(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘இஸ்ரேல், காஸாவில் தொடர்ச்சியாக இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலில் துணைத் தூதரகம் ஒன்றினைத் திறந்திருப்பது குறித்து இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலைகளை மேற்கொண்டுவரும் நிலையில் அந்நாட்டுடன் உறவுகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இலங்கை துணைத் தூதரகம் ஒன்றினைத் திறந்திருப்பது குறித்து இலங்கை – பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்ரேலின் வட பகுதியிலுள்ள ஹைபா நகரில் இலங்கையின் துணைத் தூதரகம் ஒன்று நிறுவப்பட்டமை எமக்கு ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
உலகளாவிய நீதி மற்றும் காலனித்துவத்திலிருந்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் இலங்கையின் சாதனையைப் பொறுத்த வரையில் இலங்கை அரசிடமிருந்து இராஜதந்திர விலகலே எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இலங்கை அரசின் குறிப்பிட்ட செயற்பாடு இஸ்ரேலுடனான உறவினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அத்தோடு இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இச்செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அத்தோடு டெல் அவிவில் இலங்கை தூதரகம் ஒன்று இயங்கி வருகிறது. இஸ்ரேல் ஒரு சிறிய நாடாகும். இந்நிலையில் ஹைபா நகரில் துணைத் தூதரகமொன்றினை திறக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இஸ்ரேலிய படைகள் 32 ஆயிரத்துத்தும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. காஸாவில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவு உதவிகளை வழங்குவதற்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது ஈடுபட்டு வருகிறார். அவரது தலைமையிலே இந்த நிதியுதவி திரட்டப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் ஹைபாவில் திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் தரைவழி இராணுவ நடவடிக்கைகளால் காஸாவில் மோசமான பட்டினி நிலைமை உருவாகியுள்ளது. மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.இவ்விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருகிறது.
மேற்கு ஆசியாவில் அமைதியை வளர்ப்பதில் நாம் உறுதி பூண்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் இச்செயற்பாட்டினை இஸ்ரேலுக்கு நன்மையளிக்கும் நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம். சர்வதேச சட்டங்களையும் மனிதாபிமான சட்டங்களையும் எவ்வித தண்டனையுமின்றி இஸ்ரேல் மீறுவதற்கு அரசாங்கத்தின் இந்நடவடிக்கை கைமாறு செய்வதாக அமைந்துள்ளது.
அரசாங்கம் வரலாற்றின் சரியான பக்கம் சார்ந்து செயற்பட வேண்டும் என நாம் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும் கோருகிறோம். இந்நிலைமை உலக சமாதானத்தின் பிரதிநிதிகளை புண்படுத்துவது மாத்திரமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களின் தாக்குதலுக்குள்ளான மக்களையும் புண்படுத்தும். இச்செயல்களிலிருந்தும் விலகி இருக்குமாறு நாம் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli