முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்

0 1,045
  • அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்குள் முஸ்­லிம்­க­ளது வாழ்­வொ­ழுங்கில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­வ­தா­கவும் அண்­மைக்­கா­லத்தில்  முஸ்­லிம்கள் பிற சம­யத்­த­வர்­களில் இருந்து தூர­மாகிக் கொண்டு போவ­தா­கவும் சிலரால் கருத்­தொன்று பரப்­பப்­பட்டு வரு­கி­றது .

இந்தக் கருத்து உண்­மை­யா­னதா? அப்­ப­டி­யாயின்  முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் மத்­தியில் வித்­தி­யா­சங்கள் எது­வு­மில்­லாத அள­வுக்கு  முஸ்­லிம்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் கரைந்து போய் வாழ்ந்­தார்­களா?

இதற்­கான பதில் அப்­படி இல்லை என்­ப­தாகும். முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனித்­து­வ­மான கலா­சார, மத தனித்­து­வங்கள் உள்­ளன. அவற்றை முடிந்­த­ளவு பேணிக்­கொள்ள வேண்­டு­மென்ற உணர்வு அவர்­க­ளிடம் இருந்து வந்­தி­ருக்­கி­றது. அவற்றைப் பாது­காத்துக் கொடுக்க முஸ்லிம் தலை­வர்­களும் கல்­வி­மான்­களும் சாத்­வீக ரீதி­யான போராட்­டங்­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை வர­லாற்றை படிக்­கும்­போது எம்மால் கண்டு கொள்ள முடி­கி­றது. முஸ்­லிம்கள் இலங்­கையில் பின்­பற்றி வரும் தனியார் சட்­டத்தை பிர­தா­ன­மான உதா­ர­ண­மாகக் கூற முடியும். இந்த ஆய்வு மிக நீண்­ட­தாகும்.

இது தவிர முஸ்­லிம்கள் கடந்த  நூற்­றாண்­டு­களில் தமது தனித்­து­வங்­களைப் பாது­காப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்­கான சில சான்­று­களை நோக்­குவோம்.

  1. கல்வி:- கல்­வித்­து­றையில் முஸ்­லிம்கள் எவ்­வ­ளவு தூரம் எச்­ச­ரிக்­கை­யோடு செயல்­பட்­டனர் என்­பதை ஏ.எம்.ஏ அஸீஸின் பின்­வரும் கூற்று தெளி­வு­ப­டுத்­து­கி­றது:-

‘முற்­போந்த நூற்­றாண்­டு­களில் மேலைக் கல்­வி­யா­னது மதப்­பற்றைத் தாக்­கு­த­லிலும் கிறிஸ்­தவ மதப்­ப­ரப்பு முயற்­சியை ஊக்­கு­விப்­ப­திலும் அமைந்­தி­ருந்­ததால் அவர்கள் (முஸ்­லிம்கள்) தங்கள் பிள்­ளை­களை அர­சினர் ஆங்­கிலப் பள்­ளிக்­கூ­டங்கள் 1832 – 1846 க்குமி­டையில் அநேகம் நிறு­வப்­பட்­டி­ருந்த போதிலும் அவற்­றுக்கு அனுப்­பு­வ­தற்கு விரும்­பு­வ­தில்லை’ (ஏ.எம்.ஏ.அஸீஸ், இலங்­கையில் இஸ்லாம், பக் :172)

போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர் காலம் மட்­டு­மன்றி, ஆங்­கி­லேயர் காலத்­திலும் கல்விக் கூடங்கள் மதம்­மாற்று ஸ்தாப­னங்­க­ளா­கவே அமைந்­தன. அஞ்­ஞா­னி­க­ளதும் இஸ்­லா­மி­யர்­க­ளதும் மத நம்­பிக்­கை­களை நாட்­டி­லி­ருந்து ஒழிக்க வேண்டும்; பாட­சா­லையில் அவர்கள் கிறிஸ்­தவ சம­யி­க­ளாக்­கப்­பட வேண்டும் என ஒல்­லாந்தர் விரும்­பினர். இதற்­கா­கவே இவர்கள் பாட­சா­லை­களை அமைத்­தனர். ஆங்­கி­லே­யரின் இலட்­சி­யமும் இது­வாக இருந்­தாலும் அதனை அவர்கள் மிக நளி­ன­மா­கவே கையாண்­டார்கள். கி.பி.1833இல் கோல்­புரூக் இலங்­கையில் மேற்­கொண்ட சீர்­தி­ருத்­தங்­களும் மத­மாற்­றத்­தையே இலக்­காகக் கொண்­டி­ருந்­தன. எனவே, அர­சினர் பாட­சா­லை­க­ளுக்கு தம் பிள்­ளை­களை அனுப்ப முஸ்­லிம்கள் தயக்கம் காட்­டி­ய­போது உல­மாக்­களோ காபிர்­களின் மொழியை (ஆங்­கி­லத்தை)ப் படிப்­பது பாவ­மா­னது என்று போதித்­தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் நவீன கல்­வியைப் புறக்­க­ணித்­தது.

