மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

0 124

பா.ரவீந்திரன்

கண்­முன்னே நடக்கும் காஸா இனப்­ப­டு­கொ­லையை நீதிக்­கான சர்­வ­தேச நீதி­மன்­றத்­தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடி­யாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது. மேலா­திக்க நல­னையும் நய­வஞ்­ச­கத்­தையும் உள்­நி­றுத்தி அர­சி­யல்­வா­தி­களும் அரசும் பேசும் ஜன­நா­யகம் வார்த்தை ஜாலங்­க­ளாக தொடர்­கின்­றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்­வ­லங்­களை நடத்­தியும் பார்த்­தார்கள். எல்லா இய­லா­மை­களும் கடை­சியில் மாண­வர்­க­ளிடம் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்ட நிலைதான் இன்­றைய காட்­சிகள்.

பல்­கலைக் கழ­கங்­களில் மனித உரி­மைகள், ஜன­நா­யகம் என கோட்­பாட்டு ரீதியில் விளக்­க­வு­ரை­களை பயிலும் மாண­வர்­க­ளுக்கு முன் நடை­முறை நிகழ்­வுகள் கேள்­வி­க­ளாக வந்­து­வி­டு­கின்­றன. எதையும் புத்­தாக்­கத்­து­டனும் பரீட்­சார்த்­தத்­து­டனும் அணுகும் பய­ம­றியா இளம் பரா­யமும் சேர்ந்­து­கொள்ள அவர்கள் போராட்­டத்தில் வீரி­யத்­துடன் இறங்­கு­கி­றார்கள். உண்­மையில் தமது எதிர்­கா­லத்தை பண­ய­மாக வைத்து, தமது கன­வு­களை பண­ய­மாக வைத்­துத்தான் மாணவ சமு­தாயம் போராட்­டத்­தில இறங்கும் இக்­கட்­டான நிலை இருக்­கி­றது. அவர்­க­ளது எதிர்­கா­லத்தை பாழாக்­கக்­கூ­டிய மிகப் பெரும் ஆபத்து இதற்குள் இருக்­கின்­றது. இந்த மனச் சஞ்­ச­லத்­தோ­டுதான் இந்தப் போராட்­டங்­களை ஆத­ரிக்க வேண்­டி­யுள்ள நிலை எமக்கு ஏற்­ப­டு­கி­றது.

17 ஏப்ரல் கொலம்­பியா பல்­கலைக் கழ­கத்தில் தொடங்­கிய இப் போராட்டம் மற்­றைய பல்­கலைக் கழ­கங்­க­ளுக்கும் பரவி, இன்­று­வரை தொடர்­கி­றது. வன்­மு­றை­யிலோ பொதுச்­சொத்தை சேத­மாக்­கா­மலோ போரா­டியும், ஒரு குற்­ற­வா­ளியை அணு­கு­வ­துபோல் சுமார் 2000 மாண­வர்­களும் சில விரி­வு­ரை­யா­ளர்­களும் இது­வரை கைது­செய்யப் பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளது எதிர்­கா­லத்தின் மேல் தொடுக்­கப்­பட்ட தாக்­குதல் இது.

உலகம் முழு­வதும் காலங்­கா­ல­மாக பல மாணவர் போராட்­டங்கள் நடந்த வர­லா­றுகள் உள்­ளன. அமெ­ரிக்­காவின் இன்­றைய மாணவர் போராட்­டங்­க­ளுக்கு இன்னும் முக்­கி­ய­மான வர­லாறு இருக்­கி­றது. 1960 களில் நடந்த சிவில் உரிமை இயக்கப் போராட்­டத்தில் மாண­வர்­களின் முக்­கிய பங்கு இருந்­தி­ருக்­கி­றது. அமெ­ரிக்­காவில் நிற­வெறி கோலோச்­சிய கால­கட்­டத்தில், 1960 பெப்­ர­வ­ரியில் மாண­வர்கள் -முக்­கி­ய­மாக கறுப்­பின மாண­வர்கள்- “வெள்­ளை­யர்­க­ளுக்கு மட்டும்” என ஒதுக்­கப்­பட்ட பிர­தே­சத்துள் புகுந்து தங்­கி­நின்று போராட்டம் நடத்­தி­னார்கள். அது 50 க்கு மேற்­பட்ட நக­ரங்­க­ளுக்கும் விசா­லித்­தது.

