இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை

0 5,812

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் தொடக்­கத்தில் இலங்­கையில் முஸ்­லிம்­களை புதிய கல்வி மர­புக்கு தயார் செய்­வது, ஆங்­கில மொழிக்கு எதி­ரான மனோ­பா­வத்தை மாற்­று­வது, கல்­வியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வது முத­லிய பணிகள் சவால்­மிக்­க­தாக இருந்­தன. அச்­சூ­ழலில் சித்­தி­லெப்பை இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு கல்வி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதை முக்­கிய குறிக்­கோ­ளாகக் கொண்டு செயற்­பட்டார்.

சமூக மாற்­றமும் புதிய கல்­வியின் அறி­மு­கமும் இன்றி முஸ்லிம் சமூ­கத்தின் பின்­ன­டைவைத் தடுத்து நிறுத்­த­மு­டி­யாது என்­பதைத் தீவி­ர­மாக வலி­யு­றுத்­தி­யதால் சித்­தி­லெப்பை இலங்கை முஸ்லிம் மக்­களின் ‘மறு­ம­லர்ச்சித் தந்தை’ எனப் போற்­றப்­ப­டு­கிறார்.

எம்.சி. சித்­தி­லெப்பை 11.06.1838 அன்று கண்­டியில் பிறந்தார். இவ­ரது தந்­தையின் பெயர் எம்.எல். சித்­தி­லெப்பை. எம்.சி சித்­தி­லெப்­பையின் தந்தை சட்­டக்­கல்­வியில் பயிற்சி பெற்­றதால் 1833 ஆம் ஆண்டு ஆங்­கி­லேய அர­சினால் வழக்­க­றி­ஞ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இவர் திண்ணைப் பள்­ளி­யிலும் குர்ஆன் மத்­ர­ஸா­விலும் தனது ஆரம்பக் கல்­வியைக் கற்றார். ஆங்­கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழி­க­ளையும் ஆர்­வத்­துடன் கற்றார். தமது மூத்த சகோ­தரர் முஹம்­மது லெப்பை ஆலி­மிடம் தமிழ், அரபு, சிங்­களம் ஆகிய மொழி­களைக் கற்­றுத்­தேர்ந்தார். இவர் 1871 ஆம் ஆண்டு செய்­யிதா உம்­மாவை திரு­மணம் செய்து கொண்டார். கசா­வத்தை ஆலிம் புல­வ­ரிடம் இஸ்­லா­மிய மார்க்க ஞானங்­க­ளையும் அரபு மொழி­யையும் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

பொதுக் கல்வி, உலக அறிவு, உலகின் சம­காலச் சிந்­தனை, சம­கால நிகழ்­வுகள், இலக்­கியம், சட்டம் ஆகிய பல துறை­களில் ஆர்­வ­மிக்­க­வ­ராக விளங்­கினார். சட்­டத்­து­றையில் தந்­தைக்­கி­ருந்த பயிற்­சி­யும் நிபு­ணத்­து­வமும் மகன் சித்தி லெப்பைக்கும் இருந்­தது. 1862 ஆம் ஆண்டு மாவட்ட நீதி­மன்­றத்­திலும் 1864 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்­றத்­திலும் எம். சி. சித்­தி­லெப்பை வழக்­க­றி­ஞ­ராகப் பணி­யாற்­றினார். மேலும் 1874 முதல் 1878 வரை கண்டி மாந­கர சபையின் நீதி­மன்­றத்தில் நீதி­ப­தி­யா­கவும் பணி­யாற்­றினார். கண்டி மாந­கர சபையின் உறுப்­பி­ன­ராக எட்டு ஆண்­டுகள் செயற்­பட்டார்.

“இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள் கல்­வித்­து­றையில் பின்­தங்­கி­ய­வர்­க­ளா­கவும், பொரு­ளா­தாரத் துறையில் தேக்­க­ம­டைந்­த­வர்­க­ளா­கவும், சமயத் துறையில் மாறாத மர­பா­ளர்­க­ளா­கவும், ஆய்­வ­றி­வாற்­றலில் ஆர்­வம்­குன்­றி­ய­வர்­க­ளா­கவும், அர­சியல் துறையில் கணக்கில் எடுக்­கப்­ப­டா­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­தைக்­கண்டு சித்­தி­லெப்பை மனம் வெதும்­பினார்” என அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

‘சித்­தி­லெப்பை நவீன நோக்­கி­லான சமூக மேம்­பாடு’ என்னும் இலட்­சி­யத்­துடன் தமது பொதுப்­ப­ணி­களைத் தொடங்­கினார். முஸ்லிம் மக்கள் மேம்­பாட்­டுக்குப் பாடு­பட தமது வழக்­க­றிஞர் தொழி­லையும் மாந­கர சபை உறுப்­பினர் பத­வி­யையும் உதறித் தள்­ளினார்.

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டில் இலங்­கையில் பொரு­ளா­தார மாற்­றங்­களும், கல்­வித்­துறை வளர்ச்­சி­களும், அரச வேலை­வாய்ப்­பு­களும், கல்வி சார்ந்த தொழில் துறை­களும் உரு­வாகி வளர்ச்­சி­பெறும் நிலை ஏற்­பட்­டது. அதை அறிந்­து­கொண்டு சித்­தி­லெப்பை மேம்­நாட்டுக் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து அதை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக ஈடு­பட்டார்.

எகிப்தில் சமூக– அர­சியல் மாற்­றத்­திற்­காகப் பாடு­பட்ட ஏகா­தி­பத்­திய எதிர்ப்புப் போராட்­டத்தில் முன்­னின்ற அஹ்மத் ஒறாபி பாஷா போர்க் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டு அர­சாங்­கத்­தினால் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்டார். சுமார் இரு­பது ஆண்­டுகள் வீட்­டுக்­கா­வலில் அடைக்­கப்­பட்டார். அவ­ருடன் சித்­தி­லெப்பை தொடர்­பு­கொண்டு ஆங்­கில மொழிக்­கல்வி, நவீன கல்வி, சமூக மாற்றம் போன்­ற­வற்றில் முஸ்­லிம்கள் பிற்­போக்­கா­ன­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்தி முஸ்லிம் மக்­களை விழிப்­ப­டையச் செய்தார். இலங்கை முஸ்­லிம்­களின் தொடக்­க­கால கல்வி வளர்ச்­சியில் அஹ்மத் ஒறாபி பாஷாவின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக அமைந்­தது.

கொழும்பு புதிய சோன­கத்­தெ­ருவில் பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் 1884 ஆம் ஆண்டு ‘மத்­ர­ஸதுல் கைரி­யத்துல் இஸ்­லா­மியா’ என்னும் பாட­சா­லையை சித்தி லெப்­பையும், அஹ்மத் ஒறாபி பாஷாவும், ஏ.எம். வாப்­பிச்சி மரைக்­கா­யரும் தொடங்­கினர். ஆங்­கி­லே­யரால் இது ‘ஆங்­கிலோ முஹம்­ம­தியன் பாட­சாலை’ என்று அழைக்­கப்­பட்­டது.

பல்­வேறு எதிர்ப்­பு­களைச் சந்­தித்­த­போதும் சித்தி லெப்பை தமது நவீன கல்­விக்­கான முயற்­சி­யி­லி­ருந்து சிறிதும் பின்­வாங்­காமல் செயற்­பட்டார். 1891 ஆம் ஆண்டு முஸ்­லிம்கள் கருத்து பேதங்­க­ளையும் போட்டி பொறா­மை­க­ளையும் கைவிட்டு ஒற்­று­மையைக் கடைப்­பி­டித்து சமூ­கத்தின் கல்வி முன்­னேற்­றத்­திற்குப் பாடு­பட முன்­வ­ர­வேண்டும் என்று மக்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்தார்.

