ஜனவரி 3 இல் பாதுகாப்பு செயலாளரிடம் சஹ்ரான் குறித்து அறிக்கை சமர்ப்பித்தோம்

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி வாக்குமூலம்

0 521

முஸ்­லிம்கள் எவரும் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து செயற்­படும் நபர்கள் அல்ல. நாம் ஒரு­போதும் ஐ.எஸ். அமைப்பை ஆத­ரிக்­க­வில்லை. 2019- ஜன­வரி, 3 ஆம் திகதி பாது­காப்பு செய­லா­ளரை சந்­தித்து இறு­வட்­டுக்கள், அறிக்­கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்­தையும் வழங்­கி­யுளேன் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி நேற்று தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அத்­துடன், எமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­னாக மாறுவார் என நான் கன­விலும் நினைத்­துப்­பார்க்­க­வில்லை. இவர் குறித்தும் முறைப்­பா­டு­களை நாம் செய்­துள்ளோம். ஆனால் நாம் வாய்­தி­றக்­காது இருக்க காரணம் உள்­ளது. எமக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ளது. இவர்­களின் அடிப்­ப­டைவாத செயற்­பா­டுகள் குறித்து தெரி­வித்தும் எமக்கு எவரும் பாது­காப்பு தர­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு சாட்­சி­ய­ம­ளிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அறிக்கையளிக்க இதனைக் குறிப்­பிட்டார்.

ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட சஹ்ரான் அமைப்­பினர் முதலில் என்­னையே கொலை­செய்ய வேண்­டு­மென்ற பிர­சா­ரத்தை செய்து வந்­தனர். நான் ஒரு காபிர் என்றும் நான் முஸ்லிம் அல்­லா­தவன் என்றும் நான் ஞான­சார தேர­ருடன் தொடர்பில் உள்ளேன் என்ற கருத்­துக்­களை எல்லாம் பரப்­பினர். தவ­றான புகைப்­ப­டங்­களை புனைந்து என்னை தவ­றாக சித்­தி­ரித்­தனர். எனினும் இது­கு­றித்து நாம் பல தட­வைகள் பாது­காப்புத் தரப்­புக்கு தெரி­வித்­துள்ளோம். அது­மட்­டு­மல்ல, சஹ்ரான் மற்றும் அவர் சார்ந்த குழுவின் செயற்­பா­டு­களை நாம் முஸ்லிம் செயற்­பா­டு­க­ளல்ல எனத் தெளி­வாகக் கூறி­யுள்ளோம். தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தடை­செய்­யப்­பட வேண்­டிய அமைப்பு என நாம் கூறி­யி­ருந்தோம். இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் அமைப்­புகள் அனைத்­தையும் வர­வ­ழைத்து ஓர் அமைப்­பாக ஒரே கொள்­கையின் கீழ் செயற்­பட வேண்­டிய கட்­டா­யத்தை வலி­யு­றுத்­தினோம். அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இணங்­க­வில்லை. இவர்­க­ளுடன் மொத்தம் 12அமைப்­புகள் இணைந்து செயற்­பட்­டன. இவர்கள் இந்­தி­யாவின் தமிழ்­நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­புடன் இணைந்து செயற்­பட்ட அமைப்­புகளாகும்.

முஸ்­லிம்கள் எவரும் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து செயற்­படும் நபர்கள் அல்ல. நாம் ஒரு­போதும் ஐ.எஸ். அமைப்பை ஆத­ரிக்­க­வில்லை. அவர்கள் எவரும் முஸ்­லிம்கள் அல்ல. இலங்­கையில் ஐ.எஸ். என கூறும் எவரும் இருப்­ப­தாக நினைக்­க­வில்லை. இலங்­கை­யி­லி­ருந்து சிரி­யா­விற்கு சென்­ற­தாக முப்­பது, நாற்­பது குடும்­பங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அவர்­கள் மீண்டும் இலங்­கைக்கு வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அவர்கள் தவிர்ந்து வேறு எவரும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. எனினும் இவை அனைத்­தையும் உரிய கார­ணத்­துடன் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளோம். இறு­தி­யாக 2019-.01.-03ஆம் திகதி பாது­காப்பு செய­லா­ளரை சந்­தித்து இறு­வட்­டுக்கள், அறிக்­கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்­தையும் வழங்­கி­யுளேன்.

