளாய்வை மேற்­கொள்­ள­வேண்டும். மதங்­க­ளுக்­கி­டையில் கலந்­து­ரை­யா­டல்­களில் தங்­களின் பங்­கேற்பும் அதற்­கான ஈடு­பாட்­டின்­மை­யினால் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் இஸ்­லா­மிய மதம் தொடர்­பான தப்­பிப்­பிப்­பி­ரா­யங்கள், அதனால் ஏற்­படும் சமூக, அர­சியல், பொரு­ளா­தார ரீதி­யான சந்­தே­கங்கள், அபா­யங்­களை இன்று சந்­தித்து வரு­கிறோம். மதங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­டலை இன்று இந்­நாடு வேண்டி நிற்­கி­றது. குறிப்­பாக, முஸ்­லிம்கள் தங்­களின் மதம் தொடர்­பாக மூடிய போக்கில் வாழும் நிலை­யி­லி­ருந்து தனித்­து­வங்­களைப் பேணி, திறந்த நிலையில் வாழும் போக்கை கடைப்­பி­டிக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தில் சமூக அங்­கீ­கா­ர­முள்ள நிறு­வ­னங்­களில் கற்ற பலர் மத ஒப்­பீட்­டுத்­து­றையில் தகை­மை­பெற்­றி­ருக்­கி­றார்கள். இவர்­களைக் கொண்டு பிர­யோக ரீதி­யாக மதம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்­இய்யதுல் உலமா சபை, தேசிய சூறா சபை, அல் குர்ஆன் திறந்த கற்­கைகள் நிறு­வனம், ஜமா­அத்தே இஸ்­லா­மியின் இஸ்­லா­மிய சிந்­த­னைக்­கான மத்­திய நிலை­யம், ஜமாஅத்துஸ் ஸலாமா என்­பன கூட்­டாக இந்த விட­யத்தில் கரி­சனை செலுத்­தலாம். இனத்­துவ கற்­கை­க­ளுக்­கான சர்­வ­தேச நிறு­வ­னத்தை பயன்­ப­டுத்­தலாம். பௌத்த சமூ­கத்­தி­லுள்ள பல்­வேறு நிகா­யாக்­க­ளோடு, கிறிஸ்­தவ மத அமைப்­புக்­க­ளோடு, இந்­து­மத அமைப்­புக்­க­ளோடு, செல்­வாக்­கு­மிக்க மத­கு­ரு­மார்­க­ளோடு ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள வேண்டும். பன்­மைத்­து­வத்தை விளங்கிக் கொள்­வ­தற்கு நாங்கள் முன்­னிற்க வேண்டும். அதேபோல் பிறர் எங்­களைப் புரிந்­து­கொள்ள நாங்கள் திறந்த நிலையில் வாழ வேண்டும். இன்று முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான சந்­தே­கங்­களை, தப்­ப­பிப்பி­ரா­யங்­களை பௌத்த சமூ­கத்தில் முன்­கொண்டு செல்­வ­திலும், பௌத்த சமூ­கத்தில் பொது­ஜன அபிப்­பி­ரா­யங்­களை வடி­வ­மைப்­ப­திலும் முன்­னிற்­ப­வர்­களில் பெரும்­பான்­மை­யினர் பௌத்த இளம் பிக்­குகள். எனவே, இந்த விடயம் தொடர்­பாக இன்னும் காலம் கடத்­து­வ­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இந்த விட­யத்தை முன்­னெ­டுக்க ஏனைய சிவில் சமூ­கங்கள் கள­மமைத்துக் கொடுக்க வேண்டும். அரபுக் கல்­லு­ரி­களில் மத ஒப்­பீட்­டுத்­துறை கற்­பிக்­கின்­ற­போது பௌத்த, கிறிஸ்­தவ தேவா­லங்­க­ளுக்கு அழைத்துச் செல்­லலாம். கள ஆய்­வு­க­ளுக்கு பிர­யோக ரீதி­யாக சிந்­திக்­கலாம். சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தலாம்.

