ஐ.எஸ்.ஐ.எஸ். புரளியின் பின்னணி கண்டறியப்படுமா?

0 201

எப்.அய்னா

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தின் தொடர்ச்சி, இலங்­கை­யிலும் சில கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏது­வாக அமைந்­துள்­ளது.

அதன்­படி இது­வரை (இக்­கட்­டுரை எழு­தப்­படும் போது) 3 பேர் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், மேலும் மூவர் தொடர்பில் விசா­ரணை நடப்­ப­தாக அறிய முடி­கி­றது. அதில் பிர­தான சந்­தேக நப­ராக தெமட்­ட­கொடை பகு­தியை சேர்ந்த ஒஸ்மன் ஜெராட் என்­ப­வரை பொலிஸ் தேடி வரு­கின்­றது. இவர் தொடர்பில் தகவல் தரு­வோ­ருக்கு 20 இலட்சம் ரூபா பணப் பரி­சிலும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விமான நிலை­யத்­துக்கு வந்த மின்­னஞ்சல்:
இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். கைது­களின் ஆரம்பம் கடந்த 12 ஆம் திகதி அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலைய மின்­னஞ்­ச­லுக்கு வந்த ஒரு அநா­மதேய மின்­னஞ்­சலில் இருந்து ஆரம்­பிக்­கி­றது. அதில் விமான நிலை­யத்தை தாக்கப் போவ­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந் நிலையில், விமான நிலைய பாது­காப்பும் அதி­க­ரிக்­கப்­பட்டு குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் தீவிர விசா­ர­ணை­களும் முடுக்­கி­வி­டப்­பட்­ட­தாக இந்­திய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வுக்கு கிடைத்த தகவல் :
இவ்­வா­றான பின்­ன­ணியில் மே 18 அல்­லது 19 இல் நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் இலங்­கை­யி­லி­ருந்து வருகை தந்து தென் இந்­தி­யா­வி­லி­ருந்து குஜ­ராத்­துக்கு ரயில் அல்­லது விமானம் ஊடாக வரு­வ­தாக குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரான ஹரிஷ் உபாத்­யா­யா­வுக்கு தகவல் கிடைத்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதன்­ப­டியே இலங்­கை­யி­லி­ருந்து சென்­னைக்கு வந்து அங்­கி­ருந்து இன்­டிகோ விமான சேவையின் 6 ஈ 848 விமானம் ஊடாக அஹ­ம­தாபாத் விமான நிலையம் வர நால்­வரும் டிக்கட் முன் பதிவு செய்­துள்­ள­மையை குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வினர் கண்­ட­றிந்­த­தாக குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் உய­ர­தி­கா­ரி­யான ஹரிஷ் உபாத்­யாயா ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்தார்.

அவ்­வா­றான நிலை­யி­லேயே அஹ­ம­தாபாத் சென்ற பொலிஸ் அத்­தி­யட்­சர்­க­ளான சித்தார்த், கே.கே.பட்டேல் பிரதி பொலிஸ் அத்­தி­யட்­சர்­க­ளான ஹரிஷ் உபாத்­யாயா மற்றும் சங்கர் சவுத்ரி ஆகி­யோரின் தலை­மையில் விமான நிலை­யத்தில் காத்­தி­ருந்த பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர்.

மே 19 ஆம் திகதி இரவு 8.10 மணி­ய­ளவில் இவர்கள் நால்­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பிரத்­தி­யேக விசா­ரணை :
இவர்கள் நால்­வரும் கைது செய்­யப்­பட்­டதும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் நால்­வரை கைது செய்­த­தாக அறிக்கை வெளி­யிட்ட குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வினர், அவர்­களை இர­க­சிய இடத்தில் தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தா­கவும், அவர்கள் தமிழ் மொழியை மட்டும் அறிந்­துள்­ளதால் மொழி­பெ­யர்ப்­பாளர் ஒரு­வரின் உத­வி­யுடன் விசா­ரிப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

