சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து பஸால் நைஸர் வெற்றியுடன் ஓய்வு

0 243

நெவில் அன்தனி

பூட்­டா­னுக்கு எதி­ராக கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற பீபா சீரிஸ் 2024 கால்­பந்­தாட்டப் போட்­டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்­தி­யா­சத்தில் இலங்கை ஈட்­டிய வெற்­றி­யுடன் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட விளை­யாட்­டி­லி­ருந்து மொஹமத் பஸால் நைசர் ஓய்வு பெற்றார்.
இலங்கை கால்­பந்­தாட்ட வர­லாற்றில் சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்டி முடிவில் சக தேசிய வீரர்­களால் குளிர்ச்­சி­யான பிரி­யா­விடை வழங்­கப்­பட்ட முத­லா­வது வீரர் பஸால் நைஸர் ஆவார்.

பூட்­டா­னுக்கு எதி­ரான போட்­டியின் கடைசிக் கட்­டத்தில் மாற்­று­வீ­ர­ராக பஸால் களம் நுழைந்­த­போது இலங்கை அணியின் முழு­நேர தலைவர் சுஜான் பெரேரா, பஸாலை கௌர­விக்கும் வகையில் அணித் தலை­வ­ருக்­கான கைப்­பட்­டியை பஸா­லுக்கு சூட்­டினார். அப்­போது அரங்கில் குழு­மி­யி­ருந்த சுமார் 5,000 இர­சி­கர்கள் பஸாலின் பெயரை உரக்க உச்­ச­ரித்து தங்­க­ளது பாராட்­டு­தல்­களை வெளிப்­ப­டுத்தி கௌர­வித்­தனர்.

பிரி­யா­விடை குறித்து அவ­ரிடம் கேட்­ட­போது, ‘இலங்­கையில் தேசிய கால்­பந்­தாட்ட வீரர் ஒரு­வ­ருக்கு இத்­த­கைய பிரி­யா­விடை வழங்­கப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். எனது கால்­பந்­தாட்ட வாழ்க்­கைக்கு இத்­த­கைய பிரி­யா­விடை கிடைக்க வேண்டும் என நான் கனவு கண்டு வந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது கனவை நிறை­வேறச் செய்­த­தற்­காக அல்­லாஹ்வுக்கே புகழ்’ என கண்­ணீர மல்க கூறினார்.

இது ஆனந்த கண்­ணீரா எனக் கேட்­ட­போது, ‘சக வீரர்­க­ளிடம் இருந்து விடை­பெ­று­வது என்னை அழ­வைக்­கி­றது. இந்த பிரி­யா­வி­டையை என் வாழ்­நாளில் மறக்க மாட்டேன்’ என பதி­ல­ளித்தார்.

பாணந்­துறை, அம்­ப­லாந்­துவ முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் தனது கல்­வியை ஆரம்­பித்த பஸால் நைஸர், அங்­குதான் கால்­பந்­தாட்ட வாழ்க்­கை­யையும் ஆரம்­பித்தார்.

அவ­ரது வாப்பா நைஸர் தான் அவ­ரது முத­லா­வது பயிற்­றுநர் என அறி­யக்­கி­டைத்­தது. அதன் பின்னர் சமத் மாஸ்டர், சம்பத் பெரேரா, எம்.எச். றூமி, மொஹமத் அமா­னுல்லா ஆகி­யோரும் அவ­ருக்கு பயிற்சி அளித்­தனர்.

‘எனது இரத்­தத்தில் கால்­பந்­தாட்­டத்தை ஊறச் செய்­தவர் வேறு யாரு­மல்ல, எனது வாப்பா என்­பதை பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கிறேன். அவர் எனக்கு வாப்­பா­வாக மட்­டு­மல்­லாமல் குரு­வா­கவும் பயிற்று­ந­ரா­கவும் இருந்து என்னை கால்­பந்­தாட்­டத்தில் சிறந்த வீர­ராக உயர்த்­தினார்’ என பஸால் குறிப்­பிட்டார்.