எனவே, முஸ்லிம் சமூ­கத்தின் கல்வி நிலை மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­மையை உணர்ந்த சித்­தி­லெப்பை போன்ற முஸ்லிம் தலை­வர்கள் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு வேறா­கவும் பெண்­க­ளுக்கு வேறா­க­வு­மான பாட­சா­லை­களை நிறு­வி­னார்கள். அதே­வேளை, முஸ்லிம் ஆண் பாட­சா­லை­களை அர­சாங்கப் பாட­சா­லை­க­ளாக அரசு அங்­கீ­க­ரிக்­காமை முஸ்­லிம்­க­ளுக்குப் பாதிப்­பாக அமைந்­தது. அப்­பா­ட­சா­லை­க­ளுக்கு அரசு நன்­கொ­டை­களை வழங்­கி­னாலும் அவற்றைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் பிரச்­சினை தோன்­றி­யது என எம்.ஐ.எம் அமீன் தெரி­விக்­கிறார். (எம்.ஐ.எம்.அமீன், இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறும் கலா­சா­ரமும் பக்:58 – 63)

இவ்­வாறு கல்­வித்­து­றையில் சமய உணர்வைப் பேணிப் பாது­காப்­ப­திலும் பல்­வேறு சிக்­கல்­களை முஸ்­லிம்கள் எதிர்­கொண்­ட­மைக்கு பிரித்­தா­னிய அரசின் சமய நல்­லி­ணக்­க­மற்ற போக்கே கார­ண­மாக அமைந்­தது. முஸ்­லிம்­களும் இந்­நாட்டின் குடி­மக்கள் எனக்­க­ணித்து மதத்­தி­ணிப்பைக் கையா­ளாமல் சுதந்­தி­ர­மான கல்வி, கலா­சார வளர்ச்­சிக்கு வழி­வகை செய்­தி­ருக்க வேண்டும்.

ஆய்­வாளர் சமீம் இது பற்றி எழுதும் போது :- சேர் ராஸிக் பரீத் தலை­மையில் இயங்­கிய இலங்கை சோனகர் சங்கம் 1945ஆம் ஆண்டு, சோல்­பரி குழு­வுக்கு தாம் இது­வரை தனித்­துவம் காக்க எடுத்த முயற்­சி­களை விப­ரித்­தது. காலி­யிலும் மக­ர­க­ம­விலும் இரண்டு அரபு மத்­ர­ஸாக்­களை நிர்­மா­ணித்­தமை, ஸாஹிராக் கல்­லூ­ரியில் அரபு, இஸ்­லா­மிய நாக­ரிகம் ஆகிய பாடங்­களை கற்­பிக்க முயற்­சித்­தமை, முஸ்லிம் தாய்­மார்­க­ளுக்கு முஸ்­லிம்­களின் நன்­கொ­டை­களைக் கொண்டு அமைத்த வைத்­தி­ய­சா­லை­களை அமைத்­தமை, முஸ்­லிம்­களின் கல்­விக்­காக அளுத்­க­மையில் ஒரு முஸ்லிம் ஆசி­ரியர் பயிற்சிக் கல்­லூ­ரியை நிறு­வி­யமை போன்­ற­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் காட்­டி­னார்கள் என்­கிறார். (சமீம், ஒரு சிறு­பான்மை சமூ­கத்தின் பிரச்­சி­னைகள், பக்: 195)

2.ஷரீஆ சட்ட விதிகள்:- முஸ்­லிம்கள் தமது தனித்­து­வத்­துக்­காக வர­லாற்றில் பல்­வே­று­பட்ட முயற்­சி­களை எடுத்­து­வந்­துள்­ளனர். தம்மைப் பொறுத்­த­வ­ரையில் மட்டும் செல்­லு­ப­டி­யாகும் வகையில் நாட்டின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சட்­டத்­தொ­குப்பில் ஷரீஆ சட்ட விதி­க­ளையும் ஓரங்­க­மாக்கி அமுல்­ந­டாத்த 19ஆம் நூற்­றாண்டின் ஆரம்பப் பகு­தி­யி­லி­ருந்து முயற்­சித்து வந்­துள்­ளனர்.