குஜராத் பொலிஸ் பிர­தா­னியின் தகவல் :
இது­கு­றித்து குஜராத் பொலிஸ் பிர­தானி விகாஸ் சஹாய், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு உய­ர­தி­கா­ரி­க­ளான ஹரிஷ் உபாத்­யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் ஊட­கங்­க­ளுக்கு தகவல் அளித்­தனர். அதில் ‘பாகிஸ்­தானை சேர்ந்த ஐ.எஸ். பயங்­கர­வாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கர் உத்­த­ர­வின்­பேரில் இந்த 4 பேரும் செயல்­பட்­டுள்­ளனர். அவர்கள் தமிழ் மட்­டுமே பேசு­கின்­றனர். நாடு முழு­வதும் மக்­க­ளவை தேர்தல் நடந்து வரு­கி­றது. அக­ம­தாபாத் நரேந்­திர மோடி மைதா­னத்தில் மே 21, 22-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்­கி­றது. இந்த சூழலில், நாட்டில் மிகப்­பெ­ரிய தாக்­குதல் நடத்த அவர்கள் திட்டம் தீட்­டி­ இ­ருக்­கலாம் என சந்­தேகம் எழுந்­துள்­ளது.

பா.ஜ.க. மூத்த தலை­வர்கள் நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானாவை படு­கொலை செய்ய சதித் திட்டம் தீட்­டி­யதும் தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­க­ளது தொலை­பே­சி­களை ஆய்வு செய்­ததில் இது­தொ­டர்­பாக பல முக்­கிய தக­வல்கள் கிடைத்­துள்­ளன. ஒரு பயங்­க­ர­வாத சந்­தேக நபரின் செல்­போனில் அஹ­ம­தா­பாத்தின் நர்­மதா நதி கால்­வாயின் புகைப்­படம் இருந்­தது. சம்­பந்­தப்­பட்ட இடத்தில் பொலிஸார் தேடு­தலை முன்­னெ­டுத்­தனர். இதன்­போது 20 தோட்­டாக்­க­ளுடன் கூடிய, பாகிஸ்­தானில் தயா­ரிக்­கப்­பட்ட 3 துப்­பாக்­கிகள், ஐ.எஸ். பயங்­கர­வாத இயக்க கொடி ஆகி­ய­வற்றை கைப்­பற்­றினர்.’ என அவர்கள் தெரி­வித்­தனர்.

இலங்­கையின் நட­வ­டிக்கை :
இலங்­கை­யர்­க­ளான பயங்­க­ர­வா­திகள் நால்வர் இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டதும் அது தொடர்பில் இலங்­கையின் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதி­ப­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க உத்­த­ர­விட்டார்.

இந் நிலையில் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னகோன், இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ரிக்க குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் சிறப்பு குழுவை அமைத்து பொறுப்­புக்­களை ஒப்­ப­டைத்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ ஊட­கங்­க­ளிடம் கூறினார்.

அதன்­படி சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரே­ம­ரத்­னவின் கட்­டுப்­பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸின் ஆலோ­சனை மற்றும் கட்­டுப்­பாட்டில் சிறப்புக் குழு இவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதற்­காக இரு பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் அடங்­கிய சிறப்பு குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

சி.ரி.ஐ.டி. விசா­ரணை :
சி.ரி.ஐ.டி. எனப்­படும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரிவின் பணிப்­பாளர் தலை­மையில் ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் இப்­போதும் தொடர்­கி­றது. தனது பெயரை வெளிப்­ப­டுத்த விரும்­பாத பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர், பகிர்ந்­து­கொண்ட தக­வல்கள் பிர­காரம், இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வ­ருக்கும் பயங்­க­ர­வாத தொடர்­புகள் இருப்­பது தொடர்பில் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் எந்­த தக­வல்­களும் இது­வரை வெளிப்­ப­ட­வில்லை என குறிப்­பிட்டார்.

