தீவிரவாத கும்பலுக்கு எதிராக செயற்பட்டதால் எனது இணைப்பு செயலாளருக்கும் எனக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது

நாம் அஞ்சி பின்வாங்க மாட்டோம் என்கிறார் கபீர்

0 628

தீவி­ர­வாத கும்­ப­லுக்கு எதி­ராக முதலில் களத்­தி­லி­றங்கி நாங்கள் செயற்­பட்­டதால் எனது இணைப்புச் செய­லா­ள­ருக்கும், எனக்கும் மரண அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டது.

என்­றாலும் நாங்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்சி பின்­வாங்­காமல்  புல­னாய்வுப் பிரி­வுக்குத் தேவை­யான தக­வல்­களை தொடர்ந்தும் வழங்கி வரு­கின்­றோ­மென நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

‘ரன் மாவத்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் அர­நா­யக்க கடு­கங்க – நாரங்­கம்­மான இடை­யி­லான வீதி அபி­வி­ருத்தி திட்ட அங்­கு­ரார்ப்­பாண நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:-

“ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலை நாட்­டுக்குப் பெரும் பிரச்­சி­னை­யாக அமைந்­தது. இந்த தீவி­ர­வாத குண்­டுத்­தாக்­குதல் சர்­வ­தேச தீவி­ர­வா­தத்தின் ஓர் அங்­க­மா­கவே இடம்­பெற்­றது. இந்த தீவி­ர­வா­திகள் அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் நகர், நிவ்யோர்க் நகர், ஜேர்­மனி, பிரான்ஸ், இந்­தோ­னே­ஷியா, மலே­சியா போன்ற சகல நாடு­க­ளிலும் இவ்­வா­றான பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது.

இலங்­கையில் நடத்த தீவி­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் முஸ்­லிம்கள் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. நானும் ஒரு முஸ்லிம். இந்த சம்­பவம் தொடர்பில் நான் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது இந்த தீவி­ராத செயலை செய்­த­வர்கள் இஸ்லாம் மார்க்­கத்தை முறை­யாகப் பின்­பற்­று­ப­வர்­க­ளாக இருக்க முடி­யாது என்­பதை முதலில் குறிப்­பிட்­டி­ருந்தேன். இஸ்­லாத்தை முறை­யாக பின்­பற்­று­ப­வ­ராக இருந்தால் ஒரு­போதும் இவ்­வா­றான செயலை செய்ய முடி­யாது. இந்த தீவி­ர­வா­திகள் இஸ்­லாத்தை பின்­பற்­று­வர்கள் கிடை­யாது; நான் பின்­பற்றும் மார்க்­கத்தைச் சேர்ந்­த­வர்கள் அல்ல.

எனவே, இந்த கும்பல் புறக்­க­ணிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள். இவ்­வா­றான சிறு தீவி­ர­வாத அடிப்­ப­டை­வா­திகள் சகல இனத்­திலும் உள்­ளனர். இவ்­வா­றான செயற்­பா­டு­களை பெரும்­பான்மை முஸ்­லிம்கள் முற்­றிலும் புறக்­க­ணிக்­கின்­றனர்.

இந்த செயற்­பாடு முதலில் மாவ­னெல்­லையில் இருந்தே ஆரம்­ப­மா­கி­யது. சில மாதங்­க­ளுக்கு முன்பு மாவ­னெல்­லையில் ஒரு கும்பல் புத்­தர்­சி­லைகள் தாக்கி சேத­மாக்­கி­யி­ருந்­தது. இதன்­போது நான் அதற்கு எதி­ராக செயற்­பட்­ட­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். அதனை நாங்கள் சிறப்­பா­கவே முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

அத்­துடன் இந்த சம்­ப­வத்­துடன் சம்­பந்­தப்­பட்ட மற்­ற­வர்­களை கைது செய்ய குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருடன் இணைந்து நாங்கள் வேலைத்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

புல­னாய்வுப் பிரி­வுடன் எனது இணைப்புச் செய­லாளர் தஸ்லீம் இணைந்து செயற்­பட்டார். புல­னாய்வு பிரி­வுடன் இணைந்து தக­வல்­களை வழங்­கி­ய­மை­யாலும், வணாத்­த­வில்லு பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­புக்கு உதவி செய்­த­மை­யாலும் எனது இணைப்புச்; செய­லாளர் தஸ்லீம் மீது இந்த தீவி­ர­வா­திகள் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தினர். அவர் இன்னும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இந்த தீவி­ர­வாத கும்­ப­லுக்கு எதி­ராக முதலில் நாங்கள் முன்­வந்து செயற்­பட்­டதால் எனது இணைப்புச் செய­லா­ள­ருக்கும், எனக்கும் மரண அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டது. என்­றாலும் நாங்கள் பின்­வாங்­காமல்  புல­னாய்வு பிரி­வுக்கு தேவை­யான தக­வல்­களை தொடர்ந்தும் வழங்கி வரு­கின்றோம்.

இந்தப் பிரச்­சினை ஏற்­பட்ட பின்னர் இந்த விட­யத்தில் அரசு சரி­யாக செயற்­ப­ட­வில்லை என  அரசின் மீது விரல் நீட்டி குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

அமெ­ரிக்­கா­விலோ, ஐரோப்­பா­விலோ இவ்­வா­றான தீவி­ர­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள், வரு­டங்கள் சென்­றி­ருக்­கின்­றன. ஆனால், இரண்டு வாரங்­களில் இந்த தீவி­ர­வா­தி­களின் முழு­மை­யான வலைப்­பின்­னலை இல்­லாமல் செய்ய எமது பாது­காப்பு தரப்­புக்கு முடி­யு­மா­கி­யுள்­ளது. தற்­போது இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட முக்­கிய நபர்­களை கைது செய்­து­விட்­டனர். இக்­கு­ழுக்­க­ளுடன் சிறு தொடர்­பை­யேனும் வைத்­துள்­ள­வர்­களை கைது செய்­யவும் பாது­காப்பு தரப்பு முஸ்லிம் மக்­க­ளிடன் ஒத்­து­ழைப்­போடு தேடுதல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இத்­தீ­வி­ர­வா­தத்தை எம்மால் இரண்டு வாரங்­களில் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த முடிந்­துள்­ளது. இதனைப் பற்றி எவரும் கதைப்­ப­தில்லை. நாங்கள் பலத்த சவால்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். இந்த நாட்­டுக்கு ஏரா­ள­மான பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் நாங்கள் இலங்­கை­யர்கள் என்ற ரீதியில் ஒன்றாக இருந்தமையினால் அந்த சவால்களை தோற்கடிக்க எம்மால் முடியமானது. அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறான பிரச்சினைகள் – சவால்கள் வந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் மறக்கவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார். எவர் என்ன செய்தாலும் அடுத்த ஜனவரி மாதம் தெரிவாகும் புதிய ஜனாதிபதி ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். அதற்கான வேலைத்திட்டங்களை ஐ.தே.க. முன்னெடுத்துள்ளது”- என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.