நாட்டில் இனவாத மாநாடுகள் தடை செய்யப்பட வேண்டும்

0 651

நான்கு திசை­களும் அதா­வது முழு நாடும் ஓர­ணியில் என்ற தொனிப் பொருளில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி போகம்­பரை மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடந்­தே­றிய மாநாடு எவ்­வித வன்­செ­யல்­க­ளுக்கும் கார­ண­மாக அமை­ய­வில்லை என்­பது ஆறு­தலைத் தரு­கி­றது. மாநாடு இடம்­பெற்ற கண்டி நக­ரிலும் அயல் பகு­தி­க­ளிலும் பலத்த பாது­காப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கனவு கண்­டது போன்று ஒரு இலட்சம் மக்­களும் 10 ஆயிரம் குரு­மாரும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. ஒரு சில ஆயிரம் பேரே மாநாட்டில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

ஞான­சார தேரரின் உரை நாட்டின் அர­சி­யலை விமர்­சிப்­ப­தாக அமைந்­தி­ருந்­த­துடன் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் அவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கருத்­து­களை வெளி­யிட்டார். அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு சிறைத் தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தும்­வரை இவ்­வா­றான கருத்­து­க­ளையே கூறி வந்தார். முஸ்­லிம்கள் இந்­நாட்டுப் பிர­ஜைகள் அல்ல அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு ஓடி­விட வேண்டும் எனக் கருத்து வெளி­யிட்­டவர். ஹலா­லுக்கு எதி­ராக பெரும்­பான்மை சமூ­கத்தை ஒன்று திரட்­டி­யவர், அளுத்­கம போன்ற வன்­செ­யல்­க­ளுக்கு வித்­திட்­டவர் அவர்.

ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் சிறை­யி­லி­ருந்தும் வெளியே வந்த அவ­ரது உரையில் முன்­னைய வீரி­யத்தைக் காணக்­கூ­டி­ய­தாகவும், கேட்கக் கூடி­ய­தா­கவும் இருந்­தது.

‘இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை துடைத் தெறியும் பொறுப்­பினை குரு­மார்­க­ளா­கிய எங்­க­ளிடம் தாருங்கள். அடிப்­ப­டை­வாதம் என்னும் விஷப் பாம்பை தர்மம் எனும் வாளி­னாலே அழிக்க முடியும் என அவர் ஆட்­சி­யா­ளர்­களைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் நாட்டில் சிங்­கள ஆட்­சி­யொன்­றினை நிறுவி தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்ள இஸ்­லா­மிய தனிச் சட்­டங்­களை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் என்றார்.

இத்­துடன் அவர் மௌனித்து விட­வில்லை. மதம் மற்றும் இனத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் பாட­சா­லைகள் உட­ன­டி­யாக தடை செய்­யப்­பட வேண்டும். மதம், இனம் அடிப்­ப­டை­யாகக் கொண்ட கட்­சிகள் தடை செய்­யப்­பட வேண்டும் என்றும் அவர் சூளு­ரைத்தார்.

பல்­லின சமூகம் வாழும் நாட்டில் அர­சாங்கம் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் நிலை நிறுத்­து­வ­தற்கு வேலைத் திட்­டங்­களை அமுல்­ப­டுத்­தி­வரும் நிலையில் ஞான­சார தேரர் இவ்­வா­றான கருத்­துகள் வெளி­யி­டு­வது நாட்டை சமா­தா­னத்தின் பால் இட்டுச் செல்­வ­தாக அமை­ய­வில்லை. இவ்­வா­றான மாநா­டுகள் இனங்­க­ளுக்கு இடையில் விரி­சல்­க­ளையும் குரோ­தங்­க­ளை­யுமே ஏற்­ப­டுத்தும் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்­வா­றான மாநா­டுகள் நடத்­தப்­ப­டு­வதை சில நிபந்­த­னை­களின் கீழேயே அனு­ம­திக்க வேண்டும்.

கடந்த காலங்­களில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யுடன் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர் பல­சுற்று பேச்சு வார்த்­தைகள் நடத்­தி­யவர். குர்­ஆனில் அவ­ருக்­கேற்­பட்ட சந்­தே­கங்­களை கேட்டு தெளி­வு­பெற்றுக் கொண்­டவர். இவ்­வா­றான ஒருவர் முஸ்லிம் சமூ­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வதை அனு­ம­திக்க முடி­யாது.

ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உலமா சபை­யுடன் நடத்தும் பேச்­சு­வார்த்­தைகள் உடன் நிறுத்­தப்­பட வேண்டும். உலமா சபை கலைக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் தெரி­வித்திருக்கிறார்.

உலமா சபை தப்லீக், வஹா­பிசம், சலபி, இஹ்வான்– ஜமா­அத்தே இஸ்­லா­மி ஆகிய பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் இப் பிரி­வுகள் இலங்­கையில் தடை செய்­யப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இப்­ப­டி­யான ஒரு மத­கு­ருவே பெரும்­பான்மை சமூ­கத்தை வழி நடத்­து­வ­தற்குக் கள­மி­றங்­கி­யுள்ளார். இந்­நி­லையில் வெறுப்­பு­ணர்வு பேச்­சுக்­களை தடை செய்­வ­தற்கு சட்டம் இயற்­றப்­பட வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

கண்டி மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்பு 9 தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. ‘ஒரே­நாடு– ஒரே இனம்– ஒரே சட்டம், பௌத்த சாச­னத்தைப் பாது­காத்தல், தேசிய பாது­காப்பு, தேசிய மர­பு­ரி­மையைப் பாது­காத்தல், பல­மான அபி­வி­ருத்­தி­ய­டைந்த நிலை­பே­றான பொரு­ளா­தாரம், தேசப்­பற்று கல்வி, வீட்டு அடிப்­படை வச­திகள், சனத் தொகை முகா­மைத்­துவம் மற்றும் சுகா­தாரம் என்­ப­னவே அத்­தீர்­மா­னங்கள், இத் தீர்­மா­னங்கள் பௌத்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­ன­வா­கவே அமைந்­துள்­ளன.

பல்­லின மக்கள் வாழும் ஜன­நா­யக நாட்டில் இன­வாத சிந்­த­னை­களைக் கொண்­டுள்ள ஒரு சில­ரது அபி­லா­சை­களை நிறை­வேற்றிக் கொள்ள இடமளிக்க முடியாது. இவ்வாறான இனவாத கருத்துகளை வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதகுருமார் என்றாலும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சட்டத்தை அமுல் நடத்துவதற்கு அரச நிறுவனங்கள் உள்ளன. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. நீதிமன்றங்கள் உள்ளன.

இந்நிலையில் சட்டத்தை தங்கள் கைகளுக்கு கோருபவர்கள் தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.