வைத்தியர் சாபியின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றச்சாட்டின் பாரதூரம் , பொது மக்களிடையே அமைதியின்மை ஏற்படலாம் என்ற காரணிகளை மையப்படுத்தி குருணாகல் நீதிமன்றம் உத்தரவு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்பு காவல் இரத்து

0 610

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹமட் சாபியை மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்மறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வைத்தியர் சாபி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பயங்கரவாத, அடிப்படைவாத குழுக்களோடு தொடர்புபட்டு சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை, சட்ட விரோதமான முறையில் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வைத்தியர் சாபி கடந்த மே மாதம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த சாபி நேற்று முதன் முதலாக நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
குற்றப்புலனாய்வு பிரிவின் விஷேட ஜீப் வண்டியில் கொழும்பிலிருந்து குருணாகலுக்கு அழைத்து வரப்பட்ட வைத்தியர் சாபி குருணாகல் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் முற்பகல் 10.40 மணியளவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன் போது குருணாகல் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விஷேட பொலிஸ் மற்றும் அதிரடிப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வைத்தியர் சாபியை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க , உதவி பொலிஸ் அத்தியட்சர் டி.எஸ்.திஸேரா , பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜர்படுத்தினர்.
சீ.ஐ.டியினருக்கு கூடுதல் பலம் சேர்க்க சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பொலிஸ் சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே மன்றில் ஆஜரானார். சந்தேக நபரான வைத்தியர் சாபி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொடவின் கீழ் சிராஸ் நூர்தீன், சப்ராஸ் ஹம்சா, நதீஷா கண்டம்பி, பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.

சட்டவிரோத கருத்தடைக்கு உள்ளானதாகக் கூறப்படும் முறைப்பாடளித்துள்ள தாய்மார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹன் செனவிரத்ன, சட்டதரணிகளான சேனாரத்ன , சானக உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

முதலில் முற்பகல் வேளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொடவின் வருகையை மையப்படுத்தி பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீள வழக்கானது பிற்பகல் 2 மணிக்கே விசாரணைக்கு வந்தது.
முதலில் மன்றில் விசாரணையின் மேலதிக அறிக்கையை சீ.ஐ.டி சமர்ப்பித்தது. அதனையடுத்து முறைப்பாட்டாளர் தரப்பான விசாரணையாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜனரால் துஷித் முதலிகே விடயங்களை மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

” இந்த விவகாரம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மூன்று குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி வைத்தியர் சாபியை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த மே 24 ஆம் திகதி கைது செய்திருந்தனர். இந்நிலையிலிலேயே சீ.ஐ.டியினர் அவரைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். குறிப்பாக சீ.ஐ.டி முன்னெடுத்த விசாரணைகளில் வைத்தியர் சாபிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்புக்களுடனான தொடர்பு மற்றும் வருமானத்தை மீறிய சொத்து குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்றன. பயங்கரவாத தொடர்புகள் குறித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளில் அக்குற்றச்சாட்டு எந்த அடிப்படையும் அற்றது என்பது தெளிவாகியது. சொத்துக் குவிப்பு தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டன. இது வரையிலான விசாரணைகளில் அந்த குற்றச்சாட்டு தொடர்பிலும் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த விடயங்களும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் வைத்தியர் சாபியை தொடர்ந்து தடுத்து வைப்பது பொருத்தமற்றது. அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவரது தடுப்பு காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டது.
அதன்படியே இன்று (நேற்று) அவரை நாம் இம்மன்றில் ஆஜர் செய்கிறோம். அதே நேரம் சாபி வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மூன்றாவது குற்றச்சாட்டான சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குற்றவியல் சட்டத்தின் 32 (1) ஆம் பிரிவின் படி ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பின் மட்டுமே அக்குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட முடியும். இதுவே சட்டம். எனினும் வைத்தியர் சாபி விவகாரத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் எவ்வித காரணிகளையும் சீ.ஐ.டிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாலேயே வைத்தியர் சாபி குருணாகல் பொலிஸாரால் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். எது எவ்வாறாயினும் சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் இடையே சட்ட விரோத கருத்தடை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முறைப்பாட்டளர்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக தற்போதைக்கு தண்டனைச் சட்டக்கோவையின் 311 (4) ஆம் பிரிவின் கீழ் காயம் ஏற்படுத்துதலுடன் தொடர்புடைய விடயமாகக் கருதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய அறிவியல் ரீதியிலான பரிசோதனைகள் மிக அவசியமானதாகும். அவ்வாறான அறிவியல் ரீதியிலான பரிசோதனைகளிலேயே இந்த விசாரணை தங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த நீதிமன்றம் இவ்விசாரணைகள் தொடர்பில் ஆலோசனை வழங்க கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் காசல் வைத்தியசாலையில் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுனர் ருவன் பத்திரன டீ சொய்சா , வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுனர் ஜே.கருணாசிங்க ஆகியோர் அடங்கிய விஷேட நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முறைப்பாடளித்த 615 பேரில் 147 பேரை எஸ்.எச்.ஜி. பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோதனைகளின் முடிவை அடுத்தே எம்மால் மேலதிக நடவடிக்கை எடுப்பது குறித்தான முடிவுகளுக்கு வர முடியும். கடந்த தவணையின் போது இந்த எஸ்.எச்.ஜீ சோதனைகளை முன்னெடுக்க பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடை விதித்தது. எனினும் அத்தடையை தளர்த்தி அந்த சோதனைகளை முன்னெடுக்க அனுமதியளிக்க வேண்டும். அப்போதே இந்த விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்’ என்றார்.