கொழும்பில் 1891 ஆம் ஆண்டு ‘முஸ்லிம் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 1892 ஆம் ஆண்டு கொழும்பு மரு­தானை பள்­ளி­வாசல் வளா­கத்­தினுள் ‘அல் மத்­ர­ஸத்துல் ஸாஹிரா’ என்ற பாட­சா­லையின் தோற்றம் இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி மறு­ம­லர்ச்­சியில் மைல்­கல்­லாக அமைந்­தது.
அரபு, தமிழ், சிங்­களம் ஆகிய மொழி­களில் இலங்கை முஸ்­லிம்கள் போதிய அறிவைப் பெற்­றி­ருப்­பது மிகவும் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தினார். “நாம் பேசும் மொழி தமிழ் அதை அறி­யா­தவன் குருடன் போல் ஆவான்” என்று கூறினார். இலங்கை முஸ்­லிம்கள் தமிழ் அறிவைப் பெற்­றி­ருப்­பது அவ­சியம் என்­ப­தையும் வலி­யு­றுத்­தினார்.

சித்­தி­லெப்­பையின் தீவிர முயற்­சியால் ஆண்­க­ளுக்­காக பல பாட­சா­லைகள் திறக்­கப்­பட்­டன. 1891 ஆம் ஆண்டு குரு­நா­கலில் மொஹ­மடன் பெண்கள் பாட­சாலை ஒன்றும் திறந்து வைக்­கப்­பட்­டது. 1892 ஆம் ஆண்டு ஸாஹிராக் கல்­லூரி கொழும்பில் தோற்­று­விக்­கப்­பட்­டது.

‘முஸ்லிம் நேசன்’ என்னும் வார இதழ் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் சித்­தி­லெப்­பையின் முயற்­சியால் வெளி­வந்­தது.

‘முஸ்லிம் நேசன்’ என்னும் இதழ் முஸ்லிம் மக்­களின் விருப்­பங்­க­ளையும் மனக் குமு­றல்­க­ளையும் அர­சாங்­கத்­திற்கு எட்டச் செய்யும் போராட்டக் கரு­வி­யாக விளங்­கி­யது. “எழுத்தின் வேகத்தை மக்­க­ளோடு இணைந்து மக்­களை முன்­னி­றுத்தித் தனது எழு­து­கோலை வன்­மை­யுடன் பங்­கு­கொள்ளச் செய்த முஸ்லிம் எழுத்­துக்­களின் முன்­னோடித் தலைவர் சித்­தி­லெப்பை’’ என்று ஏ. இக்பால் பாராட்­டி­யுள்ளார்.

முஸ்லிம் நேசன் இதழில் பொது­மக்­க­ளுக்கு செய்­தி­களைத் தெரி­விக்கும் விதத்­திலும் ஆங்­கில ஏகா­தி­பத்­தி­யத்­திற்கும், அதி­கார வர்க்­கத்­திற்கும் எதி­ரான கருத்­துக்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆசி­ரியத் தலை­யங்கம் சிறப்­பாக இடம்­பெற்­றி­ருந்­தது. மக்­களின் உணர்­வு­களைப் பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. முஸ்­லிம்­களின் கல்வி முன்னேற்றத்­திற்கும் சமூகச் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கும் தூண்­டுதல் தரும் ஆயு­த­மாக இது விளங்­கி­யது. அர­சியல் பண்­பாடு, பொரு­ளா­தாரம், தத்­துவம், இலக்­கியம் முத­லிய குறித்தும் கட்­டு­ரைகள் வெளி­யி­டப்­பட்­டன. உலகச் செய்­திகள், இந்­தியா குறித்த செய்­திகள், வியா­பாரம், கல்வி, சமயம், அர­சியல், சமூகம், வழக்கு முத­லி­ய­ன­வற்­றோடு உலக சம்­ப­வங்கள், நிகழ்ச்­சிகள் குறித்து விரி­வாகச் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டன. இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை எழுத்தில் பதிவு செய்யும் பணி­களை ஊக்­கப்­ப­டுத்­து­வ­திலும் ‘முஸ்லிம் நேசன்’ இதழ் முக்­கிய பங்­கு­வ­கித்­தது.

