வன்முறையாளர்கள் விடுவிக்கப்படுவது நியாயமா?

0 634

மே மாத நடுப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மினுவாங்கொடை பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றமை பலத்த அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

மேற்படி பிரதேசங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் இரு தினங்களில் தாக்குதலுக்குள்ளாகின. இத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 2000 இற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் சாட்சியமளித்திருந்தனர். இதனை அப் பகுதிக்கு விஜயம் செய்த அரசியல்வாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

எனினும் இவ்வாறான பாரிய கும்பலிலிருந்து சுமார் 100 பேர் வரையிலேயே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் துரதிஷ்டவசமாக அவர்கள் கூட இன்று படிப்படியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

நாத்தாண்டிய – கொட்டாரமுல்லை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 31 பேர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பில் கைதானவர்களில் மேலும் 15 பேருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரமும் மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதான 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொட்டாரமுல்லை கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாது விரைவாகவே பிணையில் செல்லும் வகையில் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மஹியங்கனையில் தர்மச்சக்கரம் பொறித்த ஆடையை அணிந்தார் என்ற போலியான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் பெண் மீது ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகிறார். எந்தவித குற்றமும் இழைக்காத, கப்பலின் சுக்கான் வடிவம் பொறித்த ஆடையை அணிந்த பெண் மீது மேற்படி இறுக்கமான சட்டத்தின் கீழ் போலியான குற்றச்சாட்டுக்கான வழக்குப் பதிவு செய்த பொலிசார், இவ்வாறு பட்டப்பகலில், அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலில் இருந்த காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டு உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த குண்டர்களை சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பிக்கச் செய்யும் வகையில்  செயற்படுவது மிகவும் பக்கச்சார்பான செயற்பாடே அன்றி வேறில்லை எனலாம்.

இலங்கை முஸ்லிம்கள் தமது பாதுகாப்புக்காக அல்லாஹ்வுக்கு அடுத்ததாக பொலிசாரையும் படையினரையுமே நம்பியிருக்கின்றனர். நீதிக்காக சட்டத்துறையையே நம்பியிருக்கின்றனர். துரதிஷ்டவசமாக இன்று இவ்விரு தரப்பினரும் இனவாத சக்திகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனரா எனும் சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இந்த சந்தேகம் மேலும் மேலும் வலுப் பெறும் வகையிலேயே பொலிசாரும் சட்டத்துறையினரும் நடந்து கொள்கின்றனர்.

எனவேதான் முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர்களுக்கு பிணை வழங்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
_Vidivelli

Leave A Reply

Your email address will not be published.