எமது சமூகம் இன்னும் பாடம் கற்கவில்லை

0 821

2013 ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் இனவாதிகள் தாண்டவமாடிய காலம் அது. அலுவலக விடுமுறை தினமொன்றில் நண்பர் ஒருவரின் நேகமயிலுள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். கலாவெவ பகுதியை கடந்து செல்லும்போது, “இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கன புத்தர் சிலை உள்ள இடம் அருகில் இருக்கிறது. போய் பார்த்துவிட்டுச் செல்லலாமே” என்றார் நண்பர். ஆவலுடன் “சரி” என்று கூறி இருவருமாக அங்கு சென்றோம்.

பிரதான நுழைவாயிலின் ஊடாக உட்செல்ல முற்டபட்டபோது அங்கு கடமையாற்றும் அதிகாரியொருவர் “ஒயாலா முஸ்லிம்த” என எம்மை நோக்கி வினவினார்? நாட்டில் ஒரு மோசமான முஸ்லிம் விரோதபோக்கான சூழ்நிலை ஏற்பட்டிருந்த காலம் என்பதால் எங்களுக்கு அவ்விடத்தில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.2625

நாமும் தலையசைத்துவிட்டு அவருக்கருகில் சென்றோம். அங்கு வந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த கதையை எம்மிடம் சொன்னார். இதன் காரணமாக இங்கு வரும் முஸ்லிம்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவதாகவும், இறுக்கமான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2013 ஆம் ஆண்டில் விடிவெள்ளியில் “மல்லி ஒயாலா முஸ்லிம்த?” எனும் தலைப்பில் பிரசுரமான எனது கட்டுரையின் சுருக்கக் கதை அது.

இதுபோன்ற சம்பவமொன்று கடந்த வருடமும் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போது இனவாத நோக்குடன் இவ்விடயம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, சுயநலங்களுக்காக காட்டிக்கொடுப்புகள் இடம்பெறுகின்றன. எது எவ்வாறிருப்பினும் இவ்விடயத்துடன் தொடர்புடைய கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் நண்பர்கள் குழுவொன்று அனுராதபுரம், ஹொரொவபொத்தான பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

அங்கு எந்தவொரு எச்சரிக்கை பலகையோ அல்லது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளோ இருக்கவில்லை. அவர்கள் இஷ்டம்போல் புகைப்படங்கள் எடுத்து தள்ளியிருக்கின்றனர். உச்சகட்டமாக தூபிக்கு மேலால் ஏறியும் புகைப்படம் எடுத்திருந்தனர். குறிப்பிட்ட சில தினங்களில் இவ்விடயத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்தும் உள்ளனர். எனினும் இவ்விடயம் குறித்த விவகாரம் அப்போது ஒரு பிரச்சினையாக பார்க்கப்படவுமில்லை. எந்தவொரு எதிர்ப்பும் கிளம்பவில்லை.

தற்போது இவ்விடயம் தூக்கிப்பிடிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. என்றாலும் இவ்விடயத்தில் படித்த மாணவர்கள் கொஞ்சம் சிந்தனையோடு நடந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே அனைவரது உபதேசமாகவும் இருக்கிறது.

கண்டி மத்ரஸா மாணவர்கள் அவுக்கனயில் புகைப்படம் எடுத்த விவகாரம் 2013 ஆம் ஆண்டளவில் பூதாகரமான பிரச்சினையாக வெளிக்கிளம்பாவிடினும் பொலிஸ் நடவடிக்கை வரை சென்ற விடயமாக இருந்தது. இந்த தூபிக்கு மேலால் நின்று புகைப்படம் எடுக்கப்பட்ட விடயத்தை இனவாத இயக்கங்களும் குரோதங்களை தூண்டும் சில சமூக வலைப்பதிவாளர்களும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கின்றனர். ஒருசில முஸ்லிம் இளைஞர்கள் தெரியாத்தனமாக செய்த பிழையை இன்று இனவாதிகள் தமது சுயநலத்திற்காக வேண்டுமென்றே பெரிதுபடுத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படும் மாணவர்கள் ஏழுபேர், கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்களைக் கைது செய்ததாக ஹொரவபொத்தான பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 25 வயதுகளை உடையவர்களாவர்.  தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன்படியே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018  ஜனவரி 5 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில்  கிரலாகல தொல்பொருள் வலயத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாகவும், அவர்களை தேடிய போதும் அவர்கள் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்கள் புத்தளம், ஹொரவபொத்தான, நாவலப்பிட்டி, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதையும் கண்டறிந்தனர். இந்நிலையிலேயே அவர்களை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு எதிராக தொல்பொருள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பி.பீ. மண்டாவல கோரியிருக்கிறார்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தல், பாவனை மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மலிந்து கிடக்கின்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களே மிகவும் இறுக்கமான முறையில் சிறுபான்மை மக்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. இதனை கடந்த காலங்களில் நாம் பல்வேறு வகையிலும் அனுபவித்திருக்கிறோம்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைகூட புனித பூமி என்றதொரு திட்டத்தில் பிரச்சினையாக உருவாக்கப்பட்டது. இன்றும் தீராத பிரச்சினையாக இருக்கிறது. இவ்வாறான பல பிரச்சினைகளை எதிர்கொண்ட நாம் இன்றும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. வெறுமனே எல்லாவற்றையும் சம்பவங்களாகவே எடுத்துக்கொள்கிறோம்.

தற்போது பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் எதிர்காலத்தில் சர்ச்சைகளுக்குள் சிக்காது பாதுகாத்துக்கொள்ள பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். புகைப்படக் கருவி இருக்கின்றது என்பதற்காக கண்டமாதிரியாக புகைப்படங்கள் எடுப்பதிலிருந்து நாம் முற்றாகத் தவிர்ந்துகொள்ள வேண்டும். இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்துகொள்ளல் சிறந்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.