இலங்­கையின் தேசிய அள­வி­லான சட்ட நிரூ­பண சபையின் முஸ்­லிம்கள் இடம்­பெற வேண்டும் என்­ப­தற்­காக சித்­தி­லெப்பை குரல் கொடுத்தார்.
தமி­ழி­லக்­கிய வர­லாற்றில் அக்­கா­லத்தில் எவரும் துணிந்து கைவைக்­காத முயற்­சியில் இவர் ‘அஸன் பேயின் கதை’ என்னும் நாவலை எழுதி வெளி­யிட்­டுள்ளார்.

‘‘தொடக்க காலத் தமிழ் நாவல் மர­பைச்­சேர்ந்த ‘அசன்பே சரித்­திரம்’ ஒரு வர­லாற்றுக் கற்­பனை நாவல். சாக­சங்­களும் மர்­மங்­களும் திடீர்த் திருப்­பங்­களும் கிளைக் கதை­களும் கொண்டு விரியும் ஒரு புனைவு. வேத­நா­ய­கம்­பிள்­ளையின் பிர­தாப முத­லியார் சரித்­தி­ரத்­துடன் ஒப்­பி­டக்­கூ­டி­யது” என இலங்கை தமி­ழி­லக்­கிய விமர்­சகர் எம்.ஏ.நுஃமான் பதிவு செய்­துள்ளார்.

“கதா­நா­யகன் மத்­திய கிழக்கு, இந்­தியா, ஐரோப்பா ஆகிய நாடு­க­ளுக்­கெல்லாம் செல்­கிறான் .தமிழ்க் கதைக்குப் புதிய பாத்­தி­ரங்­களும் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்கப் படு­கின்­றன. அதே சம­யத்தில் சித்­தி­லெப்பை ஒழுக்கம், சமூக சீர்­தி­ருத்தம் ஆகி­ய­வற்றில் கவனம் செலுத்­தினார்” என சித்­தி­லெப்­பையின் ‘அசன் பேயு­டைய கதை’ என்னும் நாவல் குறித்து மார்க்­சிய இலக்­கியத் திற­னாய்­வாளர் டாக்டர் க. கைலா­ச­பதி மதிப்­பீடு செய்­துள்ளார்.

சரித்­திரப் பின்­ன­ணியும் திகைப்­பூட்­டக்­கூ­டிய சாக­சங்­களும் கொண்­ட­தாக இந்­நாவல் இருந்­த­போ­திலும் அஸன்பே கதையில் முஸ்லிம் சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகநாவல் என்ற மகுடத்திற்கு ஏற்றதாக சில சம்பவ அமைப்புகளும் கருத்துகளும் அமைந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

சித்திலெப்பை 1892 ஆம் ஆண்டு ‘ஞான தீபம்’ என்னும் மெய்ஞ்ஞானம் குறித்த மாத இதழை வெளியிட்டார். இந்த இதழ் பன்னிரெண்டு மாதங்கள் வெளிவந்தன.

‘தமிழ் முதல் புத்தகம்’ என்ற பாடநூலையும் அரபு மொழி இலக்கண சுருக்க நூல், கிதாப் அல் ஹிஸாப், அபூநவாஸின் கதை, இலங்கைச் சோனகர் சரித்திரம், துருக்கி கிரேக்கர் யுத்த சரித்திரம், ஹிதாயத்துல் காஸிமிய்யா, அஸ்றாநுல் ஆலம், அல்லாதுர் ரசூலும் உலமாக்களும் முதலிய நூல்களையும் இவர் எழுதி அளித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் அறிவு வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் தமது இறுதி மூச்சுவரை பாடுபட்ட சித்திலெப்பை 05.02.1898 அன்று தமது 60 ஆவது வயதில் காலமானார்.

பி.தயாளன்

நன்றி: சமரசம்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.