1968 இல் வியட்நாம் போருக்கு எதி­ராக இதே கொலம்­பிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் போராட்டம் வெடித்து நாடெங்கும் பர­வி­யது. இன்று நடப்­பது போன்றே மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக ஹெமில்ற்றன் மண்­ட­பத்தை கைப்­பற்றி முகா­மிடல் போராட்­டத்தை நடத்­தினர். அன்­றைய போராட்­டத்தில் கென்ற் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நான்கு மாண­வர்கள் பொலி­ஸாரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்த அதிர்ச்சி நாடு தழுவி மிகப் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 450 கல்வி நிலை­யங்கள் (பல்­கலைக் கழ­கங்கள் மற்றும் கல்­லூ­ரிகள்) பெரும் போராட்­டங்­களில் இறங்­கி­யி­ருந்­தன. இதன்­போது இன்­னொ­ரு­புறம் பொது­மக்­களும், மாற்றுத் திற­னா­ளி­யாக்­கப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரின் அமைப்பும் வீதிக்கு இறங்கி போரா­டி­னார்கள். 56000 அமெ­ரிக்க இரா­ணு­வத்­தி­னரை பத்து வருட வியட்நாம் போரில் காவு­கொ­டுத்த புயல் ஓய்­வுக்கு வந்­தது. தோல்­வி­யோடு திரும்­பி­யது அமெ­ரிக்க இரா­ணுவம்.

1980 இல் தென் ஆபி­ரிக்க நிற­வெறி அர­சுக்கு எதி­ரான போராட்­டத்தை பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தொடங்­கினர். இன்­றைய கோரிக்கை போன்றே தென் ஆபி­ரிக்க நிற­வெறி அர­சுக்கு துணை­போ­கிற நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­வதை நிறுத்தக் கோரியும் அந்த அர­சு­ட­னான எல்­லா­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் துண்­டிக்கக் கோரியும் தத்­த­மது பல்­கலைக்கழக நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக போராட்­டத்தைத் தொடங்­கினர். நாடெங்கும் பர­விய இந்த மாணவர் போராட்­டத்தின் விளை­வாக 155 கல்­வி­நி­லை­யங்கள் இக் கோரிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டார்கள். பின்னர் 1986 இல் அமெ­ரிக்க அரசும் தென் ஆபி­ரிக்க அர­சு­ட­னான பொரு­ளா­தாரத் தொடர்­பு­களை துண்­டித்­தது. ஆபி­ரிக்க நிற­வெறி அரசக் கட்­ட­மைப்­பினுள் ஓர் அழுத்­தத்­தையும் நெகிழ்வுத் தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­திய கார­ணி­களில் இந்த போராட்ட வர­லாற்றுத் தொடர்ச்­சிக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு இருந்­தது. தென் ஆபி­ரிக்க கறுப்­பின மக்­களின் விடாப்­பி­டி­யான போராட்­டத்­துக்கு இது சாத­க­மா­கவும் அமைந்­தது.

இப்­போது காஸா இனப்­ப­டு­கொ­லையை நிறுத்தக் கோரியும், இந்தப் படு­கொ­லைக்கு உடந்­தை­யாக இயங்கும் அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளு­ட­னான பொரு­ளா­தார முத­லீட்டுத் தொடர்பை நிறுத்தக் கோரியும் பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கங்­க­ளிடம் கோரிக்கை வைத்து கொலம்­பிய பல்­கலைக் கழ­கத்தில் வெடித்த போராட்­டா­னது 40 க்கு மேற்­பட்ட நாட்டின் முக்­கிய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் மற்றும் சில கல்­லூ­ரி­க­ளுக்கும் பர­வி­யி­ருக்­கி­றது. இந்த மாணவர் போராட்­டத்தில் யூத மாண­வர்கள் பலரும் பங்­கு­கொள்­கி­றார்கள் என சொல்­லப்­ப­டு­கி­றது. நீதிக்­கான யூதர்கள் என்ற அமைப்பு இப் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக உள்­ளது.

மாணவர் போராட்­டங்கள் இப்போது கனடா, பிரான்ஸ், பிரித்­தா­னியா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா, எகிப்து, இத்­தாலி என -ஒரு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில்- பரவத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இப் போராட்­டங்கள் இன்னும் பர­வ­லாகி வீரி­ய­ம­டை­யுமா அல்­லது மெல்ல அடங்கிப் போகுமா என்­பதை எதிர்வு கூற முடி­யா­துள்­ளது.