அம்­ப­லாந்­துவ முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் 13 வய­துக்­குட்­பட்ட சம்­பியன் அணி­யிலும் தொடர்ந்து அல் பஹ்ரியா வித்­தி­யா­ல­யத்தில் 14 வய­துக்­குட்­பட்ட சம்­பியன் அணி­யிலும் சிறந்த கால்­பந்­தாட்ட நுட்­பங்­க­ளுடன் முக்­கிய வீர­ராக விளை­யா­டிய பஸால் நைஸர் 2004ஆம் ஆண்டு மரு­தானை ஸாஹிரா கல்­லூ­ரியில் இணைந்தார்.

ஸாஹிரா கல்­லூ­ரியில் 15 வய­துக்­குட்­பட்ட, 17 வய­துக்­குட்­பட்ட, 19 வய­துக்­குட்ட சம்­பியன் அணி­களில் முன்­கள வீர­ராக விளை­யா­டிய பஸாலின் கால்­பந்­தாட்ட ஆற்­றலைக் கண்டு பிர­மிக்­கா­த­வர்கள் எவரும் இருக்க முடி­யாது.

அவர் பந்தைக் கட்­டுப்­ப­டுத்தும் விதம், பந்து பரி­மாற்றம் செய்யும் விதம், பந்தை நகர்த்­திச்­செல்லும் வேகம் என்­பன பார்ப்­ப­தற்கு பர­வ­ச­மாக இருக்கும்.
பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்டப் போட்டி ஒன்று சுக­த­தாச அரங்கில் நடை­பெற்­ற­போது ஸாஹிரா சார்­பாக தனி ஒரு­வ­ராக 9 கோல்­களைப் போட்டு சாதனை படைத்­தவர் பஸால். அவ­ரது அந்த அரிய சாத­னையை நேர­டி­யாக பார்க்கும் பாக்­கியம் இந்தக் கட்­டு­ரை­யா­ள­னுக்கு கிடைத்­ததை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும்.

ஸாஹிரா கல்­லூரி கால்­பந்­தாட்ட அணியில் பிர­கா­சித்த அவர் பின்னர் கழக மட்டப் போட்­டி­களில் றினோன், கலம்போ எவ்.சி., புளூ ஸ்டார் போன்ற அணி­க­ளிலும் சிறந்த முன்­கள வீர­ராக மட்­டு­மல்ல மத்­திய கள வீர­ரா­கவும் விளை­யாடி இருந்தார்.

தேசிய அணியில் 2008 இலி­ருந்து தொடர்ந்து 16 வரு­டங்­க­ளாக விளை­யா­டிய பெருமை பஸாலை சாரு­கி­றது.

இலங்கை அணியில் 2017இல் உதவித் தலை­வ­ரா­கவும் 2018, 2019, 2020களில் தலை­வ­ரா­கவும் விளை­யா­டிய பஸால், சர்­வ­தேச கால்­பந்­தாட்ட அரங்கில் 40 யார் தூரத்தில் இருந்து போட்ட கோலை தனது சிறந்த கோலாக வர்­ணிக்­கிறார்.
‘பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக பங்­க­ளா­தேஷில் 2018 இல் அந் நாட்டின் 30,000 இர­சி­கர்கள் முன்­னி­லையில் நடை­பெற்ற சர்­வ­தேச கால்­பந்­தாட்ட போட்­டியில் நான் போட்ட வெற்­றிகோல் இன்றும் எனது கண்­முன்னே வந்­து­கொண்டே இருக்­கி­றது. போட்­டி­யின்­போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தில் பங்­க­ளாதேஷ் கோல்­காப்­பாளர் 18 யார் எல்­லையில் இருப்­பதை கவ­னித்தேன். உட­ன­டி­யாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான் எனது வாழ்­நாளில் சிறந்த கோலாக கரு­து­கிறேன்’ என நினை­வு­கூர்ந்தார்.

அந்தப் போட்­டியை பங்­க­ளா­தேஷில் தொழில்­பு­ரியும் மற்றும் உயர்­கல்வி கற்கும் இலங்­கை­யர்­களில் 5000 பேர் கண்டு களித்­த­தா­கவும் அறியக் கிடைத்­தது.

வெளி­நா­டு­களில் உள்ள இலங்கை வம்­சா­வளி வீரர்கள் இலங்கை அணியில் இடம்­பெ­று­வது எந்­த­ளவு பலன்­தரும் எனக் கேட்­ட­போது,
‘இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் இப்­போ­துதான் சரி­யான திசையில் செல்­கி­றது. வெளி­நா­டு­களில் உள்ள இலங்கை வம்­சா­வ­ளி­யி­னரை இணைத்­துக்­கொண்டு விளை­யா­டு­வதன் மூலம் சர்­வ­தேச தர­வ­ரி­சையில் இலங்­கை­யினால் முன்­னேற முடியும். அவர்கள் வெளி­நா­டு­களில் வாழ்ந்­தாலும் அவர்கள் இலங்­கை­யர்­களே. அவர்­க­ளுடன் இணைந்து விளை­யா­டும்­போது இங்­குள்ள வீரர்­க­ளுக்கு சிறந்த அனு­பவம் கிடைப்­ப­துடன் நிறைய நுட்­பங்­களைக் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இதனைத் தொடர்ந்து கடைப்­பி­டித்தால் வெகு­விரைவில் இலங்கை கால்­பந்­தாட்டம் உலக தர­வ­ரி­சையில் முன்­னேறும் என நம்­பு­கிறேன்’ என்றார்.

சர்­வ­தேச கால்­பந்­தாட்­டத்­தி­லி­ருந்து வெற்­றி­யுடன் விடை­பெற்ற பஸா­லிடம் எதிர்­கால குறிக்­கோள் என்­ன­வென கேட்­ட­போது,
‘இன்னும் சில வரு­டங்கள் கழக மட்­டத்தில் விளை­யாட விரும்­பு­கிறேன். அதன் மூலம் எனது அனு­ப­வத்தை ஏனைய வீரர்­க­ளுடன் பகிர்ந்­து­கொண்டு அவர்­களை சிறந்த வீரர்­க­ளாக உயர்த்­துவேன்.

‘நான் பாணந்­து­றையில் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­யகம் ஒன்றை எனது வாப்பா, எனது இளைய சகோ­தரன் பாஹிர் நைஸர் ஆகி­யோ­ருடன் இணைந்து நடத்­து­கிறேன். பெரும் கஷ்­டத்­துக்கு மத்­தியில் பயிற்­சி­களில் ஈடு­படும் சிறு­வர்­களை சிறந்த வீரர்­க­ளாக தர­மு­யர்த்­து­வதே எமது குறிக்­கோ­ளாகும். எமது பயிற்­சி­ய­கத்தில் உரு­வாகும் சிறந்த வீரர்­களை ஸாஹிரா, ஹமீத் அல் ஹுசெய்னி ஆகிய கல்­லூ­ரி­களில் இணைத்துவருகிறோம். அது எமக்கு மன ஆறுதலையும் திருப்தியையும் தருகிறது’ எனக் கூறினார்.

பஸாலுக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா, ‘பஸாலின் மனதை குளிரவைக்கும் வகையில் பிரியாவிடை வழங்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். அவர் எப்போது களம் புகுவார் என நான் எதிர்பார்த்த வண்ணம் இருந்தேன். அவர் களம் புகுந்ததும் எனது சிரேஷ்ட வீரரான அவரை கௌரவிக்கும் வகையிலேயே தலைவருக்கான கைப்பட்டியை அவருக்கு அணிவித்தேன். அவரைப் போன்ற சிறந்த, பண்புள்ள வீரருக்கு இந்த பிரியாவிடை உகந்ததாகும்’ என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.