இது பற்றி விளக்கும் சமீம், “இக்­கா­ல­கட்­டத்தில் முஸ்­லிம்­க­ளு­டைய அர­சியல் நோக்கம் பெரும்­பாலும் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தா­கவே இருந்­தது. முஸ்லிம் தலைமை பயந்த சுபா­வத்­து­டனும் எச்­ச­ரிக்­கை­யோடும் நடந்து கொண்­டது. தமது கலா­சாரத் தனித்­து­வத்தை பாது­காப்­ப­தற்கு அர­சாங்­கத்தின் உத­வியை முஸ்லிம் தலை­வர்கள் நாடி­னார்கள். முஸ்­லிம்­க­ளுக்­கென்றே தனிப்­பட்ட சட்­டங்­களை அமு­லாக்­கு­வதில் மும்­மு­ர­மாக இருந்­தார்கள். முஸ்­லிம்­களின் விவாகம், விவா­க­ரத்துச் சட்­டமும் முஸ்­லிம்­களின் மர­பு­ரிமை வக்­புச்­சட்­டமும் இக்­கா­ல­கட்­டத்தில் அமு­லாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளது கலா­நி­லை­யங்­களை தமிழ் ஆசி­ரி­யர்­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­திலும் முஸ்­லிம்க­ளுக்­கென்றே தனி­யான இஸ்­லா­மிய சூழ்­நி­லையில் அமை­யப்­பெற்ற கல்வி நிறு­வ­னங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டார்கள்’ எனக் கூறு­கிறார். (சமீம், ஒரு சிறு­பான்மை சமூ­கத்தின் பிரச்­சி­னைகள், பக்:77,78)

1892 இல் பிரே­தங்­களை அடக்­கு­வது பற்­றிய சட்­ட­வி­தி­யொன்றை அரசு பிர­சு­ரித்­தது. அவ்­விதி சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்ற பாகு­பா­டின்றி அனை­வ­ருக்கும் பொது­வாக இருந்­தது. ஆனால், இவ்­விதி தமது சமய, ஒழுக்க விதி­க­ளுக்கும் மர­பு­க­ளுக்கும் முரண்­பட்­ட­தாக இருந்­த­துடன் அமு­லாக்கும் போது நடை­முறைப் பிரச்­சி­னை­க­ளையும் உரு­வாக்­கு­வ­தாகக் கூறி முஸ்­லிம்கள் கடு­மை­யாக எதிர்த்­தனர். முஸ்லிம் நேசன் பத்­தி­ரிகை இவ்­வெ­திர்ப்பை அப்­பட்­ட­மாகக் காட்­டி­யது.

அம்மை நோய் கண்ட முஸ்லிம் பெண்­க­ளுக்கு அம்­மைப்பால் கட்ட பெண் வைத்­தி­யர்­களை நிய­மிக்­கு­மாறு 1890 இல் முஸ்­லிம்கள் அரசை வற்­பு­றுத்­தினர். அம்மை நோய் வந்த ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் அம்மை வைத்­தி­ய­சா­லையில் ஒரே மண்­ட­பத்தில் வைத்துப் பரா­ம­ரித்­ததால் முஸ்லிம் பெண் நோயா­ளி­களை அங்கு அனுப்ப முஸ்­லிம்கள் மறுத்­தனர்.

இந்­நி­லையில் நோய் பரவும் அபாயம் ஏற்­பட்­டதால் அரசு பெண் நோயா­ளி­களை பலாத்­கா­ர­மாக வீடு­க­ளி­லி­ருந்து அழைத்துச் சென்­றது. எனவே, முஸ்­லிம்கள் ஆட்­சேபம் தெரி­வித்­தார்கள். இதன் பின்னர் கொழும்பு மாந­கர சபையில் பின்­வரும் பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்­டன:-

அ.  முஸ்­லிம்­க­ளது வழக்­கங்­களும் ஒழுக்­கங்­களும் தனித்­து­வ­மா­னவை. எனவே, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தனித்து நோக்க வேண்டும்.

ஆ.  வைசூரி நோய் கண்ட முஸ்லிம் பெண்­களைப் பரா­ம­ரிக்க அம்மை வைத்­தி­ய­சா­லையில் பிரத்­தி­யேக பகுதி வேண்டும்.