அத்­துடன் அவர்கள் அனை­வ­ருக்கும் போதைப் பொருள் தொடர்­பி­லான வழக்­குகள் இலங்­கையில் இருப்­பதும், ஒரு­வ­ருக்கு எதி­ராக இரத்­தினக் கல் மற்றும் ஆப­ர­ணங்கள் அதி­கார சபை சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு இருப்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

கைதானோர் தொடர்பில் உள்­ளக
விசா­ர­ணையில் வெளிப்­பட்ட தக­வல்கள் :
1. நுஸ்ரத்.
இவர் 1991 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி பிறந்­தவர். நீர்­கொ­ழும்பு , பெரி­ய­முல்லை, ரஹு­ம­தாபாத் பகு­தியைச் சேர்ந்­தவர். 40 தட­வைகள் வரை இந்­தி­யா­வுக்கு சென்று வந்­துள்ளார் நுஸ்ரத். இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் இந்தி­யா­வி­லி­ருந்து தங்கம் கடத்தி வரவும், கைய­டக்கத் தொலை­பே­சிகள் உள்­ளிட்­ட­வற்றை சட்ட விரோ­த­மாக எடுத்து வந்து இலங்­கையில் விற்­பனை செய்­யவும் நுஸ்ரத் இவ்­வாறு அதி­க­மாக இந்­தியா சென்று வந்­த­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் நுஸ்ரத் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்­த­லு­டனும் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக உள்­ளக விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நுஸ்­ரத்தின் தந்தை தொழில் நிமித்தம் கிழக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து நீர்­கொ­ழும்­புக்கு வந்து அங்கு குடி­யே­றி­யுள்ள நிலையில், அவ­ருக்கு நீர்­கொ­ழும்பில் தங்க நகை விற்­பனை நிலையம் ஒன்று இருப்­ப­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் தக­வல்கள் பிர­காரம், நுஸ்­ரத்தே இந்த நால்வர் கொண்ட சந்­தேக நபர்கள் குழு­வுக்கு தலைமை தாங்­கி­ய­தா­கவும் அவ­ருக்கு பாகிஸ்­தா­னுக்­கான வீசாவும் காணப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

2. மொஹம்மட் நப்ரான்.
27 வய­தான இவர் கொழும்பு 12, எம்.ஜே.எம். லதீப் மாவத்­தையில் வசிப்­பவர். கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த சரத் அம்­பே­பிட்­டிய கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு மரண தண்­டனை கைதி­யாக சிறையில் இருந்த போது இறந்த பொட்ட நெளபர் எனப்­படும் மொஹம்மட் நியாஸ் நெள­பரின் 2 ஆம் மனை­வியின் மகன். 1997 ஜூலை 12 ஆம் திகதி பிறந்­துள்ள நப்ரான் சுமார் 38 தட­வைகள் இந்­தி­யா­வுக்கு சென்று வந்­துள்­ள­துடன், பல்­வேறு கடத்தல் வர்த்­த­கத்­தோடு அவ­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தாக உள்­ளக விசா­ர­ணையில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 2017 இல் இலங்கை பொலி­ஸாரால் நப்ரான் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ருக்கு எதி­ராக தேசிய இரத்­தினக் கல் மற்றும் ஆப­ர­ணங்கள் அதி­கார சபை சட்­டத்தின் கீழ் வழக்கும் தொட­ரப்­பட்­டி­ருந்­தது. போதைப்பொருள் தொடர்­பிலும் அவ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன.

இவர்கள் இரு­வ­ரையும் தவிர கைது செய்­யப்­பட்ட ஏனைய இரு­வரும் முதல் முறை­யாக இந்­தி­யா­வுக்கு சென்­ற­வர்கள் ஆவர். அவ்­வி­ரு­வரும் கூலித் தொழி­லா­ளர்­க­ளாக இலங்­கையில் செயற்­பட்­ட­வர்கள் என உள்­ளக விசா­ர­ணையில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