இதனையடுத்து சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட பிணை கோரிக்கையை முன்வைத்தார். ‘ எந்த நியாயமான சந்தேகங்களும் இன்றி எனது சேவை பெறுனர் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரது கைது சட்ட விரோதமானது. தடுப்புக் காவல் உத்தரவு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த குற்றச்சாட்டுக்களுக்கும் இது வரை சாட்சியங்கள் இல்லை என்பது விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் தெளிவாகின்றது. எனவே எனது சேவை பெறுனருக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிணைச்சட்டத்தின் விதிவிதானங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதில் பிணை மறுப்பதற்கான காரணிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எவையும் எனது சேவை பெறுனர் தொடர்பில் தொடர்பற்றது. இந்த வழக்கு சோடிக்கப்பட்டது. ஊடகங்களூடாக வளர்க்கப்பட்டது. சட்ட ரீதியாக எவ்வித குற்றமும் சுமத்த காரணிகள் இல்லாத நிலையில் அவரை தடுத்து வைப்பது நியாயமற்றது. எனவே எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் அவருக்கு பிணை வழங்குமாறு கோருகிறேன். அத்துடன் குறிப்பாக எனது சேவை பெறுனரின் குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்காகவும் இந்த விசாரணைகளின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்காகவும் கோரப்பட்டுள்ள எஸ்.எச்.ஜீ பரிசோதனைகளை அவசியம் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பிறப்புறுப்பூடாக ஒரு வகை சாயத்தை உட்செலுத்தி பலோபியன் குழாய்களை ஊடறுத்து அதனை கற்பப்பை வரை செலுத்தும் இந்த எஸ்.எச்.ஜீ சோதனை இவ்விசாரணைகளில் திருப்பத்தை ஏற்படுத்தும். இதனூடாக பலோபியன் குழாய்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சட்ட விரோத கருத்தடை இடம்பெற்றுள்ளதாக என்பதை கண்டறிய முடியும்’ என்றார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் சில்வா, சட்டத்தரணிகளான சேனாரத்ன மற்றும சானக ஆகியோர் கருத்துக்களை மன்றில் முன்வைத்தனர். அவர்கள் சாபி வைத்தியரை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தடுப்பு காவலை வாபஸ் பெற்றமையை வன்மையாக எதிர்த்தனர். சீ.ஐ.டி விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகக் கூறிய அவர்கள் அதனை சீ.ஐ.டியின் சமூக கொள்ளை விசாரணை அறையிலிருந்து வேறு ஒரு விசாரணை பிரிவிற்கு மாற்றுமாறும் கோரினர்.

