ரமழானை பொறுப்புடன் அனுஷ்டிப்போம்

0 780

இலங்­கையை மாத்­தி­ர­மல்ல முழு உல­கையும் ஒரு­கனம் அதிர்ச்­சியில் உறைச்­செய்த ஏப்ரல் 21 ஆம் திக­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் உயிர்ப்­ப­லிகள் தொடர்ந்தும் எம்மை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளன. சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வாரங்­களே கடந்­து­விட்ட நிலையில் முஸ்­லிம்கள் நாம் இன்று புனித ரம­ழானில் சங்­க­ம­மா­கி­யுள்ளோம்.

‘ரமழான் மாதம் எத்­த­கை­ய­தெனில் அதில்தான் மனி­தர்­க­ளுக்கு முழு­மை­யான வழி­காட்­டி­யா­கவும், நேர்­வ­ழியின் தெளி­வான அறி­வு­ரை­களைக் கொண்­ட­தா­கவும், சத்­தி­யத்­தையும், அசத்­தி­யத்­தையும் பிரித்துக் காட்­டக்­கூ­டி­ய­தா­கவும் உள்ள குர்ஆன் இறக்­கி­ய­ரு­ளப்­பட்­டது’ என அல்லாஹ் ரமழான் மாதத்தின் சிறப்பு பற்றி குர்­ஆனில் கூறி­யுள்ளான்.

இத்­த­கைய சிறப்­பு­மிக்க மாதத்­தினை நாம் வர­வேற்­றி­ருக்கும் இன்­றைய தினத்தில் ஏனைய வரு­டங்­களை விடவும் எமது மகிழ்ச்­சியில் கீற­லொன்று வீழ்ந்­தி­ருப்­பதை எம்மால் உணர முடி­கி­றது. இது­வரை காலம் நாம் கருணை மிக்­க­வர்கள், பொறு­மை­சா­லிகள், நேர்­மை­யா­ன­வர்கள், ஏனைய மதங்­களைக் கௌர­வப்­ப­டுத்து பவர்கள் என நிரூ­பித்து வந்­துள்ளோம். ஆனால் ஏப்ரல் 21 ஆம் திகதி எமது சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் அனைத்­தையும் திசை­தி­ருப்­பி­விட்­டன.

இன்று முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் சந்­தேகம் பரப்­பப்­பட்­டு­விட்­டது. எமது சொந்த நாட்டில் நாம் அந்­நி­யர்­க­ளாக, தீவி­ர­வா­தி­க­ளா­கவே நோக்­கப்­ப­டு­கிறோம்.

சமூ­கத்தின் ஒரு சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட, இஸ்லாம் அங்­கீ­க­ரிக்­காத தாக்­கு­தல்­களே இதற்குக் கார­ண­மாகும்.

இந்­நி­லையில் ரம­ழானில் நாம் நாட்­டி­னதும், அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்­புக்­காக பிரார்த்­த­னை­களில் ஈடு­பட வேண்டும். பாதிக்­கப்­பட்டு, குடும்ப உறுப்­பி­னர்­களைப் பலி­கொ­டுத்து துய­ரத்தில் ஆழ்ந்­துள்ள மக்­களின் சோகத்தில் பங்­கு­தா­ரர்­க­ளாக வேண்டும்.

நோன்பு காலத்தில் ஆடம்­ப­ர­மான இப்தார் ஏற்­பா­டுகள், பள்­ளி­வா­சல்­களில் பாரிய அள­வி­லான கஞ்சி ஏற்­பா­டுகள் என்­ப­ன­வற்றைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் துய­ரத்தில் நாமும் பங்கு கொள்­கிறோம் என்­பதை நிரூ­பிக்க வேண்டும்.