3. மொஹம்மட் ரஷ்தீன்
43 வயது மொஹம்மட் ரஷ்தீன் கூலித் தொழி­லா­ள­ரா­கவும் முச்­சக்­கர வண்டிச் சார­தி­யா­கவும் செயற்­பட்­டுள்ளார். இவர் ஒரு­கொ­ட­வத்தை நவ­கம்­புர, 2 ஆம் கட்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பில் வசிப்­ப­வ­ராவார். 1980 செப்­டம்பர் 5 ஆம் திகதி பிறந்­துள்ள அவர், பகஞ்­சி­பானை இம்­ரான் குழு­வி­ன­ரோடு நெருங்கி செயற்­பட்­டுள்­ள­தாக கூறும் பொலிஸார், பல்­வேறு போதைப்பொருள்சார் குற்றச்சாட்­டுக்கள் அவர் மீது உள்­ள­தாக கூறு­கின்­றனர்.

4. மொஹம்மட் பாரிஸ்
மாளி­கா­வத்தை , ஜும்ஆ மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 35 வய­து­டை­யவர் மொஹம்மட் பாரிஸ். இவர் புறக்­கோட்டை பகு­தியில் கூலி வேலை செய்­பவர். 1987 ஆம் ஆண்டு செப்­டம்பர் 10 ஆம் திகதி பிறந்­துள்ள இவ­ருக்கும் போதைப்பொருள் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன.

இந்­திய விசா­ரணை தகவல் :
குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரின் தக­வல்­களின் பிர­காரம், இந்த நால்­வரும் கடந்த 2024 பெப்ர­வரி மாதமே ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. பாகிஸ்­த­ானிலி­ருந்து இவர்­களை ‘அபூ பாகிஸ்­தானி’ எனும் பெயரால் அறி­ய­ப்படும் நபர் இயக்­கி­யுள்­ள­தாக கூறும் குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு, இவர்கள் இந்தி­யாவில் தற்­கொலை தாக்­கு­தல்­களை நடாத்த தயா­ராக இருந்­த­தாக கூறு­கின்­றனர்.

வீடு­களில் நடாத்­தப்­பட்ட சோதனை :
இந்த நான்கு பேரும் கைது செய்­யப்­பட்­டதும் இவர்­க­ளுக்கு சொந்­த­மான வீடு­களில் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை மற்றும் அதன் குண்டு செயலி­ழக்கச் செய்யும் பிரிவு ஆகி­யன இணைந்து சோத­னை­களை நடாத்­தினர். எனினும் அவ்­வீ­டு­களில் இருந்து சந்­தே­கத்­துக்கு இட­மான எவையும் சிக்­க­வில்லை. இந்த நான்கு பேரு­டனும் தொடர்­பு­டை­ய­வர்கள், உற­வி­னர்­களை பொலிஸார் விசா­ரித்­துள்ள நிலையில், அவர்­க­ளிடம் இருந்தும், சாத­க­மான எந்த தக­வலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் இவர்கள் ஐ.எஸ். உடன் தொடர்பா என அவர்கள் கூட அறி­ய­வில்லை எனவும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் கூறு­கின்­றனர்.

உள் நாட்டில் நடந்த கைது:
எவ்­வா­றா­யினும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், இது­வரை மூவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பொறுப்பில் எடுத்து தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களில் ஒருவர், இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட மொஹம்மட் பாரிஸின் நண்பர் என விசா­ர­ணை­யா­ளர்கள் கூறினர். பாரிஸ் விவா­க­ரத்­தாகி அவ­ரது மனைவி, பிள்­ளைகள் வேறாக வசிக்கும் நிலையில், அவ­ரது பெற்­றோரும் உயி­ருடன் இல்லை.

இந்த நிலையில் மாளி­கா­வத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் அவ­ருடன் தங்­கி­யிருந்­த­தாக கூறப்­படும் மிக நெருக்­க­மான நண்­ப­ராக கரு­தப்­படும் அப்துல் ஹமீட் அமீர் என்­பவர் இவ்­வாறு பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.