சமூ­கப்­பி­ரச்­சினை ஏற்­ப­டும்­போது மாத்­திரம் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்­காக சிவில் சமூ­கங்கள் செயற்­படும் நிலை­யி­ லிருந்து மீண்டு கொள்கை ரீதி­யான விட­யப்­ப­ரப்­பு­களை ஆக்­க­பூர்­வ­மான கதை­யா­டல்கள் மூலம் வடி­வ­மைத்து சந்­தைப்­ப­டுத்தி இந்­நாட்டின் முற்­போக்கு சக்­தி­க­ளுடன் இணைந்து தேசிய வலுவை மேம்­ப­டுத்தும் செயன்­மு­றையை நோக்கி நக­ர­வேண்டும். பல்­வேறு இனக்­கு­ழு­மங்கள் வாழ முடி­யு­மான சூழலை ஏற்­ப­டுத்தும் வள­மாக முஸ்லிம் மனித வளங்கள் செயற்­பட வேண்டும். இந்­நாட்டில் முஸ்­லிம்­களின் தேசிய பங்­க­ளிப்பில் இன்­றைய பங்­க­ளிப்பு தொடர்­பான வழி­மு­றைகள் தொடர்­பாக சிந்­திக்க வேண்டும்.
இலங்­கையின் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கு இனத்­துவ ரீதி­யாக அதி­காரப் பர­வ­லாக்கம் மாத்­திரம் உகந்த தீர்வா என்று சிந்­திக்கும் காலம் ஏற்­பட்­டுள்­ளது. இனத்­துவ ஒன்­றிப்பு குறித்து கவனம் திசை­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இனத்­துவக் குழுக்­களின் தேசிய உணர்வு ஒன்­றித்­த­தாக இருக்க வேண்டும். இனத்­துவ ரீதி­யான அர­சியல் பங்­கேற்பு குறித்து மீளாய்வு செய்­ய­வேண்டும்.

முஸ்லிம் சிறு­பான்மை வாழ்­வொ­ழுங்கு குறித்து முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் கவனம் செலுத்த வேண்டும். பிக்ஹுல் அகல்­லியாத் விட­யப்­ப­ரப்பு குறித்து இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள், மத அமைப்­புக்கள், கல்வி நிறு­வ­னங்கள் கவ­னம் ­செ­லுத்த வேண்டும். மார்க்கம் அனு­ம­தித்த விட­யங்கள் தெடர்­பான பரந்த பொது வெளிகள் குறித்து சமூ­கத்­திற்கு அறி­வூட்ட வேண்டும்.

மீண்டும் மீண்டும் மூடிய நிலை­யி­லுள்ள விவ­கா­ரங்­க­ளுக்கு மாத்­திரம் மார்க்கத் தீர்ப்­பு­களை வழங்கிக் கொண்­டி­ருக்­காமல் முஸ்லிம் சமூ­கத்­திற்­கான பரந்த பங்­கேற்­புக்­கான வாயில்­களை திறந்­து­விட வேண்டும். இலங்கை பல்­லின சமூ­கத்­திற்­கான விட­யப்­ப­ரப்­பாக பிக்­குஹுல் அக்­கல்­லியாத் வளர்ச்­சி­பெற வேண்டும். இஸ்­லாத்தின் மாறாத் தன்­மை­யுடன் நெகிழ்வுத் தன்­மை­யு­டைய சமூக, அர­சியல், பொரு­ளா­தார, கலை, இலக்­கிய விடயப் பரப்­புக்­க­ளுக்­கான பங்­கேற்­புகள் அதி­க­ரிக்க வேண்டும்.
இலங்­கையில் விழு­மிய சினி­மாத்­துறை குறித்து சாத­க­மாக சிந்­திக்க வேண்டும். அதற்­கான வாய்ப்­பு­களை, வரை­ய­றை­களை சிறு­பான்மை வாழ்­வொ­ழுங்கில் பிர­யோ­கிப்­ப­தற்­கான வழி­காட்­டல்­களை, வாயில்­களை இஸ்­லா­மிய அறி­ஞர்கள் திறக்க வேண்டும். ஈரா­னிய, துருக்­கிய, கட்­டா­ரிய கலை இலக்­கிய வடி­வங்கள் இலங்­கைக்கு பொருத்­தப்­பா­டு­டை­ய­தல்ல. இலங்­கைக்­கு­ரிய சமூக விவ­கா­ரங்­களை அதேற்­கே­யு­ரிய ஒழுங்கில் வடி­வ­மைக்க வேண்டும். சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இடை­வெ­ளி­களை குறைக்­க­வேண்டும்.