இ.  அவர்­களைப் பரா­ம­ரிக்க முஸ்லிம் பெண் தாதிகள் தேவை. இந்­நோயைக் கண்­ட­றிய வீடு­க­ளுக்குச் செல்லும் போது பெண் உத்­தி­யோ­கத்­தர்­களை அழைத்துச் செல்ல வேண்டும். (எம்.ஐ.எம்.அமீன்,பக்:102, 103)

  1. துருக்கித் தொப்பி விவ­காரம்:- முஸ்­லிம்­களின் முதல் பட்­ட­தா­ரியும் வழக்­க­றி­ஞ­ரு­மான எம்.ஸீ.அப்துல் காதர் பிரித்­தா­னிய கால­னித்­துவ அரசின் பிர­தம நீதி­ப­தி­யாகக் கட­மை­யாற்­றிய சேர் சார்லட் லயர்ட் என்­ப­வ­ருக்கு முன்­நி­லையில் 1905.05.02ஆம் திகதி நீதி­மன்­றத்­திற்கு துருக்கித் தொப்­பி­யுடன் வந்­த­போது, தொப்­பியைக் கழற்றும்­படி நீதி­பதி உத்­த­ர­விட்டார். அக்­கட்­ட­ளைக்குப் பணிய மறுத்த அப்­துல்­காதர், அது தனது சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட அவ­மானம் எனக்­கூறி நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றினார். முஸ்லிம் தலை­வர்கள் நீதி­ப­தியின் தீர்­மா­னத்தைக் கண்­டித்த போதிலும் நீதி­பதி அதில் பிடி­வா­த­மா­கவே இருந்தார். இவ­ரது நடத்­தையை ஆட்­சே­பித்து நாடு­பூ­ரா­கவும் முப்­பது கூட்­டங்கள் நடாத்­தப்­பட்­டன.அவற்றில் மரு­தா­னையில் நடந்த கூட்­டமே மிகப் பிர­மாண்­ட­மாக அமைந்­தது. பிர­சித்தி பெற்ற இந்­திய வழக்­க­றி­ஞ­ரான மௌலவி ரபி­யுத்தீன் இக்­கூட்­டத்தில் சிறப்­புரை நிகழ்த்­தினார். இத்­த­டை­யுத்­த­ரவை நீக்கக் கோரி பகி­ரங்க வேண்­டுகோள் ஒன்று விடுக்­கப்­பட்­டது. துருக்கித் தொப்பி விவ­காரம் மக்­களின் உணர்­வு­களைத் தூண்டி முழு முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் பிரச்­சி­னை­யாகப் பரி­ண­மித்­ததைக் கண்ட ஆங்­கில அரசு 1906.06.16 ஆம் திகதி அத்­த­டை­யுத்­த­ரவை நீக்­கி­யது.(அமீன், எம்.ஐ.எம், பக் :103)

தொப்பி விவ­கா­ர­மா­யி­ருப்­பினும் தமது தனித்­துவ அடை­யா­ளங்­களில் ஒன்று என முஸ்­லிம்கள் கரு­திய வேளை அதனைப் பாது­காக்கக் கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றார்கள் என்­பதை இந்­நி­கழ்ச்சி காட்­டு­கி­றது.

எனவே, ஆட்­சி­யா­ளர்கள் யாராக இருப்­பினும் அவர்கள் முஸ்­லிம்­க­ளது உணர்­வு­களைப் புரிந்து கொண்டு, அவர்­க­ளுக்­கான அடிப்­படை உரி­மை­களை வழங்கி, அவர்­களை நியா­ய­மாக நடத்­திய வேளையில் அங்கு சக­வாழ்வும் சௌஜன்­யமும் நில­வி­ய­தையும் தனித்­துவ அம்­சங்­களில் பாதிப்பு ஏற்­பட்ட போது அவர்கள் உரிமைக் குரல்­களை எழுப்­பி­ய­தையும் இன உணர்­வுகள் தூண்­டப்­பட்­ட­தையும் காண­மு­டியும். சக­வாழ்­வுக்கும் தனித்­துவம் காத்­த­லுக்­கு­மி­டையில் நேரடியான உற­வி­ருப்­பது இதி­லி­ருந்து புல­னா­கி­றது.

