அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய ஜனாதிபதியின் கருத்து

0 627

அரசியலமைப்பின் 18 ஆம்  19ஆம் திருத்தங்களை இரத்துச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்துச் செய்தால் மாத்திரமே  மக்களாணையை மதிக்கும் ஓர் அரசாங்கத்தை  உருவாக்க முடியும்.  கடந்த  நான்கு வருட முறையற்ற அரசியல் நிர்வாகத்திற்கு  19ஆவது திருத்தமே மூலகாரணமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி நாட்டை ஆளுபவரிடம் குறைபாடுகள் கிடையாது, நடைமுறை அரசியலமைப்பிலே குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்

ஜனாதிபதியின் இந்தக் கருத்து பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக பாடுபட்ட அரசியல், சிவில் சமூக அமைப்புகள் இதனை கடுமையாக விமர்சித்துள்ளன. தனது கடந்த 5 வருட ஆட்சியில் உள்ள தவறுகளை மறைப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மீது பழியைப் போடுவதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் 19 ஆவது திருத்தச் சட்டத்தை வரைவதில் முக்கிய பங்காற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூல வரைபினை  எவ்வித மாற்றங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திருந்தால் எவ்வித அரசியல் நெருக்கடிகளும் அரசியலமைப்பினை  மையப்படுத்தி ஏற்பட்டிருக்காது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட 18ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே 2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருந்தது.

இலங்கையில் ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும், ஜனாதிபதியாக இருப்பதற்கு காணப்பட்ட தடைகளை தகர்த்தும் வகையில் இந்த 18ஆம் திருத்தச் சட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்டதுடன் அது சர்வாதிகாரத்தை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது. இந் நிலையிலேயே இலங்கையில் ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற சரத்து, 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் அரசியலமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டது. அத்துடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டிருந்தன.

19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் உயர்ந்தபட்ச இலக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகும். தான் பதவிக்கு வந்தவுடன்   நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதியளித்திருந்தார். எனினும் கடந்த 5 வருட காலத்தில் அதனைச் செய்ய அவர் முன்வரவில்லை. மாறாக இன்னுமொரு தடவை ஜனாதிபதிக் கதிரையில் அமர முடியுமா என்பதே அவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.

இப் பின்னணியில்தான் இன்று அவர் தனது கடந்த கால குறைபாடுகளை மறைப்பதற்காக 19ஆவது திருத்தத்தின் மீது குற்றம்சுமத்துகிறார் என்பது தெளிவாக விளங்குகிறது. அரசியலமைப்பை முற்றாக மீறி கடந்த ஒக்டோபர் 26 இல் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முனைந்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களைச் சம்பாதித்திருந்தார். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த போதுமான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் அவர் மீண்டும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். இப் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறான கருத்துக்களைக் கூறுகிறாரா எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அரசியல் யாப்பில் இருக்கின்ற சரத்துக்களையும் நாட்டின் சட்ட விதிகளையும் ஒழுங்குற பின்பற்றினால் நாட்டை முரண்பாடுகளின்றி ஆட்சி செய்யலாம். அதைவிடுத்து அரசியல் நலன்களை அடைவதற்காக அரசியலமைப்பில் நினைத்தவாறு மாற்றங்களைக் கொண்டுவர எத்தனிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.