சியோ­னிஸ்­டு­களின் இஸ்ரேல் லொபிகள் மிகப் பல­மா­னவை. குறிப்­பாக அமெ­ரிக்­காவில் அவர்­களை மீறி எந்த அர­சாங்­கமும் இயங்க முடி­யாத நிலையே உள்­ளது. அமெ­ரிக்க அதிபர் தேர்­த­லி­லும்­கூட அவர்கள் நிதிப் பங்­க­ளிப்­பின்றி எதுவும் அசை­யாது. அமெ­ரிக்க காங்­கி­ர­ஸிலும் அவர்கள் பல­மா­கவே உள்­ளனர். பலஸ்­தீன ஆத­ரவு வேட்­பா­ளர்­களை தோற்­க­டிக்க இந்த சியோனிஸ்ட் லொபி (ஏ.ஐ.பி.ஏ.சி) மில்­லியன் கணக்­கான நிதியை எதிர் வேட்­பா­ளர்­க­ளுக்கு செலவு செய்­கி­றது. 3 மில்­லியன் அங்­கத்­த­வர்­களைக் கொண்ட இந்த லொபியின் பலம் அப­ரி­த­மா­னது. இந்த லொபி­யா­னது அமெ­ரிக்­காவின் மாறி­மாறி வரும் அர­சாங்­கங்­களில் மட்­டு­மல்ல, ஆணி­வே­ரான அரசு கட்­ட­மைப்­பிலும் பெரும் பல­மா­கவே இருக்­கி­றது. பெரும் வங்கி நிறு­வ­னங்கள், அரச ஆலோ­ச­கர்கள், கொள்கை வகுப்­பா­ளர்கள், உளவு நிறு­வன (சிஐஏ) அதி­கா­ரிகள், காவல்­துறை அதி­கா­ரிகள், நீதித்­து­றை­யினர் என சியோ­னிஸ்­டு­களின் பலம் அதி­கார மேடை­யெங்கும் பரந்­தி­ருக்­கி­றது.

இவர்­களை மீறி எந்த அமெ­ரிக்க அர­சாங்­கமும் சுயேச்­சை­யாக இயங்க இட­மில்லை. உதா­ர­ணத்­துக்கு இதைச் சொல்­லலாம். 1993 இல் இஸ்­ரேல்-­–ப­லஸ்­தீனம் இரு அரசு தீர்வு ஒப்­பந்­த­மி­டப்­பட்ட பின், அமெ­ரிக்­காவில் ஆட்­சிக்கு வந்த எந்­த­வொரு அதி­பரும் அத் தீர்வை எதிர்க்­க­வில்லை, நடை­மு­றைப்­ப­டுத்­தவே விரும்­பினர். ஒபாமா கடும் முயற்சி எடுத்தார். இன்­றும்­கூட பைடன் அத் தீர்வை ஆத­ரிக்­கிறார். ஆனால் எவ­ராலும் முடி­ய­வில்லை. சியோ­னி­சசூழ் அதி­கா­ரத்தை மீறி இஸ்­ரே­லு­ட­னான உறவை எந்த அமெ­ரிக்க அர­சாங்­கத்­தாலும் சுயேச்­சை­யாக தீர்­மா­னிக்க முடி­யாது. காஸா­வுக்குள் போக வேண்டாம் என அமெ­ரிக்கா இஸ்­ரேலை எச்­ச­ரித்­தது. இஸ்ரேல் போனது. இப்போது ரபாக்குள் போக வேண்டாம் என அமெ­ரிக்கா எச்­ச­ரிக்­கி­றது. போவோம் என்­கிறார் பெஞ்­சமின் நெத்­தன்­யாகு. அவரும் ஒரு சியோனிஸ்ட். அதி­சயம் நடந்து நெத்­தன்­யாகு அமைதியை விரும்பினாலும்கூட, அவரது கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சியோனிஸ்டுகளையும் அமெரிக்க சியோனிஸ்டுகளையும் மீறி எந்த முடிவும் எடுக்க முடியாது. சியோனிஸ்டுகள் பலஸ்தீன நாட்டின் இருப்பையே மறுத்து இஸ்ரேலை அதன் மொத்த நிலப்பரப்பிலும் காண்பவர்கள். அதற்காக சபதமெடுத்தவர்கள். அதை சாத்தியப்படுத்த விழைபவர்கள்.

இந்த நிலை முன்னைய மாணவர் போராட்டங்கள் தந்த வெற்றிகளை இலகுவில் தர அனுமதிக்காது என்ற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். இருந்தபோதும் வரலாறு நேர்கோட்டில் செல்வதில்லை. அது புயலாகவும் வீசித்தானிருக்கிறது. அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். மாணவர் போராட்டத்தின் தீரத்தையும், மனித விழுமிய நாட்டத்தையும், போராட்டக் குணத்தையும் வரலாற்றுப் பங்களிப்பையும் ஆதரிப்போம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.