ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்

0 617

ஏன் இலங்­கை­யிலே இந்தத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன‌? ஏன் இந்தத் தாக்­கு­தல்கள் இன்­றைய கால­கட்­டத்­திலே மேற்­கொள்­ளப்­பட்­டன? ஏன் தேவா­ல­யங்­களின் மீதும் உல்­லாச விடு­தி­களின் மீதும் இந்தத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன? ஏன் இலங்கை இலக்கு வைக்­கப்­பட்­டது? எதற்­காக? இவ்­வா­றான கேள்­விகள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னது மன­திலும் இப்­போது ஓடிக்­கொண்­டி­ருக்கின்றன.

நாம் எதிர்­கொண்ட போரி­னதும், முரண்­பா­டு­க­ளி­னதும், துரு­வப்­பட்டு போத­லி­னதும் வேத­னை­யான வர­லாறு இன்­றைய நிலையில் மீண்டும் எங்­களை ஒரு நிச்­ச­ய­மற்ற நிலை­யினை நோக்கித் தள்­ளி­யி­ருக்­கி­றது. இந்த நிலை­யா­னது எமது வர­லாற்றில் ஒரு துன்­ப­க­ர­மான திருப்­ப­மா­கவும் கூட அமை­யலாம். கடந்த காலத்தில் இடம்­பெற்ற குண்டு வெடிப்­புக்கள், அவற்­றினால் ஏற்­பட்ட மர­ணங்கள் மற்றும் தேவா­ல­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மற்றும் கோயில்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் பற்­றிய ஞாப­கங்கள் மீண்டும் ஒரு முறை கிள­றப்­படக் கூடும். சமூ­கங்­களை ஒன்றில் இருந்து ஒன்று துரு­வப்­ப­டுத்தும் வகை­யி­லான அர­சி­யலை முன்­னெ­டுக்கும் சக்­திகள் பலம்­பெறக் கூடும்.

ஈஸ்டர் தினத்­திலே இடம்­பெற்ற இந்தத் தாக்­கு­தல்­களின் பயங்­கரம், தாக்­கு­தல்­க­ளினால் ஏற்­பட்ட மர­ணங்கள், காயங்கள், மன வேத­னைகள், பயங்கள் யாவும் எமது எதிர்­கா­லத்தின் போக்­கினை தீர்­மா­னிப்­ப­திலே பங்­கு­பற்றும் விட­யங்­க­ளாக அமையப் போகின்­றன‌. அதே­நே­ரத்­திலே எமது வேத­னை­யினை, சமூ­கங்­க­ளாக நாம் கூடி வாழ்­வ­தற்­கான ஒரு எதிர்­கா­ல­மாக நாம் எவ்­வாறு மாற்றப் போகின்றோம் என்ற‌ சவாலும் இன்று எம் முன்னால் தோன்­றி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு

கடந்து போன உயிர்த்த ஞாயிறு பற்றி எம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒரு கதை இருக்கும். இந்தப் பாரிய வன்­முறைத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற போது நாம் எங்கே இருந்தோம், என்ன செய்து கொண்­டி­ருந்தோம் என நாம் எதிர்­கா­லத்­திலே நினைத்துப் பார்க்கக் கூடும். கிறிஸ்­தவ சமூ­கத்­தி­னரைப் பொறுத்த வரை­யிலே, ஈஸ்­ட­ருக்­கான தயார்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்டு, தவக் காலத்­தினைத் தொடர்ந்து ஈஸ்­ட­ரினை அனுஷ்­டித்துக் கொண்­டி­ருந்த போது ஏற்­பட்ட இந்தப் பாரிய அழி­வு­க­ர­மான குழப்பம் மிகவும் மனச்­சோர்­வி­னையும், நம்­பிக்­கை­யீ­னத்­தி­னையும் அவர்கள் மத்­தி­யிலே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். வாழ்­வினைக் கொண்­டாடும் வழி­பாட்டு நிகழ்­வு­க­ளிலே ஈடு­பட்­டி­ருந்த இந்தச் சமூ­கத்­தி­ன­ருக்கு ஈஸ்டர் தினத்­திலே மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் அதிர்ச்சி கடு­மை­யான‌ மன வேத­னை­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

யாழ்ப்­பா­ணத்­திலே இருக்கும் எனது வீட்­டிலே, முதுமை மற­தி­யி­னாலும், பாரி­ச­வா­தத்­தி­னாலும் பாதிக்­கப்­பட்டு நட­மாடும் ஆற்றல் குறை­வான நிலையில் இருக்கும் எனது தாயா­ருக்கு திரு­வி­ருந்து வழங்­கு­வ­தற்­காக அங்­கி­லிக்கன் திருச்­ச­பையின் மத­கு­ரு­வா­ன­வரின் வரு­கை­யினை நாம் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்தோம். அந்த வேளை­யிலே தாக்­கு­தல்கள் பற்­றிய செய்­திகள் தொலை­பேசி ஊடாக உள்­நாட்­டி­லி­ருந்தும், வெளி­நாட்­டி­லி­ருந்தும் எம்மை வந்­த­டைந்­தன.