மற்­றொ­ரு­வரை கைது செய்ய தகவல்
தரு­வோ­ருக்கு 20 இலட்சம் பரிசு :
இவ்­வா­றான நிலையில் இது­வரை அப்துல் ஹமீட் அமீ­ரிடம் இருந்து விசா­ர­ணை­களில், பயங்­க­ர­வாதம் தொடர்­பு­பட்ட ஆதா­ரங்கள் எவையும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என விசா­ரணை தக­வல்கள் தெரி­வித்­தன. எவ்­வா­றா­யினும் அமீ­ரு­டனும் இந்தி­யாவில் கைது செய்­யப்பட்­ட­வர்­க­ளு­டனும் மிக நெருக்­க­மான தொடர்­பு­களை பேணிய ஒருவர் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், அவர் தலை­ம­றை­வாக இருக்கும் நிலையில் அவரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பொரளை வானத்­து­முல்ல, டேம்ப் தோட்­டத்­திலும், தெமட்­ட­கொட வேலு­வன வீதி­யிலும் அடிக்­கடி நட­மாடும் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்­களின் உத­வியை நாடி­யுள்­ளனர். ஒஸ்மன் ஜெராட் என அறி­ய­ப்படும் குறித்த நபரின் புகைப்­ப­டத்­தையும் பொலிஸ் திணைக்­களம் வெளி­யிட்ட நிலையில், இந்தி­யாவில் கைதான நால­்வ­ரையும் இலங்­கை­யி­லி­ருந்து இயக்­கி­யவர் இவரே என பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரிவு கண்­ட­றிந்துள்­ளது.

குறிப்­பாக தற்­போதும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் காவலில் இருக்கும் அமீர், இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட நால்­வரும் அங்கு செல்ல விமான பயணச் சீட்­டுக்­களைப் பெறும் நட­வ­டிக்­கையில் உத­வி­யவர் என கூறப்­ப­டு­கின்­றது.

சிலா­பத்தில் நடந்த கைது :
இவ்­வா­றான பின்­ன­ணியில் ஜெராட்டை தேடும் விசா­ர­ணை­களில் சிலா­பத்தில் வைத்து இருவர் பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சிலாபம் பங்­க­தெ­னி­யவைச் சேர்ந்த சகோ­த­ரர்­களே இவ்­வாறு கைது செய்­யப்பட்­டுள்­ளனர். அவ்­வி­ரு­வரும் ஒஸ்மன் ஜெராட்டின் உடன் பிறந்த இளைய சகோ­த­ரர்கள் என பயங்­கர­வாத விசா­ரணைப் பிரிவின் உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் ஒஸ்மன் ஜெ­ராட்டை தேடி விசா­ர­ணைகள் தொடர்­வ­துடன் கண்டி மாவட்­டத்­திலும் இருவர் தொடர்பில் விசா­ர­ணையில் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந்தக் கைது­களின் பின்­னணி என்ன?
உண்­மையில் இலங்­கையில் உள்ள தக­வல்கள் பிர­காரம், இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வரும் பயங்­க­ர­வாத தொடர்­பு­களை நேர­டி­யாக கொண்­ட­வர்கள் என சொல்­லு­ம­ள­வுக்கு சான்­றுகள் அற்­ற­வர்கள் என அறிய முடி­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்­திய அதி­கா­ரிகள், இந்த நால்­வ­ருக்கும் எதி­ராக இந்­திய தண்­டனை சட்டக் கோவையில் 120 பி (குற்­ற­வியல் சதி ), 121 ஏ ( இந்திய அர­சுக்கு எதி­ரான யுத்த பிர­க­டனம்) மற்றும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­துள்­ளனர்.

இந்த 4 பேரும் தேசிய தவ்ஹீத் ஜமா­அத் (என்­டிஜே) என்ற பயங்­க­ர­வாத அமைப்பை சேர்ந்­த­வர்கள் என்­பதும் தற்­போது 4 பேரும் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­புடன் இணைந்து செயல்­ப­டு­கின்­றனர் எனவும் ‘த ஹிந்து’ செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

எனினும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு, இந்த நால்­வரும் ஒரு போதும் என்.ரி.ஜே.யின் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதை உறுதி செய்யும் நிலையில் ஐ.எஸ். ஐ.எஸ். தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற தக­வ­லையும் இது­வ­ரை­யி­லான விசா­ரணை தக­வல்கள் மற்றும் ஆதா­ரங்­களை வைத்து மறுக்­கின்­றது.

