வைத்தியர் ஷாபி குறித்து சி.ஐ.டி. இன்று பாதுகாப்பு செயலருக்கு அறிவிக்கும்

ரத்ன தேரருக்கு எதிராகவும் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம்

0 712

குரு­நாகல் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு தற்­போது சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவு வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிப்­பது நியா­ய­மாக அமை­யா­தென்று சி.ஐ.டி. பாது­காப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்­டே­கொ­ட­வுக்கு அறி­விக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் இன்று பாது­காப்பு செய­ல­ருக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் ஊடாக அறி­விக்க ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக நான்காம் மாடி தக­வல்கள் விடி­வெள்ளிக்கு வெளிப்­ப­டுத்­தின. ஏற்­க­னவே ஷாபி வைத்­தி­ய­ருக்கு எதி­ராக சுமத்­தப்­படும் பயங்­க­ர­வாத, அடிப்­ப­டை­வாத குற்­றச்­சாட்­டு­க­ளுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் கருத்­தடை விவ­கார குற்­றச்­சாட்­டு­க­ளுக்கோ எந்த சாட்­சி­களும் இல்­லை­யென சி.ஐ.டி. குரு­நாகல் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

எனினும், கடந்த ஒரு மாதத்­துக்கு மேலாக வைத்­தியர் ஷாபி சி.ஐ.டி. தடுப்பில் இருந்து வரு­கின்றார். இந்­நி­லை­யி­லேயே அவ­ரது தடுப்புக் காவல் நியா­யமற்­ற­தென அறி­விக்க சி.ஐ.டி. நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

கடந்த மே 24 ஆம் திகதி குரு­நாகல் பொலி­ஸாரால் வைத்­தியர் ஷாபி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அப்­பி­ரிவின் கீழ் அவரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசா­ரிக்க அப்­போது குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மஹிந்த திஸா­நா­யக்க அனு­மதி பெற்­றி­ருந்தார். அ­தன்­பின்­னரே ஷாபி வைத்­தி­யரை சி.ஐ.டி. பொறுப்­பேற்­றது. அதன்­படி அவரை விசா­ரிக்க பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் 9(1) ஆம் பிரிவின் கீழ் பாது­காப்பு செய­லா­ள­ரிடம் 90 நாள் தடுப்­புக்­காவல் உத்­த­ரவை சி.ஐ.டி. பெற்­றுக்­கொன்டு நடாத்­திய விசா­ர­ணை­க­ளி­லேயே ஷாபி வைத்­தி­ய­ருக்கு எதி­ராக அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தி­ருந்­தது.

இத­னை­விட கடந்த மே 24 ஆம் திகதி ஷாபி வைத்­தி­யரை, குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் நான்கு வைத்­தி­யர்கள் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தாம் கைது செய்­த­தாக குரு­நாகல் பொலிசார் கூறிய நிலையில், அது பொய்­யென சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த நான்கு வைத்­தி­யர்­க­ளையும் சி.ஐ.டி.க்கு அழைத்து விசா­ரித்­ததில் இது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வைத்­தியர் ஷாபியை கைது செய்ய முன்னர் 23 ஆம் திகதி குறித்த வைத்­தி­யர்கள் பொலி­சா­ருக்கு வாக்­கு­மூலம் வழங்­கி­ய­தாக குரு­நாகல் பொலி­சாரால் கூறப்­பட்ட நிலையில் அதனை மையப்­ப­டுத்தி வைத்­தி­யரைக் கைது செய்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும் வைத்­தியர் ஷாபி 24 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட நிலையில், குறித்த வைத்­தி­யர்கள் மே 26 ஆம் திக­தியே (இரு நாட்­களின் பின்னர்) அந்த வாக்­கு­மூ­லங்­களை வழங்­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதனை இரு வைத்­தி­யர்கள் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில், இந்த விவ­காரம் தொடர்பில் தொடர்ச்­சி­யாகப் பொது­வெ­ளி­களில் கருத்­து­ரைத்து வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரதன தேரர், ஷாபி வைத்­தியர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் மற்றும் மறை­முக அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தாக நீதி­மன்­றிடம் முறை­யிட விசா­ர­ணை­யா­ளர்கள் தயா­ராகி வரு­வ­தா­கவும் அறிய முடி­கின்­றது. பிர­தான விசா­ரணை மேற்­பார்­வை­யா­ள­ரான உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பீ.எஸ். திசேரா தொடர்பில், கடந்த ஜூன் 27 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணை­களைத் தொடர்ந்து ரத்ன தேரர் வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள், நீதி­மன்­றுக்குள் வைத்து அந்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரை அணுகி, “உல­கமே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது, கவனம்” எனக் கூறிச் சென்­ற­தாகக் கூறப்­படும் இரு நிகழ்­வுகள் உள்­ளிட்­ட­வற்றை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. இது தொடர்பில் ஆராய்ந்து வரு­வ­தாக அறிய முடி­கின்­றது.

எவ்­வா­றா­யினும், சி.ஐ.டி. விசா­ர­ணைகள் சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென ரதன தேரர் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கொடுத்த முறைப்­பாட்­டை­ய­டுத்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, ஷாபி வைத்­தியர் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குறித்து சி.ஐ.டி. பணிப்­பா­ள­ரிடம் அறிக்கை கோரி­யுள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஆகியோரின் உத்தரவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் மேற்பார்வையில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் வழிநடத்தலில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, சார்ஜன்ட் ராஜபக் ஷ, கானஸ்டபில் சில்வா உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.