பேசு­வ­தற்கோ, நடப்­ப­தற்கோ மிகவும் இய­லாத நிலையில் இருக்கும் எனது தாயார் குரு­வா­ன­வ­ரினைக் கண்­டதும் எழுந்து நின்று அவ­ருக்கு வணக்கம் சொல்ல முற்­பட்டார். ஈஸ்டர் தினத்­திலே குரு­வா­னவர் வரு­கை­யி­னதும், அவ­ரிடம் இருந்து திரு­வி­ருந்­தினைப் பெறு­வ­தி­னதும் முக்­கி­யத்­து­வ­மா­னது எனது தாயா­ரிடம் ஆழ­மாக உறைந்து போயி­ருக்­கிற விட­யங்கள். ஒரு குறு­கிய வழி­பாட்டு நிகழ்வின் பின்னர், எமது உரை­யாடல் நடந்து முடிந்த துன்­பியல் சம்­ப­வத்­தினை நோக்கித் திரும்­பி­யது. பயம் பற்­றியும், இழப்புப் பற்­றியும், 1983 ஜூலைக் கல­வரம் பற்­றியும், ஏனைய வன்­செ­யல்கள் பற்­றியும் எம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இருந்த அனு­ப­வங்­களைப் பற்­றியும் நாம் பேசினோம்.

பெரிய வெள்ளி

ஈஸ்­ட­ருக்கு இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர், பெரிய வெள்ளி நாளன்று யாழ்ப்­பா­ணத்தின் சோனகர் தெருவில் அமைந்­துள்ள பச்சைப் பள்­ளி­வா­ச­லிலே இடம்­பெற்ற ஒரு கூட்­டத்­திலே நான் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். நான் கடந்த ஏழு வரு­டங்­க­ளாக இணைந்து பணி­யாற்றி வரும் தமிழ்-­ -– முஸ்லிம் உற­வு­க­ளுக்­கான அமைப்பின் நண்­பர்கள் எம்­மிலே சில­ருடன் கூடி இருந்து வடக்­கிலே முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம், எதிர்­கொள்ளும் சவால்கள் குறித்து உரை­யா­டினர். வட­பு­லத்தில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளினைப் பொறுத்­த­வரை அவர்­களின் மீள்­தி­ரும்­ப­லு­டனும், மீள்­கு­டி­யேற்­றத்­து­டனும் தொடர்­பான செயன்­மு­றைகள் மிகவும் விரக்­தி­யூட்­டு­ப­வை­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. அவர்கள் வெளி­யேற்­றப்­பட்டுக் கிட்­டத்­தட்ட முப்­ப­தாண்­டுகள் கடந்த நிலை­யிலும் இந்தச் செயன்­மு­றைகள் தொடர்­பிலே அவர்கள் பாரிய சவால்­களை எதிர்­கொள்­கின்­றனர்.