இவர்கள் கடத்தல் போதைப்பொருள் அல்­லது வேறு பொருட்கள் கடத்­த­லுக்­காக இந்தியா சென்­றி­ருக்­கலாம் என இலங்­கையின் விசா­ர­ணையில் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். நட­வ­டிக்­கையும்
கைதா­னோரின் பின்­ன­ணியும்:
உண்­மையில், இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்ள நால்வர் தொடர்­பிலும் இலங்கை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், அவர்கள் மத ரீதி­யி­லான விட­யங்­களில் ஈடு­பாடு அற்­ற­வர்கள் என தெரி­ய­வந்­துள்­ளது.

எனினும் குஜராத் பயங்­கர­வாத தடுப்புப் பிரி­வினர் இந்த நால்­வரும் தமிழ் மொழியை மட்டும் அறி­வ­தாக கூறு­கின்­றனர். அத்­துடன் இவர்கள் ‘புரொடோன்’ மின்­னஞ்­சலை பயன்­ப­டுத்தி பாகிஸ்­தானின் அபூ என்­ப­வ­ருடன் தொடர்­பு­களை பேணி­ய­தா­கவும், அந்த தொடர்­பாடல் அரபு மொழி­யினால் ஆனது எனவும் குஜராத் பயங்­கர­வாத தடுப்புப் பிரி­வி­னரை ஆதாரம் காட்டி இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

உள்­ளக விசா­ரணை தக­வல்கள் படி, இந்த நால்­வரும் தமிழ், சிங்­கள மொழி­களை தவிர வேறு மொழி­களை அறிந்­த­தாக தக­வல்கள் இல்லை. குறிப்­பாக இவர்கள் அரபு மொழியை பேசு­வ­தற்கோ, எழு­து­வ­தற்கோ அறி­வு­டை­ய­வர்­க­ளாக இருக்­க­வில்லை என்­பதை அவர்­க­ளது குடும்­பத்­தி­னரின் வாக்கு மூலங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அவ்­வா­றெனில், குஜராத் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வி­னரின் தக­வல்­களும், உள்­ளக விசா­ரணை தக­வல்­களும் முரண்­ப­டு­கின்­றன.

ஐ.எஸ்.இன் புதிய தாக்­குதல் வடி­வமா?
உண்­மையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு, இது­வரை மத ரீதி­யி­லான நம்­பிக்­கையை திரி­பு­ப­டுத்தி, ஏக இறை கொள்­கையை முன்­னி­றுத்தி அதன்பால் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட சிந்­த­னையில் தீவி­ர­ ம­ய­ப்­படுத்­த­ப்படும் முஸ்­லிம்­க­ளையே தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அவ்­வா­றி­ருக்­கையில், மத ரீதி­யி­லான கொள்கை பிடிப்­பில்­லாத, போதைப் பொருள் குற்­றச்­சாட்­டுக்கள், பாவ­னைகள் உடை­யோரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தமது இலக்கை அடைந்­து­கொள்ள நாடி­னரா என்ற கேள்­விக்கு விசா­ர­ணை­களில் பதில் அவ­சி­ய­மாகும்.

அத்­துடன் இலங்­கையில் கைது செய்­யப்பட்­டுள்ள மூவரில் இருவர் முஸ்லிம் அல்­லா­த­வர்கள். இந்தி­யாவில் கைது செய்­யப்பட்ட நால்­வரை இயக்­கி­ய­தாக கூறி தேட­ப்படும் 20 இலட்சம் ரூபா பணப் பரிசில் அறிவிக்கப்பட்­டுள்ள நபரும் முஸ்லிம் அல்­லா­தவர். கைது செய்­யப்­பட்­ட­வர்கள் உண்­மையில் அந்த பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களில் இருந்து, ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லேனும் அவ்­வ­மைப்­புக்­காக தாக்­குதல் நடாத்த தயா­ராக இருந்­தி­ருப்பின், அது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்­குதல் வடி­வத்தில் காணப்­படும் மாற்­றத்­தையும், அவர்­க­ளது கொள்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும் வெளிப்­ப­டுத்தும் சான்­றாகும்.