இந்த விசாரணைகள் சரியான கோணத்தில் நடக்கிறதா? என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் உள்ளது. குற்றப்புலான்வுப்பிரிவு வைத்தியர் சாபிக்கு சார்பாகவே விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அவரை குற்றவாளியாகக் காட்ட முனைகிறது. பிணை சட்டத்தின் கீழ் பிணை மறுப்பதற்கான காரணிகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக வைத்தியர் சாபி வருமானத்தை மீறி சொத்து சேர்த்த விடயத்தில் பல சொத்துக்களை கொள்வனவு செய்ய தரகராக செயற்பட்ட மொஹான் எனபவரது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் இவ்விவகாரத்தின் பிரதான சாட்சியாளர். இது பிணை சட்டத்தின் கீழ் பிணை மறுப்பதற்கான காரணிகளில் ஒன்று. இதனை விட வைத்தியர் சாபியுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரு இந்தியர் மற்றும் அரேபியர் தொடரபில் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அது தொடர்பில் எந்த விசாரணைகளும் இல்லை. அப்படி இருக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்த காரணிகளும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் சீ.ஐ.டி கூறுவது வேடிக்கையானது. இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணையளிப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அது பெரும் அநியாயம். எஸ்.எச்.ஜீ பரிசோதனைகள் செய்வதில் பல பிரதி கூலங்கள் உள்ளன. தாய்மாருக்கு பரிசோதனையைத் தொடர்ந்து மலட்டுத் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்கு அனுமதிக்கக் கூடாது. குருணாகல் பொலிஸாரிடம் சீ.ஐ.டி முன்னெடுத்த விசாரணைகளின் போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக குருணாகல் பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் மன்றில் முழுமையாக சமர்பிக்கப்படவில்லை ‘ என்றனர்.

இந்த வாதப்பிரதி வாதங்கள் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தன. இதனை அடுத்து பிணை தொடர்பிலான உத்தரவும் ஏனைய தீர்மானங்களுக்குமாக வழக்கு மாலை 5.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. எவ்வாறாயினும் மீண்டும் வழக்கு மாலை 6 மணிக்கே விசாரணைக்கு வந்தது. இதன் போது தனது தீர்மானங்களை அறிவித்த குருணாகல் பிரதான நீதிவான் சம்பத்சேவா வசம் வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மை , சொத்து கொள்வனவு தொடர்பிலான தரகருக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல், பிணை வழங்குவதால் ஏற்படவல்ல பொது மக்கள் குழப்பம் ஆகியவற்றை மையப்படுத்தி பிணை வழங்க மறுப்பு வெளியிட்டார். அத்துடன் இது வரை விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கிய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையிலான நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகளுக்கு தடை விதித்து அக்குழுவை கலைத்தார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு ஆலோசனைகளை சீ.ஐ.டிக்கும் நீதிமன்றுக்கும் வழங்க கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்து பீடத்தின் பீடாதிபதியின் கீழ் ஐந்து பேருக்கு குறையாத நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதனைவிட குருணாகல் பொலிஸ் அத்தியட்சரின் முழுமையான வாக்கு மூலத்தை அடுத்த தவணையின் போது மன்றில் சமர்ப்பிக்க சீ.ஐ.டிக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன் சாபி வைத்தியரின் சொத்துக்கள் தொடர்பில் அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் ஊடாக பெறுமதி மதிப்பீடொன்றை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்பிக்கவும் கட்டளையிட்டார்.
இதனையடுத்தே இது குறித்த வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அது வரை வைத்தியர் சாபியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் நேற்றைய தினம் இவ் வழக்கு விசாரணை இடம்பெற்ற நீதிமன்றுக்கு வெ ளியே நூற்றுக் கணக்கான பொது மக்களும் பௌத்த பிக்குகளும் கூடியிருந்ததுடன் டாக்டர் சாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதுரலியே ரதன தேரர் உள்ளிட்ட டாக்டர் சாபிக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்கும் தரப்பினர் பலரும் அங்கு குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

எம்.எப்.எம்.பஸீர்,
யூ.எல். முஸம்மில்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.