நாம் சந்­தித்த முஸ்லிம் சமூகத் தலை­வர்கள் தமது பிரச்­சி­னைகள் தொடர்­பிலே மிகவும் தெளி­வாக இருக்­கி­றார்கள். மீள்­கு­டி­யேற்­றத்தின் போது தாம் எதிர்­கொள்ளும் தடைகள் பற்­றியும், தமது மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு ஒத்­து­ழைப்பு நல்க மறுக்கும் நிர்­வாகம் பற்­றியும் அவர்கள் பேசி­னார்கள். அடுத்­த­டுத்து வந்த அர­சாங்­கங்­க­ளி­னாலும், அர­சி­யல்­வா­தி­களின் பொய் வாக்­கு­று­தி­க­ளி­னாலும் அவர்கள் கைவி­டப்­பட்டும், ஏமாற்­றப்­பட்டும் இருக்­கி­றார்கள். ஆனால் ஒரு விடயம் குறித்து அவர்கள் மிகவும் பற்­று­றுதி உடை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். சாதா­ரண தமிழ் மக்­க­ளு­ட­னான தமது நட்புப் பற்­றியும், அவர்­க­ளுடன் தமது உற­வு­களை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்­பது பற்­றியும் அவர்கள் மிகவும் நம்­பிக்கை கொண்­டோ­ராக இருக்­கி­றார்கள். எனினும், யாழ்ப்­பா­ணத்தில் அவ­தா­னிக்­கப்­படும் முஸ்லிம் எதிர்ப்பு மன­நி­லையின் உள்­ளோட்­டங்­களும், யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் மீள்­தி­ரும்­ப­லினை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும், ஒரு பன்­மைத்­துவம் மிக்க யாழ்ப்­பா­ணத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­ப­வது தொடர்­பிலும் தமிழ்ச் சமூ­கத்­தினர் மத்­தி­யி­லி­ருந்து பரந்­து­பட்ட முனைப்­புக்கள் எதுவும் இல்­லா­மையும் அந்தக் கூட்­டத்­தினை முடித்து நான் வீடு திரும்பும் போது எனக்குக் கவ­லை­யினை ஏற்­ப­டுத்­தின.

துரு­வப்­ப­டுத்­தப்­பட்டுப் போதலும்  கூடி வாழ்­தலும்

சில “இஸ்­லா­மிய சக்­தி­களே” ஈஸ்டர் தாக்­கு­த­லினை மேற்­கொண்­ட­தாக செய்தி அறிக்­கைகள் வெளிக்­கி­ளம்பிக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலே, சமூ­கங்கள் துரு­வப்­பட்டுப் போயி­ருக்கும் தீவிர நிலை­யினைக் கையா­ள்­வ­தற்­காக நாம் எவ்­வாறு ஒன்று திர­ளப்­போ­கிறோம் என்ற கேள்வி என் மன­திலே தோன்­று­கி­றது.

எனது தாயா­ருக்குத் திரு­வி­ருந்­தினை வழங்­கிய பின்னர் எமது வீட்டை விட்டுப் புறப்­படும் போது அந்த இளைய அங்­கி­லிக்கன் குரு­வா­னவர் இனி வரப் போகும் நாட்கள் குறித்துச் சிந்­தித்தார். அடுத்த சில நாட்­க­ளுக்கு எல்லா வழி­பாட்டு நிகழ்­வு­க­ளையும், எல்லாக் கிறிஸ்­தவ ஒன்­று­கூ­டல்­க­ளையும் நிறுத்­து­வது தொடர்­பான தொலை­பேசி அழைப்­புக்கள் அவ­ருக்கு வந்த வண்ணம் இருந்­தன.

தன்­னு­டைய எண்­ணங்கள் தொடர்­பிலே குரு­வா­னவர் தெளி­வா­கவும், உறு­தி­யா­கவும் இருந்தார். தாக்­கு­தல்­க­ளினை மேற்­கொள்­ப­வர்கள் அந்தத் தாக்­கு­தல்­க­ளினால் கொல்­லப்­ப­டு­ப­வர்­க­ளி­னதும், காயப்­ப­டுத்­தப்­ப­டு­பவர்களி­னதும் வேத­னை­யினை ஒரு போதும் காண்­ப­தில்லை. இது தான் எமது வர­லாறும் பிள­வு­ப­டுத்­தலின் அர­சி­யலும். இதுவே எமது நாட்­டினை சின்­னா­பின்­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என அவர் குறிப்­பிட்டார்.

அந்தக் குரு­வா­ன­வரின் செய்தி மிகவும் முக்­கி­ய­மா­னது. இந்தப் பிளவுபடுத்தும் அரசியல் எம்மை ஆக்கிரமிப்பதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை என கிறிஸ்தவ மதகுருக்கள், சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கருத்துருவாக்கிகள் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.கொல்லப்பட்ட மக்களுக்காகவும், காயப்பட்ட, இழப்புக்களினாலும், மன வேதனையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் நாம் எமது அன்பினையும், ஆறுதலினையும் வெளியிடும் அதேவேளை, தம்மீது பதில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்ச உணர்வுக்கு உட்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எமது அன்பினையும், கரிசனையினையும் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். பிளவுபடுத்தலின் அரசியலினைத் தடுத்து நிறுத்தவும், சமூகங்களாக நாம் கூடி வாழ்வதற்கான எமது பற்றுறுதியினை மீளவும் உறுதி செய்யவும் இதனை நாம் உடனடியாகச் செய்ய வேண்டும்.

அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.