வர­லாற்றில் இஸ்­லா­மிய அரசின் கீழ் வாழ்ந்த சிறு­பான்­மை­யி­ன­ரான மாற்று மதத்­த­வர்­க­ளுக்கு இஸ்லாம் அடிப்­ப­டை­யான, நியா­ய­மான உரி­மை­களை போதிய அளவு உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தி­யதை வைத்துப் பார்க்கும் போது, இஸ்லாம் அல்­லாத அர­சு­களின் கீழ் முஸ்லிம் சிறு­பான்­மை­யினர் அது போன்ற உரி­மை­களை எதிர்­பார்ப்­பது தவ­றாக அமை­யாது.

 

 

தமி­ழர்­களை விட வித்­தி­யா­சப்­படும்

முஸ்­லிம்கள்

முஸ்­லிம்­க­ளது தனித்­து­வ­மான அம்­சங்­களை இந்­நாட்டின் மற்றோர் முக்­கி­ய­மான இன­மா­கிய தமி­ழர்­களும் புரிந்து செயல்­பட வேண்டும் என முஸ்­லிம்கள் எதிர்­பார்த்­தார்கள். முஸ்லிம் – தமிழர் உறவு சுமு­க­மாக அமைய இது அவ­சியம் என அவர்கள் உணர்ந்­தார்கள். முஸ்­லிம்கள் பெரும்­பான்மை சிங்­கள இனத்­த­வர்­களால் நெருக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட போது தமி­ழர்கள் கைகொ­டுப்பர் என்றும் முஸ்­லிம்கள் எதிர்­பார்த்­தார்கள். இந்­நாட்டின் இன­மு­ரண்­பாட்டு வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளுக்­கென பிரத்­தி­யேக­மான பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்ற உண்­மையை ஏற்று தமி­ழர்கள் முடி­வு­களை எடுக்க வேண்டும் என்­பதும் முஸ்­லிம்­க­ளது அவா­வாக இருந்­தி­ருக்­கி­றது.

ஆனால், இந்­நாட்டில் தமி­ழர்­க­ளோடு பல நூற்­றாண்­டு­க­ளாக சக­வாழ்வை மேற்­கொண்டு வரும் ஓர் இனம் என்ற வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு உரிய முக்­கி­யத்­து­வத்தை வழங்­காமல் சேர் பொன்­னம்­பலம் ராம­நாதன் எழு­தியும் பேசியும் வந்தார். 1880 ஆம் ஆண்டில் அவர், மொழி மற்றும் இரத்த உறவில் முஸ்­லிம்கள் தமி­ழர்­களே என்று கூறி­யதன் மூலம் சட்­ட­நி­ரூ­பண சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தி­யொ­ருவர் நிய­மிக்­கப்­ப­டு­வதை தடுத்­து­வந்தார். இலங்கை முஸ்­லிம்­க­ளது வர­லாறு அர­பி­க­ளுடன் தொடர்­பு­பட்­டது என்­பதை அவர் மறுத்­த­துடன் அவர்கள் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்­களே என்றும் வாதா­டினர். ‘இலங்கை முஸ்­லிம்கள் தென்­னிந்­தி­யாவில், இந்து மதத்­தி­லி­ருந்து இஸ்லாம் மதத்­திற்கு மத­மாற்­றப்­பட்ட இழி­ச­ன­சா­தியைச் சேர்ந்த தமி­ழர்­களின் சந்­த­தி­யினார்’ என ‘றோயல் ஏஸி­யடிக் சொஸைடி’ என்ற சரித்­திர ஆராய்ச்சிக் கழ­கத்தில் ஆற்­றிய சொற்­பொ­ழிவில் தெரி­வித்தார். 1915 சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரத்தின் பின்னர் அவர் முஸ்­லிம்­க­ளையும் பிரித்­தா­னிய அர­சையும் கடு­மை­யாக சாடி சிங்­கள சமூ­கத்­துக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­ட­தாகக் கூறினார்.

இது இப்­ப­டி­யி­ருக்க  எமது  தமிழ் சகோ­தர்கள் சில­ரது  அண்­மைக்­கால நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து அவர்கள் முஸ்­லிம்­க­ளது தனித்­து­வத்தை சற்றும் புரி­யாமல் நடந்­து­கொள்­வது போல் தெரி­கி­றது. இதனை ஆய்­வாளர் சித்தீக் ‘தமி­ழர்­க­ளது விடு­தலைப் போராட்ட இயக்­கங்­களில் பெரும்­பா­லா­னவை முஸ்­லிம்­களை தங்­களில் ஒரு பகு­தி­யி­ன­ராகக் காட்­டு­வ­தற்கும், தம்­முடன் அணைத்துக் கொள்­வ­தற்கும் காட்­டிய ஆர்­வத்தின் அள­வுக்கு முஸ்­லிம்­களின் சமய, கலா­சார தனித்­து­வத்­தையும் பிரச்­சி­னை­யையும் கோரிக்­கை­க­ளையும் விளங்கி, முஸ்­லிம்கள் தொடர்­பாக தெளி­வான உறு­தி­யான நம்­பிக்கை ஏற்­ப­டக்­கூ­டிய நிலைப்­பாட்டை எடுக்கத் தவ­றினர்.’ எனக் கூறு­கிறார். (சித்தீக், எம்.வை.எம். , தமிழ் முஸ்லிம் கல­வ­ரங்கள், பக்கம் :67)