காலத்­துக்குக் காலம் ஆட்சி மாற்­றங்­களை வைத்து சமூக விவ­கா­ரங்­களை கையாள முனை­வதை தவிர்க்க வேண்டும். அது அர­சியல் கட்­சி­க­ளுக்­கு­ரி­யது. வளர்ச்­சி­பெற வேண்­டிய முஸ்­லிம்­களின் சமூக ஒழுங்­குகள் இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளுக்­கு­ரி­யது. பிர­யோக ரீதி­யான செயற்­பாட்­டுத்­த­ளத்தை நோக்கித் துரி­த­மாக முன்­ந­கர வேண்டும். குத்து விளக்­கேற்றல் இஸ்­லா­மிய கண்­ணோட்டம் தொடர்­பாக இன்னும் குறு­கிய சிந்­தனை வட்­டத்­தி­லி­ருந்து வெளி­வரும் நிலை குறித்து யதார்த்­த­மாகக் கவனம் செலுத்­துவேம். அர­சியல் விவ­கா­ரங்­களால் சமூக ஒழுங்­கிற்கு ஏற்­படும் தாக்கம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்­த­வேண்டும்.

பொறுப்­புக்­கூறல் என்ற விடயம் மிக முக்­கி­ய­மா­னது. இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் பொறுப்­புக்­கூறல் ஓர் கூட்டுக் கடமை. இந்த விட­யத்­தி­லி­ருந்து யாரும் நழு­வி­விட முடி­யாது. எதிர்­கா­லத்தை கட்­ட­மைக்கும் பொறுப்பு சகல தரப்­பிற்­கு­முண்டு. முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்த விட­யத்­தில்­கூட கொள்கை ரீதி­யான ஒரு­மித்த தீர்வை முன்­வைக்க முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கிறேம். தொழி­நுட்பக் கார­ணங்­க­ளாக இருந்தால் அங்­கீ­க­ரிக்­கலாம் என்­றாலும், கொள்கை ரீதி­யாக என்றால் நாங்கள் சிந்­திக்க கடை­மைப்­பட்­டி­ருக்­கிறேம். இவை­களை விட்டு விட்டு நாங்கள் எவ்­வாறு இந்­நாட்டின் பொதுக் கொள்கை உரு­வாக்க செயன்­மு­றையில் பங்­கேற்­கப்­போ­கிறேம்.
பிக்­குஹுல் அக்­கல்­லியாத் விட­யப்­ப­ரப்பு குறித்து ஆழ­மாக சிந்­திக்கும் அதே­வேளை, பிர­யோக ரீதி­யாக செயற்­பாட்­டுத்­த­ளத்தை விரி­வு­ப­டுத்த வேண்டும். சிவில், வர்த்­தக, குற்­ற­வியல் சார்ந்து மட்டும் சிறு­பான்மை வாழ்­வொ­ழுங்கு வரை­யறை செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து பரந்த அடிப்படையில் முன்நகரும் தேவையை வேண்டியதாக நிற்கிறது.

உதாரணமாக வர்த்தகத்துறையில் மரபான ஒழுங்குகளுக்குத் தீர்வுகாண விழையும் அதேவேளை, நவீன வாத்தக முயற்சிக்குரிய சட்ட விடயங்கள் தொடர்பாக அறிவூட்ட வேண்டும். சுற்றுலாத்துறை வர்த்தகம், அதன் நவீன போக்குகள், தொடர்பாடல்துறை வர்த்தகம், விளம்பரத்துறை வர்த்தகம் போன்றவற்றிற்கான விளக்கங்களை முன்வைக்க வேண்டும். இலங்கைக்குரிய பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் ஏனைய இனக்குழுமங்களுக்கும் உரிய சமூக ஒழுங்குகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய நீண்ட நிலைத்தல் தன்மை வாய்ந்த விடயப்பரப்பாக பிக்குஹுல் அக்கல்லியாத் வளர்ச்சிபெற வேண்டும். இஸ்லாமிய நடுநிலைத் தன்மையின் தாற்பரியங்களின் வகிபாகத்தை இந்நாட்டு மக்களுக்கு வழங்கும் விதமாக எமது பங்களிப்பை கட்டமைக்க வேண்டும்.
ஏனைய சமூகத்தின் பல்பக்க பங்காளர்களை இணைத்துக் கொண்டு தேசிய அடையாளத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இஸ்லாம் இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் உரித்துடையதல்ல.

இஸ்லாத்தின் நல்ல விடயங்களின் பால் ஏனையவர்களையும் ஈர்க்கவேண்டும். இஸ்லாத்தின் தூது பொதுவானது. அதனை இலங்கையர்களுக்குக் கொடுக்க வேண்டியது எமது கடமை.-Vidivelli

  • ஏ.ஜி.நளீர் அஹமட்
    உதவி ஆய்­வாளர்- லக் ஷ்மன்
    கதிர்­காமர் நிறு­வகம்

Leave A Reply

Your email address will not be published.