பயங்­க­ர­வாத பட்டம் எதற்­காக?
அவ்­வா­றில்­லையேல் இந்­தியா ஏன் இவர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். இந்­தி­யாவின் தேர்தல் நிலைமை, இலங்­கையில் தேர்தல் காலம் நெருங்­கு­வது போன்ற கார­ணிகள் இந்த ஐ.எஸ். ஐ.எஸ். கதையின் பின்­ன­னி­யாக கூட இருக்­கலாம் என பாது­காப்பு அவ­தா­னிகள் கூறு­கின்­றனர்.

இந்­திய தேர்­த­லுக்கு ஐ.எஸ். ஐ.எஸ். உத்தி எவ்வளவுதூரம் வலுச் சேர்க்கும் என்பது கடந்த 2019 இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களின் எடுத்துக்காட்டாகும். அந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் கூட இந்தியா மீது விர­ல்­நீட்­டப்­ப­டு­வ­தும், அங்கு நடந்த தேர்தல் போன்றவற்றை மையப்படுத்தியும் அண்மைக் காலங்களின் பல விடயங்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருகின்றன.

அதேபோல இலங்கையிலும் தேர்தல் ஒன்று நெருங்கும் நிலையில், இவ்வாறான ஐ.எஸ். ஐ.எஸ். பெயரிலான சம்பவங்கள் இலங்கையின் தேர்தலிலும் தாக்கம் செலுத்தலாம். அல்லது அதனூடாக ஒரு அவசர நிலைமை ஏற்படுமாயின் இலங்கையின் தேர்தல் நடாத்துவது தொடர்பில் கூட யோசிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இவ்வாறான உள்ளக, பரந்துபட்ட அரசியல் தேவைகள், இந்த ஐ.எஸ். ஐ.எஸ். கைது சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விசாரணை நிறைவுறும் வரை காத்திருப்பு:
இந்நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் நிறைவுற்று அது குறித்து இலங்கைக்கு அறிக்கையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை இலங்கை காத்திருக்கிறது. தற்போதும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தொடர்பாடல்களை முன்னெடுத்து தகவல்களை பறிமாறி வருகின்றது. அத்துடன் உள்ளக ஆரம்பகட்ட விசாரணைகள் பிரகாரம், உள்ளூரில் பாரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று இருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின.

இலங்கை வரும் குஜராத் பொலிஸ் படை:
இந் நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இலங்கை வர தீர்மானித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்டு இந்த கைதுகளின் உண்மை பின்னணி வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

ஊதிப் பெருப்­பிக்கும் ஊட­கங்­கள்:
இலங்­கை மற்­றும் இந்­தியாவி­லுள்ள பல ஊட­கங்கள் இந்த விவ­கா­ரத்தை ஊதிப் பெருப்­பித்து தினமும் அறிக்­கை­யிட்டு வரு­கின்­ற­ன. இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் தற்­போதும் ஐ.எஸ். ஆத­ரவு கொள்கை குடி­கொண்­டுள்­ளது இவர்­களால் இலங்­கைக்­கு மாத்­தி­ர­மன்றி இந்­தி­யா­வுக்கும் அச்­சு­றுத்தல் உள்­ளது போன்ற அபிப்­பி­ரா­யத்தை அப்­பாவி மக்கள் மத்தியில் தோற்­று­விக்க இவை முனை­கின்­றன. கடந்த கால நிகழ்­வு­க­ளி­லி­ருந்து ஊட­கங்கள் இன்­னமும் பாடம் படிக்­க­வில்லை என்­ப­தையே இந்த சம்­பவம் நன்கு உணர்த்­தி­நிற்­கி­ற­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.