இம்­ம­னோ­நிலை பற்றி கலா­நிதி நுஃமான் கூறு­கையில், ‘இலங்கை முஸ்­லிம்கள் தாமும் தமிழர் என்­பதை ஏற்க மறுத்­து­விட்­டனர். துர­திஷ்­ட­வ­ச­மாக தமிழ் அர­சியல் தலை­மை­யா­னது அன்றும் இன்றும் இதனை பொருட்­டாகக் கொள்­ள­வில்லை. தற்­கால அர­சியல் சூழ்­நி­லையில் தமிழ் பிரி­வி­னை­வாத இயக்­கங்கள் குறிப்­பாக எல்.ரீ.ரீ.ஈ. ஆனது ராம­நா­தனின் கொள்­கையை மீட்டிக் கொண்டு, முஸ்­லிம்­களை தமது அர­சியல் வட்­டத்­துக்குள் கொண்­டு­வந்து அவர்­களை இஸ்­லா­மியத் தமிழர் என அழைக்க முயற்­சிக்­கி­றது. நூறு வரு­டங்­க­ளுக்கு மேல் முயற்­சித்து முஸ்லிம் தனித்­துவம் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பதால் இந்த வாதத்தை எந்த முஸ்­லிமும் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள்” என எழு­து­கிறார்.(Nuhman, Understanding Sri Lankan Muslim Identity, p: 12)

எனவே, முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டையில் ஐக்­கி­யமும் சௌஜன்­யமும் நிலவ வேண்­டு­மாயின் தமி­ழர்­க­ளது தரப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும். முஸ்லிம்களுக்கென்றே தனித்துவமாகவுள்ள பண்புகளைத் தமிழர்கள் ஏற்பதுடன் அவற்றிற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியுமிருக்கிறது.

அந்தவகையில் நோக்குமிடத்து முஸ்லிம் சமூகத்தின் தனித்துவப் பண்புகள் எவை என முஸ்லிமல்லாதவர் புரிந்து கொள்ளும்பட்சத்தில் அவற்றை முஸ்லிம்கள் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அவற்றில் எவ்வித தலையீட்டையும் செய்யலாகாது. அத்துடன் பிறசமயத்தவரது கலாசார, பண்பாட்டு தனித்துவங்களைச் செய்யும்படி முஸ்லிம்களை நிர்ப்பந்திக்கவும் கூடாது.

முஸ்லிம்களும் கூட பிற சமூகத்தவர்களது தனித்துவங்களை மிகத்தெளிவாக அறிந்திருப்பதுடன் அவற்றை சகித்து  வாழவேண்டும். அவற்றை கொச்சைப்படுத்துவதோ அவமதிப்பதோ இஸ்லாமிய போதனைகளுக்கு விரோதமானதாகும்.பிறர் வணங்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என அல்குர்ஆனில் கூறபாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே,சமாதான சகவாழ்வு என்பது முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் தத்தமது கடமைகள், உரிமைகளை மிகவும் துல்லியமாக அறிந்து நடைமுறைப்படுத்துவதில் தான் தங்கியுள்ளது. முஸ்லிம்கள் மாத்திரம் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பேணுகையில் பிறர் அசிரத்தையாக இருந்தால் அங்கு எதிர்பார்க்கப்படும் சுபீட்சமான அமைதியான சமூக அமைப்பு உருவாகமாட்டாது.

அண்மைக்காலமாக முஸ்லிம் பெண் களதும்  ஆண்களதும் ஆடைகளில்  மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் ஹலால் விவகாரம்,இஸ்லாமிய வங்கி முறை போன்றவற்றை மையமாக வைத்தும் முஸ்லிம்கள்  கடந்த முப்பது வருடங்களுக்குள் தான்  மாறி விட்டார்கள் எனக் கூறுவது பொருத்தமல்ல என்ற கருத்தை நாம் புரிய வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.