எமது நாட்டில் 1971 ஆம் ஆண்டு இடம்­பெற்ற சிங்­கள இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் இளை­ஞர்­களின் தமிழ் ஈழத்­துக்­கான போராட்டம் என்­ப­ன­வற்றில் முழு சிங்­கள சமூ­கமும், முழு தமிழ் சமூ­கமும் ஈடு­ப­ட­வில்லை. இந்தப் போராட்­டங்­க­ளுக்கு முழு சமூ­கத்­தையும் குற்றம் சுமத்த முடி­யாது. இதே­போன்று 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு மனிதப் படு­கொ­லைகள் ஒரு சில­ரா­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அது உறு­தியும் செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மாதம் முழு­வதும் எமது வீடு­க­ளிலும், பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஒலி பெருக்­கி­களும், வானொ­லி­களும், தொலைக்­காட்சிப் பெட்­டி­களும் அய­ல­வர்­க­ளையும் ஏனைய இனத்­த­வ­ரையும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தக்­கூ­டாது. ஒலி மாச­டை­வது தவிர்க்­கப்­பட வேண்டும். இரவு நேரங்­களில் எமது இளை­ஞர்கள் பாதை­க­ளிலும் மற்றும் இடங்­க­ளிலும் விளை­யா­டு­வதைத் தவிர்க்­க­வேண்டும்.

ரமழான் பொறுமை காக்கும் மாதம் என்­பதை நாம் ஒரு போதும் மறந்­து­வி­டக்­கூ­டாது. நேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பு பகு­தியில் இடம்­பெற்ற அசா­தா­ரண சம்­ப­வங்கள் பொறுமை இழக்­கப்­பட்­ட­த­னா­லேயே நிகழ்ந்­துள்­ளன.

‘முஸ்லிம் சகோ­த­ரர்கள் மீது கை வைக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க சகோ­தரர் களிடம் வேண்­டிக்­கொள்­கிறேன். அது எமது கத்­தோ­லிக்க மத தர்­மத்­துக்­குச்­செய்யும் நிந்­த­னை­யாகும். நாம் மத தர்­மத்­துக்கு அமைய வாழ்­வோ­மென்றால் எந்த மதத்­துக்கும் எதி­ராக செயற்­பட மாட்டோம். அண்­மையில் நடை­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை ஆயு­த­மா­கக்­கொள்ள வேண்டாம். பொறு­மை­யுடன் செயற்­ப­டுங்கள்’ என பேராயர் கர்­தினால் மெல்கம் ரன்ஜித் நீர்­கொ­ழும்பு சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து அனைத்து மக்­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இஸ்லாம் மதமும் இத­னையே போதித்­துள்­ளது. நாம் இஸ்­லா­மிய போத­னை­களை சரி­யாகக் கடைப்­பி­டித்தால் எந்த மதத்­துக்கும் எதி­ரா­கவும் செயற்­பட மாட்டோம். முஸ்­லிம்கள் நாம் இதை நிரூ­பிக்க வேண்டும். எம்மில் ஊடு­ரு­வி­யுள்ள தீய சக்­தி­களைக் களைந்­தெ­றி­வதன் மூலம் இதனை நிரூ­பிக்­கலாம்.

எமது ஆடம்­பர நிகழ்­வு­களைத் தவிர்த்து பாதிக்­கப்­பட்டு உற­வு­களை இழந்து துய­ருற்­றுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். உதவிகள் புரிவோம். எமது இந்தச் செயல்கள் முஸ்லிம்கள் கருணையுள்ளவர்கள். ஏனைய மதங்களையும் அரவணைப்பவர்கள் என்ற மனோநிலையை நிச்சயம் அவர்களிடத்தில் உருவாக்கும்.

இதற்கெனவே அல்லாஹ் எமக்கு ரமழானை இன்று அனுப்பி வைத்துள்ளான். ரமழானின் அருள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி எமது பாதுகாப்பினையும் சக வாழ்வினையும் நிச்சயம் உறுதி செய்யும் என்பதில் நம்பிக்கை வைப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.