திகன தாக்­கு­தலின் பின்­னரே சஹ்ரான் தீவிர அடிப்­ப­டை­வா­தத்தை கையில் எடுத்­துள்ளார் என்றே அறிய முடி­கின்­றது. சில சந்­தர்ப்­பங்­களில் இந்துக் கடவுள் சிலைகள் சில­வற்றை அவர்­களின் பள்­ளி­வா­சலில் வைத்து முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு ஏனைய மதங்கள் குறித்து கருத்­துக்­களை கூறி­யுள்­ளனர். இவர்கள் எவரும் இஸ்­லா­மியக் கொள்கை இல்­லா­த­வர்கள் என்ற அடிப்­ப­டை­வாத கருத்­துக்கள் பரப்­பப்­பட்­டுள்­ளன. எமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­னாக மாறு­வா­ரென நான் கன­விலும் நினைத்­துப்­பார்க்­க­வில்லை. அதேபோல் முஹம்மத் ரம்சி என்ற நபரும் எமது கொள்­கைக்கு முர­ணான ஒரு­வர்தான். இவரும் இந்­தி­யாவின் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­புடன் சார்ந்த கொள்­கைக்கே பய­ணித்­துள்ளார். இவர் குறித்தும் முறைப்­பா­டு­களை நாம் செய்­துள்ளோம். ஆனால் நாம் வாய்­தி­றக்­காது இருக்க காரணம் உள்­ளது. எமக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ளது. இவர்­களின் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து தெரி­வித்தும் எமக்கு எவரும் பாது­காப்பு தர­வில்லை. ஆகவே நாம் இது குறித்து கூற­வேண்­டி­ய­வற்றை கூறி­யுள்ளோம்.

எவ்­வாறு இருப்­பினும் நாம் இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் வாழவே முயற்­சித்து வரு­கின்றோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்­துக்­கொள்­ளுங்கள், இந்த நாட்டில் நாங்கள் தீ­வி­ர­வா­திகள் அல்ல, நாம் ஜிஹாத் குறித்து என்ன கரு­து­கிறோம், ஜிஹாத் ஒரு­போதும் தலிபான், அல்­கைதா கொள்­கை­யல்ல என்ற கார­ணி­களை தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்றோம். ஆனால் நீங்கள் (தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­களை நோக்கிக் கூறி­யது) எங்­களை தொடர்ந்தும் நோக­டித்து கீழ்த்­த­ர­மாக நடத்தி வரு­கின்­றீர்கள். எமது கொள்கை, எமது மதம் அவ­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாம் அடிப்­ப­டை­வா­திகள் என கூறி பெளத்த தேரர்கள் எமக்கு எதி­ரா­கவும் அதேபோல் அர­சி­யல்­வா­திகள் எமக்கு எதி­ரா­கவும் செயற்­ப­டு­வது எம்மை வேத­னைப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. ரமழான் மாதத்தில் இரண்­டா­யிரம் முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் புத்­தகம் வைத்­தி­ருந்த குற்­றத்தில் எமது முஸ்லிம் மக்கள் கைது­செய்­யப்­ப­டு­கின்­றனர். சுக்கான் சின்னம் பொறித்த உடை அணிந்த குற்­றத்தில் பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். முகத்தை மூடி எச்சில் துப்ப முயன்ற பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். இவ்­வாறு நீங்கள் நடந்­து­கொண்டால் எங்கே அடிப்­ப­டை­வாதம் நிறுத்­தப்­ப­டப்­போ­கின்­றது? முதலில் அர­சாங்கம் உரிய சட்­டங்­களை சக­ல­ருக்கும் ஒரே மாதிரி பிர­யோ­கிக்க வேண்டும். தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் சகல சட்­டங்­க­ளையும் ஆத­ரிக்க நாம் தயா­ராக உள்ளோம். இதனை நாம் வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்தும் விட்டோம். கடுமையான சட்டங்களை கொண்டு நாட்டினை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது.

நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விரைவில் எமது மக்கள் சுதந்திரமாக வாழ இடமளிக்க வேண்டும். நான் ஒன்றை மட்டும் கேட்கின்றேன், இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவசரகால சட்டத்தை கையாளப்போகின்றீர்கள். எமது மக்களின் பாதுகாப்பு எமக்கு முக்கியம். ஐ. எஸ். என்பது இஸ்லாம் அல்ல. அவர்கள் எவரும் முஸ்லிம்களும் அல்ல. இதனை நீங்கள் தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.